Published:Updated:

கேள்வி - பதில்: இறைவனை வழிபட ஆலயங்கள் அவசியமா?

கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி - பதில்

இறைவன் என்பவர் இல்லையெனில் இவ்வுலகம் என்பதே இராது. அவரே நம்மைப் பிறக்கச்செய்து நம் முன்வினைகளுக்கு ஏற்ப சுக-துக்கங்களை அனுபவிக்கச் செய்கிறார்.

கேள்வி - பதில்: இறைவனை வழிபட ஆலயங்கள் அவசியமா?

இறைவன் என்பவர் இல்லையெனில் இவ்வுலகம் என்பதே இராது. அவரே நம்மைப் பிறக்கச்செய்து நம் முன்வினைகளுக்கு ஏற்ப சுக-துக்கங்களை அனுபவிக்கச் செய்கிறார்.

Published:Updated:
கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி - பதில்

? இறைவன் எங்கும் நிறைந்திருப்பவர் என்றும் அவருக்கு ஓர் உருவம் இல்லையென்பதும் சநாதன மதத்தின் தத்துவம். அப்படியிருக்க இறைவனுக்கு ஓர் உருவமும் அவரை வழிபடுவதற்காக ஆலயமும் அவசியம்தானா?

- ஆர்.கிருஷ்ண மூர்த்தி, பெங்களூரு.

இறைவன் எங்கும் நிறைந்திருப்பவர்; உருவம் அற்றவர் என்று மட்டும் நமது மதம் போதிக்கவில்லை. அவர் பல ரூபங்கள் எடுத்து ஜீவாத்மாக்களுக்கு வழிகாட்டுபவர் என்றும் ஆலயங்களில் அவரின் சாந்நித்யம் அதிகமாக உணரப்படும் என்றும் கூறியிருக்கிறார்கள். எனவே, நாம் மற்றவர்கள் பின்பற்றும் தத்துவங் களைக் கொண்டோ, நம்முடைய தவறான புரிதலாலோ ஒன்றைத் தீர்மானிக்க முடியாது.

நம்முடைய பிரமாண நூல்கள் வேதங்களே. அவற்றின் விரிவான பகுதிகளே புராணங்கள், ஆகமங்கள் போன்றவை ஆகும். பசுவின் பாலை அதன் மடியில் காம்புகளிலிருந்துதான் பெற இயலும். அப்படியே எங்கும் நிறைந்திருக்கிறார் என்றாலும் இறைவனின் அருளை ஆலயங்களில் அதிகம் பெற முடியும். ஆலயங்களில், அனைத்து ஜீவராசிகளும் நன்மை அடையும்பொருட்டு சூரியன் சந்திரன் உள்ள வரையிலும் வழிபாடுகள் நடைபெறும் என்று பிரார்த்தித்து, அதன்படியே வழிபாடுகள் நடத்தி அங்குள்ள விக்கிரகத் திருமேனி மூலமாக இறையருள் ஸித்திக்கும்படி செய்கிறார் ஆசார்யர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
கேள்வி - பதில்
கேள்வி - பதில்

ஆலயம் என்பது மற்ற சமயங்கள் போன்று மக்கள் கூடக்கூடிய இடம் மட்டுமன்று. பிரபஞ்சத்தின் நன்மை பொருட்டு வழிபாடுகள் நடக்கும் இடம். ஆகவேதான், மன்னர்கள் பல ஆலயங்களை அமைத்தார்கள். ஆகாயத்தின் மூலமே சொல்லானது பயணிக்கும் என்றாலும் தொலைபேசி போன்ற கருவிகள் எப்படி இன்றியமையானவையாக உள்ளனவோ, அப்படியே எங்கும் நீக்கமற நிறைந்துள்ள இறைவன், ஆலயங்களில் விசேஷமாக அருள்பாலிக்கிறார் என்பதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம்.

சமயக் குரவர்கள், சந்தானக் குரவர்கள், ஶ்ரீகண்டர், ஶ்ரீஆதிசங்கரர், ஶ்ரீராமாநுஜர் போன்ற பல மகான்கள் ஆலயத்திற்குச் சென்று இறைவனை தரிசித்து இன்ப நிலை அடைந்ததை நம் வரலாறு உணர்த்துகிறது. ரூபா - அரூபம் என்று ரூபம் உடையவராகவும், ரூபம் அற்றவராகவும் அந்த பரம்பொருளே விளங்குகிறார்.

