மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேள்வி - பதில்: தெய்வ மூர்த்தங்களுக்கு அலங்காரம் செய்வது ஏன்?

கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
News
கேள்வி - பதில்

கடவுள் - பரப்ரம்மம் எனும் நிலையில் உருவம் அற்றவரே

? வேதங்களில் இறைவனை மனித உருவத்தில் வர்ணிப்பதில்லை. ஆயினும் நாம் கடவுளருக்கு மனித உருவம் கொடுத்து அலங்காரம் செய்து வழிபடுகிறோம். இது ஏன்?

- லட்சுமி கிருஷ்ணமூர்த்தி, ஶ்ரீரங்கம்

மனிதன் மட்டுமல்ல, அசையும் பொருளும் அசையாத பொருள் அனைத்தும் அந்தத் தெய்வத்தின் உருவமே. வேதங்களில், பல தெய்வங்களின் மந்திரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இல்லையென்று யார் கூறியது? வேதங்களே நம் இந்து தர்மத்தின் புனித நூல்கள். அவற்றை விளக்கும் வகையில் கடவுளால் அருளப்பட்டவையே ஆகமங்கள். ஆகமங்களில் எண்ணற்ற உருவ அமைப்புகள் வர்ணிக்கப்பட்டுள்ளன. அவை ஒவ்வொன்றுக்கும் ஓர் ஆற்றல் உள்ளது.

கடவுள் - பரப்ரம்மம் எனும் நிலையில் உருவம் அற்றவரே. எனினும் அவர் உலகுக்காக உருவத்தை அடையப் பெற்றவராக பூஜிக்கப்படுகிறார். இது மிகப் பெரிய விஞ்ஞானம். கும்பாபிஷேகம் போன்ற கிரியைகளைத் தாங்கள் கவனித்திருப்பீர்கள். அப்போது, குடத்தில் கடவுளின் ஆற்றலை வரவழைத்து பூஜைகள் நடைபெறும்.

கேள்வி - பதில்: தெய்வ மூர்த்தங்களுக்கு அலங்காரம் செய்வது ஏன்?

அவர் ‘உருவமும் அருவமாகி, அநாதியாய்...’ என்று போற்றக்கூடிய வகையில், எந்த நிலையிலும் இருக்கக்கூடிய சக்தி படைத்தவர். அவர் எல்லாம் வல்லவர். அனைத்து ஆற்றல்களையும் பெற்றிருப்பவர். அனைத்தும் அறிந்தவர். எனவே, `அவர் இப்படித்தான் இருக்க வேண்டும்' என்று நம்மால் கேட்க முடியாது.

ஏன், நமக்கே உண்மையில் உருவம் இல்லையே! நாம் மரணித்த பிறகு எரியூட்டப்படும் வரையிலும் உடல் இருக்கும். ஆனால் நாம்..?

எனில், நாம் யார்? ஆணா அல்லது பெண்ணா? இவை எல்லாம் நான் கேட்பது அல்ல; நம்முடைய மகரிஷிகள் இது போன்று விசாரம் செய்து, தங்களுடைய உண்மை நிலையை அறிந்து தெளிவுபெற்றனர்.

இதேபோன்று கடவுள் உருவமற்றவராகவும், உருவம் உடையவராகவும், மனிதராகவும், மலை யாகவும், மரமாகவும், மிருகமாகவும், நதியாகவும் திகழ்கிறார். அவரை எந்த வடிவத்திலும் வழிபடும் சுதந்திரத்தை நம் மதம் கொடுத்துள்ளது. அனைத்தும் இறைவனே.

? எல்லாவற்றுக்கும் கடவுளிடம் பிரார்த்தனை செய்யவேண்டும் என்று சொல்லும்போது, நம்முடைய தன்னம்பிக்கை பலவீனமாகிவிடுமே. சுய முயற்சிக்கு அவசியம் இல்லாமல் போய் விடுமே. இது சரிதானா?

- எஸ்.கலைச்செல்வி, திருச்சி-2

அப்படி இல்லை. கடவுளைப் பிரார்த்தித்துத் தாங்கள் ஒரு செயலைச் செய்யத் தொடங்கும் போது, தங்களின் சக்தியுடன் அந்த இறையின் சக்தியும் இணைந்து தங்களை வழிநடத்துவதை உணர்வீர்கள்.

