Published:Updated:

கேள்வி - பதில்: விசேஷ பூஜைகளில் கலசம் அமைப்பது ஏன்?

கலசம்
பிரீமியம் ஸ்டோரி
கலசம்

இறைவனை ஓர் இடத்தில் நிலைபெற்று இருக்கச் செய்யும் மிகப்பெரிய ஆற்றலை நம் சமயம் நமக்குச் சொல்லிக்கொடுத்திருக்கிறது.

கேள்வி - பதில்: விசேஷ பூஜைகளில் கலசம் அமைப்பது ஏன்?

இறைவனை ஓர் இடத்தில் நிலைபெற்று இருக்கச் செய்யும் மிகப்பெரிய ஆற்றலை நம் சமயம் நமக்குச் சொல்லிக்கொடுத்திருக்கிறது.

Published:Updated:
கலசம்
பிரீமியம் ஸ்டோரி
கலசம்

? இறைவனுக்கான வழிபாடுகளில் 16 உபசாரங்கள் செய்ய வேண்டும் என்பார்கள். அவை என்னென்ன? வீட்டிலும் இப்படி 16 வகை உபசாரங்கள் செய்துதான் வழிபட வேண்டுமா?

- கீர்த்தனா சுரேஷ், செங்கல்பட்டு.

28 சைவ ஆகமங்களில் இறைவனுக்கான வழிபாடுகள் பல வகைகளாகக் கூறப்பட்டுள்ளன. அவற்றை அவரவர் சக்திக்கேற்ப செய்யலாம். அனைத்துக்கும் முக்கியமானது பக்தியே. `ஷோடசோபசாரம்' என்ற வழிபாட்டு முறை அவற்றில் ஒன்று.

இறைவனே இவ்வுலகைப் படைத்தவர். எப்படி ஒரு தாய் தன் குழந்தைகளுக்கு எது மகிழ்ச்சி அளிக்குமோ அதையே அளிக்கிறாளோ, அதுபோல இறைவன் அனைவரின் விருப்பத்துக்கேற்ப அருள்கிறார்.

வழிபாடு
வழிபாடு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பல உருவங்களில்... அவரவர் புரிந்துகொள்ளும் வகையிலும், அறியும்கொள்ளும் வகையிலும் தோன்றி, ஞான நூல்களை ஆகமங்களாகவும் புராணங்களாகவும் அருளியிருக்கிறார். பல ஆசார்ய புருஷர்களின் மூலமாக ஸ்லோக வடிவங்களிலும் இறை அனுபூதியை நமக்கு அளித்துள்ளார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஒரே மின்சாரத்தில் பல உபகரணங்கள் வேலை செய்வதுபோல், பல வகை வழிபாடுகளைத் தம்முள் கொண்டிருப் பதே நம் மதத்தின் சிறப்பு. கடலைப் பற்றிக் கூறுங்கள் என்றால், கடலில் அவரவர் கண்டதையே கூறுவர். எவ்வளவு பொருள்கள் அதனுள் உள்ளன என்பதை எவரும் அறியார்.

அதுபோன்றதுதான் இறையனுபூதி. மேலான இறை அனுபூதியைப் பெறப் பல வழிகள் உண்டு. அவற்றில் ஒன்றான 16 உபசாரங்களின் ஒரு வகையைக் காணலாம்.

1) ஆவாஹனம் 2) ஸ்தாபனம் 3) பாத்யம் 4) ஆசமனீயம் 5) அர்க்கியம் 6) அபிஷேகம், 7) வஸ்திரம், சந்தனம் 8) புஷ்ப பூஜை 9) தூபம், தீபம் 10) நிவேதனம் 11) பலிதானம் 12) ஹோமம் 13) ஶ்ரீபலிதானம் 14) சங்கீதம், வாத்யம் 15) நிருத்தம் 16) யதாஸ்தானம்.

`ஆவாஹனம்து ப்ரதமம்… உத்வாஸம் ஷோடசம் பவேத்' என்று கூறப்பட்டுள்ளது. இவற்றில் யாகம், பலிதானம் போன்றவை தவிர்த்து மற்றவற்றை நம் இல்லத்தில் இருக்கும் இறைவனுக்குச் சமர்ப்பித்து மகிழலாம்.

? வீட்டில் தெய்வ காரியங்கள் நடைபெறும் போது கலசம் வைத்து, அதன் மீது தேங்காய் வைத்து பூஜை- வழிபாடுகள் செய்கிறோம்.

இதன் தத்துவம் என்ன?

