Published:Updated:

கேள்வி - பதில்: பிரசாதத் தேங்காயைச் சமையலுக்குப் பயன்படுத்தலாமா?

பிரசாதத் தேங்காய்
பிரீமியம் ஸ்டோரி
பிரசாதத் தேங்காய்

பிரசாதமாக அளிக்கப்பட்ட தேங்காயைச் சமையலுக்குப் பயன்படுத்தலாம்.

கேள்வி - பதில்: பிரசாதத் தேங்காயைச் சமையலுக்குப் பயன்படுத்தலாமா?

பிரசாதமாக அளிக்கப்பட்ட தேங்காயைச் சமையலுக்குப் பயன்படுத்தலாம்.

Published:Updated:
பிரசாதத் தேங்காய்
பிரீமியம் ஸ்டோரி
பிரசாதத் தேங்காய்

? எங்கள் கோயிலில் அம்மனின் விக்கிரகம் சற்று பின்னம் அடைந்து விட்டது. ஆகவே, உரிய முறையில் புதிய விக்கிரகம் அமைக்கலாம் எனத் திட்டமிட்டோம். ஆனால், காலம் காலமாக வழிபட்ட அம்பிகை விக்கிரகத்தைக் கைவிட கோயில் பெரியவர்களுக்கு மனம் ஒப்பவில்லை. நீங்கள்தான் வழிகாட்ட வேண்டும்.

-எம்.சி.மாரிமுத்து, கருங்குளம்

தங்களின் கடிதத்தில், குறிப்பிட்ட விக்கிரகம் எந்தப் பொருளினால் செய்யப்பட்டது என்று குறிப்பிடவில்லை. சிவாகமங்கள், தெய்வங்களை வழிபட்டு அனைவரும் நன்மை அடைய வேண்டும் என்று சிவ பெருமானால் அருளப்பட்டவை. அவற்றில் மிகச் சிறப்பாக `ஜீர்ணோத்தார விதி’ என்ற படலத்தில், பூஜிக்கப்பட்டு வரும் தெய்வத் திருமேனியில் ஏதேனும் பின்னம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து சிறப்பாக விளக்கப்பட்டுள்ளது.

எனினும், முதலில் தாங்கள் கூறிய அம்மனின் விக்கிரகம் கல்லினால் ஆனதா, பஞ்சலோகத்தில் செய்யப்பட்டதா அல்லது மண்ணாலான சிலையா என்பதை அறிந்தால்தான், என்ன செய்ய வேண்டும் என்று கூற இயலும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அங்கம், உபாங்கம், ப்ரத்யங்கம் என்று சிற்பங்களை வகுத்திருக்கின்றன ஆகமங்கள். ஆக, சிலையில் எந்த பாகம் பாதிப்பு அடைந்துள்ளதோ, அதற்கேற்ப சாஸ்திரத்தின் முடிவு இருக்கும்.

நம் உடலில் சாதாரண காயம் ஏற்பட்டால், மருந்துகளால் குணப்படுத்திவிடலாம். சில நேரம் சில உறுப்புகளில் சேதம் அதிகமாக இருந்தால், அதன் காரணமாக மற்ற அங்கங்களும் பாதிப்பு அடைந்துவிடாமல் இருக்க, குறிப்பிட்ட உறுப்பை மருத்துவர்கள் அகற்றிவிடுவது உண்டு. அப்படியே... தெய்வத் திருமேனிகளில் ஏதேனும் விரிசல் போன்றவை ஏற்பட்டால் பூஜைகளை ஆகர்ஷிக்கும் தன்மையில் குறைவு ஏற்படும் என்பதால், அந்தப் பகுதியைச் சரிசெய்து சாந்தி ஹோமங்கள் செய்து மீண்டும் பூஜை செய்யலாம்.

பின்னமானது அங்கத்தில் ஏற்பட்டு அதன் அளவும் அதிகமாக இருந்தால், திருமேனியில் இருக்கும் தெய்வசக்தியை (கலைகளை) முதலில் இறக்கிவிட்டு, பிறகு சாந்தி யாகங்கள் செய்து புதிய விக்கிரகத்தில் தெய்வசக்தியைச் சேர்ப்பது முறை.

ஆக, தங்கள் ஆலயத்தில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பைப் பார்த்தபிறகே, என்ன செய்யலாம் என்று கூற முடியும். இயன்றால் திருமேனியின் புகைப்படத்தை அனுப்பிவையுங்கள்; நல்ல தீர்வு காண்போம். நல்லதே நடக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பிரசாதத் தேங்காய்
பிரசாதத் தேங்காய்

? பிரசாதமாக அளிக்கப்பட்ட தேங்காயை வீட்டில் சமையலுக்குப் பயன்படுத்தலாமா? அதேபோல், நண்பர்கள் நமக்குக் கொண்டுவரும் பழங்களை சுவாமி வழிபாட்டில் நைவேத்தியமாகப் பயன்படுத்தலாமா?

-கோ.கெளரி, விருதுநகர்

பிரசாதமாக அளிக்கப்பட்ட தேங்காயைச் சமையலுக்குப் பயன்படுத்தலாம். சைவ உணவாக இருப்பது முக்கியம். நண்பர்கள் நமக்கு அளித்த பழங்களை, அவர்கள் கொடுக்கும் தருணத்திலேயே `சுவாமிக்கு அர்ப்பணித்துவிட்டு நாம் எடுத்துக் கொள்ளலாம்’ என்ற எண்ணத்துடன் வாங்கிக்கொண்டால், நைவேத்தியம் செய்யலாம். பூஜையின்போது வேறு நைவேத்தியம் எதுவும் இல்லை. அப்போது, `இந்தப் பழங்கள் நமக்குக் கொடுக்கப்பட்டவைதானே... ஆகவே படைக்கலாம்’ என்று நினைத்து அர்ப்பணிக்கக் கூடாது. எண்ணம் மிக முக்கியம்.

