
படம்: மஹி தங்கம்
? ஆலயத்துக்குச் செல்லாமல் இசையின் மூலம் மட்டுமே இறைவனின் அருளை நாம் பெற முடியுமா? நாம சங்கீர்த்தனத்துக்கு உள்ள தனிச்சிறப்பு என்ன?
- ஆர்.பத்மநாபன், சென்னை
! `ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என்பது நம் ஔவையார் காட்டிய நல்வழி. ஆலயங்களில் செய்யப்படும் வழிபாடுகள் உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் சென்று அடையும். தனி மனிதராக நாம் இசையின் மூலமாக அந்த இறை அனுபவத்தைப் பெற இயலும் என்று கருதினால் தாங்கள் அதன் மூலமே இறைவனை வழிபடலாம். அது தங்களின் மனத்தைப் பொறுத்ததே.
நாம சங்கீர்த்தனம் என்பது இறைவனின் பெயரை உச்சரித்தல். பரிபூரண சரணாகதியுடன் இறைவனின் பெயரை கூறிக்கொண்டே இருப்பவர்களுக்கு இறை அனுபூதி ஏற்படுகிறது. எளிய வழியில் நம்மை நல்வழிப்படுத்தும் அருமருந்து அது. வேதங்களில் கூறியுள்ள உண்மையை அனுபவித்து உணர, இறைவனால் அருளப்பட்ட ஆகமங்களின் வழியில் பூஜைகள் நடைபெற்று வருவது மிகவும் முக்கியமானது.
மேற்கூறிய முறைகள் தனி மனிதனுக்கோ, ஒரு குழுவுக்கோ வழிகாட்டுவதாக இயலும். ஆனால், ஆலயங்களில் செய்யப்படும் பூஜைகள் மனிதர்களுக்கு மட்டுமல்லாது மிருகங்கள், பறவைகள், மரங்கள் என்று அனைவருக்கும் சக்தியைத் தரக்கூடிய ஆற்றல் உடையது. எனவே, ஆலயத்தை ஒப்பிட்டு எந்தச் செயலையும் சொல்ல முடியாது என்பது முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கையை வைத்து நாம் உணரலாம்.
அவரவர் சக்தியின்படி கடவுளை வழிபட நமது சமயம் சுதந்திரம் அளித்திருக்கிறது. அதே வேளையில் உலக நன்மையின் பொருட்டு வழிபாடுகள் நடைபெறும் ஆலயங்களின் பூஜைகளை முக்கியமாகக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி வந்துள்ளதையும் நாம் மனத்தில் கொள்ளல் வேண்டும்.
? பக்தர்கள் எவ்வளவு அதிக எண்ணிக்கை யில் ஆலயத்துக்குச் சென்று வழிபடுகிறார் களோ, அந்த அளவுக்கு அந்த ஆலயத்தில் இறை சாந்நித்யம் அதிகரிக்கும் என்று கூறு கிறார்களே... அது உண்மைதானா?
எவரும் செல்லவில்லை எனில், ஆலயத்தில் அருளும் தெய்வத்தின் சாந்நித்யம் குறைந்து விடுமா?
- கே.புவனேஸ்வரி, சென்னை - 50
எவ்வளவு பக்தர்கள் வருகிறார்களோ அவ்வளவுக்கு ஆலயத்தில் தெய்வ சாந்நித்யம் அதிகரிக்கும் என்பது ஓரளவுக்குத்தான் சரி. ஓர் ஆலயத்தின் சக்தி என்பதை மூன்று விதமாகச் சொல்கிறார்கள்.
ஆகமங்களில் சொல்லக்கூடிய காரணங்கள் என்னவென்றால்... அந்த ஆலயத்தின் அமைப்பு, ஸ்வாமி விக்கிரகத்தின் அமைப்பு, கோபுரத்தின் அளவுகள் போன்றவை முதல் வகை. அடுத்து ஆசார்யர்களுடைய தபோ பலம். அர்ச்சகர்தான் விக்கிரகத்துக்கு பிராணன் கொடுக்கிறார். `சில்பி: மாதா குரு பிதா' என்பார்கள். ஒரு விக்கிரகத்துக்கு சில்பி தாய் என்றால், உயிர் கொடுக்கும் அர்ச்சகர் பிதாவின் ஸ்தானத்தைப் பெறுகிறார்.

