Published:Updated:

கேள்வி - பதில்: பரிகாரங்களால் பலன் கிடைக்குமா?

கேள்வி_பதில்
பிரீமியம் ஸ்டோரி
News
கேள்வி_பதில்

காளிகாம்பாள் கோயில் சிவஸ்ரீ சண்முக சிவாசார்யர்

? தோஷங்களுக்குப் பல பரிகார வழிபாடுகளைப் பரிந்துரைக்கின்றனர். முன்வினை காரணமாகவே இந்தப் பிறவியில் உரிய பலாபலன்களை அனுபவித்து வருகிறோம். அப்படியிருக்க, பரிகார வழிபாடுகளால் பலன் கிடைக்குமா?

- எம்.கே.பரமேஸ்வரன், திண்டுக்கல்

நம்முடைய முற்பிறவிகளில் செய்த வினைகளின் தொடர்ச்சியாலோ, இப்பிறவியில் செய்த தவறுகளினாலோ தோஷங்கள் ஏற்படுவது இயற்கை.

கேள்வி - பதில்: பரிகாரங்களால் பலன் கிடைக்குமா?

அப்படியான தோஷங்களில் சிலவற்றைப் புனித நீராடுதல், ஆலயங் களை தரிசித்தல், மகான்களின் ஆசி பெறுதல், பிராயச்சித்த பூஜைகளைச் செய்தல், விரதங்களைக் கடைப் பிடித்தல் போன்றவற்றினால் போக்கிக் கொள்ளலாம். சிலவற்றை நாம் அனுபவித்தே தீர்க்கவேண்டி இருக்கும். பல நூல்கள் இந்தப் பரிகார பூஜைகள் குறித்த நியதிகளை விளக்கமாகக் கூறியிருக் கின்றன. அவற்றை அவரவர் சக்திக்கு உட்பட்டு, தகுந்த ஆசார்ய பெருமக்கள் மூலம் செய்வது சிறந்தது.

முதலில் நாம் அனைவரும் தூய்மை யானவர்கள் என்பதையும், மிக உயர்ந்த காரியங்களைச் செய்யக்கூடிய ஆற்றல் பெற்றவர்கள் என்பதையும் உணர்ந்து கொள்ளவேண்டும். நாம் செய்யக் கூடிய பரிகாரங்களினால் நம் முன்வினைகள் அனைத்தும் விலகிவிடும் என்று நம்பிக்கையுடன் செய்யவேண்டியது முக்கியம். தகுதி வாய்ந்த ஆசார்யரின் பூஜையும் தங்களின் நம்பிக்கையும் நிச்சயம் நல்ல பலன்களை அளிக்கும்.

? நான் ஆதிசக்தியை லலிதாம்பிகையாய் உபாசித்து வருகிறேன். தினமும் லலிதா சகஸ்ரநாமம் சொல்லி வழிபட ஆசை. அதற்கான வழிமுறைகள் என்னென்ன?

- கே.கீர்த்தனா, அம்பாசமுத்திரம்

அம்பிகையின் ஸ்தோத்திரங்களில் தனிச் சிறப்பு வாய்ந்தது லலிதா சஹஸ்ர நாமம். அம்பிகையின் ஆயிரம் திருநாமங்களும் பிரம்மாண்ட புராணத்தில் அமைந்துள்ளன. இந்த நாமாவளிகள், அம்பிகையைச் சூழ்ந்திருக்கக்கூடிய ரஹஸ்ய யோகினிகளால் அருளப்பட்டவை. இவற்றை ஸ்ரீஹயக்ரீவர், தவசீலரான அகத்தியருக்கு உபதேசமாக அருளினார்.

தெய்வங்களுக்கான சகஸ்ரநாமாக்கள் பல உண்டு என்றாலும், அவை அனைத்திலும் வேறு பட்டது இந்த லலிதா சஹஸ்ரநாமம்.

கேள்வி - பதில்: பரிகாரங்களால் பலன் கிடைக்குமா?