சுயமுயற்சி தேவையில்லை என்று நம் மதம் கூறவில்லையே. நாம் விதை விதைத்தாலும் மழை பெய்தால்தானே அந்த விதை செடியாகவோ, மரமாகவோ வளரும். அதேபோன்று கடவுளின் அருள் இருந்தால்தான் ஒரு காரியம் கைகூடும். தாங்கள் தங்கள் பணியில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டால், அந்த முயற்சியின் பயன் தங்கள் கர்மவினைகளின்படியே அமைகிறது.

இந்த உண்மையை உற்று நோக்கினால்தான் உணர முடியும். கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் தங்கள் தன்னம்பிக்கை அதிகமாவதை உணர்வார்கள். ‘அச்சமில்லை, அச்சமில்லை’ என்று மகாகவி பாரதியார் பாடியது, கடவுளின் மீது கொண்டிருந்த தீவிர பக்தியினால்தான்.

கடவுளின் சக்தியானது நம்முடைய முயற்சிகளுக்கு மேலும் பலம் சேர்க்கிறது. நமக்கு உரியதை கடவுள்தான் தீர்மானிக்கிறார் என்ற எண்ணத்துடன் நாம் நம்முடைய கடமைகளை மட்டும் ஆற்றி வந்தால், வீணான பயம் நம்மை விட்டு விலகிவிடும். பயம் விலகிவிட்டால், நம்மால் சாதிக்க முடியாதது என்று எதுவும் இல்லை. ‘முயற்சி திருவினையாக்கும்’ என்பதில் முயற்சி என்பது தங்களின் சுயமுயற்சி; ‘திரு’ என்பது கடவுளின் அருள். இரண்டும் சேரும்போது வினையாகும் - காரியம் வெற்றியாகும். இதுவே நம் முன்னோர் காட்டிய வழி.

? நம் மதத்தில்தான் முற்பிறவி - மறுபிறவி போன்ற நம்பிக்கைகள் உள்ளன. இதற்குத் தத்துவபூர்வமான விளக்கம் தர முடியுமா?

- செந்தில்வேலன், ராணிப்பேட்டை

உலகிலுள்ள அனைத்து மதங்களுக்கும் முதல் மதம் அதாவது தாய் மதம் நம்முடைய இந்து மதம் என்று சொல்லக்கூடிய ஸநாதன மதம். இவற்றுக்குச் சான்றுகளும் இருக்கவே செய்கின்றன.

பல பிறவிகள் இருக்கின்றன என்பதே உண்மை. ஒரே பிறவி என்றால், நல்லவர்கள் துன்பப்படுவதும், தீமை செய்பவர்கள் நன்மை அடைவதும் ஏன் என்பதை விளக்க முடியாது. பிறந்த குழந்தையோ அல்லது பசுவின் கன்றோ அல்லது எந்தப் பிறவியாக இருந்தாலும் அவை தனக்குரிய உணவை எப்படி உட்கொள்கின்றன... பூர்வஜன்ம வாசனையே அதற்குக் காரணம்.

இனி தத்துவம் குறித்து அறிவோம்.

தாங்கள் பல ஆண்டுகளாக நல்லதையே நினைத்தும் செய்தும் வாழ்ந்து பழகியவர். திடீரென்று தங்களுக்குள் தவறான ஆசைகள் ஏற்பட்டால், அதற்கு என்ன காரணம் என்று சொல்வீர்கள்? இதை, நம்முடைய மதம் `நியதி தத்துவம்' என்று கூறுகிறது. இவை இப்படி இருக்க வேண்டும்; இன்ன காலங்களில் இப்படி மாற வேண்டும் என்று அமைப்பு இருக்கும். அதன்படியே சூழ்நிலைகள் நமக்கு அமையும். முற்பிறவிகளின் கர்மப்படியே நம்முடைய பிறவிகள் அமையும்.

மற்ற மதங்கள் நம்முடைய மதத்தில் இருப்பவற்றில் சிலவற்றை மட்டும் கடைப்பிடிக்கின்றன. சிலர், கடவுளை மட்டுமே வழிபட வேண்டும் என்று கூறுவர். சிலர் அன்பே கடவுள் என்பார்கள். வேறுசிலர் இயற்கையே கடவுள் என்றும் கூறுவர். சிலர் முன்னோர்களுக்குச் செய்யும் கர்மாக்களே போதும் என்று போதிப்பார்கள். இன்னும் சிலரோ, கடமைகளைச் சரியாகச் செய்து வந்தாலே போதும் என்று நினைப்பர். சிலர் இசையே கடவுள் என்பார்கள்.