? இறைவனிடம் நம்முடைய குறைகளைச் சொல்லி அவற்றைக் களையவேண்டும் என்று பிரார்த்திப்பதற்காக ஆலயங்களுக்குச் செல்வதும், அங்கே காணிக்கை போடுவதும் பக்தியாகுமா? எனில், அந்தக் குறைகள் தீர்ந்ததும் பக்தியின் நோக்கம் போய்விடுமே?

- எஸ்.சுப்பிரமணியம், சென்னை

‘வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல’ என்ற வள்ளுவரின் வாக்குப்படி, இறைவனை வழிபடுவது மிகவும் முக்கியம் எனவும் அவரே துணை என்றும் எவர் ஒருவர் சரணாகதி அடைகிறார்களோ, அவர்களுக்குத் துன்பம் என்பது இருக்காது. பெரியோர்கள் கூறியதை நாம் கடைப்பிடித்தல் அவசியம். முனிவர்கள், முன்னோர்கள் நமது நலனில் அக்கறை கொண்டே, வாழ்க்கையில் நம்முடைய இன்னல்களைக் களைந்து இன்பம் அடையவே பல நல் வழிகாட்டுதல்களை வழங்கியிருக்கிறார்கள்.

நமது சநாதன தர்மத்தில், கோயில் என்பது அங்கு வருபவர்கள் மட்டும் வழிபாடு செய்யக்கூடிய இடம் அல்ல; உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் நன்மை அடைய வேண்டி, அனைத்து காலங் களிலும் அர்ச்சகப் பெருமக்களால் வழிபாடுகள் நடத்தப்பெறும் புனிதத்தலம். அங்கு உயிரினங்கள் மட்டுமல்லாது இயற்கையில் உள்ள அனைத்தும் அமைதியுடன் திகழும் விதம் அனுதினமும் பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

கடவுளை வேண்டுதல் வேண்டாமை இல்லாதவர் என்று வள்ளுவர் போற்றுவதாகப் பார்த்தோம் அல்லவா. அவ்வாறே... நாம் அளிக்கும் பூக்கள், பழங்கள், காணிக்கை போன்று எதுவாக இருப்பினும் அவை நமது அன்பின், பக்தியின் வெளிப்பாடே. ஆரம்பத்தில் வேண்டுதலின் பொருட்டு நாம் கடவுளுக்குச் சமர்ப்பிக்கும் வழக்கம் காலப்போக்கில் நிலையான பக்தியாக மாறிவிடும். குழந்தைகளுக்கு முதலில் இனிப்பு போன்றவற்றை அளித்து மகிழ்வித்து பள்ளிக்கூடத்திற்குக் கொண்டு விடுவார்கள். காலப்போக்கில் அந்தக் குழந்தை விவரம் அறிந்து தாமாகவே படிப்பைத் தொடர்வது போன்று, வேண்டுதலின் பொருட்டு ஆலயத்துக்கு வரும் அன்பர்கள் போகப் போக மெய்யை உணர்வார்கள்.

இந்த வாழ்க்கை இறையருளால்தான் அமைந்தது என்பதை அறிந்து, தங்களை முழுமையாக இறைவனிடம் அர்ப்பணித்து விடுவார்கள். எனவே, ஆரம்ப நிலையை மட்டும் வைத்துக்கொண்டு ஒரு தீர்வுக்கு வரக்கூடாது. அன்பர்களின் அனுபவத்தால் பக்தியானது வளர்ந்து அவர்களை வழிநடத்தும். அப்போது `நமது காணிக்கைக்காக இறைவன் நமக்கு அருளவில்லை. நம் வினைகள் சரியாக இருப்பதால் இறைவன் நமக்கு அருளியுள்ளார் என்பதைப் புரிந்துகொள்வார்கள். மேலும், நம் காணிக்கைகள் ஆலயம் மூலம் பல திருப்பணிகளுக்கு உதவுகின்றன என்பதை அறியும்போது, அவர்களின் தர்ம சிந்தனையும் மேம்படும்.

கேள்வி - பதில்
கேள்வி - பதில்

? ராமநவமி நாளில் விரதம் இருந்து ஶ்ரீராமச்சந்திர மூர்த்தியை வழிபடுவதற்கு உரிய நியதிகளைக் கூறும்படி கேட்டுக்கொள்கிறேன்.

- எம்.பாலகிருஷ்ணன் சென்னை

தர்மத்தின் வடிவமே ஶ்ரீராமச்சந்திர மூர்த்தி. எப்படி ஆசிரியரானவர் மாணவர் களுக்குப் புரியவைக்க தானும் சில செயல்களைச் செய்து வழிகாட்டுகிறாரோ, அதேபோல எல்லாம்வல்ல எம்பெருமான் ஶ்ரீமத் நாராயணன் நமக்கு வழிகாட்ட எடுத்த அவதாரமே ஶ்ரீராம அவதாரம். ஶ்ரீராமனையும் சீதாதேவியையும் அனுதினமும் நினைத்தவுடன் கவலைகள் அனைத்தும் கலங்கிச் சென்றுவிடும்.

அவர் இப்பூவுலகில் அவதரித்த தினமே ராமநவமி. இந்தத் திருநாளுக்குப் பத்து நாள்களுக்கு முன்னரே தினமும் ராமாயணம் முதலிய புனித நூல்களையும் அல்லது தங்களுக்குத் தெரிந்த ஶ்ரீராமரின் துதிப்பாடல்களையும் படித்து ராமாமிர்தத்தை அனுபவிக்கலாம். அதுவும் முடியாதவர்கள் `ராம்... ராம்... ராம்...’ என்று சொல்லிக்கொண்டே தங்களின் காரியங்களை செய்து முடிக்கலாம்.

உணவு முறைகளில்... பொதுவாக விரத காலங்களில் கடைப்பிடிக்கும் முறையைப் பின்பற்றலாம். ஶ்ரீராமருக்குப் பானகம், பழங்கள், பாயசம் போன்ற நிவேதன வகைகளை அன்புடன் அர்ப்பணிக்கலாம். மகான்களை தரிசிப்பது, புண்ணிய க்ஷேத்திரங்களை தரிசிப்பது நல்லது. இதுபோன்று பத்து நாள்கள் கடைப்பிடித்து ஶ்ரீராம நவமி அன்று விரதத்தைப் பூர்த்தி செய்வது ஒரு முறை.

வேறு சிலர், ராம நவமி திருநாளன்று தொடங்கி பத்து நாள்கள் தொடர்ந்து மேற்கண்ட விரதத்தை அனுசரிப்பது உண்டு. ஏதேனும் ஒரு முறையைத் தாங்கள் தங்கள் குடும்பத்தாருடன் இணைந்து அனுஷ்டானம் செய்வது நலம்.

நமக்கான தர்மங்களை எடுத்துக்காட்டி, அவற்றை எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் விட்டுவிடாமல் கடைப்பிடித்தல் வேண்டும் என்று நமக்கு வாழ்ந்து வழிகாட்டிய ராமனைப் போற்றி வந்தோமானால், நம் வாழ்க்கையில் இன்பமே சூழும். துன்பங்கள் ஏற்படினும் அவற்றைத் தைரியமாக எதிர்கொள்ளும் வல்லமையும் வீரமும் வாய்க்கும். குழப்பங்கள், தளர்வான மனநிலை ஆகியவை விலகி மகிழ்ச்சியும் திடமான மனமும் அமையும்.

? சித்திரை மாதப் பிறப்பை தமிழ்ப் புத்தாண்டு என்று சிலரும் தை மாதப் பிறப்பை தமிழ்ப் புத்தாண்டு என்று சிலரும் சொல்கிறார்கள். நாம் எதை ஏற்றுக்கொள்வது?

- ஆர்.ராமசுப்பு, சென்னை - 18

நம் இந்து மதத்தில் ஒவ்வொரு நாளையும், மாதத்தையும், வருடத்தையும் தனித்தனியாகப் பெயரிட்டு அவற்றின் பலாபலன் களை அளித்து உள்ளனர் நம் முன்னோர். நாள்களை சந்திரனின் அடிப்படையில் பிரதமை, துவிதியை என்று வளர்பிறை மற்றும் தேய்பிறை திதிகளாகவும், ஞாயிறு, திங்கள் என்று கிரகங்களின் அடிப்படையில் ஏழு நாள்களாகவும் வகுத்துள்ளனர்.

மாதங்களை சித்திரை முதலாக (மேஷ மாதம்) பன்னிரண்டு ராசிகளின் அடிப்படையிலும் அந்தந்த மாதத்தில் ஏற்படும் மாச நட்சத்திரத்தின் அடிப்படையிலும் அமைத்துள்ளனர். எந்த மாதத்தில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது என்ற வழிகாட்டலையும் தெளிவாக அளித்துள்ளனர்.

பிரபவ முதற்கொண்டு வருடங்களை அறுபது வருடங்களாகத் தந்துள்ளனர். வருடங் களின் தன்மை, குறிப்பிட்ட வருடத்தில் இயற்கையும் மக்களும் எப்படி இருப்பர் என்பவை குறித்த வழிகாட்டலும் உண்டு. நமது சநாதன தர்மம் கடல் போன்றது. கடலுக்குக்கூட ஓர் எல்லை உண்டு என்று அனுமானம் செய்துவிடலாம். ஆனால், நமது சநாதன தர்மத்தின் உயர்ந்த தத்துவங்களை இவ்வளவுதான் என்று வரையறுத்துக் கூறிவிட முடியாது.

