Published:Updated:

கேள்வி - பதில்: வீட்டில் குரோட்டன்ஸ் செடிகளை வளர்க்கலாமா?

அம்மன் கோயில்
பிரீமியம் ஸ்டோரி
அம்மன் கோயில்

செடிகள், மரங்கள் போன்றவை வாசனை உள்ளதாகவே இருக்கவேண்டும்.

கேள்வி - பதில்: வீட்டில் குரோட்டன்ஸ் செடிகளை வளர்க்கலாமா?

செடிகள், மரங்கள் போன்றவை வாசனை உள்ளதாகவே இருக்கவேண்டும்.

Published:Updated:
அம்மன் கோயில்
பிரீமியம் ஸ்டோரி
அம்மன் கோயில்

? பல தலங்களில் சரபேஸ்வரருக்குத் தனிச் சந்நிதிகள் இல்லாமல், அவர் புடைப்புச் சிற்பமாகவே இருப்பது ஏன்?

-யாழினி பர்வதம், சென்னை - 78

எல்லாம் வல்ல தேஜோமயமான சிவபெருமான், பசுக்களாகிய (ஜீவான்மாக்கள்) நாம் அறிந்து, தெளிந்து அனுபவிக்க பல ரூபங்களை எடுப்பதாக ஆகமங்களில் தெளிவுபடுத்தியிருக்கிறார். ஸ்ரீசரபேஸ்வரர் எல்லாம் வல்ல ஸ்ரீவிஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீநரசிம்மரின் கோபத்தைத் தணிக்க வந்த வடிவம். நம்முள் இருக்கும் அனைத்துத் தீமைகளையும் போக்கி நல்வழிப் படுத்துவார். ஸ்ரீசூலிணிதுர்கை மற்றும் ஸ்ரீபிரத்தியங்கிரா தேவி ஆகியோரைத் தம்முடைய இரண்டு இறக்கை களாகக்கொண்டவர்.

பொதுவாக சிவனார், சிவாலயங்களில் அருவுருவத் திருமேனியாக - சதாசிவரான லிங்கத் திருமேனியாகவே காட்சி அருள்வார். ஸ்ரீநடராஜர், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீசோமாஸ்கந்தர், ஸ்ரீபைரவர் போன்ற மாஹேச்வர மூர்த்தங்களைத் தவிர மற்றைய ரூபங்களை ஆலயங்களில் அமைந்துள்ள தூண்களில் சிற்பங்களாகவும் சுதை வடிவிலும் அமைப்பது முறை. லிங்க வடிவில் பூஜை செய்வது அனைத்து மூர்த்தங்களுக்கும் பூஜை செய்த பலனைத் தருவதால், சில தலங்களில் நீங்கள் குறிப்பிடுவது போன்று காட்சி தருகிறார் சரபேஸ்வரர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

? வீட்டு வாசலில் குரோட்டன்ஸ் செடியை வளர்க்கலாமா?

-ஆர்.பிரேமா, சென்னை - 91

செடிகள், மரங்கள் போன்றவை வாசனை உள்ளதாகவே இருக்கவேண்டும். கடவுளுக் குச் சமர்ப்பிப்பதாக இருந்தாலும், நமக்குப் பயன்படுத்திக்கொள்வதாக இருந் தாலும் வாசனையுள்ள மலர்களையே பயன்படுத்த வேண்டும். எனினும், வெறும் அழகுக்காக செடிகளையோ மரங்களையோ வளர்ப்பவர் களுக்கு இந்த நியமம் இல்லை. எனவே, குரோட்டன்ஸ் போன்ற செடிகளை வெறும் அழகுக்காக வளர்ப்பதில் தவறில்லை.

குரோட்டன்ஸ்
குரோட்டன்ஸ்

இயன்றவரையிலும் நாம் செய்யும் காரியம் பயனுள்ளதாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். இதைக் கருத்தில்கொண்டு, வாசனையுள்ள செடி கொடிகளை வளர்த்தால், அதன் ஆற்றல் நம்முடைய உடலுக்கும் உள்ளத்துக்கும் எழுச்சி தரக்கூடியதாக அமையும். விருட்ச சாஸ்திரம் என்ற நூலில் இதுபோன்ற மரங்கள், செடிகொடிகள் அதன் பயன்பாடுகள் பற்றி விவரிக்கப்பட்டிருக்கிறது.

? அம்மன் கோயில்களில் பிரம்மசாரிகள் அபிஷேக ஆராதனைகள் செய்யலாமா?