இப்படியான உலகிலுள்ள அனைத்து மதங்களின் கோட்பாடுகளையும் தாங்கள் உற்றுநோக்கினால், அவற்றின் உயரிய கருத்துகள் அனைத்தையும் உள்ளடக்கியது நம் மதம் என்பதை அறியலாம். இந்து மதத்தின் சிறப்பம்சமே, அது பல பிறவிகளை ஒப்புக்கொண்டிருப்பதுதான். பௌத்தர்களும், ஜைனர்களும்கூட மறுபிறவியை ஒப்புக்கொண்டுள்ளனர். ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு, ஏன் என்று தொடர்ந்து கேள்விகள் கேட்டு, எந்தக் கேள்விக்குப் பதில் கிடைக்கவில்லையோ அந்த இடமே முற்பிறவிகளின் பலன்.

கேள்வி - பதில்: தெய்வ மூர்த்தங்களுக்கு அலங்காரம் செய்வது ஏன்?

? இறைவனுக்குத் தேர்த் திருவிழா எதற்காக? பக்தியை வெளிப்படுத்த எளிய வழிகள் இருக்கும்போது, நிறைய செலவுகளுடன்கூடிய தேர்த் திருவிழா நடத்துவது அவசியம்தானா?

-ஆர்.கண்ணன், சென்னை - 90

ஆலயங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் கிரியைகள் நம் ஒருவருக்கானவை மட்டுமல்ல. நம் வீட்டுக்கு மட்டும் சமைக்கவேண்டும் என்றால், எத்தனை நபர்கள் இருக்கிறார்களோ அதற்குத் தகுந்தபடி சமைத்தாலே போதுமானது. ஆனால், தாங்கள் வசிக்கும் தெருவில் இருக்கும் அனைவருக்கும் சமைக்க வேண்டும் என்றால், வீட்டில் வாங்கி வைத்திருக்கும் மளிகைப் பொருள்கள் போதாது அல்லவா?

அதேபோல்தான் ஆலயங்களில் இறைவனுக்குச் செய்யப்படும் வழிபாடுகள், இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் உரிய பிரார்த்தனைகளாக அமைகின்றன. ஆலய உற்சவங்களும் விழாக்களும் மக்களுக்கு மகிழ்ச்சியைத் தருவதுடன், அவர்களிடையே ஒற்றுமையை யும் ஒருமைப்பாட்டையும் வளர்க்கின்றன.

மேலும், தேர்த் திருவிழா போன்ற உற்சவங்கள், பலவிதமான சக்திகளை ஏற்படுத் தும் ஆற்றல் கொண்டவை. `தேர் என்பது நடமாடும் கோயில் ஆகும்' என்று சிறப்பித்துக் கூறுவர். ஆசார்யரால் சிறப்பு பூஜைகள் செய்யப் பட்டு, அனைத்து தெய்வங்களின் சக்திகளும் ஆவாஹணம் செய்யப்பட்ட திருத்தேரானது ஊரை வலம் வரும்போது, கோயிலுக்குச் சென்று வழிபட முடியாதவர்களும், தேரில் பவனி வரும் இறைவனை தரிசித்து மகிழ்வுறுவார்கள்.

மட்டுமன்றி பறவைகள், விலங்குகள், மரங்கள், செடிகொடிகள் என்று அனைத்துக்கும் நன்மை அளித்து, பஞ்சபூதங்களின் சக்தியை அமைதியுறச் செய்து, இயற்கைச் சீற்றங்கள் ஏற்படாமல் தடுக்கும் மிகச் சிறந்த வைபவமாகத் திகழ்வது தேரோட்டம்.

நாமும் நம் தேசத்திலும், உலகத்திலும் உள்ள அனைத்து ஜீவராசிகளும் இன்புற்று வாழ, ஊர் கூடி தேர் இழுப்போம். நம்மை இயக்குபவனும் இழுப்பவனும் இறைவன்தானே!

- பதில்கள் தொடரும்...

வாசகர்களே... ஆன்மிகம் தொடர்பான அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் தருகிறார்,

சென்னை `காளிகாம்பாள் கோயில்' சிவஶ்ரீசண்முக சிவாசார்யர்.

கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி: கேள்வி-பதில், சக்தி விகடன் 757, அண்ணாசாலை, சென்னை-600 002