சித்திரை மாதம் என்பது மேஷ மாதம். ராசிகளில் மேஷமானது முதலானது. சூரிய பகவான் உச்ச நிலையில் அமைந்து இருப்பார். அத்துடன், நம் ரிஷிகள் `சௌரமானம்’ அடிப்படையில்... அதாவது சூரியன் ஒரு ராசியிலிருந்து அடுத்த ராசிக்கு செல்வதை அடிப்படையாகக்கொண்டு மாதப் பிறப்பை நிர்ணயித்தனர். அவ்வகையில் முதல் மாதமான சித்திரையை - மேஷ மாதத்தின் பிறப்பையே வருடப் பிறப்பாக அனுசரிக்கவேண்டும் என்று கூறியுள்ளனர். சிலர், சந்திரன் அடிப்படையில் பங்குனி மாதத்தின் அமாவாசைக்கு மறுநாளை `சித்ர மாதம்’ என்று குறித்து, அதையே மாதப் பிறப்பாகவும், வருடப் பிறப்பாகவும் வழிபடுவதும் உண்டு. இதை சாந்திரமான முறை என்பர்.

இரண்டுமே சித்திரை மாதம் அல்லது அந்த மாதத்தின் நட்சத்திரமான சித்திரையை அடிப்படையாகக் கொண்டே அமைதல் வேண்டும். புதிதாக மனிதர்களால் கையாளப் படக்கூடிய வழக்கங்களைத் தவிர்த்தல் நலம். நம் ரிஷிகள் சாமானிய மனிதர்கள் அல்ல; அவர்கள் ஆழ்ந்த ஞானம் உடையவர்கள். எவ்வித ஆசைகளும் அற்றவர்கள். கடவுளின் அருளால் நம் நன்மை கருதி சாஸ்திரங்களை அளித்துள்ளனர். எனவே, நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்த சித்திரை மாதப் பிறப்பையே வருடப் பிறப்பாக அனுசரிப்பது நலம்.

கேள்வி - பதில்
கேள்வி - பதில்

? புராணங்களில் சொல்லப்படும் பல சம்பவங்கள் பகுத்தறிவுக்குப் பொருத்தம் இல்லாதவையாக உள்ளன. அவை நமக்கு அவசியம்தானா?

- பா. அண்ணாமலை, திருவண்ணாமலை.

மூட நம்பிக்கை என்பது வேறு; பகுத்தறிவு என்பது வேறு. நம்முடைய நம்பிக்கைகள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு, தவறான வழியில் பின்பற்றப்பட்டு வந்தால், அந்த வழக்கத்தை நடைமுறையை மூட நம்பிக்கை எனலாம். பகுத்தறிவு என்பது பகுத்து, பிரித்து உணர்வது.

இறைவன் என்பவர் இல்லையெனில் இவ்வுலகம் என்பதே இராது. அவரே நம்மைப் பிறக்கச்செய்து நம் முன்வினைகளுக்கு ஏற்ப சுக-துக்கங்களை அனுபவிக்கச் செய்கிறார். நம் புராணங்கள் கற்பனைக் கதைகள் அல்ல. பல ஆயிரம் ஆண்டுகள் பல கால அளவுகளைக் கடந்து, பல படை எடுப்புகளையும் தாண்டி இன்று நம்மிடையே வழக்கத்தில் உள்ளன என்பதிலிருந்தே அவற்றின் தன்மையை அறியலாம். நமது அறிவு என்பது சிறிய காலத்தைப் பற்றி அறியக்கூடியது; சிற்றறிவு. எப்படி ஒரு பொருள் தானாக உண்டாக முடியாதோ அதுபோன்று தெய்விக சக்தியின்றி இந்தப் பிரபஞ்சம் இயங்காது. புராணங்களைப் புரிந்துகொள்ள ஆழ்ந்த அறிவும், பக்தியும், நல்ல குருவின் வழிகாட்டுதலும் முக்கியம்.

- பதில்கள் தொடரும்...

வாசகர்களே... ஆன்மிகம் தொடர்பான அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் தருகிறார்,

சென்னை `காளிகாம்பாள் கோயில்' சிவஶ்ரீசண்முக சிவாசார்யர்.

கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி: கேள்வி-பதில், சக்தி விகடன் 757, அண்ணாசாலை, சென்னை-600 002