மூன்றாவது முக்கிய காரணம் ஆலயத்தில் நடைபெறும் உற்சவங்கள். உற்சவங்கள் மூலம் ஆலயங்களுக்கு மிகப் பெரிய அளவில் ஆற்றல் கிடைக்கிறது. ஆக, ஆலயங்களின் அமைப்பு, அர்ச்சகரின் தபோபலம், உற்சவங்கள் ஆகிய மூன்றும்தான் ஆலயத்தில் தெய்வ சாந்நித்யம் நிலைபெற்றிருப்பதற்குப் பிரதான காரணங்கள்.
கோயிலுக்கு வரும்போது பக்தர்கள் ஜபிக் கும் சிவநாமம், விஷ்ணுநாமம் போன்றவற்றால் ஏற்படக்கூடிய தெய்விக அதிர்வலைகள், ஆலயத்துக்குச் சற்று கூடுதல் ஆற்றலைத் தருகின்றன. மற்றபடி, பக்தர்களின் வருகையே ஆலயத்துக்கு தெய்வ சாந்நித்யத்தை ஏற்படுத்து கிறது என்பது சரியல்ல.
? தொற்றுநோய்க் கிருமிகளால் நமக்குப் பாதிப்பு எதுவும் ஏற்படாமல் இருப்பதற்கு, பிரத்யேக ஸ்தோத்திரம் ஏதேனும் உள்ளதா?
- எம்.குமரேசன், காஞ்சிபுரம்
தொற்றுநோய்க் கிருமிகளால் நமக்கு பாதிப்பு எதுவும் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால் அதற்கென்று விதிமுறைகள் உள்ளன. உரிய விதிப்படி போர்க்கால அடிப்படையில் சிவாலயங்கள், வைஷ்ணவ ஆலயங்கள் என்று எல்லா கோயில்களிலும் சிறப்பான பூஜைகள் நடைபெற வேண்டும். சைவ ஆகமங்களில் வியாதிநாசின விதி என்று இருக்கிறது.
மேலும் `அத்புத சாந்தி விதி' என்று ஒரு விதி இருக்கிறது. இயற்கைக்கு மாறாக பெரிய அளவில் ஏதேனும் ஒன்று நடக்கிறது என்றால், அதற்குப் பிராயச்சித்தமாக அமைதி வேண்டி சிவனாரிடம் உரிய முறையில் பிரார்த்தனை செய்யும்போது இயற்கைச் சூழ்நிலை மாறும்.
மக்களைப் பொறுத்தவரை தொற்றுநோய்க் கிருமிகளால் பாதிப்பு எதுவும் ஏற்படாமல் இருக்க, திருநீலகண்ட பதிகம், கோளறு பதிகம் போன்றவறைப் பாராயணம் செய்யலாம். `துர்கா சப்த ஸ்லோகி' என்ற விசேஷமான ஸ்தோத்திரம் இருக்கிறது. ஏழு ஸ்லோகங்கள் கொண்ட இந்த ஸ்தோத்திரத்தையும் பாராயணம் செய்யலாம்.
எப்போதுமே வீட்டை நன்றாகத் தூய்மைப் படுத்தி, சாம்பிராணி புகை போடலாம். இதுபோன்ற சூழ்நிலைகளில் மூன்று வேளை தலை முதல் பாதம் வரை ஸ்நானம் செய்யலாம். இப்படிச் செய்வதற்குத்தான் ஸ்நானம் என்று பெயர். உணவிலும் சைவ உணவை ஏற்பதே நல்லது. மனத்தில் பாசிட்டீவ் சிந்தனைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். இப்படியெல்லாம் செய்து வந்தால், மனரீதி யாகவும் உடல் ரீதியாகவும் நோய்க்கிருமிகளில் இருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ளக்கூடிய ஆற்றல் நமக்குக் கிடைக்கும்.
- பதில்கள் தொடரும்...
வாசகர்களே... ஆன்மிகம் தொடர்பான அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் தருகிறார்,
சென்னை `காளிகாம்பாள் கோயில்' சிவஶ்ரீசண்முக சிவாசார்யர்.
கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி: கேள்வி-பதில், சக்தி விகடன் 757, அண்ணாசாலை, சென்னை-600 002