? சிவாலயத்துக்குப் பசுவும் கன்றும் காணிக்கை யாகக் கொடுக்கலாம் என்று முடிவெடுத்திருந்தோம். ஆனால், குறிப்பிட்ட கோயிலில் அவற்றைப் பராமரிக் கும் வசதியும் சூழலும் இல்லை. ஆகவே, வீட்டில் வைத்தே பராமரிப்பது என்றும் பசும்பாலை மட்டும் அனுதினமும் கோயிலுக்கு வழங்கலாம் என்று முடிவெடுத்துள்ளோம். இது சரிதானா?

- கே.ராகவன், கடலூர்

எந்தவொரு காரியத்தையும் அதைச் செய்யமுடியாத சூழல் ஏற்பட்டால், அதற்கு மாற்றான ஒரு வழியை ஆராய்ந்து கடைப்பிடிப்பது சரியே. ஆலயத்தில் தற்போது பசுவைப் பராமரிக்கமுடியாத சூழல் என்கிறீர்கள். எனவே, தாங்கள் தங்களின் வீட்டிலேயே பசுவைப் பராமரிக்கலாம். அதேபோல் அந்தப் பசுவின் மூலம் வரும் அனைத்தையும் ஆலயத்துக்கு அளித்து வாருங்கள். எதிர்காலத்தில் கோயிலின் சூழல் ஏதுவாக அமையும்போது, அந்தப் பசுவைக் கோயிலில் ஒப்படைத்துவிடுங்கள். அதுவரையிலும் அந்தப் பசுவைப் பராமரித்து சேவை செய்யலாம்.

பசு
பசு

? நான் அனுமன் உபாசகன். என்னால் முடியாத சூழ்நிலையில் அவருக்கான வழிபாடுகளை என் மனைவி செய்யலாமா?

- பிரசன்ன வெங்கடேசன், திருத்துறைப்பூண்டி

அஞ்சனையின் மைந்தன் ஆஞ்சநேயரை அனைவரும் வழிபடலாம். அன்பு, அடக்கம், எதிர்பாராமல் சேவை செய்வது, குருவின் மீது ஆழ்ந்த பக்தி, எவ்வளவு கடினமான காரியமாக இருப்பினும் செய்து முடித்தல், தளராத மனம், இனிதாகப் பேசுதல் ஆகிய உயர்ந்த குணங்களின் இருப்பிடம் அனுமன். அவரை வழிபட்டால், அவரின் குணங்கள் நமக்குக் கிடைக்கும்.

பெண்கள் ஒரு வீட்டின் தலைவியாகத் திகழ்பவர்கள். அவர்கள் தைரியமாகவும் சாமர்த்தியம் உடையவர்களாகவும் இருந்தால் அவர்களின் குழந்தைகளும் பலன் அடைவார்கள். எனவே, ஆஞ்சநேயரைத் தங்களின் மனைவி வழிபடலாம்.

? நெடுங்காலமாக எங்களின் குலதெய்வம் எதுவென்று தெரியாமல் தவித்து வருகிறோம். இஷ்ட தெய்வத்தையே குலதெய்வமாக ஏற்றுக் கொள்ளுங்கள் என்கிறார் ஆன்மிகப் பெரியவர் ஒருவர். ப்ரச்னம் மூலம் தெரிந்துகொள்ளலாம் என்கிறார் நண்பர். இதுகுறித்து நீங்கள்தான் வழிகாட்ட வேண்டும்.

- வா.பெருமாள்சாமி, வள்ளியூர்

பொதுவாகவே தங்களின் குலதெய்வமானது தங்களின் சொந்த ஊரில் உள்ள காவல் தெய்வமாகவே இருக்கும். இஷ்ட தெய்வம் என்பது தனிப்பட்ட ஒருவரின் மனத்துக்குப் பிடித்த தெய்வமாகும். குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு தெய்வம், இஷ்ட தெய்வமாகத் திகழும். ஆகவே, ஒருவரின் இஷ்ட தெய்வத்தை எல்லோருக்குமான குல தெய்வமாக ஏற்பதில் நெருடல்கள் எழலாம்.

தங்களின் முன்னோர்கள் வாழ்ந்த இடத்தில் பெரியவர்களிடம் விசாரித்து குலதெய்வத்தை அறிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார். ப்ரச்னம் போன்றவற்றின் மூலமும் குலதெய்வத்தைப் பற்றி அறியலாம். இதுதான் நம் குலதெய்வம் என்று உரிய தெய்வத்தின் திருப்பெயர் தெரியும்வரையிலும், `குலதெய்வமே காப்பாற்று... நல்வழி காட்டு... உன்னுடைய ரூபத்தை எங்களுக்கு வெளிப்படுத்து’ என்று மனமுருகி வேண்டிக்கொள்ளுங்கள். பரிபூரண நம்பிக்கையுடன் நாம் ஒரு செயலைச் செய்தால், அது வெற்றி பெற கடவுளின் அருள் கிடைக்கும். அவர் நம்முடன் இருப்பார்; கவலை வேண்டாம்.

- பதில்கள் தொடரும்...

வாசகர்களே... ஆன்மிகம் தொடர்பான அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் தருகிறார்,

சென்னை `காளிகாம்பாள் கோயில்' சிவஶ்ரீசண்முக சிவாசார்யர்.

கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி: கேள்வி-பதில், சக்தி விகடன் 757, அண்ணாசாலை, சென்னை-600 002

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism