திருத்தலங்கள்
Published:Updated:

ருத்ராக்ஷம் அணிய உகந்த நாள் எது?

கேள்வி பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
கேள்வி பதில்கள்

ருத்ர ஜபத்தை செய்ய முடியாதவர்கள் இந்த ருத்ராக்ஷத்தை அணிந்துகொள்வதால், எல்லாம்வல்ல சிவபெருமானின் அருள் நிச்சயம் கிடைக்கும்

? ருத்ராக்ஷத்துக்கு அப்படியென்ன சிறப்பு; இதன் மகிமைகள் குறித்து ஞான நூல்கள் என்ன சொல்கின்றன?

ருத்ராக்ஷ சிறப்பு
ருத்ராக்ஷ சிறப்பு


`ருத்ராக்ஷ தாரணம் ச்ரேஷ்டம் இஹ லோகே பரத்ர ச’ என்ற வாக்கியத்தின் மூலம் ருத்ராக்ஷத்தை எவரொருவர் அணிகிறாரோ, அவருக்கு இவ்வுலகத்தில் மட்டுமன்றி, மேல் உலகத்திலும் நன்மை வாய்க்கும் என்பதை நாம் அறியலாம்.

எல்லாம்வல்ல பரசிவமானது பிரம்ஹா, விஷ்ணு, ருத்ரன், ஈஸ்வரன், ஸதாசிவன் ஆகிய ஐந்து நிலைகளில் ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம், திரோபவம், அனுக்ரஹம் ஆகிய ஐந்தாலும் இவ்வுலகை இயக்குகிறது.

இங்ஙனம் சிவனின் ஓர் அம்சமாக விளங்குபவர் ருத்ரன். `ருதம் த்ராவயதி இதி ருத்ர:’ என்றபடி துக்கம் அல்லது துக்கத்திற்குக் காரண மான பாபங்களைப் போக்குவதால், `ருத்ரன்’ என்று அழைக்கப்படு கிறார். இவரின் அக்ஷம் - கண்களிலிருந்து தோன்றியதால், ருத்ராக்ஷம் என்று பெயர் பெற்றது.

மகாபாரதத்தில் யுத்தக் களத்தில் கிருஷ்ண பகவான் அர்ஜுனனிடம், “உனக்கு முன் சென்றாரே... அவர்தான் ருத்ரன். அவர் எதிரிகள் அனை வரையும் அழித்துவிட்டார். அதன் பிறகே நீ அழித்தாய்’’ என்று கூறி, அந்த ருத்ரனைக் குறித்த ஸ்ரீருத்ர ஜபத்தை அனுதினமும் பாராயணம் செய்யும்படி அர்ஜுனனுக்குக் கட்டளையிடுகிறார்.

? ருத்ராக்ஷம் அணிவதால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்?

ருத்ர ஜபத்தை செய்ய முடியாதவர்கள் இந்த ருத்ராக்ஷத்தை அணிந்துகொள்வதால், எல்லாம்வல்ல சிவபெருமானின் அருள் நிச்சயம் கிடைக்கும். முனிவர்கள், ஞானிகள், பக்தர்கள், பாமரர்கள் என்று அனைவரும் எளிதான முறையில் - எல்லாம்வல்ல சிவனை நோக்கிச் செல்லக்கூடிய ஒரு வழியாக, இந்த `ருத்ராக்ஷ தாரணம்’ விளங்குகிறது.

`பலஸ்ய தர்சனே புண்யம் ஸ்பர்சாத் கோடி குணம் பவேத்|

சத கோடி குணம் புண்யம் தாரணாத் லபதே நர: ||

லக்ஷ கோடி ஸஹஸ்ராணி லக்ஷகோடி சதானி ச|

ஜபாச்ச லபதே கார்யம் நாத்ர கார்யா விசாரணா||’

என்றொரு ஸ்லோகம் சொல்கிறது. அதன்படி, இந்த ருத்ராக்ஷத்தைப் பார்ப்பதாலேயே நமக்குப் புண்ணியம் ஏற்படுகிறது. அதைத் தொடுவதால், கோடி புண்ணியம் உண்டு. அதை நாம் தரித்துக் கொள்வதால் நூறுகோடி புண்ணியம் ஏற்படுகிறது. அதேபோல், இந்த ருத்ராக்ஷத்தைக் கொண்டு நாம் ஜபம் செய்வதல் பல லக்ஷம் கோடி எண்ணிக்கையுடைய பயன்களை நாம் அடையப்பெறுகிறோம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

ருத்ராக்ஷஸ்ய முகம் பிரம்ஹா

பிந்து ருத்ர இதீரித: |

விஷ்ணு: புச்சம் பவேச்சைவ

போக போக பல புரதம் ||

ருத்ராக்ஷத்தில் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் என்ற மும்மூர்த்தி களும் இருப்பதாகவும் அதை நாம் அணிவதால் இவ்வுலகில் நமக்குத் தேவையான அனைத்து நன்மைகளும் கிடைக்கப் பெற்று முடிவில் மோக்ஷம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

? முதல் முறை ருத்ராக்ஷம் அணியும் அன்பர்கள், எந்த நாளில் அதை அணிவது சிறப்பு?

