Published:Updated:

கேள்வி - பதில்: 'நல்லெண்ணெய் தீபம் பலன் தருமா?'

நல்லெண்ணெய் தீபம்
பிரீமியம் ஸ்டோரி
நல்லெண்ணெய் தீபம்

தீபம் ஏற்றுவது, புற இருளை நீக்கி வெளிச்சம் ஏற்படுத்தவேண்டும் என்பதற்காக மட்டுமல்ல.

கேள்வி - பதில்: 'நல்லெண்ணெய் தீபம் பலன் தருமா?'

தீபம் ஏற்றுவது, புற இருளை நீக்கி வெளிச்சம் ஏற்படுத்தவேண்டும் என்பதற்காக மட்டுமல்ல.

Published:Updated:
நல்லெண்ணெய் தீபம்
பிரீமியம் ஸ்டோரி
நல்லெண்ணெய் தீபம்

? புது வாடகை வீட்டுக்குக் குடிபெயர்ந்துள்ளோம். பூஜை அறை தனியே இல்லை. அலமாரிகளும் தெற்கு நோக்கியே உள்ளன. தெய்வங்களை தெற்கு நோக்கி வைத்து வழிபடலாமா?

- கே.கீர்த்தனா, தூத்துக்குடி

தெய்வங்களைப் பல திருவடிவங்களில் அமைத்து, ஒவ்வொரு தெய்வ வடிவமும் இன்னின்ன தன்மை உடையது என்று நம் ஆகமங்கள் தெளிவுபடுத்துகின்றன.

உங்கள் வீட்டில் பூஜையறை இல்லை; அலமாரிகள் தெற்குப் பார்த்து இருக்கின்றன என்கிறீர்கள். எனில், தெற்கு நோக்கி வைக்க வேண்டிய உக்கிர தெய்வப் படங்களை வைத்து வழிபடலாம். மற்ற தெய்வ வடிவங்களை... சிறிய அளவிலான பூஜையறையை மரத்தில் செய்து கிழக்கு நோக்கி இருக்கும்படி வைத்து, அதில் வைத்து வழிபடலாம். திருவிளக்கையும் அந்தத் திசையை நோக்கியவண்ணம் அமைத்து வழிபடலாம்.

வைரம் சிறியதாக இருந்தாலும், அதன் மதிப்பு அதிகமாக இருப்பதுபோல், சரியான திசையில் சிறிய தெய்வப் படங்களை வைத்து வழிபட்டாலும், முழுமையான பலன்களை நாம் பெறலாம். ஒவ்வொரு திசைக்கும் ஓர் ஆற்றல் உண்டு. எனவே தெய்வ சக்தி ஒவ்வொன்றும் அதற்குரிய திசைகளிலிருந்து அருள்பாலிக்கும் போது மிகுந்த பயன் கிடைக்கும்.

தெய்வ வழிபாடு நம் நன்மைக்காகத் தானே தவிர, தெய்வத்துக்கு ஆவது ஒன்றுமில்லை. நாம் எங்கிருந்தாலும் நம்மால் முடிந்த அளவுக்கு நம் முன்னோர்கள் நம்பிக்கையுடனும் பக்தியுடனும் கடைப்பிடித்து வந்த சடங்கு-சம்பிரதாயங்களை விடாமல் கடைப்பிடித்து வருவதே நமக்கு நன்மையை அளிக்கும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

? எங்கள் வீட்டில் நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றுகிறோம். தீப வழிபாடு - தீபத்துக்கான எண்ணெய் குறித்த தாத்பர்யத்தை விளக்குங் களேன்.

- ஆர்.சுபத்ரா, காரைக்குடி

தீபம் ஏற்றுவது, புற இருளை நீக்கி வெளிச்சம் ஏற்படுத்தவேண்டும் என்பதற்காக மட்டுமல்ல. அதற்கு மின்சார விளக்குகளே போதுமானவை. நாம் ஏற்றும் தீபம் நமது அக இருளையும் அழிக்கவல்லது. சாஸ்திரங்களில் கூறப்பட்ட திரவியங்கள் தீப ஒளியுடன் கலந்து, ஒருவித அதிர்வுகளை ஏற்படுத்தி, நம் மனத்தையும் அங்கு இருக்கக்கூடிய சுற்றுப்புறச் சூழலையும் நல்ல நிலையில் அமைக்கக்கூடிய ஆற்றல்கொண்டவை.

