திருத்தலங்கள்
திருக்கதைகள்
Published:Updated:

'காசிக் கயிறு அணிய கட்டுப்பாடுகள் உண்டா?'

சூரியபகவான்
பிரீமியம் ஸ்டோரி
News
சூரியபகவான்

ஆன்மிகக் கேள்வி - பதில்கள்

? தை மாதப் பிறப்புக்கு அப்படி என்ன சிறப்பு? வரும் மகர சங்கராந்தியில் பிரத்யேக வழிபாடுகள் ஏதேனும் உண்டா?

- பா.வேல்முருகன்,
கோவில்பட்டி

தை மாதம், நாம் நேரில் தரிசித்து அருள்பெறும் தெய்வமாம் சூரியதேவனை வழிபட சிறந்த மாதம். இந்த மாதத்தைத் தேவர்களின் பகல்பொழுதின் முதல் மாதமாகப் போற்றுவது நமது மரபு. உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் ஆற்றல் தருபவர் ஆதவன். அவர் வடக்கு நோக்கிய தனது பயணத்தைத் தொடங்குவதை உத்தராயனம் என்றும், தை மாதப்பிறப்பை உத்தராயனப் புண்ணிய காலம் என்றும் கூறுவர்.

சூரியன், தனுர் ராசியில் இருந்து மகர ராசிக்கு இடம் பெயர்வதால், அந்த நாளை ‘மகர சங்கராந்தி’ என்றும் போற்றுவார்கள். இந்தப் பூவுலகம் சிறப்புற இயங்கத் தேவையான ஒளியையும், அதன் மூலம் சக்தியையும் அளிக்கும் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் வகையில் கொண்டாடுவதே தைத் திருநாளின் நோக்கம்! நமது ஆரோக்கியம், சாந்தி போன்றவற்றை நல்லமுறையில் பாதுகாப்பவர் சூரியன். இந்த நாளில், பொங்கல் படையலிட்டு சூரிய பூஜை செய்வது மிகவும் விசேஷம். ஆதித்ய ஹ்ருதயம் போன்ற ஸ்தோத்திரங்களையும், சூரிய நமஸ்காரம் என்ற வேதப் பகுதியையும் அவரவர் தங்களின் சக்திக்கு ஏற்ப துதி செய்வது, உயர்ந்த பலன்களை அளிக்கும்.

`ஓம் மித்ராய நம: ஓம் ரவயே நம:
ஓம் சூர்யாய நம: ஓம் பாநவே நம:
ஓம் ககாய நம: ஓம் பூஷ்னே நம:
ஓம் ஹிரண்யகர்பாய நம: ஓம் மரீசயே நம:
ஓம் ஆதித்யாய நம: ஓம் ஸவித்ரே நம:


ஓம் அர்காய நம: ஓம் பாஸ்கராய நம’ எனக் கூறி வழிபடுவோருக்கு சகல சம்பத்துகளும் உண்டாகும். நேரில் சென்று நம் உழவர்களைப் போற்றி வணங்கி, பரிசுகளை அளித்து மகிழலாம். உழவர்களுக்கு உற்ற துணையாக விளங்கும் மாடுகளுக்கும் வழிபாடுகள் செய்து மகிழலாம்.

ஸோமாஸ்கந்தர்
ஸோமாஸ்கந்தர்


சூரியனின் அருள் இருந்தால்தான் இவ்வுலகம் இயங்கும். நம் குடும்பத்தாரின் ஆரோக்கியம் நன்று அமைந்திட கோளறு பதிகம் போன்ற துதிகளையும் பாடி இறைவனை வழிபட்டும் பயன்பெறலாம். தாமரை, செம்பருத்தி மற்றும் சிறப்பு மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்தல் நலம்.

? ஸோமாஸ்கந்தர் சிவ வடிவமா, முருகனின் திருவடிவமா? ஸோமாஸ்கந்த மூர்த்தியை வழிபடுவதற்கான நியதிகள் என்னென்ன?

- எம்.ராஜேஷ்,
முசிறி

சிவபெருமான் அம்பிகையுடனும் முருகப்பெருமானுடனும் இணைந்து காட்சி தருவது, சோமாஸ்கந்தர் மூர்த்தம். உத்ஸவ காலங் களில் அனைத்து ஜீவராசிகளுக்கும் நன்மை அளிக்க, சோமாஸ்கந்தர் வடிவிலேயே செல்கிறார் ஈசன்.

நமக்கு நம்மைப் பற்றிய தெளிவும், பதிஞானம் என்று போற்றக்கூடிய சிவஞானத்தையும் அளிக்கும் திருவுருவமே ஸோமாஸ்கந்தர்.

