Published:Updated:

கேள்வி - பதில்: சுந்தர காண்டத்தை ஏன் பாராயணம் செய்ய வேண்டும்?

ராமாயணம்
பிரீமியம் ஸ்டோரி
ராமாயணம்

ஓவியம்: கேஷவ்

கேள்வி - பதில்: சுந்தர காண்டத்தை ஏன் பாராயணம் செய்ய வேண்டும்?

ஓவியம்: கேஷவ்

Published:Updated:
ராமாயணம்
பிரீமியம் ஸ்டோரி
ராமாயணம்

? ராமாயணத்தில் சுந்தரகாண்டம் படிப்பதால் நன்மைகள் ஏற்படும் என்று சொல்கிறார்கள். சுந்தரகாண்டத்துக்கு மட்டும் அப்படி என்ன முக்கியத்துவம்?

- ஆர். ராமகிருஷ்ணன், சென்னை - 24

ஆம்! நம் முன்னோர்கள் நமக்கு இவ்வுலக வாழ்க்கைக்குத் தேவையான பொன், பொருள், தங்கும் இடம் போன்றவற்றை மட்டுமல்லாது, எப்படிப்பட்ட கஷ்டங்கள் வந்தாலும் அவை கலையப்பட்டு வாழ்க்கையை அமைதியாக வாழ்வதற்குப் பல வழிபாட்டு முறைகளையும் அளித்துள்ளார்கள்.

நம்முடைய கர்மவினைகளைப் போக்கும் ஆற்றல் தெய்வ வழிபாடுகளுக்கு உண்டு. ஸ்ரீமத் ராமாயணத்தில் பல காண்டங் கள் இருப்பினும் அவை அந்தப் பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சிகளைக் குறித்தே பெயரிடப்பட்டு இருப்பதை தாங்கள் கவனிக்கலாம். ஆனால் சுந்தர காண்டம் அதுபோன்று பெயரிடப்படாமல், ஸ்ரீசீதா தேவியாரின் நலனை ஸ்ரீராமசந்திர மூர்த்தியிடம் விவரிக்கும் பகுதியாகவும் ஸ்ரீஆஞ்சநேயரின் வீர பராக்ரமத்தைச் சிறந்த முறையில் விவரிக்கும் பகுதியாகவும் உள்ளது.

ராமாயணம்
ராமாயணம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதனால், சுந்தர காண்டத்தை நியமத்துடன் பாராயணம் செய்து வந்தால் நமது வாழ்க்கை இவ்வுலகில் அமைதியாகவும் அழகான தாகவும் அமையும். மேலும், பரலோகத்திலும் மோக்ஷம் என்று போற்றக்கூடிய பாக்கியத்தைப் பாமரர்கள் முதல் பண்டிதர்கள் வரை அனைவரும் அடையக்கூடிய உபாயமாகவும் ஸ்ரீமத் ராமாயணத்தில் அமைந்துள்ள சுந்தர காண்டம் இருக்கிறது. அதனால்தான், சுந்தர காண்டம் பாராயணம் அனைவராலும் பல காலங்களாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

? கர்மவினைகளால் ஏற்படக்கூடிய பலன்களை நம்மால் மாற்றிக் கொள்ள முடியாதா?

- எம். வசுந்தரா சிவராமன், கோவை - 9

சிலவற்றை மாற்ற முடியும். சிலவற்றை அனுபவித்தே தீர வேண்டும். நம்முடைய துணிகளைத் துவைக்கும்போது புதிதாக வந்த அழுக்கை அகற்றலாம். ஆனால், அந்த துணியுடன் தைக்கப்பட்ட பார்டர் பகுதியில் உள்ள நிறத்தை மாற்ற இயலாது.

ப்ராப்த கர்மாக்களுடன் நாம் இந்தப் பூமியில் பிறந்துள்ளோம். தெய்வ பக்தியுடன் கடுமையாக நாம் உழைத்தோமானால், சில கொடிய கர்மவினைகளின் தாக்கத்திலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ளலாம். மழை பெய்யும்போது மழையை நிறுத்த முடியாது. ஆனால், குடை போன்றவற்றினால் நம்மை தற்காத்துக்கொள்ளலாம் அல்லவா! `கடவுளே எல்லாம்' என்று அவரையே சரணடைந்து, உள்ளம் உருகி வேண்டினால் கண்டிப்பாக நாம் நலம் அடைவோம்.

? பிற மதங்களில் கடுமையான கட்டுப்பாடு கள் உள்ளன. கடவுள் நம்பிக்கை மற்றும் வழிபாடு ஆகியவற்றைக் கட்டாயமாகக் கடைப்பிடிக்கிறார்கள். அதேபோன்ற கட்டுப்பாடு இருந்தால் நம் இந்து மதமும் மேன்மை அடையும் அல்லவா?