கேள்வி - பதில்: 'நல்லெண்ணெய் தீபம் பலன் தருமா?'

நல்லெண்ணெய் அல்லது தூய பசுவிலிருந்து தருவிக்கப்பட்ட நெய் ஆகிய இரண்டுமே கோயில் களிலும் வீட்டுப் பூஜை அறைகளிலும் தீபம் ஏற்றுவதற்கு உகந்தவையாகக் கூறப்பட்டுள்ளன. `திலாஃபாபஹரா:’ என்றோரு வாக்கியம் உண்டு. எள் நம் பாபங்களை அகற்றும். `ஆயுர் வை க்ருதம்’ - நல்ல நெய், நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வழிவகுக்கும்.

`க்ருத தீபே தக்ஷிணே ஸ்யாத் தைல தீபஸ்து வாமத:’ என்ற வாக்கியத்தின் மூலம், வலது பாகத்தில் நெய் தீபத்தையும் இடது பக்கத்தில் நல்லெண்ணெய் தீபத்தை யும் வைத்து வழிபாடுகள் நடத்தவேண்டும் என்று சாக்த தந்திரங்கள் கட்டளையிடுகின்றன. குறிப்பிட்ட பரிகாரங்களுக் காகக் குறிப்பிட்ட எண்ணெய் பரிந் துரைக்கப் பட்டால், அந்த நேரத்தில் மட்டும் அவற்றைப் பயன்படுத்தலாம்.

? எங்கள் மருமகள் கருவுற்றிருக்கிறாள். இந்த நிலையில் என் மகனுக்கு பணியிட மாற்றம் நிகழ்ந்துள்ளது. அதன்பொருட்டு வெளியூருக்குப் புது வீட்டுக்குக் குடிபுக வேண்டிய சூழல். மருமகள் கருவுற்றிருக்கும் நிலையில் வேறு வீட்டுக்குக் குடி போகலாமா?

- எம்.நமசிவாயம், திருவாரூர்

பெண்கள் கருத்தரித்தது முதல் பிரசவம் ஆகும் வரையிலான காலம், அவர்களின் மறுபிறவி என்றே சொல்லப்படுகிறது. அந்தக் காலகட்டத்தில் வேறு வீட்டுக்குக் குடிபோகாமல் இருப்பதே நல்லது. கருத்தரித்திருக்கும் பெண், உடல் மற்றும் மனநிலையில் எப்போதும் வலிமையுள்ளவளாக இருக்கவேண்டும். அவளுக்குச் சிரமம் ஏற்படாமல் இருக்க, இடமாற்றத்தைத் தவிர்க்கலாம்.

வேறு வழியில்லை... வீடு மாற்றத் தைத் தவிர்க்க இயலாது என்ற நிலையில், மிகுந்த கவனத்துடன் செயல்படலாம். மற்றபடி, பெண்கள் கருத்தரித்திருக்கும்போது வீடு மாற்றம் செய்வதைத் தவிர்ப்பது நலம்.

? என் நண்பர், ஆலயத்தில் பிராகார கோஷ்டத்தில் அதாவது கருவறைக்குப் பின்புறம் உள்ள லிங்கோத்பவர் மூர்த்தத் துக்குக் கற்பூரம் ஏற்றி வழிபடுவது வழக்கம். இது சரிதானா?

- கோ.ராமநாதன், கடையம்

ஆலயங்களில் எப்படி வழிபட வேண்டும், எப்படி வழிபடக் கூடாது என்று ஆகமங்கள் விளக்கியுள்ளன. செய்யவேண்டியவற்றைக் கண்டிப்பாகச் செய்யவேண்டும்; செய்யக் கூடாதவற்றை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். இவை இரண்டையும் முறைப்படிக் கடைப்பிடிக்கவில்லை என்றால், கோயில் வழிபாட்டினால் ஒரு பலனும் இல்லை.