- நாராயணன், மயிலாடுதுறை

அர்ச்சகர் என்பவர் தன்னுடைய சேவையைப் பொறுத்து வெவ்வேறு ஸ்தானங்களை அடை கிறார். எப்படி ஒரு மனிதர் தன் குழந்தைக்குத் தந்தையாகவும், தாய்க்கு மகனாகவும், மனைவிக்குக் கணவனாகவும், தம்பிக்கு அண்ணனாகவும் ஸ்தானத்துக்கேற்ப அழைக்கப்படுகிறாரோ, அப்படி அர்ச்சகருக்கும் நிலைகள் மாறுபடும்.

தீபாராதனைகள் போன்ற உபசாரங்கள் செய்யும்போது சேவகனாக, அபிஷேகம் செய்யும்போது தாயாக... என்று ஆலய அர்ச்சகரின் நிலைகளை ஆகமங்கள் மிகத் தெளிவாக விளக்குகின்றன. எனவே, அம்மன் ஆலயங்களில் தகுந்த தீட்சை பெற்ற பிரம்மசாரிகள் அபிஷேகம், ஆராதனைகள் செய்யலாம். இன்றும் சில ஆலயங்களில், திருமணமான பிறகே நித்திய பரார்த்த பூஜை செய்யத் தகுதி உண்டு என்ற மரபு இருப்பதால், அதுபோன்ற ஆலயங்களில் அதன்படி செய்வதே சிறந்தது.

எங்கள் காளிகாம்பாள் ஆலயத்தில் நான் சிறு வயது முதலே அன்னைக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வருகிறேன். தாயாருக்கு மகன் சேவை செய்வது கடமையல்லவா. எனவே, அவரவர் ஆலயங்களில் இருக்கும் வழிமுறைகளுக்கு ஏற்ப பூஜைகளைத் தொடங்குவதே சிறப்பானது.

? பத்திரிகைகளில் வெளிவரும் ஜோதிடம், ராசிபலன் ஆகியவற்றை எந்த அளவுக்கு நம்பலாம்?

-வெங்கட்ராம ஐயர், பட்டமங்கலம்

ஜோதிடம் என்பது நம்முடைய வேதங்களின் ஓர் அங்கமாகப் போற்றப்படுகிறது. ஜோதிடம் என்பது சத்தியமான சாஸ்திரம். எனவே, அந்த சாஸ்திரத்தில் நன்றாகத் தேர்ச்சி பெற்றவர்கள் கூறினால், அது பத்திரிகையாக இருந்தாலும், தொலைக்காட்சியாக இருந்தாலும், புத்தகமாகவும் இருந்தாலும் நம்பி ஏற்றுக்கொள்ளலாம்.

? பெரும்பாலான கடவுள் அவதாரங்கள் அசுரர்களைக் கொல்வதாகவே உள்ளன. கொலை செய்வது பாவம் இல்லையா?

-தி.க.வேல்முருகன், திட்டக்குடி

நாம் ஏதேனும் தொற்றுநோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருந்தால், நல்ல மருத்துவரிடம் சென்று அந்தத் தொற்றினைப் போக்கிக்கொள்வது முக்கியமானது. இல்லையெனில், அந்தத் தொற்று நம் உடலை அழித்துவிடும். அதேபோன்று அசுரர்கள் என்பவர்கள் தங்களின் தீய செயல்களால் மனித வாழ்வுக்கு தீங்கு விளைவிப்பவர்களாக செயல்பட்டவர்கள்.அவர்களை அழிப்பது அத்தியாவசியமாகிறது. அவர்களில் சிலரை அழிப்பதால் நல்லோர் பலருக்கு நன்மை உண்டாகிறது. தீமைகள் அழிக்கப்படுவதில் தவறு இல்லை.

அம்மன் கோயில்
அம்மன் கோயில்

அப்படித்தான் தெய்வ சக்தி நம்முடைய நன்மையைக் கருதி தீய சக்திகளை அழிப்பது கொலையாகாது. அதர்மத்தை அழித்தல் போற்றப் படவேண்டியது. சண்டிகாதேவியை ஜய ஜய என்று தேவர்கள் போற்றினார்கள் என்று புராணங்கள் கூறுகின்றன.

ராணுவ வீரரானவர் எப்படி பயங்கரவாதி களைக் கொன்று நாட்டைக் காப்பாற்றுகிறாரோ, அப்படியே தெய்வ அவதாரங்களின் திருக் கதைகளையும் அவர்கள் நிகழ்த்தும் அசுர வதத்தையும் நாம் பார்க்கவேண்டும்.

- பதில்கள் தொடரும்...

வாசகர்களே... ஆன்மிகம் தொடர்பான அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் தருகிறார்,

சென்னை `காளிகாம்பாள் கோயில்' சிவஸ்ரீசண்முக சிவாசார்யர்.

கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி: கேள்வி-பதில், சக்தி விகடன் 757, அண்ணாசாலை, சென்னை-600 002