‘ஸ்ரீமாதா’ என்று கூறினாலே ஆயிரம் நாமாக்களை கூறிய புண்ணியம் கிடைக்கும் என்பது முன்னோர் வாக்கு. ஆம், அவளே இந்தப் பிரபஞ்சத்தின் தாய், ஆதாரம் என்பதை உணர்த்தும் மிக பலம் வாய்ந்த மந்திரச் சொல் ‘ஸ்ரீமாதா’ - தாய். நாம் அனைவரும் அவளின் குழந்தைகள் என்பதை உணர்ந்தோமா னால் குழப்பங்கள் எதுவும் ஏற்படாது. உலகம் முழுவதும் அமைதி நிலவும்.

‘நாம பாராயண ப்ரீதா’ என்பதற்கு ஏற்ப, நாமாக்களைப் பாராயணம் செய்தால் மகிழ்ச்சி அடையக் கூடியவள் பராசக்தி. அந்த அன்னை யின் நாமாக்களைக் கூறி வழிபடுவது, அனைவருக்கும் பொதுவானதே. ஆனால், லலிதா சஹஸ்ரநாம ஸ்தோத்திரத்தில் பல ரகசிய தேவதைகளின் சிறப்புகள், உபாஸனை முறைகள் விளக்கப்பட்டுள்ளதால், தகுந்த குருவிடம் உபதேசம் பெற்று ஜபிப்பது சிறந்தது.

ஸ்தோத்திரம் முடிந்தவுடன், சுமார் 85 சுலோகங்களில்... இந்த ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்வதால் ஏற்படக்கூடிய பலன்களை, மிகவும் விஸ்தாரமாக ஸ்ரீஹயக்ரீவர் ஸ்ரீஅகத்தியருக்கு விளக்கியுள்ளார். இந்த ஆயிரம் நாமங்கள் ரகசியமானவையாகவும் தேவிக்கு மிகவும் பிரியமானவையாகவும் இருப்பதுடன், நோய்களைப் போக்குவதாகவும், நீண்ட ஆயுளைத் தருவதாகவும், குழந்தை பாக்கியம் அருள்வதாகவும் திகழ்கின்றன.

ஏதேனும் ஒரு நாமாவைப் பக்தியுடனும் நம்பிக்கையுடனும் துதிப்பவர்களுக்குப் பாவங்கள் நீங்கும், கங்கை முதலிய புண்ணிய நதிகளில் நீராடிய புண்ணியம் வாய்க்கும், புனித க்ஷேத்திரத்தில் கோடி லிங்கங்களைப் பிரதிஷ்டை செய்த பலன் கிடைக்கும் என்று விவரித்துள்ளார் ஸ்ரீஹயக்ரீவர்.

குறிப்பாகப் புண்ணிய நாள்கள், வெள்ளிக் கிழமைகள், ஜன்ம, அனுஜன்ம, திரிஜன்ம நட்சத்திர நாள்கள், நவமி, சதுர்த்தசி, பௌர்ணமி நாள்களில் இந்த ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்வது சிறந்த பலன்களை அளிக்கும்.

பௌர்ணமியன்று சந்திரனில் அம்பிகை இருப்பதாகப் பாவித்து, இந்த ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்தால், தீராத நோய்கள் நீங்கி நீண்ட ஆயுள் பெறலாம். ஜுரம் முதலியவற்றால் பீடிக்கப்பட்டவர்களின் தலையைத் தொட்டுக் கொண்டு பாராயணம் செய்தால், அந்தப் பிணிகள் நீங்கும். அதேபோல், விபூதியைத் தொட்டுக்கொண்டு பாராயணம் செய்து, அந்த விபூதியை இட்டுக்கொள்ள நோய்கள் நீங்கும்.

குடத்தில் நீர் நிரப்பி ஸ்ரீலலிதா சகஸ்ரநாமத் தைப் பாராயணம் செய்து அந்த நீரால் நீராடி னால் பூத, பிரேத, பிசாசு போன்ற உபாதைகள் விலகும். வெண்ணெய்யில் மந்திரித்துக் கொடுத்தால் பிள்ளைப்பேறு கிடைக்கும்.