- எம். மணிகிருஷ்ணன், காஞ்சிபுரம்-1

பூர்ணமான- முழுமையானவரே இறைவன். அவர் அருள்பெற நாம் முழுமையானவராக இருத்தல் அவசியம். யோக மார்க்கத்தில் மூச்சுப்பயிற்சியில் `கும்பகம்' என்று ஒரு முறை உள்ளது. அதாவது மூச்சுக்காற்றை உள்ளிழுத்தலோ, வெளிவிடுதலோ இல்லாது நிலைநிறுத்துதலே `கும்பகம்' என்று கூறுவர். எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவனை ஓர் இடத்தில் நிலைபெற்று இருக்கச் செய்யும் மிகப்பெரிய ஆற்றலை நம் சமயம் நமக்குச் சொல்லிக்கொடுத்திருக்கிறது.

கலசம்
கலசம்

எப்படி ஒரு `சிம்' கார்டில் அனைத்துத் தகவல்களும் பதியப்பெற்று அவற்றை ஒரு கருவியில்வைத்து நாம் வேண்டிய நபரிடம் எப்போது வேண்டுமானாலும் பேச முடியுமோ, அதுபோன்று நம் ஆகமங்கள் ஆசார்யரின் மந்திர சக்தியை ஒரு கும்பகத்தில் பதியச் செய்து தெய்வத்தன்மையை உருவேற்றி, சில காலங்கள் வேள்வி செய்து பிறகு, அனைத்துக் காலங்களிலும் அருளும் உருவத் திருமேனிகளுக்கு அவற்றைச் சேர்ப்பதே `கும்பாபிஷேகம்' என்று போற்றப்படுகிறது. இங்கே `கும்பம்' என்பது குடத்தைக் குறிக்கும் சொல் அல்ல. முன் கூறப்பட்ட `கும்பகம்' எனும் நிலைநிறுத்தலைக் குறிப்பது. இதற்கு `திருக்குட நன்னீராட்டு' என்று சொல்வது பொருத்தமாக மாட்டாது.

எப்படி ஆலயத்தில் கும்பகம் எனும் முறையில் இறைவனை நிலைநிறுத்துதல் என்பது நடைபெறுகிறதோ, அது போன்று அவரவர் வீடுகளில் அவரவரின் நன்மையைப் பொருட்டு, கலசம் வைத்து வழிபடுவார்கள். இதில், கலசம் கடவுளின் உடலாகவும், மேலே வைக்கும் தேங்காயானது தலையாகவும், கலசத்தின் மேல் சுற்றியுள்ள நூல் நரம்புகளாகவும், மேல் சாத்திய துணி சருமமாகவும் கொள்ளப்படும். இன்னும் உடலில் உள்ள சக்திகளையும் உள்ளடக்கித் திகழும் கலசத்தில் எல்லாம்வல்ல இறைவனைக் கண்டு பக்தியோடு வழிபட்டுப் பயன்பெறக் கூடிய உயரிய வழிபாடே கலச வழிபாடு. இதைச் செய்யும்போது நமது எண்ணமானது பொருளை மறந்து இறையை அனுபவித்தல் அவசியம்.

? சில ஆலயங்கள் ஸ்வயம் வியக்த க்ஷேத்திரங்கள் என்றும், இன்னும் சில ஆலயங்கள் ரிஷிகள் பிரதிஷ்டை செய்தவை என்றும் சொல்லப்படுகின்றன. மற்ற கோயில்களிலிருந்து இவற்றுக்கு முக்கியத்துவம் ஏதேனும் உள்ளதா?

- எஸ். மகேஷ், திருச்சி

‘ஸ்வயம்வியக்த' அல்லது `ஸ்வயம்பூ' ஆலயங்கள் என்பது இறைவனானவர் தாமாகவே தன்னை வெளிப் படுத்திய க்ஷேத்திரங்கள் ஆகும். ‘வியக்த' என்றால் தெரிதல் எனப் பொருள். `ஸ்வயம்' எனில் தானாக. ‘பூ' என்றால் இருத்தல். எனவே, அந்தத் தலங்களில் இறைவன் தானாகவே தோன்றி, `ஸ்வயம்வியக்த' அல்லது `ஸ்வயம்பூ' வடிவில் அருள்கிறார் என்று அறிதல் வேண்டும்.