ருத்ராக்ஷத்தை சிவாக்ஷம், சர்வாக்ஷம், பூதநாசனம், பாவனம், நீலகண்டாக்ஷம், சிவப்ரியதம் என்றும் கூறுவார்கள். முதன் முதல் ருத்ராக்ஷத்தை அணிவதை எந்த நாள்களிலும் செய்யலாம். எனினும் பௌர்ணமி அன்று நாம் ருத்ராக்ஷத்தை அணிந்து கொள்வது மிகவும் சிறப்பு.

அதேபோல் அமாவாசை, மாதப்பிறப்பு, கிரஹண புண்ணியக் காலம் போன்ற நாள்களிலும் ருத்ராக்ஷத்தைத் தரித்துக்கொள்ளலாம் அல்லது பொதுவான நல்ல தினங்களிலும் அணிந்து கொள்ளலாம்.

? முதல் முறை ருத்ராக்ஷம் அணியும்போது ஏதேனும் வழிபாடுகள் செய்ய வேண்டுமா?

ருத்ராக்ஷத்தை முதல் முறை அணியுமுன் அதற்கு நீர், பால், பஞ்ச கவ்யம் போன்ற த்ரவ்யங்களால் அபிஷேகம் செய்து, அதைச் சிவமாகவே பாவித்து வணங்கி அணிந்து கொள்வது நமது மரபு.

சிவ பூஜை செய்வோர் ருத்ராக்ஷத்தை மாலையாக மட்டுமல்லாமல், தலையிலும், காதுகளிலும், கண்டத்திலுமாக... விதிப்படி எங்கெங்கெல்லாம் அணியலாம் என்று கூறப்பட்டிருக்கிறதோ, அந்தந்த இடங்களில் அந்தந்த எண்ணிக்கைகளில் அதற்குறிய மந்திரங்களை உச்சரித்து ருத்ராக்ஷத்தைத் தரித்து சிவானுபூதி பெறுவர்.

? ருத்ராக்ஷ முகங்கள் குறித்து விளக்குங்களேன்?

ருத்ராக்ஷத்தின் மேற்புறம் இயற்கையாக அமைந்திருக்கும் கோடுகளின் வாயிலாக அந்த ருத்ராக்ஷத்திற்கு உரிய முகங்களை நாம் அனுமானிக்கலாம். இந்த வகையில் ஒரு முகம் முதல் 14 முகங்கள் வரையிலும் ருத்ராக்ஷங்கள் ஒரே மரத்திலேயே கிடைக்கின்றன. இது இயற்கையின் கொடை அல்லவா . ருத்ராக்ஷ மரங்கள் பல ஆண்டுகள் வரை இருந்து நமக்கு அதன் பலனைத் தருகின்றன.

? முக ருத்ராக்ஷம் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி தேவதைகள் பலன்கள் உண்டா?

ஆம்! முக ருத்ராக்ஷம் ஒவ்வொன்றுக்கும் உரிய தேவதையையும் உரிய பலனையும் சாஸ்திரங்கள் தெளிவாக தெரிவிக்கின்றன. அதுபற்றிய விவரங்களை அறிவோம்.

ஒரு முகம் கொண்ட ருத்ராக்ஷம்: இது சாக்ஷாத் சிவபெருமானைக் குறிக்கக்கூடியது. பரப்பிரம்மமான - அனைத்திற்கும் காரண வஸ்து வான அந்தப் பரம்பொருளை நமக்கு நினைவூட்டக்கூடியது. நமக்குச் சிவஞானம் சித்திப்பதற்கு அருளக்கூடியது.

இரண்டு முக ருத்ராக்ஷம்: பசுவைக் கொன்ற பாவத்தைப் போக்கும்.சாக்ஷாத் சிவனும் சக்தியும் இணைந்த அர்த்தநாரீஸ்வரர் சக்தியை நமக்குப் பெற்றுத் தரும்.

மூன்று முக ருத்ராக்ஷம்: இதை அணிவது, அக்னி பகவானின் அருளைப் பெற்றுத் தரும். பெண்களைத் துன்புறுத்திய பாபங்களை விலக்கி, நல்வழி அருளும்.

நான்கு முக ருத்ராக்ஷம்: பிரம்மாவின் அருளைப் பெற்றுத் தரும். கல்வி அறிவை அதிகரிக்கவைக்கும் ஆற்றல் படைத்தது.

