மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேள்வி - பதில்:கோயிலுக்குச் சென்றால்தான் இறையருள் கிடைக்குமா?

கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
News
கேள்வி - பதில்

ஆன்மிகக் கேள்வி பதில்கள்

? கோயிலுக்குச் சென்றால்தான் இறைவனின் அருள் கிடைக்கும் என்று சொல்கிறார்கள். நான் கோயிலுக்குச் செல்லாமல், வீட்டிலேயே பூஜை செய்து வருகிறேன். எனக்கு இறைவனின் அருள் கிடைக்குமா?

- எம்.ராமகிருஷ்ணன், சென்னை-116

தாங்கள் எங்கிருந்தாலும் இறைவனை மனப்பூர்வமான பக்தியுடன் நினைத்தால், இறைவனின் அருள் பூரணமாகக் கிடைக்கும். எனினும், பொதுவான தோட்டத்தில் விதை விதைத்தால் அதன் பலன் நமக்குத் தெரியாதவர்களுக்கும் கிடைப்பதுபோல், ஆலயங்களில் நாம் செய்யும் வழிபாடுகள் அனைவருக்கும் பகிர்ந்து அளிக்கப்படுகிறது. அனைவரின் நலனுக்காக பிரார்த்தித்துக் கொண்ட புண்ணியம் நமக்குக் கிடைக்கிறது.

ஆலயத்தில் நாம் தரிசிக்கும் ஒவ்வொரு தெய்வத் திருவுருவத்தையும் நாம் நம்முடைய புறக் கண்களால் மட்டுமல்லாமல் மனக்கண்ணிலும் தரிசித்து வழிபடுவோம். ஆலயத்தில் கூறப்படும் மந்திரங்களும், செய்யப்படும் கிரியைகளும், மணி, மேளம், நாகஸ்வரம், துதிப் பாடல்கள் போன்ற நாதோபாசனையும், மனம் கவரும் தெய்விக நறுமணமும், மலர்களின் காட்சியும், சிறப்பு அலங்காரங்களும் நம் மனத்தை எளிதில் இறைவனிடம் லயிக்கச் செய்பவை.

மேலும், பல ஆயிரம் ஆண்டுகள் பல ரிஷிகளும் தேவர்களும் ஆசார்ய புருஷர்களும் ராஜாதிராஜாக்களும் சமுதாயத்தில் உள்ள அனைவரும் ஒன்றிணைந்து வழிபட்ட ஆலயத்துக்குள் நாம் பிரவேசித்ததுமே, நமக்குத் தெரியாமலே ஒரு மாபெரும் சக்தி நம்மைக் காப்பாற்றி வருகிறது என்பதை நாம் உணர்ந்து அனுபவிப்போம்.

ஆலயங்களில் பூரணமாக நிறைந்திருக்கும் தெய்விக ஆற்றல், நம்முடைய கர்மவினைகளை எளிதில் போக்கிவிடக்கூடிய சக்தி வாய்ந்தது. எனவே, அருகில் உள்ள ஆலயங்களுக்குச் செல்லுங்கள். ஆலயங்களைத் தூய்மைப்படுத்துவதுபோன்ற பணிகளில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ளுங்கள். குடும்பத் தினருடனும் நண்பர்களுடனும் செல்லும்போது அன்பு வளர்வதை உணர்வீர்கள்.

இல்லை, இவை அனைத்தையும் நான் வீட்டில் இருந்தபடியே பூஜை செய்வது அல்லது தியானம் செய்வதன் மூலமாக உணர முடியும் என்று நினைத்தால், நீங்கள் அப்படியே செய்யலாம்; தவறு எதுவும் இல்லை.

? விருட்சங்களின் அடியில் தெய்வங்களைப் பிரதிஷ்டை செய்வது ஏன்? அதிலும் குறிப்பாக விநாயகப் பெருமானை அரசின் கீழும் வேம்பின் கீழும் எழுந்தருளச் செய்து நம் முன்னோர் வழிபட்டதன் காரணம் என்ன?

