மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேள்வி - பதில்: கோயிலில் சங்கல்பம் செய்வது எதற்காக?

கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
News
கேள்வி - பதில்

இரவு நடைசாத்திய பிறகு, மறுநாள் ஆலயம் திறக்கும்வரை, சிறப்பு ஆராதனைகள் செய்வது கண்டிப்பாகக் கூடாது.

? என் நண்பன் பக்தி மிகுந்தவன். எங்கே ஆலயங்களைக் கண்டாலும் அது மூடியிருந்தாலும் கூட, ஒரு கணம் கண்ணை மூடி வணங்கிச் செல்வான். இதனால் பலன் கிடைக்குமா?

-கோ.லட்சுமணன், செட்டிக்குளம்

பிரபஞ்ச சக்தியை நமக்கு அளிக்கக் கூடிய புனிதமான இடம் ஆலயம். எப்போதும் எல்லோருக்காகவும் வழிபாடு நடைபெறும் இடம் அது. அங்கே, சுவாமியின் முன்பாக திரை போடப்பட்டிருக்கும்போதும், கோயில் மூடியிருக்கும்போதும் வழிபடுவதைத் தவிர்ப்பது அவசியம். சிலநேரம், பயணத்தின்போது மூடியிருக்கும் கோயிலைக் கண்டு பக்தி மேலிட வணங்குகிறோம் எனில், அதில் தவறேதும் இல்லை.

பொதுவாகவே நமக்குப் பழக்கமான ஒன்றை மாற்றிக்கொள்வது கடினம். நாம் கடவுளைக் கண்டாலோ, அவர் சிறப்பாக உறையும் ஆலயத்தைப் பார்த்தாலோ, நம்மையுமறியாமல் கைகூப்பி வணங்குவது நமது பழக்கம். இப்படிச் செய்பவர்கள் ஆலயம் மூடியிருக்கிறதா, திறந்துள்ளதா என்றெல்லாம் பார்க்கமாட்டார்கள், அவர்கள் உள்ளே உறையும் இறைவனை மனத்தில் ஏற்றி வழிபடுவார்கள். இறைவன் மீதான அதீத பக்தியே இதற்குக் காரணம்.

இரவு நடைசாத்திய பிறகு, மறுநாள் ஆலயம் திறக்கும்வரை, சிறப்பு ஆராதனைகள் செய்வது கண்டிப்பாகக் கூடாது.

? கோயில்களில் எந்தவொரு வழிபாடாக இருந்தாலும் சங்கல்பம் செய்வது எதற்காக?

- வீ.ரமேஷ், கடலூர்

ஒருவருக்கு இந்த இடத்தில், இந்தக் காலத்தில், இப்படி ஒரு வேண்டுதலை முன்னிட்டு, இன்ன பூஜை செய்யப்படுகிறது என்று சொல்லி பூஜை செய்வதே சங்கல்பமாகும். செல்போன் மூலம் நாம் இருக்கும் இடத்தைத் தேவைப்படுபவர்களுக்கு அனுப்புகிறோம் அல்லவா... அதுபோன்றதுதான் இதுவும். இப்படியான சங்கல்பத்தின் பொருட்டே அர்ச்சனைத் தட்டை தொட்டுக் கும்பிடச் சொல்வார்கள்.

ஆலயங்களில் பக்தர்கள் தனித்தனியாக அர்ச்சனை செய்வது காம்ய பூஜை ஆகும். அதாவது, நாம் ஒன்றை வேண்டிக்கொண்டு நம்முடைய பிரார்த்தனையைக் கடவுளிடம் சமர்ப்பிப்பது, காம்ய பூஜை. தாங்கள் தனியாக ஆலயத்துக்குச் சென்று வழிபட்டாலும் கூட்டத்துடன் சேர்ந்து வழிபட்டாலும், இறைவனின் அருள் அனைத்து ஜீவராசிகளுக்கும் நன்மையே செய்யும். அதன்பொருட்டே ஆலயங்களில் அர்ச்சகர் பெருமக்களால் ஆகம முறைப்படி இன்றளவும் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. அவர்கள், அனுதினமும் சங்கல்பம் செய்துகொண்டு பூஜைகளைத் தொடங்குவார்கள்.