இந்தப் பாராயணத்தால் போர்களில் வெற்றி கிட்டும். எதிரிகள் விலகுவார்கள். இப்படி, பலவித பலன்களை தேவியின் அருளால் நாம் பெறலாம். எந்த ஒரு தேவையுமின்றி தேவியைத் துதிப்பதையே நோக்கமாகக் கொண்டவர்களாக வழிபட்டால், உயர்ந்த நிலையான மோட்சம் கிடைக்கும்.

? விளக்குகளில் காமாட்சி விளக்குக்குத் தனியிடம் உண்டு என்கிறாள் தோழி ஒருத்தி. அந்த விளக்கை ஏற்றி வழிபடுவதன் தாத்பர்யத்தை நீங்கள் விளக்குங்களேன்.

- சி.அன்னலட்சுமி, சேலம்-2

காமாட்சி விளக்கு குறித்து ஏற்கெனவே விளக்கியுள்ளோம். உங்களுக்காக மீண்டும் ஒருமுறை அதன் மகத்துவங்களைப் பார்ப்போம்.

காமாட்சி அம்மன் விளக்கு ஏற்றப்படும்போது, அந்த இடத்தில் அம்பிகையின் அருளாற்றல் நிறைகிறது. ‘காம’ என்றால், ஆசை - விருப்பம் என்று பொருள். நம்முடைய நியாயமான விருப்பங்களை ஆள்பவளும் நிறைவேற்றுபவளும் அன்னை காமாட்சி.

கேள்வி - பதில்: பரிகாரங்களால் பலன் கிடைக்குமா?

`கா’ என்றால் சரஸ்வதி; ‘மா’ என்றால் லட்சுமி. `அட்சி’ என்றால் கண்கள். சரஸ்வதி, லட்சுமி ஆகியோரைக் கண்களாகக் கொண்டவள் காமாட்சி.

ஒருவரின் வாழ்க்கை சிறப்பாக அமைய, எப்படி வாழவேண்டும் என்பது பற்றிய தெளிவான அறிவு, பொருளாதார வசதி, உடல் ஆரோக்கியம் ஆகியவை அவசியம் வேண்டும். அவற்றை நமக்கு அருள்பவள்தான் காமாட்சி.

எனவே, காமாட்சி அம்மன் விளக்கை ஏற்றி வழிபடும்போது, நம்முடைய வீட்டில் சகல மங்கலங்களும் நிறைவதுடன், வாழ்க்கையைப் பற்றிய தெளிவான அறிவும் நமக்குக் கிடைக்கும்.

? சமீப காலமாக தூக்கத்தில் கெட்டக் கனவுகள் வருகின்றன. இதிலிருந்து விடுபட ஏதேனும் பரிகார வழிபாடுகள், ஸ்லோகங்கள் உண்டா?

-ஜி.ரமேஷ், மேலூர்

தினமும் படுக்கச் செல்வதற்கு முன்பு முகம், கை கால் அலம்பிக் கொண்டு, நெற்றியில் விபூதி தரித்துக்கொண்டு, இறைவனைத் தியானித்து விட்டு உறங்கச் செல்லுங்கள். கனவுத் தொல்லை கள் இருக்காது. படுக்கையறையில் சுவாமி படம் வைத்துக் கொள்வதும் நல்லது.

மேலும், ‘யாதேவீ ஸர்வ பூதேஷு நித்ரா ரூபேண ஸம்ஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம: ‘ - என்ற ஸ்லோகத்தைப் பாராயணம் செய்வதும் கெட்ட கனவுகள் வராமல் தடுக்கும்.

- பதில்கள் தொடரும்...

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

வாசகர்களே... ஆன்மிகம் தொடர்பான அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் தருகிறார்,

சென்னை `காளிகாம்பாள் கோயில்' சிவஶ்ரீசண்முக சிவாசார்யர்.

கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி: கேள்வி-பதில், சக்தி விகடன் 757, அண்ணாசாலை, சென்னை-600 002