- எம்.வேல்முருகன், குளக்குடி

மரங்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதைப் புராண காலங்களிலிருந்தே வலியுறுத்தி வந்திருக்கிறார்கள் நம் முன்னோர். அதற்காகவே ஆலயம்தோறும் ஸ்தல விருட்சங்களை வைத்துப் பாதுகாத்து வருகிறோம். அரச மரம் விஷ்ணுவின் அம்சம். வேப்ப மரம் பராசக்தியின் அம்சம்.

கேள்வி - பதில்:கோயிலுக்குச் சென்றால்தான் இறையருள் கிடைக்குமா?

இந்த மரங்களின் அளவில்லாத நல்ல அதிர்வலைகளோடு, பிள்ளையாரின் அருளும் சேர்ந்து உலாவும் இடத்துக்கு வந்துவழிபடும் அன்பர்கள், நேர்மறை சிந்தனைகளை அடைந்து பயன்பெறுகிறார்கள். இது ஆன்மிகத்தோடு மருத்துவப்பயனும் இணைந்த சூட்சும விஷயம். மரங்களின் கீழே அருளும் கணபதி மிக மிக விசேஷமானவர். அங்கே வந்து வணங்குபவர்கள் உடல் நலமும், மன நலமும் பெற்று வாழ்வார்கள்.

? நான் ருத்திராட்சம் அணிய விரும்புகிறேன். ருத்திராட்சத்தை எல்லோரும் அணியலாமா, அதை அணிந்துகொள்வதற்கான நியதிகளை அறிய விரும்புகிறேன்.

- கே.ராஜகோபால், ஆழ்வார்திருநகரி

எல்லாம்வல்ல சிவபெருமானின் அருள் பிரசாதமே ருத்திராட்சம். மூன்று கண்களைக் கொண்ட ஈசனிடமிருந்து தோன்றியதால், ருத்திராட்சம் என்று போற்றப்படுகிறது. இந்தப் புண்ணிய மணியை அணிவதால், பாவங்கள் விலகி நல்ல எண்ணங்கள் தோன்றும் என்றும், இதை ஆண் பெண் என்ற பேதமில்லாமல் அனைவரும் அணிந்துகொள்ளலாம் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.

பூஜை வேளைகளில் மணியாகவும் மாலையாகவும் தரித்துக்கொண்டும், ஜபம் போன்றவற்றுக்கு எண்ணிக்கையைக் கணக்கிடவும் ருத்திராட்ச மாலையைப் பயன்படுத்தலாம். அதனால், நம் மனத்தில் ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும்.

கேள்வி - பதில்:கோயிலுக்குச் சென்றால்தான் இறையருள் கிடைக்குமா?

ருத்திராட்சத்தை முதன்முறையாக அணிபவர்கள், திங்கள்கிழமை, பௌர்ணமி ஆகிய நாள்களில் அணியலாம். குருவின் ஆசியுடன் பெற்று அணிந்துகொள்ளும் ருத்திராட்சம், எல்லா நாள்களும் நம் மேனியில் துலங்கலாம். ருத்திராட்சத்தில் ஒருமுகம், இருமுகம் எனத் துவங்கி பல வகைகள் உண்டு. அதேபோல், ஒவ்வொரு முகத்துக்கும் ஒரு பலன் உண்டு. ஒரு மாலையில் எத்தனை மணிகள் இருக்கலாம் என்பது பற்றிய விளக்கங்கள் ஆகமங்களிலும் உபநிடதங்களிலும் சொல்லப்பட்டிருக்கின்றன.

‘ருத்ராக்ஷ தாரணாச்ச ச்ரேஷ்டம் ந கிஞ்சித் அபிவித்யதே’ - ருத்திராட்சம் அணிந்து கொள்வதைவிட உயர்ந்த புண்ணியம் வேறு எதுவும் இல்லை என்கின்றன ஞான நூல்கள். இப்படியான ருத்திராட்சத்தை அனைவரும் தரித்து, எல்லாம் வல்ல இறை சக்தியைப் பெறலாம்.

? ஆலயங்களுக்குச் செல்லும்போது, சிலர் கோஷ்ட தெய்வங்களையும் நந்திதேவரையும் தொட்டு வணங்குவதைப் பார்த்திருக்கிறேன். ஆலயங்களில் தெய்வ விக்கிரகங்களைத் தொட்டு வணங்கலாமா?