ஸ்வயம்வியக்த' அல்லது `ஸ்வயம்பூ'
ஸ்வயம்வியக்த' அல்லது `ஸ்வயம்பூ'

இப்படிப்பட்ட ஆலயங்களில் உள்ள லிங்கத் திருமேனிகள் சமமாக ஒரு சிற்பி வடித்ததுபோல் இருக்காது. எப்படி ஒரு மரமோ, மலையோ இயற்கை யாகத் தோன்றுகின்றனவோ, அதுபோன்று இயற்கையாக இருக்கும். அதனுடன் பூஜையின் பொருட்டு `பிண்டிகா' என்று போற்றப்படும் ஆவுடையார் இணைக்கப்படும். திருவண்ணாமலை, திருமழிசை போன்று பல க்ஷேத்திரங்கள் ஸ்வயம் வியக்த க்ஷேத்திரங்களே ஆகும்.

ரிஷிகள் தங்களின் வேண்டுதலின் பொருட்டு லிங்கம் ஸ்தாபித்து வழிபட்ட தலங்களும் உள்ளன. இவை ஆர்ஷ ப்ரதிஷ்டை ஆகமங்களாக விளங்கு கின்றன. மயிலை, மாயவரம் போன்றவை அம்பாள் பூஜை செய்து வழிபட்ட க்ஷேத்திரங்கள். மனிதர் களால் ஸ்தாபிக்கப்பட்ட லிங்கங்கள் மானுஷம் எனும் வகையில் சேரும். இப்படி பல வகைகள் உண்டு. ஆகமங்களின்படி எந்த ஆலயங்களில் எப்படி பூஜை செய்ய வேண்டும் என்ற விதிமுறைகளும் உண்டு.

? பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்தது என்று சொல்லப்படுகிறது. ஆனால், ஆன்மிகரீதியாக அதற்கு ஏதேனும் மறைபொருள் இருக்கும் என்றே தோன்றுகிறது. இதுபற்றித் தங்கள் கருத்து என்ன?

- எஸ். கண்ணபிரான், சென்னை - 100

ஒரு காரியம் சிறப்பாக நடைபெற விநாயகரை வழிபடுவது அவசியம். அவரை வழிபட்டால் தடைகள் விலகும். வெற்றி பெற மனம் அலைபாயாமல் இருப்பது அவசியம்.

‘யோக: சித்தி வ்ருத்தி நிரோத:’ அதாவது யோகம் என்பது மனத்தை ஒருநிலை அடையச் செய்தல் ஆகும். விநாயகர் மூலாதாரத்தில் வீற்றிருந்து மற்ற சக்கரங்களைக் கடந்து த்வாதசாந்த பெருவெளியில் உள்ள இறைவனை அடைய உதவுபவர்.

பிள்ளையார்
பிள்ளையார்

குரங்கு என்னும் விலங்கானது மரத்துக்கு மரம் தாவும் குணமுடையது. நிலையற்றது. எனவே, சில நேரங்களில் நாம் ஒரு காரியம் செய்யலாம் என்று நினைத்து ஆரம்பித்து அது எதிரான ஒரு பலனைத் தருமானால் இந்தச் சொற்றொடரைப் பயன்படுத்துவது வழக்கம். இதற்கு நேரிடையாக ஆன்மிகத் தொடர்பு இருப்பதுபோல் எனக்குத் தெரியவில்லை.

? குளித்து முடித்து நெற்றிக்குத் திலகமிடும் வேளையில், முகம் பார்க்கும் கண்ணாடி தவறி விழுந்துவிட்டது. இதனால் மனம் சஞ்சலப்படுகிறது. இதற்குப் பரிகாரம் ஏதேனும் செய்ய வேண்டுமா?

- மஞ்சுளா ராமநாதன், காரைக்குடி.

தவறுதலாக நடந்துவிட்டதை எண்ணிக் கவலை வேண்டாம். மனம் சஞ்சலம் அடைந்தால், மற்ற காரியங் களையும் அது பாதிக்கும். ஆகவே வீண் சஞ்சலத்தைப் புறம்தள்ளவும். புதிய கண்ணாடி ஒன்றை வாங்கி வைத்துவிட்டால் போதுமானது. பரிகாரம் எதுவும் தேவையில்லை.

மனத்தில் `இந்த நிகழ்ச்சியால் நமக்கு ஒன்றும் இல்லை; எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் கடவுள் நம்மைக் காப்பாற்றுவார்' என்ற திடசிந்தனையை விதைத்துத் தளராத மனத்துடன் தங்களின் செயல்களைத் தொடருங்கள்; நடப்பதெல்லாம் நன்மையாகும்.

- பதில்கள் தொடரும்...

வாசகர்களே... ஆன்மிகம் தொடர்பான அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் தருகிறார்,

சென்னை `காளிகாம்பாள் கோயில்' சிவஶ்ரீசண்முக சிவாசார்யர்.

கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி: கேள்வி-பதில், சக்தி விகடன் 757, அண்ணாசாலை, சென்னை-600 002