ஐந்து முக ருத்ராக்ஷம்: காலாக்னி ருத்ரன் என்று போற்றக்கூடிய சிவபெருமானின் அம்சமாக விளங்குவது. அனைத்துவிதமான தவறுகளில் இருந்தும் நம்மை விலக்கி நல்வழி காட்டும்.

ஆறு முக ருத்ராக்ஷம்: ஷண்முகக் கடவுளின் அருளைப் பெற்றுத் தரும். பாவங்களைப் போக்கி நமக்குச் சிவஞானம் அருளும்.

ஏழு முக ருத்ராக்ஷம்: சப்தமாதாக்கள் மற்றும் சப்த ரிஷிகளின் திருவருளைப் பெற்றுத் தரும். நல்ல செல்வமும், ஆரோக்கியமும், ஞானமும் பெற்றுத் தூய வாழ்வு வாழ வழிகாட்டும். குறிப்பாக... தங்கம் திருடிய பாவம், பசுவைத் துன்புறுத்திய பாவம் போன்றவற்றிலிருந்து நம்மை விலக்கி நல்வழிப்படுத்தும்.

எட்டு முக ருத்ராக்ஷம்: இது மஹாகணபதியின் அருளைப் பெற்று தரும். தவறான வழியில் செல்பவர்களை நல்வழிப்படுத்தக் கூடியது. அனைத்து விக்னங்களையும் போக்கி வெற்றியை அருளும்.

ஒன்பது முக ருத்ராக்ஷம்: பைரவருக்கும், யமதேவருக்கும் விருப்ப மானது. இதைத் தரித்துக்கொள்வதால் எதிரிகளல் ஏற்படும் பயம், யம பயம் நீங்கும்.

பத்து முக ருத்ராக்ஷம்: இது விஷ்ணுவின் அனுக்கிரகத்தைப் பெற்றுத்தரும். பூத, வேதாள, ராக்ஷஸ கணங்களிடமிருந்து நம்மைக் காத்து, அபிசார தோஷங்களை விலக்கி, நமக்கு நன்மை தரக்கூடியது.

11 முக ருத்ராக்ஷம்: ஏகாதச ருத்திரர்களின் அனுக்கிரகத்தைப் பெற்றுத்தரக் கூடியது . மிகப்பெரிய யாகங்களைச் செய்த பலன்களைத் தரக்கூடியது. மட்டுமன்றி இந்திரனின் அருளையும் அதன் மூலம் சகல ஐஸ்வரியங்களையும் அருளும் வல்லமை கொண்டது.

12 முக ருத்ராக்ஷம்: சூரியனின் ஆற்றலைப் பெற்றுத் தரும். அனைத்துவித நலன்களும் நல்ல ஆரோக்கியமும் கிட்டும் தீமைகள் நீங்கி, வெற்றிகள் பெருகும்.

13 முக ருத்ராக்ஷம்: இந்திரதேவனின் ஆற்றலை உடையது. இதை அணிவதால் அனைத்துவிதமான நல்ல ஆசைகள் பூர்த்தியாகும்; அனைத்து நன்மை களும் கிடைக்கும்.

14 முக ருத்ராக்ஷம்: ஆஞ்சநேயரின் அம்சம் உடையது. இதனால் அனைத்துவித நன்மைகளும் கிடைக்கப்பெறும். குறிப்பாக பக்தி மற்றும் பிரம்மசரியம் ஸித்திக்கப்பெறும்.

- பதில்கள் தொடரும்...

தன்னையே பூஜித்த முருகன்!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள மிக அற்புதமான முருக க்ஷேத்திரம் சென்னிமலை. சோழ மன்னன் ஒருவனின் பிரம்மஹத்தி தோஷம் விலகுவதற்காக, முருகப்பெருமான் அர்ச்சகராக வந்திருந்து, தம்மைத் தாமே பூஜித்து அருளிய பெருமைக்கும் உரியது இந்தத் தலம். இங்கே முருகன் தண்டாயுதபாணியாக அருள்பாலிக்கிறார்.

பிண்ணாக்குச் சித்தர் இந்த மலையில் வாழ்ந்து முக்தி அடைந்ததாகச் சொல்லப்படுகிறது. உச்சியில், பிண்ணாக்குச் சித்தர் வசித்த குகை ஒன்றும் உள்ளது. இந்தக் குகையின் வழியாக பிண்ணாக்குச் சித்தர், பழநி மலைக்குச் சென்று வழிபட்டு வந்ததாகவும் ஒரு நம்பிக்கை நிலவுகிறது.

குழந்தைப்பேறு இல்லாதவர்கள் சஷ்டி விரதம் இருந்து சென்னிமலை ஆண்டவரை வழிபட்டால், விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீடு கட்டுவதில் உள்ள தடைகள் நீங்கவும் இங்கு வந்து வழிபட்டுச் செல்கிறார்கள் பக்தர்கள்.

- எம்.சஞ்சீவ், திருப்பூர்