மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேள்வி - பதில்: கோ பூஜை எதற்காக?

கோ பூஜை
பிரீமியம் ஸ்டோரி
News
கோ பூஜை

சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளபடி பசு போன்ற ஜீவராசி களை வணங்கி உயர்வோம்.

? கோ பூஜை, கஜ பூஜை, அசுவ பூஜை போன்றவற்றின் தாத்பர்யம் என்ன? அதனால் என்ன பலன் கிடைக்கும்?

-எம்.விசாலாட்சி, சென்னை - 33

‘கவாம் அங்கேஷு திஷ்டந்தி புவனானி சதுர்தச’ என்றபடி பசுவின் அங்கங்களில் 14 உலகங்களும் உள்ளன என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கை. கல்லானது பூமியில் பதிக்கப்பட்டிருந்தால் நம் பாதங்கள் வைப்பதற்கும், சுவராக இருந்தால் நம்மைக் காப்பாற்றுவதற்கும், கர்ப்பகிருகத்தில் இருந்தால் தெய்வத் திருமேனியாக நாம் வழிபடுவதற்கு உரியதாகிறது.

அதேபோன்று மிருகங்களும் தன்மையினால் வேறுபடுகின்றன. அந்த வகையில் பசு, யானை, குதிரை, பாம்பு, ரதம் போன்றவற்றை பூஜித்து பயன் பெறுமாறு நம்முடைய சாஸ்திரங்கள் வலியுறுத்து கின்றன. குதிரையின் முன் பகுதியிலும் (அச்வபூர்வாம்), ரதத்தின் மத்தியிலும் (ரத மத்யாம்), யானையின் பிளிறலிலும் (ஹஸ்த நாத) ஸ்ரீலட்சுமிதேவி அருள்புரிகிறாள் என்று ஸ்ரீசூக்தத்தில் கூறப்பட்டுள்ளது.

கோ பூஜை
கோ பூஜை

கோமாதா என்று போற்றப்படும் பசுவின் பின்புறத்தில் ஸ்ரீதேவியை பூஜிப்பதும், பசு போன்ற அனைத்து உயிரினங்களையும் எந்தக் காரணத்தைக் கொண்டும் கொல் லாமல் பாதுகாப்பதும் நம்முடைய முக்கியமான கடமையாகும். இறைவனின் சக்தியை, நம்மைச் சுற்றியுள்ள இதுபோன்ற ஜீவன்களிலும் கண்டு போற்றும் மிக உயரிய பண்பினை நம்முடைய சமயம் நமக்கு அளித்துள்ளது. எனவே, சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளபடி பசு போன்ற ஜீவராசி களை வணங்கி உயர்வோம்.

? நான் வேதம் கற்றுக்கொள்ள விரும்பு கிறேன். ஆனால், வெளிநாட்டில் இருக்கிறேன். ஆடியோ மூலம் கற்றுக்கொள்ளலாமா?

-ஆர்.ரகுநாதன், சிகாகோ

வேத மந்திரங்களைத் தகுந்த ஆசார்யர் மூலம் கற்பதே நலம். குருவானவர் கூறிய பிறகு நாம் திருப்பிக் கூறி பழகுவதே அவரின் ஆசிகளுடன் வேதத்தைக் கற்பதற்குச் சிறந்த வழி. மாதம்தோறும் அங்கே அருகில் இருக்கக் கூடிய ஆலயத்துக்குச் சென்று, அங்கு சேவை செய்யும் ஆசார்யரிடம் கற்கலாம்.

இப்படி கற்பதற்குத் தங்களுக்கு வாய்ப்பு இல்லையென்றால், இப்போதுள்ள நவீன சாதனங்களின் துணையுடன் தகுந்த வித்வானிடம் விண்ணப்பித்துக்கொண்டு ‘ஸ்கைப்’ போன்றவற்றின் மூலமாகக் கற்கலாம். குரு இல்லாமல் கண்டிப்பாகக் கற்கக் கூடாது.

