Published:Updated:

கேள்வி - பதில்: மாசி மாத சிவராத்திரி ஏன் சிறந்தது?

மாசி மாத சிவராத்திரி
பிரீமியம் ஸ்டோரி
மாசி மாத சிவராத்திரி

ஓவியம்: ம.செ

கேள்வி - பதில்: மாசி மாத சிவராத்திரி ஏன் சிறந்தது?

ஓவியம்: ம.செ

Published:Updated:
மாசி மாத சிவராத்திரி
பிரீமியம் ஸ்டோரி
மாசி மாத சிவராத்திரி

? மாதந்தோறும் சிவராத்திரி வந்தாலும் மாசி மாதம் வரும் சிவராத்திரி மட்டும் ‘மகா சிவராத்திரி’ என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது ஏன்?

- எஸ். யமுனா, சென்னை - 94

‘மாசி' மாதம், மாசுகளை நீக்கி சிவத்தன்மையை வெளிப்படுத்தும் தன்மையுடையது. தேய்பிறை சதுர்தசி திதியானது `மகாநிசி' காலத்தில் அதாவது அமாவாசைக்கு முன்னர் வரக்கூடிய இரவு 11.36 முதல் 12.24 வரை சதுர்தசி திதி இருப்பின் அன்றே சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்பட வேண்டும். சாந்திராயனத்தின்படி இந்த மாதத்தை `மகா' மாதம் என்று கூறுவர்.

எல்லாம்வல்ல உமையம்மை மகாபிரளய காலத்துக்குப் பிறகு மறுபடியும் ஜீவாத்மாக்கள் அவர்களின் போகங்களை அனுபவிப்பதின் பொருட்டு உலகம் மீண்டும் படைக்கப்பட வேண்டும் என்ற கருணையினால் சிவபெருமானைக் குறித்து பூஜை செய்தார். அந்த பூஜையினால் மகிழ்ச்சி அடைந்த சிவபெருமான் மகாநிசி காலத்தில் ஆவிர்பவித்து அருளியதை நமது ஆகமங்களும் புராணங்களும் பதிவு செய்திருக்கின்றன.

மாசி மாதத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்ததால் மாசி மாதம் வரும் சிவராத்திரி, மகா சிவராத்திரி எனவும், மற்ற மாதங்களிலும் சிவனின்பால் மிகுந்த பற்று இருப்பவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்து பதியின் அறிவை அடைய உதவுவதினால் அவை மாத சிவராத்திரி எனவும் போற்றப்படுகிறது.

ராத்திரி என்றால் இரவு என்று பொதுவான அர்த்தம் கொண்டாலும், ராத்ரம் என்பதற்கு அறிவு என்றும் பொருள் கூறுவர். சிவராத்திரியானது பதியான எம்பெருமான் சிவபெருமானை நமக்கு உணர்த்தி அனுபவிக்கச் செய்வதினால் அனைத்து வழிபாடுகளிலும் சிவராத்திரி அன்று செய்யப்படும் சிவ வழிபாடு மிகுந்த பலன்களை அளிக்க வல்லது.

மாசி மாத சிவராத்திரி
மாசி மாத சிவராத்திரி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மற்ற மாதங்களில் சிவராத்திரி விரதம் கடைப்பிடிக்க முடியாதவர்களும் மாசி மாதத்தின் மகா சிவராத்திரி விரதமிருந்து மகாதேவனின் அருளைப் பெறலாம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

? எனக்கு அடிக்கடி மனத்தில் குழப்பமும் சஞ்சலமும் ஏற்படுகின்றன. அவற்றில் இருந்து விடுபட என்ன வழி?

- ராமச்சந்திரன், சென்னை - 116

கடவுளை வழிபடுங்கள். ‘தளர்வறியா மனம் தரும்' என்ற அபிராம பட்டர், `எல்லாம் வல்ல அன்னையின் கடைக்கண்கள் நமக்கு நல்லன எல்லாம் அளித்து வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் குழப்பத்தையும் சஞ்சலத்தையும் போக்க வல்லது' என்கிறார்.

நமக்குப் பறவைகள் போன்று இறக்கைகள் இல்லாவிட்டாலும் விமானம் போன்றவற்றில் பயணம் செய்யும்போது `நாம் பறக்கிறோம்' என்று சொல்கிறோமோ, அது போன்று ஆலயங்களுக்குச் சென்றாலே கவலைகள் களையப்படுவதை உணரலாம்.

இது ஒரே நாளில் ஏற்படலாம் அல்லது பல நாள்களோ, வாரங்களோ ஏன் வருடங்களோகூட ஆகலாம். அவரவர் கர்மவினைகளின்படியே வாழ்க்கை அமைகிறது. எனவே, நாம் செய்ய வேண்டிய கடமைகளைச் சரிவரச் செய்து நாளை பற்றி அதிகம் யோசிக்காமல் இறையருளின் சக்தியினால் அமைதியான வாழ்வைப் பெறலாம்.

தியானம், நடைப்பயிற்சி, நல்ல சொற்பொழிவுகளைக் கேட்டல், நம்மால் முடிந்த அளவு நம்மில் பலம் குறைந்தவர்களுக்கு உதவுவது போன்று செய்து வாருங்கள்.