கோயிலுக்கு வரும் பக்தர்கள் அர்ச்சனை செய்ய விரும்பினால், தட்டிலுள்ள புஷ்பத்தையோ, குங்குமத்தையோ அவர்களின் பெயர், நட்சத்திரத்தைக் கூறித் தொடச் சொல்வது மரபு.

தற்காலத்தில், பயோமெட்ரிக் முறையில் நம் விரல் ரேகையைப் பதித்து, நாம் வந்திருக்கிறோம் என்று பதிவு செய்வதைப் போன்றது, இந்தச் செயல். ஓர் ஆத்ம தொடர்பை ஏற்படுத்தும் அற்புதமான செயல்பாடு இது.

கேள்வி - பதில்: கோயிலில் சங்கல்பம் செய்வது எதற்காக?

? தியானத்தை நம் ஞானநூல்கள் சிறப்பானதாகச் சொல்லக் காரணம் என்ன. தியானம் பழகுவது எப்படி?

-சி.கீர்த்தனா, கள்ளக்குறிச்சி

பரபரப்பான வாழ்க்கையில் தியானம் அவசியம். தியானம் பழகப் பழக மனம் லயித்துவிடும். அப்போது அது இறைவனை உணரும். அதன் விளைவால் மனத்தில் நிம்மதியும் சௌக்கியங்களும் உண்டாகும். துன்பங்கள் நேர்ந்தாலும் கலங்காது. ஆக, துன்பங்களின்போது துவண்டுவிடாமல் இருக்க தியானம் உதவும்.

`மனத்தை அலைபாயவிடாமல் ஒருமுகப் படுத்துவதே தியானம்’ என்கிறார் பதஞ்சலி. எந்த நிலையிலும் மனம் அலைபாயாமல் குறிப்பிட்ட காரியத்தில் கவனம் செலுத்த தியானம் உதவும்.

வெகுசிலருக்கு மட்டுமே, ஆரம்பத்திலேயே மனம் குவிந்து தியானம் வசப்படும். அதற்குக் காரணம் பூர்வ ஜன்ம புண்ணியம். ஆனால், பலருக்கும் ஆரம்பத்தில் தியானம் கைகூடுவதில்லை. பகவான் கிருஷ்ணனும் ‘பழக்கத்தின் விளைவாகவே தியானம் கைகூடும்’ என்கிறார்.

பலவித நெருக்கடிகளால் அலைபாயும் மனது, உடனடியாக ஒருமுகப்படுவது என்பது கடினம்தான். ஆகவே, தொடக்கத்திலேயே மனம் ஒருமுகப்படவில்லையே என்று கவலைப்பட வேண்டாம்.

? நம் பெரியவர்களும் மகான்களும் தீர்த்த நீராடுவதை வெகு சிறப்பாகச் சொல்லியிருக்கிறார்கள். அதிலும், புண்ணிய நதிகளில் நீராடுவது விசேஷம் என்பார்கள். நதிகளுக்கு அப்படியென்ன முக்கியத்துவம்?

-பா.பரமசிவம், மேலூர்

நாம் மிகவும் தொன்மையான மதத்தைச் சேர்ந்தவர்கள். பல ஆயிரம் ஆண்டுகள் பழைமையான மதம் நம்முடையது. ஒரு காரியத்தை நாம் பார்த்தால்தான் ஒப்புக்கொள்வோம் என்றால், நாம் நம்மையே ஒப்புக்கொள்ள முடியாது.

நம்முடைய பாவங்களைப் போக்கிக் கொள்வதற்கு மிகச் சிறந்த வழி தீர்த்த ஸ்நானம்தான். அதன் மூலம் நம் பூர்வஜன்மவினைகள் அகன்று, புண்ணியத்துடன் நற்கதி அடைகிறோம். சாஸ்திரங்கள் கூறுவது இதைத்தான்.

