மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேள்வி - பதில்: வயதில் குறைந்தவரை குருவாக ஏற்கலாமா?

கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
News
கேள்வி - பதில்

குருவுக்கு இன்ன ஜாதி, இன்ன இனம், ஆண், பெண் போன்ற பாகுபாடுகளும் கிடையாது.

? நம்மை விட வயதில் குறைந்தவர்களைக் குருநாதராக ஏற்கலாமா, அவர்களுக்கு நமஸ்காரம் செய்யலாமா?

-கே.பரமசிவம், திருச்சி-3

குருவுக்கு வயது வரம்பு என்பது கிடையாது. அக்னியில் சிறிய நெருப்பு, பெரிய நெருப்பு என்று கிடையாது. அதுபோல் குருவைப் பொறுத்தவரை, அவர் பெரியவரா சிறியவரா என்ற கேள்விக்கே இடமில்லை. `விருத்தா சிஷ்யா; குரோர் யுவா' என்று ஸ்ரீதட்சிணாமூர்த்தி பற்றிச் சிறப்பித்துச் சொல்வார்கள். ஸ்வாமி தட்சிணாமூர்த்தியின் சீடர்களான சனகாதி முனிவர்கள் வயதானவர்கள். ஆனால், ஸ்வாமி இளம் பருவத்தினராக இருப்பார். இளம் வயதினரான ஸ்ரீதட்சிணாமூர்த்தி வயது முதிர்ந்த சீடர்களுக்கு உபதேசம் செய்தார்.

குருவுக்கு இன்ன ஜாதி, இன்ன இனம், ஆண், பெண் போன்ற பாகுபாடுகளும் கிடையாது. பொதுவாக `குரு' என்றாலே பெரியவர் என்றுதான் பொருள். எவையெல்லாம் உயர்வானவையோ, நம் அஞ்ஞானத்தைப் போக்கி ஞானத்தைத் தரக் கூடியவையோ, அவை எல்லாமே நமக்குக் குருதான். தத்தாத்ரேயர் தமக்கு ஆகாயம், சூரியன், புறா, சிலந்தி என்று 24 குருமார்கள் இருப்பதாகக் கூறியது குறிப்பிடத்தக்கது. அதேபோல், ஒருவரை நாம் குருவாக ஏற்றுக்கொண்டாலே அவருக்கு நமஸ்காரம் செய்யத்தான் வேண்டும்.

கேள்வி - பதில்: வயதில் குறைந்தவரை குருவாக ஏற்கலாமா?

?இன்று நாட்டில் நிலவும் பல பிரச்னைகளின் காரணமாக நிம்மதியான வாழ்க்கை என்பதே பலருக்கும் இல்லாமல் போய்விட்டது. அமைதியான வாழ்க்கைக்கு வழியே இல்லையா?

-எஸ்.பார்வதி, வேலூர்

முதலில் மனிதர்கள் மனிதர்களாக இருக்கவேண்டும். மனிதன் மனித னாக வாழ வழிகாட்டுவது ஆன்மிகம்தான். ஆன்மிக வாழ்க்கை என்பது கடவுள் வழிபாடு, சுய ஒழுக்கம், அனைவரையும் ஒன்றாக எண்ணி அன்பு செலுத்துதல், சக மனிதர்களை மதித்தல், சாஸ்திரங்களில் சொல்லப் பட்டுள்ளபடி நம்முடைய வாழ்க்கையை அமைத்துக்கொள்ளுதல் ஆகும். இதன்படி ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் போது அவர்களுக்கு நன்மையே நடக்கிறது.

தியானம், பிரார்த்தனை செய்து வந்தாலே நம் மனம் பக்குவப்பட்டுவிடும். அந்த நிலையில் நமக்குத் தவறான சிந்தனைகள் எதுவும் வராது. தெய்வ வழிபாடு, சாஸ்திர நெறிப்படி வாழ்வது, இதிகாச - புராணங்களைப் படிப்பது போன்ற வற்றில் ஈடுபட்டால் நம்முடைய மனம் அமைதி பெறும்; வெளியுலகப் பிரச்னைகள் நம்மைப் பாதிக் காது.