கேள்வி - பதில்
கேள்வி - பதில்

வேதங்கள் விதைநெல் போன்றவை. அவற் றைச் சரியான முறையில் ஸ்வரத் துடனும் அனுஷ்டானத்துடனும் கூறினால்தான் முழுமையான பலன் கிடைக்கும். தவறாகக் கூறினாலோ, மிகவும் விபரீதமான பலன்கள் ஏற்பட்டுவிடும். இந்த வேத மந்திரங்களை நம் ரிஷிகள் தங்கள் தவவலிமையால் கண்டு உணர்ந்து அளித்துள்ளார்கள். முக்கியமாக இதுவரை நீங்கள் சந்தியாவந்தனம் போன்ற நித்ய கர்மாக் களைச் செய்து வந்திருக்க வேண்டியது அவசியம்.

அனுஷ்டானங்களுடன் கூடிய மந்திர உச்சாரணங் களே முழுமையான பலன் தரும்.

இவை எதுவும் தங்களால் இயலாது என்றால், தாங்கள் பாரத தேசம் வரும்போது சில வாரங்கள் தங்கியிருந்து, தங்கள் ஆசார்யரிடம் எவ்வளவு முடிகிறதோ அவ்வளவு கற்றுப் பயன்பெறலாம்.

? சஞ்சிதம், பிராரப்தம், ஆகாமியம் என்று கர்ம வினைகளை வகைப்படுத்தியுள்ளார்கள். அவற்றைப் பற்றி விளக்க வேண்டுகிறேன்.

-எஸ்.வசந்தா, சென்னை - 34

நாம் வங்கியில் பல வருடங்களாகப் பணம் சேமித்து வந்து, அதிலிருந்து ஒரு பகுதியை எடுத்து, அதிலும் செலவு செய்தது போக மீதமுள்ள பணத்தை வேறு ஒன்றில் முதலீடு செய்து, அதன் மூலம் வரும் வருமானத்தை நம்முடைய வங்கியில் சேமிப்பது எப்படியோ... அப்படி பல பிறவிகளின் கர்மவினைகளின் தொகுப்பே சஞ்சித கர்மாக்கள் என்று அறியவும்.

சஞ்சித கர்மாக்களில் ஒரு பகுதியான பிராரப்த கர்மாக்களின் மூலமாக இந்த உடல் அமையப்பெற்று, அதன்படியே நம் வாழ்க்கை அமையப்பெறுகிறது. ‘பிராரப்தம் தேஹம் ஏவ உக்தம், தேஹம் பிராரப்தம் ஏவ ஹி’ என்று மிகச் சிறந்த முறையில் பிராரப்த கர்மாக்களை ஆகமங்கள் விளக்கியிருக்கின்றன. தேகம் இருக்கும் வரையிலும் கர்மாக்களும் இருக்கவே செய்யும்.

இந்தப் பிறவியில் நாம் செய்யும் வினைகள் நல்லவையோ, தீயவையோ அவற்றில் சில பிராரப்த கர்மாக்கள் என்றும், சில நம்முடைய புத்தி சக்தியினால் ஏற்பட்டவை என்றும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். நல்வினை, தீவினை இரண்டினாலும் நமக்குச் சில விளைவுகள் ஏற்படும். அவையே ஆகாமிய கர்மாக்கள் ஆகும்.

நாம் செய்த கர்மவினைகளால் பெற்ற ஆகாமிய கர்மாக்கள், ஏற்கெனவே உள்ள சஞ்சித கர்மாக்களுடன் இணைந்து, அதன்படியே நமக்கு அடுத்த பிறவியானது நிச்சயிக்கப்படுகிறது. இது இயற்கை நியதி. இதை நாம் புரிந்துகொண்டால், நல்லவர்கள் சிலநேரங்களில் கஷ்டங்கள் அனுபவிப்பதையும், தீமை செய்தவர்கள் சில காலம் நன்மைகளை அனுபவிப்பதையும் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியும். ஏற்கெனவே சேமித்து வைத்திருந்த பணம் சஞ்சிதகர்மா என்றும், அதிலிருந்து நாம் எடுத்த கொஞ்சம் பணம் பிராரப்த கர்மா என்றும், அதில் செலவு செய்தது போக மீதம் இருப்பது ஆகாமிய கர்மா என்றும் புரிந்துகொள்ளலாம்.