ஆனால், பக்தர்கள் என்று வரும்போது, அது அவர்களின் நம்பிக்கை சார்ந்த விஷயம் ஆகிவிடுகிறது. இன்ன இடத்தில் இன்ன முறையில் பூரண நம்பிக்கையுடன் வழிபட்டால், தங்களின் விருப்பம் நிறைவேறும் என்ற நம்பிக்கையில் அவர்கள் அவ்வாறு செய்வது ஏற்கத்தக்கதே. ஆனால் அவர்கள் அப்படிச் செய்வது, மற்ற பக்தர்களின் பூஜை, வழிபாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தாத வண்ணம் இருக்கவேண்டும்.

கேள்வி - பதில்: 'நல்லெண்ணெய் தீபம் பலன் தருமா?'

? இஷ்ட தெய்வத்தை இறுகப் பற்றிக் கொண்டால் போதுமே. நவகிரக வழிபாடுகள் அவசியம்தானா?

- எம்.வேல்முருகன், சென்னை-26

ஓர் அரசன், தன் மக்களைக் காப்பாற்றி, அவர்கள் எந்தக் குறையும் இல்லாமல் வாழவேண்டும் என்பதற்காக, மந்திரிகளையும், அதிகாரிகளையும் நியமித்து ராஜ்ஜிய பரிபாலனம் செய்கிறார். அதேபோல்தான், எல்லாம்வல்ல இறைவன், நம்முடைய முன்வினைகளுக்கு ஏற்ப நம்மைச் சுக-துக்கங்களை அனுபவிக்கவைத்து, வினைகளைப் போக்கிக்கொள்ள ஏதுவாக நவ கிரகங்களைப் படைத்திருக்கிறார்.

ஒரு மனிதன் எப்போது இந்தப் பூமியில் பிறக்கிறாரோ, அப்போது இருக்கும் நட்சத்திரத்துடன் அவர் சம்பந்தப்பட்டு விடுகிறார். சூரியன் நாயகராக விளங்கி, மற்ற கிரகங்களுடன் இணைந்து அளிக்கக்கூடிய பலாபலன்களை, அந்த ஜாதகர் அனுபவித்தே ஆகவேண்டும்.

நம் பூர்வ ஜன்ம வினைப்பயனாக நாம் அனுபவிக்கக் கூடிய பலாபலன்கள், நமக்குக் கஷ்டத்தைத் தருபவையாக இருந்தால், அந்தக் கஷ்டத்திலிருந்து நாம் ஓரளவு நிவாரணம் பெறவே நவகிரகங்களை வழிபடுவதுடன், நவகிரக ப்ரீதியும் செய்துகொள்கிறோம்.

கொட்டும் மழையைத் தடுத்து நிறுத்துவது இயலாது. ஆனால், மழையில் நனையாமல் நம்மைக் காத்துக் கொள்ள குடை போன்ற சாதனங்கள் உதவுவதுபோல், நவகிரக வழிபாடுகள் நமக்கு உதவும். அவ்வாறு, நவகிரகங்களின் தாக்கத்திலிருந்து நம்மை விடுவித்துக்கொள்ள அவர்களை வழிபடுவதுடன் நின்றுவிடாமல், நல்லொழுக்கத்துடன் வாழவும் முயற்சி செய்ய வேண்டும். இறைவனிடமும் பரிபூரணச் சரணாகதி அடைந்துவிடவேண்டும்.

ஆகவே, நவகிரகங்களுக்குச் செய்யக் கூடிய பிராயச்சித்த கர்மாக்களும், இறைவனால் அளிக்கப் பட்டவையே என்று அறிந்து அவற்றை உரிய முறைப்படி செய்து வருவது, ஏற்றுக்கொள்ளத் தக்கதுதான்.

- பதில்கள் தொடரும்...

வாசகர்களே... ஆன்மிகம் தொடர்பான அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் தருகிறார்,

சென்னை `காளிகாம்பாள் கோயில்' சிவஶ்ரீசண்முக சிவாசார்யர்.

கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி: கேள்வி-பதில், சக்தி விகடன் 757, அண்ணாசாலை, சென்னை-600 002