- கே.காமாக்ஷி, விழுப்புரம்

அந்தக் காலத்தில் பயபக்தி என்று கூறுவார்கள். சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடித்து புண்ணியம் சேர்த்துக்கொள்ள வேண்டும். `செய்யக் கூடாது’ என்று விதிக்கப்பட்டவற்றைச் செய்து பாவத்தைத் தேடிக்கொள்ளக் கூடாது. அதுதான் உண்மையான பக்தி.

‘நான்’ என்ற எண்ணம் நீங்கி, ‘நாம்’ என்ற எண்ணம் ஏற்பட்டு, அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக தினமும் சிறப்பான முறையில் பூஜைகள் நடைபெறும் இடமே ஆலயம். நமது ஸனாதன தர்மப்படி, ஆலயத்தை வெறுமனே மக்கள் கூடும் இடமாகப் பார்ப்பதில்லை; அனைத்து ஜீவராசிகளும் நன்றாக இருக்க வேண்டும் என்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறும் இடம் அது. அங்கே, நமது வழிபாடுகளை முறையாகச் செய்து, இறைவனின் அருளைப்பெறுவதே சிறப்பானது.

நம்முடைய நம்பிக்கை தர்மத்துக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். அப்போது தான் முழுமையான பயனை அடையலாம். எந்த விக்கிரகத்தையும் தொடாமல் பக்தி செலுத்துவதே சிறந்தது. இன்று நாம் நம்முடைய அதிகார பலத்தினாலோ, பொருளாதார பலத்தினாலோ நமக்குத் தகுந்தபடி வழிபாட்டு முறைகளில் மாற்றம் செய்தால், அது நமக்கு மட்டுமல்லாமல் உலகத்துக்கே தீமை விளை விக்கும். அந்தப் பாவமும் நம்மையே சாரும்.

எனவே, வழிபாட்டு முறைகளை சாஸ்திரங்கள் கூறியபடியே கடைப்பிடிக்க வேண்டும். இன்று நம்மைப் பலர் தவறான வழியில் நடத்துவதற்கு வாய்ப்பு உண்டு. ஆனால், சாஸ்திரங்கள் நம்மை எப்போதும் தவறான வழியில் நடத்துவதில்லை. இதை உணர்ந்து நாம் செயல்பட வேண்டும்.

? நவகிரகங்களில் ராகுவையும் கேதுவையும் அப்பிரதட்சிண மாகத்தான் வலம் வந்து வணங்க வேண்டுமா?

- கோ.ராமலட்சுமி, பாபநாசம்

ஆலயங்களைப் பிரதட்சிணமாகத்தான் வலம்வர வேண்டும். எந்தக் காரணத்தைக் கொண்டும் அப்பிரதட்சிணமாக வலம்வரக் கூடாது. பிரதோஷ காலங்களில் மட்டும், ‘ஸோம சூத்திர பிரதட்சிணம்’ எனும் பிரதட்சிண முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

நவகிரகங்களில் ராகு, கேது என்ற சாயாகிரகங்கள் எதிர்மறையில் வலம் வருகின்றன என்பதற்காக, நாமும் அப்படிச் செய்ய வேண்டும் என்பதில்லை. நாம் வலம் வரும்போது, நாம் எடுத்துவைக்கும் ஒவ்வோர் அடியும் `நம்முடைய பாவங்களை விலக்கிப் புண்ணியத்தைத் தரும்’ என்ற முழுமையான நம்பிக்கையுடன் நாம் கோயில்களில் பிரதட் சிணம் செய்ய வேண்டும். பிரதட்சிண வேளையில் நம்முடைய மனத்தில் இறைச் சிந்தனையைத் தவிர வேறு எந்தச் சிந்தனையும் இருக்கக் கூடாது என்பது முக்கியம்.

- பதில்கள் தொடரும்...

வாசகர்களே... ஆன்மிகம் தொடர்பான அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் தருகிறார், சென்னை `காளிகாம்பாள் கோயில்' சிவஶ்ரீசண்முக சிவாசார்யர்.

கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி: கேள்வி-பதில், சக்தி விகடன் 757, அண்ணாசாலை, சென்னை-600 002

கேள்வி - பதில்:கோயிலுக்குச் சென்றால்தான் இறையருள் கிடைக்குமா?