அதேபோல், நம் முன்னோர் வாழ்ந்த, கூறிச் சென்ற முறைப்படி நம்முடைய செயல்களை அமைத்து, நல்ல எண்ணங்களையே சிந்தித்துக் கொண்டிருந்தால், நம் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும். அமைதியை ஏற்படுத்திக் கொள்வதோ அல்லது அழித்துக்கொள்வதோ எதுவும் நம் கையில்தான் இருக்கிறது.

கேள்வி - பதில்: வயதில் குறைந்தவரை குருவாக ஏற்கலாமா?

?ஒரு வீட்டில் கணவன் - மனைவி இருவரும் வேலைக் குச் செல்ல நேரிடும்போது மடி, ஆசாரம் போன்றவற் றைக் கடைப்பிடிப்பது சாத்தியம் இல்லையே... என்ன செய்வது?

-சி.பிரியதர்ஷினி, சென்னை-54

மடி, ஆசாரத்தை எப்போதும் எல்லோரும் கடைப்பிடிக்கத்தான்வேண்டும். ஆசாரம் (hygiene) என்பது சுத்தம் - சுகாதாரம்தான். `சர்' என்ற வார்த்தைக்கு `நாம் இப்படித்தான் வாழவேண்டும்' என்று பொருள். எவற்றையெல்லாம் நாம் செய்யவேண்டுமோ அவற்றை நாம் கண்டிப்பாகச் செய்யவேண்டும்.

நாம் என்னதான் பிசியாக இருந்தாலும் சாப்பிடாமலோ, தூங்காமலோ இருப்பதில்லை. அதற்கெல்லாம் நமக்கு நேரம் கிடைக்கும்போது, ஆசாரத்தைக் கடைப்பிடிக்க மட்டும் சாத்தி யம் இல்லை என்று சொல்வது சரியல்ல.

ஆசாரம் என்பது என்ன? குளித்துவிட்டு சாப்பிடுவது, தூய உடைகளை உடுத்துவது போன்றவைதான் ஆசாரம். ஆசாரம் என்பதே இதுபோன்ற சின்னச் சின்ன விஷயங்கள்தான். அர்ச்சகர்கள், ஆசார்யர்கள் என்னும்போது அவர்களுக்கு நிறைய நியமங்கள் இருக்கும். அவற்றைக் கண்டிப்பாக அவர்கள் கடைப்பிடிக்கவேண்டும். ஆனால், நம் அன்றாட வாழ்க்கைக்குப் பெரிய அளவில் கட்டுப் பாடுகள் இல்லையே.

ஆசாரம் என்பதை நாம் நம் வாழ்க்கையின் ஓர் அங்கமாகப் பார்க்க வேண்டுமே தவிர, ஏதோ பெரிய தண்டனை என்ப தாகப் பார்க்கக்கூடாது.

அப்படி நினைக்கும் போதுதான் இப்படியான கேள்விகள் நமக்கு ஏற்படுகின்றன. இப்போது கூட பாருங்கள் `கோவிட் - 19' என்று சொல்கிறார்கள். எச்சில் துப்பாதீர்கள், கை குலுக்காதீர்கள் என்று சொல்வதுகூட ஆசாரத்தில் சேர்ந்ததுதான்.

ஆக, ஆசாரம் என்பது நமக்கு வாழ்க்கை முறைதான். இந்த நியமங்களைச் சட்டதிட்டங் கள் என்று சொல்லலாம். நூறு சட்டங்கள் இருக்கலாம். ஆனால், எல்லாமே எல்லோருக்கு மான சட்டங்கள் என்று சொல்லமுடியாது.

அதேபோல்தான் ஆசார நியமங்களும். அவரவர்க்கு விதிக்கப்பட்ட ஆசார நியமங் களைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கதான் வேண்டும்.

கேள்வி - பதில்: வயதில் குறைந்தவரை குருவாக ஏற்கலாமா?

?ஒரு குடும்பத்தில் கணவருக்கு ஆன்மிகத்தில் நாட்டம் குறைவாகவும் மனைவிக்கு அதிகமாகவும் இருக்கிறது. இந்த நிலைமையை எப்படிச் சமாளிப்பது?

-வி.ராமலட்சுமி, நாகர்கோவில்

மனைவி ஒரு விரதம் இருக்கவேண்டும் என்றால், கணவனின் உத்தரவைக் கேட்டு அவரின் ஒத்துழைப்புடன் கடைப்பிடிக்க வேண்டும் என்கிறது தர்மசாஸ்திரம். வீட்டில் தினமும் பூஜை செய்வது, தீபம் ஏற்றுவது இதற்கெல்லாம் கணவர் சம்மதிக்க வில்லை என்றால், கோயிலுக்குச் சென்று விளக்கு ஏற்றலாம்; பூஜைகள் செய்யலாம். அதற்கும் கணவர் சம்மதிக்கவில்லை எனில், நம் சார்பில் வேறு எவரையேனும் கோயிலில் விளக்கு ஏற்றும்படி சொல்லலாம்.

அதேநேரம், கொஞ்சம் கொஞ்சமாகக் கணவருக்குப் புரிய வைத்து அவருடைய மனத்தை மாற்ற முயற்சி செய்யவேண்டும். அதற்காக மானசீகமாக பிரார்த்தனை செய்துகொள்ளலாம். ஒருவர் நல்ல வழியில் செல்வதற்கு தெய்வ வழிபாடு முக்கியமா னது. கணவர் நல்ல வழிக்குத் திரும்ப வேண்டும்; அவருக்குக் கடவுள் நம்பிக்கை வரவேண்டும் என்று இறைவனைப் பிரார்த்தனை செய்துகொள்வது சிறப்பு. இறை அருளால் எல்லாம் நல்லபடியே நடக்கும்.

? ஆலயங்களில் சுவாமி விக்கிரஹங்கள், நகைகள் போன்றவை களவு போகின்றன. எனில், ஆலயத் தில் தெய்வச் சாந்நித்யம் குறைந்துவிட்டது என்று சொல்லலாமா?

-க.திருமலை, கோவை-4

கோயிலில் கடவுள் சாந்நித்யத்துடன் தான் இருப்பார். அதில் எந்த சந்தேகமும் இல்லை. திருடர்களைத் தடுக்கவேண்டியது நம் கடமை. கடவுள் என்பவர் உருவமற்றவர். அவர் நமக்கு அருள வேண்டி உருவம் கொண்டு கோயில் கொண்டுள்ளார். உருவமற்ற அவருக்கு உருவம் கொடுத்ததும், ஆலயம் எழுப்பியதும், விதவிதமான ஆபரணங்கள் அணிவித்து அழகு பார்ப்பதும் நாம்தான். அவை களவு போகின்றன என்றால் அதற்குக் காரணம் நம் அலட்சியமே. ஆக, விக்கிரஹங் களையோ, ஆலயத்தின் சொத்துகளையோ பாதுகாக்கவேண்டியது நம்முடைய கடமை என்பதை உணர்ந்து நாம்தான் தகுந்த எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

- பதில்கள் தொடரும்...

வாசகர்களே...

ஆன்மிகம் தொடர்பான அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் தருகிறார்,

சென்னை `காளிகாம்பாள் கோயில்' சிவஸ்ரீசண்முக சிவாசார்யர்.

கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி: கேள்வி-பதில், சக்தி விகடன் 757, அண்ணாசாலை, சென்னை-600 002