நாம் வெறும் பொம்மைகள். கடவுள் நம்மை நெறிப்படுத்தக்கூடியவர் என்று உணர்ந்தால் கவலைகள் நம்மைத் தாக்காது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

? சிவாகமங்கள் என்னென்ன, அவற்றுள் திருக்கோயில் வழிபாடுகள் மற்றும் நியதிகள் குறித்து வழிகாட்டும் ஆகமம் எது? - எம். குமார், சென்னை

`சிவ நிக்வஸிதம் வேதா: வாக் ரூபாஸ்ச சிவாகமா:' என்று சிவபெருமானுடைய மூச்சுக்காற்று வேதமாகவும் அவருடைய வார்த்தைகளே சிவாகமங்களாகவும் உள்ளன என்கின்றனர்.

சிவாகமங்களில் 28 மூல ஆகமங்களும் 207 உப ஆகமங்களும் உள்ளன.

1) காமிகம் 2) யோகஜம் 3) சிந்த்யம் 4) காரணம் 5) அஜிதம் 6) தீப்தம் 7) ஆக்ஷமம் 8) ஸஹஸ்ரம் 9) அம்சுமான் 10) சுப்ரபேதம் 11) விஜயம் 12) நிக்வாஸம் 13) ஸ்வாயம்புவம் 14) அனலம் 15) வீரம் 16) ரெளரவம் 17) மகுடம் 18) விமலம் 19) சந்த்ரஞானம் 20) பிம்பம் 21) ப்ரோத்கீதம் 22) லலிதம் 23) சித்தம் 24) சந்தானம் 25) சர்வோக்தம் 26) பாரமேச்வரம் 27) கிரணம் 28) வாதுளம் என்பவை மூல ஆகமங்கள்.

ஒவ்வோர் ஆலயமும் ஓர் ஆகமத்தின்படியே பூஜை முறைகள் அமைத்திருக்கும்.

முதல் 10 ஆகமங்கள் சிவபேதம் எனவும் ஏனைய 18 ருத்ரபேதம் என்றும் வகுக்கப்பட்டுள்ளன. இவற்றை முதலில் சிவபெருமனார் அம்பிகைக்கு உபதேசித்து அவர் மூலம் அறுபத்து அறுவருக்கு அளித்து பிற்பாடு நமக்கு அளிக்கப்பட்டன.

அனைத்து ஆகமங்களிலும் சர்யாபாதம் - நாம் தினசரி செய்ய வேண்டிய கடமைகள், கிரியா பாதம் - நாம் செய்ய வேண்டிய பூஜை முறைகள், யோக பாதம் - பிராணாயாமம், அந்தர்யாகம் முதலிய அகவழிபாடு யோகக் கலைகளையும், ஞான பாதம் எனும் பகுதியில் பதி - சிவபெருமானார், பசு - ஜீவாத்மாக்கள், பாசம் - உலகம் என்பவை பற்றிய விளக்கங்களும் மிக விரிவாகவும் தெளிவாகவும் விளக்கப்பட்டுள்ளன.

அனைத்து ஆகமங்களில் உள்ள சுலோகங்களின் எண்ணிக்கைகளும் சிவபெருமானின் ஐந்து முகங்களிலிருந்து தோன்றியவை எவை என்பன பற்றியும் கூறப்பட்டுள்ளன.

பூஜை முறைகள், சிற்பக்கலைகள், நகர அமைப்பு, நமக்கும் இவ்வுலகத்துக்கும் உள்ள தொடர்பு என்று வேதங்களில் மறைமுகமாகக் கூறப்பட்ட உண்மைகளை நமக்கு ஆகமங்கள் தெளிவுபடுத்தி உணரச் செய்கின்றன.

? இறைவன் அருளிருக்க கிரகப் பெயர்ச்சிகளை யொட்டி பரிகாரங்கள் வழிபாடுகள் செய்வதன் தாத்பர்யம் என்ன?

- ஆர். ராமமூர்த்தி, தருமபுரி

ஒருவர் உயரிய கல்வியைக் கற்று உயர்ந்த நிலையை அடைந்து விட்டார் எனில் அவருக்கு அடிப்படை கல்வியானது தேவையில்லை. ஒருவர் நல்ல உணவு உட்கொண்டபின் அப்போது பசியை பற்றி நினைக்கவேண்டிய அவசியமில்லை.

அதுபோல இறைவனின் அருளினால் எல்லாம் அவரே என்று உணர்ந்து. ஒருவர் இருப்பின் அவரை இருவினைப் பயன்கள் தாக்காது. அதுவரை நாம் கிரகங்களின் ஆட்சிக்கு உட்பட்டவர்கள். ஞானிகளும் கிரகங்களின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவர்களே. எனவே, நமது கர்ம வினைகளின் அடிப்படையில் போகங் களை அளிக்கும் நவகிரகங்களை வழிபடுவது அவசியமே. கடலில் பயணிக்கும் வரை கப்பல் முக்கியமானதே. இவ்வுலக வாழ்கையில் நாம் துன்பங்களிலிருந்து விடுபட்டு இன்பத்தை அடைய தெய்வங்களின் வழிபாடும், குறிப்பாக கிரகங்களின் அருளைப்பெற அதற்குரிய வழிபாடுகளையும் பரிகாரங்களையும் செய்வது முக்கியம்.

- பதில்கள் தொடரும்...

வாசகர்களே... ஆன்மிகம் தொடர்பான அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் தருகிறார்,

சென்னை `காளிகாம்பாள் கோயில்' சிவஸ்ரீசண்முக சிவாசார்யர்.

கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி: கேள்வி-பதில், சக்தி விகடன் 757, அண்ணாசாலை, சென்னை-600 002

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism