மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேள்வி - பதில்: வைகறைப் பொழுதின் மகிமைகள் என்ன?

வைகறைப் பொழுது
பிரீமியம் ஸ்டோரி
News
வைகறைப் பொழுது

ஓர் உயிர் பிறந்து இறக்கும் வரை செய்ய வேண்டிய காரியங்களைக் காலத்தின் அடிப்படையில் பட்டியலிட்டு அளித்திருக்கிறது.

?ஶ்ரீதட்சிணாமூர்த்தி சின் முத்திரையுடன் காட்சி தருகிறார். அந்த முத்திரை உணர்த்தும் தத்துவம் என்ன?

- எம்.ஹாலாஸ்ய சுந்தரம், திருச்சி

சித் எனில் ஞானம். சின் முத்திரையுடன் காட்சியளிக்கும் ஶ்ரீதட்சிணாமூர்த்தி, நமக்கு ஞானத்தை அளிப்பவர். குருவுக்கெல்லாம் குரு. `மௌன வ்யாக்யா' என்பதற்கேற்ப, தன்னுடைய மௌனத்தின் வாயிலாகவே சனகாதி முனிவர்களுக்கு உயர்ந்த தத்துவத்தை விளக்கியவர்.

`வருத்தா: சிஷ்யா: குருர் யுவ' என்றபடி அவர் இளமையாக இருப்பினும் சிஷ்யர்கள் வயதானவர்களாக இருப்பினும் அவர்களின் அனைத்து சந்தேகங்களையும் போக்கி ஆத்மா ஸாக்ஷாத்காரத்தை அடைய அருளியவர்.

ஆணவம், கர்மம், மாயை என்ற மும்மலங்களை விட்டுவிடின் ஜீவாத்மா, பரமாத்மாவை அடைய முடியும் என்னும் அறிவை நமக்கு சின்முத்திரையின் வாயிலாக உணர்த்துகிறார்.

? இறைவனை வழிபட பொதுவாக ஒரு திதி அல்லது ஒரு நட்சத்திரத்தையே குறிப்பிட்டுச் சொல்வார்கள். ஆனால், முருகப்பெருமானுக்கு மட்டும் சஷ்டி, கிருத்திகை, விசாகம் என்று மூன்று தினங்களைச் சிறப்பாகச் சொல்வது ஏன்?

- எஸ். சங்கர் சுப்பு, பெங்களூரு

முருகு எனில் அழகு. எல்லாம்வல்ல பரம்பொருளான பரமசிவனாரின் ஐந்து முகங்களையும் பராசக்தியின் ஒரு முகத்தையும் தன்னிடையே கொண்டு ஆறுமுகக் கடவுளாக அருள்கிறார். இதன் மூலம் பஞ்ச பூதங்களான சரீரம் மற்றும் அதை இயக்கக்கூடிய உயிர் என்ற தத்துவ நிலையில், நாம் மட்டுமல்லாது உலகம் முழுமையும் இயங்குவதற்குக் காரண மாக திகழ்கிறார்.

அவருடைய ஆறு முகத்தின் அருளை பெறுதலின் பொருட்டு சஷ்டி திதி சிறப்பாகக் கருதப்படுகிறது. சஷ்டி எனில் ஆறு என்று பொருள். ஆறு கோணங்கள் உடைய முருகனின் யந்திரம் மிகுந்த ஆற்றல் வாய்ந்தது.

முருகன்
முருகன்

அவர் தேவர்களைக் காக்கவும் அசுரர் களை அழிக்கவும் வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தில் உதித்தார். அதனால் விசாக நட்சத்திரம் அன்று வேலவனை வழிபடுவது மிகவும் சிறப்பு.

முருகப்பெருமான் சிவபெருமானின் தேஜோ ரூபமான சக்தியினின்று அம்பிகையின் மூலம் வெளிப்பட்டு, கங்கையினால் பாதுகாக்கப் பட்டு, கார்த்திகைப் பெண்கள் ஆறு பேரால் பராமரிக்கப்பட்டு வளர்ந்தார். கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப் பெற்றதால் ‘க்ருத்திகா சூனவே நம:’ என்று சிறப்பாக போற்றப்படுகிறார். எனவே, மாதந்தோறும் வரும் கார்த்திகை நட்சத்திரத்தில் வடிவேலனை வழிபடுவது சிறப்பு.