ஒரு காசோலை அதற்கு உரியவரின் கையொப்பம் இருந்தால்தான் செல்லுபடி யாகும். இல்லையென்றால், அது வெற்றுக் காகிதம்தான். அதேபோல் அனைத்து இடங்களிலும் தண்ணீர் இருந்தாலும், அனைத்து நதிகள் மற்றும் அருவிகள் தோன்றும் இடத்தின் சிறப்பின் காரணமாகவும், பல அவதார புருஷர்கள், மகான்கள் போன்றவர் களின் தொடர்பினாலும் அவை சிறப்பும் புனிதத்துவமும் பெற்றுத் திகழ்கின்றன.

தீர்த்தம் என்பது நீர் என்பதை மட்டுமல்லாமல் ஞானத்தையும் குறிக்கும் சொல் என்பதால், புண்ணிய நதிகளில் நீராடுவதை ‘தீர்த்த ஸ்நானம்’ என்று நம் முன்னோர்கள் அழைத்து வந்தனர்.

அதேபோல், எந்தவொரு நல்ல காரியம் செய்வதற்கு முன்பு, அந்த இடம் தூய்மை அடையவேண்டும் என்பதற்காக, ஒரு சொம்பில் தண்ணீரை எடுத்துக்கொண்டு உரிய மந்திரங்களை ஜபித்து, புனித நதிகளின் சாந்நித்யத்தை அந்தத் தண்ணீரில் நிலைபெறச் செய்கிறோம். அதன் மூலம் அந்தத் தண்ணீர் புனித நதிகளின் இயல்பைப் பெற்றுவிடுகிறது.

? வீட்டில் மகாகாளியின் படத்தை வைத்து வணங்கி வருகிறோம். ஆனால், சிலர் வீட்டில் உக்ர தெய்வங்களை வைத்து வழிபடக்கூடாது என்கிறார்கள். நீங்கள்தான் வழிகாட்ட வேண்டும்.

- எம்.செளம்யா, சென்னை-57

`அதி சௌம்ய அதி ரௌத்ராயை’ என்று தேவியை சாந்தமாக இருப்பவள் என்றும், அதே தேவி மிக உக்கிரமாகவும் விளங்குகிறாள் என்றும் தேவீ மஹாத்மியத்தில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரே பரம்பொருளே பல ரூபங்களில் விளங்குவதை நாம் தெரிந்துகொள்ளலாம். நமக்குத் துன்பங்கள் ஏதேனும் நேராமல் இருக்கவேண்டும் என்பதற்காக, தேவி உக்கிர ரூபத்தைத் தரிப்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.

‘தைத்யானாம் தேஹ நாசாய பக்தானாம் அபயாய ச’ என்று தீயவர்களை அழித்து நல்லவர்களைக் காப்பாற்றுவதற்காகவே, தான் ஆயுதங்களைத் தரிப்பதாக தேவி கூறுகிறாள். இந்த உண்மையை நாம் அறிந்து கொண்டால், சாந்தமான தெய்வம் என்றும் உக்கிரமான தெய்வம் என்றும் வேறுபடுத்திப் பார்க்க மாட்டோம்.

உக்கிரமான தெய்வ வடிவங்களை நாம் காணும்போது, அந்த தெய்வ சக்திகள், நமக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள தீயனவற்றை விலக்கி, நன்மைகளை அளிப்பதற்கே என்பதை உணர்ந்து, தெய்வங்களை அனைத்து வடிவங்களிலும் வழிபடுவது சிறந்தது. உக்கிரமான தெய்வ வடிவங்களை வழிபடுவதில் தவறு இல்லை.

- பதில்கள் தொடரும்...

வாசகர்களே... ஆன்மிகம் தொடர்பான அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் தருகிறார்,

சென்னை `காளிகாம்பாள் கோயில்' சிவஸ்ரீசண்முக சிவாசார்யர்.

கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி: கேள்வி-பதில், சக்தி விகடன் 757, அண்ணாசாலை, சென்னை-600 002