திருக்கதைகள்
திருத்தலங்கள்
ஜோதிடம்
Published:Updated:

கேள்வி - பதில்: ஆதி சக்தியின் தத்துவம் என்ன?

கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
News
கேள்வி - பதில்

‘ஆதிபராசக்தி’ எனும் சொல், அனைத்துக்கும் முதலான உயர்ந்த சக்தியைக் குறிப்பது.

? நான் முருக பக்தன். வீட்டில் வேல் வைத்து வழிபட விரும்புகிறேன். வேலாயு தத்தை வழிபடுவதற்கான வழிமுறைகள், பாராயண துதிப்பாடல்கள் என்னென்ன... விளக்குங்களேன்.

- கே.சிதம்பரம், தூத்துக்குடி

`வேல் உண்டு வினையில்லை’ என்பது நம் நம்பிக்கை. நம்முடைய கர்ம வினைகளை அகற்றி நல்வாழ்க்கையை நமக்கு அளிக்கக்கூடிய ஆற்றல் வேல் போன்ற கடவுளின் ஆயுதங்களுக்கு உண்டு.

சாதாரண மனிதனால் கண்டுபிடிக்கப் பட்ட உபகரணங்களுக்கே ஆற்றல் உண்டு என்றால், உலகின் தாய் தந்தையான பார்வதி பரமேசுவரரின் மகனான கந்தனின் திருக்கரத் தில் இருக்கும் வேலினால் நமக்கு ஏற்படக்கூடிய நன்மைகளை விவரிக்க இயலாது.

குமரக்கடவுளை வழிபட்டு ஆனந்த அனுபவத்தில் திளைத்த அருணகிரிநாதர், அகத்தியர், நக்கீரர் போன்ற பல மகான்கள் அருளிய நூல்களான திருப்புகழ், திருமுருகாற்றுப்படை, வேல் விருத்தம் போன்றவை மிகுந்த ஆற்றல் கொண்டவையாகவும் அளவற்ற நன்மைகளை அருள்பவையாகவும் உள்ளன.

நல்ல குருவை அடைந்து, வேலுக்கு உரிய மூல மந்திரத்தை உபதேசம் பெற்று ஜபம் செய்வது சிறந்த பலனை நல்கும். மேலும், அருணகிரிநாதர் அருளிய வேல் வகுப்பு, வேல்வாங்கு வகுப்பு ஆகிய துதிப்பாடல்கள் வேலாயுதத்தைப் போற்றும் வண்ணம் அமைந்துள்ளன. அவற்றில் வேல்வகுப்பு நூலில் உள்ள 16 வரிகளை எடுத்து முன்னும் பின்னு மாகவும், திரும்பத் திரும்ப வரும்படியும் வேல்மாறல் பாராயணம் என்ற நூலை, வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள் தொகுத்துத் தந்துள்ளார். அதையும் படித்துப் பயன் பெறலாம்.

?ஆதிபராசக்தியே அனைத்துக்கும் ஆதாரம் என்கிறது சாக்தம். இதற்கான தத்துவ தாத்பர்யம் என்ன. விளக்குங்களேன்.

- கோ.பரமேஸ்வரன், கோவில்பட்டி

`ஆதி’ என்றால் `முதன்மை’ என்று பொருள். அதேபோல் `பரம்’ என்பதற்கு `உயர்ந்த’ என்றும் `சக்தி’ என்பதற்கு `ஆற்றல்’ என்றும் பொருள். ‘ஆதிபராசக்தி’ எனும் சொல், அனைத்துக்கும் முதலான உயர்ந்த சக்தியைக் குறிப்பது.

அனைத்து உலகங்களுக்கும் முழுமுதற் பொரு ளான சிவபெருமா னுடன் இணைந்த சக்தியை ‘ஆத்யா’ என்று குறிப்பிடுகின்றன சிவாகமங்கள். அவளிடமிருந்தே இச்சா, ஞான, க்ரியா சக்திகள் பிரிந்து, இன்னும் பலகோடி சக்திகளாக மாறி, இந்தப் பிரபஞ்சத்தின் காரியங்களை நிர்வகிக்கின்றன.

ஆதிசக்தி ரூபம் அற்றவள். எனினும், உலக சிருஷ்டியின் பொருட்டு பல ரூபங்களில் அருள்புரிகிறாள். எப்படி ஒரே மின்சாரம் வெவ்வேறு பொருள்களில் வெவ்வேறுவிதமாகச் செயல்படுகிறதோ, அதேபோல் உருவமற்ற இறை நமது அறிதலுக் காகப் பல சக்தி வடிவங்களில் தோன்றி அருள் செய்கிறது என்கின்றன சாஸ்திரங்கள்.

கேள்வி - பதில்: ஆதி சக்தியின் தத்துவம் என்ன?