சிவபெருமானை எந்த நாமாக்களினால் போற்றுகிறோமோ, அதைப் போன்றே இவரையும் வழிபடுவது சிறந்தது. உலகில் உள்ள அனைத்துப் பொருட்களையும், அவற்றின் ஆற்றலையும், அவை பற்றிய அறிவையும் சோமாஸ்கந்தரை வழிபடுவதால் பெறலாம்.

அனைத்து ஆலயங்களிலும் சிவலிங்கத் திருமேனியாக விளங்கும் சிவபெருமானின் திருவருளை சோமாஸ்கந்தரை தரிசிப்பதினால் பெறலாம். திங்கட்கிழமைகளில் இவருக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்வது சிறந்தது.

சோமாஸ்கந்தர்
சோமாஸ்கந்தர்

? நான் காசிக் கயிறு கட்டியிருக்கிறேன். இதேபோல் சில கோயில்களில் இறைச் சந்நிதியில் பூஜிக்கப்பட்ட ரக்ஷை தருகிறார்கள். அத்தகைய தெய்வ ரக்ஷயைக் கையில் கட்டிக்கொண்டால், உணவு முதலான அன்றாட விஷயங்களில் விரத நியதிகள் ஏதேனும் கடைப்பிடிக்க வேண்டுமா?

- எச். கோவிந்தராஜன், சென்னை- 47

காசிக் கயிறு போன்று ஆலயங்களில் நமக்கு அளிக்கப்படும் ரக்ஷைகள், மந்திரங்கள் ஜபித்துத் தரப்படுபவை. நமக்கு ரக்ஷை அல்லது பாதுகாப்பு அளிப்பவை. தாங்கள் தங்களின் உணவு மற்றும் அன்றாட விஷயங்களை எவ்வாறு கடைப்பிடித்து வருகிறீர்களோ, அப்படியே தொடரலாம். அதேநேரம் ஆலயங்களில் ஏதேனும் விரதம் கடைப்பிடிக்கும் பொருட்டு காப்புக் கட்டிக்கொண்டால், அப்போது நியமங்கள் மாறுபடும்.

? வில்வக் கனிகளைக் காயவைத்துப் பதப்படுத்தி திருநீற்றுக் கலமாக விற்பனை செய்து வருகிறார் நண்பர் ஒருவர். இப்படி வில்வக் கனிகளை வியாபாரப்படுத்தலாமா? வில்வக்கனியால் ஆன கலத்தில் விபூதி இட்டு வைப்பது விசேஷமானதா?

- எம்.கே.ராமமூர்த்தி,
பாபநாசம்

வில்வம் சிவபெருமானின் புனிதத் தன்மையைப் பெற்றது. வில்வக் கனிகளைக் காயவைத்து திருநீற்றுக் கலமாக பயன்படுத்துவது நலமே.

அவற்றை வியாபாரம் செய்யலாமா என்று கேட்டுள்ளீர்கள். அந்தக் காலத்தில் கடவுளுக்கு அர்ப்பணம் செய்யகூடிய அனைத்தையுமே குழுமமாகத் தயாரித்துப் பயன்படுத்தினர். தற்காலத்தில் நமக்குப் போதிய ஞானம் இல்லாததாலும், இடவசதியும் இல்லாததாலும் நீங்கள் சொல்வது போன்ற வியாபார நிலை ஏற்படுகிறது. அவர்களிடம் வாங்கிப் பயன்படுத்தலாம்; தவறில்லை.

? யம துவிதியை, அட்சய திருதியை, ரிஷிபஞ்சமி, கந்த சஷ்டி, ரத சப்தமி, கோகுலாஷ்டமி, ராம நவமி, விஜயதசமி, ஏகாதசி, துவாதசி பாரணை, நரக சதுர்த்தசி... இங்ஙனம் திதிகள் வழிபாடுகளுடன் பிணைந்திருக்கின்றன. ஆனால், பிரதமை திதிக்கு மட்டும் இப்படியான சிறப்புகள் இருப்பதாகத் தெரியவில்லையே... ஏன்?

- சி.சரவணன்,
சென்னை-45

சாந்திரமான மாதம் ஒவ்வொன்றும் பிறப்பது பிரதமையில்தான். அந்த தினத்தில் பலரும் சிறப்பான யாகங்களை உலக நன்மையின் பொருட்டுச் செய்வார்கள். நவராத்திரியின் முதல் நாள் பிரதமை திதியே. ஒரு பக்ஷத்தின் முதல் நாளும் இந்தத் திதியே. வருடத்தில் ஒரு நாள் மட்டும்தான் சிறப்பு என்று இல்லாமல், அனைத்து மாதங்களிலும் சிறப்பு பெறுகிறது பிரதமை திதி. தனியாக இல்லாமல், இந்த திதியை முதலாகக் கொண்டு தொடர்ந்து பூஜைகள் நடைபெறுவதால் பிரதமையும் சிறப்பானதே.

-- பதில்கள் தொடரும்...