? தவறு செய்பவர்களுக்கும் தண்டனை கிடைக் கிறது. நல்லவர்களாக இருப்பவர்களுக்கும் சில நேரங்களில் தண்டனை கிடைக்கிறது. இது எப்படி சரியாகும்?

- கே.ராதாகிருஷ்ணன், ஆக்கூர்

ஒருவர் உழைப்பதே இல்லை. ஆனாலும் எந்தக் கவலையும் இல்லாமல் இருக்கிறார். இதற்கு இரண்டு காரணங்கள்தான் இருக்க முடியும். ஒன்று, அவர் ஏற்கெனவே நன்றாக உழைத்து சம்பாதித்து சேமித்து வைத்திருக்க வேண்டும். அடுத்தது, அவருடைய தேவைகளை அவருடைய குடும்பத்தினர் நிறைவேற்றி அவரைப் பாதுகாத்து வர வேண்டும்.

ஒருவர் கடுமையாக உழைத்துச் சம்பாதித்தாலும், முன்னர் வாங்கிய கடனுக்குப் பணம் முழுவதை யும் தந்துவிட்டாலோ அல்லது விரயம் செய்து விட்டாலோ அவர் சிரமப்படத்தான் நேரிடும்.

இதேபோன்றுதான் ஒவ்வொருவருக்கும் அவரவர் முன்ஜன்ம வினைகளின்படியே பலன்கள் ஏற்படுகின்றன. எனவே, நல்லவர்கள் தாங்கள் தண்டிக்கப்படும்போது மனம் தளராமல், நல்ல காரியங்களை விட்டுவிடாமல் செய்து வந்தால் இந்தப் பிறவியிலோ அல்லது அடுத்தடுத்த பிறவிகளிலோ நல்ல நிலையை அடைவர். அவருடைய குடும்பத்தாரும் மகிழ்வர்.

தவறான பாதையில் பயணிப்பவர்கள் தங்களுக்குக் கிடைக்கும் சுகமானது முற்பிறவிகளில் செய்த புண்ணியங்களின் பலனே என்று உணர்ந்து, இனியேனும் தவறு செய்வதிலிருந்து விலகுவோம் என்ற உறுதியுடன் நல்ல பாதையில் பயணிக்க வேண்டும்.

கடவுள் விருப்பு வெறுப்புகள் அற்றவர். அவரவர் வினைகளின்படியே எல்லோருக்குமான வாழ்க்கையை அளிக்கிறார்.

? நம் இயலாமைக்கும் தோல்விகளுக்கும் விதிதான் காரணம் என்று சொல்வது சரியா?

-ஆர்.கோபிகிருஷ்ணன், சென்னை-80

விதி என்பது உண்மைதான். விதி என்பதை ஏற்றுக்கொண்டால்தான் நமக்கு நடக்கும் நிகழ்ச்சி களை நம்மால் புரிந்துகொள்ள முடியும். இயலாமை என்பது வேறு; முயற்சி செய்தும் கிடைக்காமல் போவது என்பது வேறு. எனவே, நாம் கடுமையாக உழைத்தும் வெற்றி கிடைக்கவில்லை என்றால் அது விதியின் செயலே.

சிலநேரங்களில், தாங்கள் கடுமையாக உழைத்தும் பெறாத பணம், புகழ் போன்றவற்றை, வேறொரு தருணத்தில் மிக எளிய முயற்சியின் பேரிலேயே தாங்கள் பெறுவீர்கள். அதற்கு விதிதான் காரணம் என்பதைப் புரிந்துகொள்வீர்கள். ஆனால், முயற்சியே செய்யாமல் சோம்பேறிகளாகக் காலம் கடத்துபவர்கள் கூறுவது விதியாகாது. அது அவர்களின் தவறே.

- பதில்கள் தொடரும்...

வாசகர்களே... ஆன்மிகம் தொடர்பான அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் தருகிறார்,

சென்னை `காளிகாம்பாள் கோயில்' சிவஸ்ரீசண்முக சிவாசார்யர்.

கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி: கேள்வி-பதில், சக்தி விகடன் 757, அண்ணாசாலை, சென்னை-600 002