பெண்களும் ஆதிசக்தியின் அம்சமே. பெண்கள் சுவாஸினி எனப் போற்றப்படு கிறார்கள். ‘சு’ எனில் நல்ல; ‘வஸ்’ எனில் இருப்பது அல்லது தங்குவது எனப் பொருள் (வசிக்கிறாள் என்று சொல்கிறோம் அல்லவா). ஆக, உலகிலுள்ள அனைத்து சேதன அசேதனங்களும் அம்பிகையின் படைப்புகளாக இருந்தாலும், பெண்களிடத்தில் அந்தச் சக்தியின் தன்மை அதிகமாக இருப்பதால், அவர்களையும் ஆதிசக்தியின் அம்சமாக போற்றுகின்றன ஞானநூல்கள்.

? சித்திரை அல்லது வைகாசியில் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று வழிபடு வது வழக்கம். இப்போதுள்ள சூழலில் நேரில் சென்று வழிபட முடியாமல் போய்விட்டது. இது தெய்வக்குற்றமாகிவிடுமா?

-எஸ்.சங்கரசுப்பிரமணியன், கோவை

ஊரடங்கு முதலான நடப்புச் சூழல் காரணமாக உங்கள் குல தெய்வக் கோயிலுக்கு நேரில் சென்று வழிபடமுடியாத சூழ்நிலையில் நீங்கள் இரண்டு விஷயங்கள் செய்யலாம். ஒன்று, நீங்கள் அந்தக் கோயிலில் இருக்கிற அர்ச்சகர் அல்லது பூசாரியிடம் சொல்லி, அபிஷேகம் செய்யச் சொல்லலாம்.

எல்லா ஆலயங்களிலும் பூஜைகள் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. அப்படிச் செய்யும்போது உங்களுடைய வேண்டுதலும் நிறைவேறிவிடும். சட்டம் என்ன சொல்கிறதோ அதை அப்படியே நாம் கடைப்பிடிக்கவேண்டும் என்பதால், இந்த முறையில் நீங்கள் குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றிக்கொள்ளலாம். நீங்கள் நேரில் செல்லமுடியாதது ஒரு குற்றமாகிவிடாது. அதேநேரம், தற்போது பூசாரியை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றால், அபிஷேகத்துக்கான பணத்தை ஒரு மஞ்சள் துணியில் முடிந்து பூஜையறையில் வைத்துவிடவும். சூழ்நிலை சரியான பிறகு நேரில் சென்று அபிஷேகம் செய்து விட்டு வரலாம்.

? விருட்சங்களின் மகிமை குறித்து நண்பர்கள் சிலர் பகிர்ந்து கொண்டதுடன், வில்வம் குறித்த தகவலையும் அறிய விரும்பினார்கள். வில்வத்தின் ஆன்மிகச் சிறப்புகளை விளக்குங்களேன்.

-எம்.ராமன், கோவை-2

வில்வம் - சிவபெருமானுக்கு மிகவும் ப்ரீதியானது. வில்வ இலைகளைச் சமர்ப்பித்து மகாலட்சுமியை வணங்கினால், உயர்ந்த பலன்களை அடையலாம். ஆகமங்கள் பல்வேறு மரங்களைப் போற்றி, அவை இருக்க வேண்டிய இடங்களைப் பற்றி சிறப்பாகப் போற்றுகின்றன.

மரங்களில் சில தெய்விகத் தன்மை வாய்ந்தவை. வில்வ மரம் மிகவும் தூய்மையானது. மகாலட்சுமியானவள் அனைத்து நேரங்களிலும் வில்வ மரத்தில் வசிப்பதால், அந்த மரத்தை மிகுந்த பக்தியுடனும் நம்பிக்கையுடனும் வழிபடுபவரின் கவலைகள் நீங்கி இன்பமான வாழ்க்கை ஏற்படும்.

‘த்ரிதளம்’ உடைய ஒரே ஒரு வில்வ பத்திரத்தை சிவபெருமானுக்கு அளித்திட, நம் பாவங்கள் அனைத்தும் அழியும் என்றும், பல உயர்ந்த விரதங்களைக் கடைப்பிடிப்பதால் கிடைக்கும் பலன்கள் கிடைக்கும் என்றும் சாஸ்திரங்கள் விளக்குகின்றன. வில்வ இலை, வில்வக் காய் போன்றவை சில யாகங்களிலும் தேவியின் வழிபாடு களிலும் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகின்றன.

- பதில்கள் தொடரும்...

வாசகர்களே... ஆன்மிகம் தொடர்பான அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் தருகிறார்,

சென்னை `காளிகாம்பாள் கோயில்' சிவஶ்ரீசண்முக சிவாசார்யர்.

கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி: கேள்வி-பதில், சக்தி விகடன் 757, அண்ணாசாலை, சென்னை-600 002