- எஸ்.ரமேஷ், சென்னை - 1

நமது சமயத்தில், என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக் கூடாது என்று அனைவருக்கும் விளக்கும்விதமாக தர்மசாஸ்திரம் இருக்கிறது. ஏறக்குறைய ஆயிரம் வருடங்களுக்கும் மேலாக அந்நியர் ஆதிக்கத்தில் நம்நாடு சிக்கி, பல போராட் டங்களைச் சந்தித்துள்ளது.

சுதந்திரம் அடைந்தபின்னரும் பல்வேறு காரணங்களால் நம் மதத்தைச் சார்ந்த பலரும், நம்முடைய பாரம்பர்யத்தைப் பற்றி தெரிந்து கொள்ள இயலாத நிலையே தொடர்கிறது.

கேள்வி - பதில்
கேள்வி - பதில்

கைகளைக் கட்டிப்போட்டுவிட்டு சாப்பிடு என்று சொன்னால் எப்படி இருக்குமோ, அப்படியுள்ளது இன்றைய நம் நிலைமை. நடக்கும் சில தெய்வக் காரியங்களும் இறை சக்தியின் அருளாலும் அனுக்கிரகத்தாலும்தான் நடைபெற்று வருகின்றன.

நிலைமை மாறும்; மாறி வருகின்றன. நம்முடைய தர்ம சாஸ்திரங்கள் எளிமையான வகையில் தொலைக்காட்சிகள் மூலமாகவும், ஆன்மிக இதழ்கள் வாயிலாகவும் பிரசாரம் செய்யப்பட்டு வருகின்றன. நாம் அனைவரும் நம்முடைய சமயக் கருத்துகளை அறிந்து, அவற்றை அன்றாட வாழ்கையில் கடைப் பிடித்துச் சிறப்படையும் காலம் வெகுதொலைவில் இல்லை.

ஆகமங்களில், ஆலயம் என்றால் என்ன, அவ்வாலயத்துக்கும் உலகுக்கும் உள்ள தொடர்பு யாது, எப்படி கடவுளை வணங்க வேண்டும், ஏன் வணங்க வேண்டும் என்பன போன்று பல அரிய தகவல்கள் விளக்கப்பட்டுள்ளன.

இவை அனைத்தையும் அறிந்துணர்ந்து, முறைப்படி கடைப்பிடித்து பயன்பெற்று துன்பம் நீங்கி, அனைவரும் இன்பம் பேரின்பம் அடையவேண்டும் என்பதே ஆன்மிகத்தின் குறிக்கோள் ஆகும்.

? கடவுள் மனித வடிவில் அவதாரம் செய்ய வேண்டிய அவசியம் என்ன?

- எஸ்.கமலக்கண்ணன், நெல்லை - 15

ஒரு குடும்பத்தலைவனே தனது வீட்டில் உள்ள சகல காரியங்களுக்கும் பொறுப்பானவர். அனைவரையும் பாதுகாத்து, அவர்களின் அன்றாடத் தேவைகளைக் கவனித்து வருவது அவரது கடமை. அதுபோல், எல்லாம்வல்ல பரம்பொருள் உலகிலுள்ள அனைத்து ஜீவ ராசி களுக்கும் தலைவர் ஆவார். ஆகவே, அவர் அனைத்து உயிர்களின் நலனையும் மனத்தில் ஒண்டு திருஅவதாரம் எடுத்து அருள்கிறார்.

`யதா யதா ஹி... ஸ்ருஜாம்யஹம்’ என்று கீதையில் சொல்கிறார் பகவான் ஸ்ரீகிருஷ்ணர். எப்போதெல்லாம் தீமைகள் அதிகமாகி நல்லவர் கள் துன்பப்படுகிறார்களோ, அப்போதெல்லாம் நான் அவதாரம் எடுத்து அனைவரையும் காப்பேன் என்று உறுதி அளித்துள்ளார்.

நாம் அவரை உணர்ந்து, பயம் விலகி, அவர்மீது நம்பிக்கை உடையவர்களாக இருப்பதற்காக உருவமற்ற பரம்பொருள் உருவமேற்று அவதாரம் எடுத்து அருளுகிறார்.

உலகிலுள்ள அனைவரும் ஒரே பக்குவநிலையில் இருப்பதில்லை. அவரவர் பக்குவ நிலைக்கு ஏற்ப கடந்தும் உள்ளும் திகழ்கிறார் கடவுள். ஆக, எங்கும் நிறைந்திருக்கும் அந்தப் பரம்பொருள், நமது நன்மைக்காகவே பல உருவங்களில் தோன்றி நம்மைக் காப்பாற்றுகிறார்.

- பதில்கள் தொடரும்...

வாசகர்களே... ஆன்மிகம் தொடர்பான அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் தருகிறார்,

சென்னை `காளிகாம்பாள் கோயில்' சிவஸ்ரீசண்முக சிவாசார்யர்.

கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி: கேள்வி-பதில், சக்தி விகடன் 757, அண்ணாசாலை, சென்னை-600 002