சிவாகமங்களில் குறிப்பாக ‘குமார தந்த்ரம்’ என்னும் உபாகமத்தில் முருகப்பெருமானின் வழிபாடுகள் சிறப்பான முறையில் குறிப்பிடப் பட்டுள்ளன. திருவிழாக்களில் தீர்த்த நாளாக சஷ்டி, விசாகம், கிருத்திகை, பௌர்ணமி, மாத நட்சத்திரம் ஆகியவற்றை முக்கியமாகக் கொண்டு நிச்சயிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து மேற்கண்ட திதி மற்றும் நட்சத்திரங்களின் உயர்வினை நாம் அறியலாம்.

? இறைவனின் திருநாமத்தைத் திரும்பத் திரும்ப கூறுவதால் நம் மனம் அமைதி அடைந்துவிடுமா?

- எம்.வெங்கடேசன், சென்னை - 15

நாமம் எனில் பெயர். `இவ்வளவு ரூபாய் மதிப்புள்ளது' என்று அரசால் கொடுக்கப் பட்ட நாணயத்தைக் கொண்டு, அதன் மதிப்புக்குச் சமமான பொருளை எப்படி வாங்கமுடியுமோ, அதுபோல இறைவனின் திருநாமத்தைத் திரும்பத் திரும்ப கூறுவதால், இறையின் ஆற்றல் நம்மில் நிறையும். அதன் மூலம் வெளி உலகின் தொல்லைகளினால் பாதிக்கப்படாமல் மனம் அமைதி அடையும்.

இறைவன்
இறைவன்

நம் புராணங்களையும் பல மகான்களின் சரித்திரங்களையும் உற்றுநோக்கினால், ஒரு விஷயம் நன்கு புலப்படும். புராணப் புருஷர்களும் மகான்களும் முன்வினைப் பயனால் தங்களின் வாழ்வில் எவ்வளவோ கஷ்டங்களை அனுபவித்தாலும், அவர்கள் இடைவிடாது இறைவனைத் தொழுதிருக் கிறார்கள். அதன் பயனால் இந்த சம்சாரக் கடலைத் தாண்டி உன்னத நிலையை அடைந்தனர் என்பதை உணரலாம்.

யோகம் என்பது மனத்தை அலைய விடாது ஒரு நிலைப்படுத்தும் ஆற்றலே. அதில் பல வழிமுறைகளைக் கூறியிருக்கிறார்கள். அவற்றுள் ‘ஈச்வர பீரணீதானாத் வா’ என்று இறைவனிடம் பக்தி கொள்வதால், அவர் நமக்கு அளவற்ற ஆற்றலை அளித்து, நிறைவில் ஆனந்த நிலையான மோட்சம் அடைய அருள்வார் என்ற வழிகாட்டுதல் உண்டு. எனவே, இடைவிடாது இறைவனின் பெயரை தூய எண்ணத்துடன் ஒருவர் ஜபிப்ப தால் மனம் ஒருநிலையில் குவிந்து ஆனந்தம் அடைவதை நாம் உணரலாம்.

? விடியற்காலை 4 மணி முதல் 6 மணி வரை உள்ள காலத்தை `பிரம்ம முகூர்த்த' காலம் என்று சிறப்பித்துச் சொல்வது ஏன்?

- எஸ்.கிருஷ்ணமூர்த்தி, கும்பகோணம்

நமது சனாதன தர்மம், ஓர் உயிர் பிறந்து இறக்கும் வரை செய்ய வேண்டிய காரியங்களைக் காலத்தின் அடிப்படையில் பட்டியலிட்டு அளித்திருக்கிறது. அதேபோல், ஒரு நாளில் நாம் எந்த நேரத்தில் எந்த காரியங் களைச் செய்ய வேண்டும் என்பதையும் தெளிவாகக் கூறியிருக்கிறது.

வைகறைப் பொழுது
வைகறைப் பொழுது

பல நூற்றாண்டுகளாக படையெடுப்பு களின் காரணமாகவும், சுதந்திரத்துக்குப் பின்னரும் சமய தத்துவத்தை நமக்குப் போதிக்கக்கூடிய அமைப்புகள் சரிவர இயங்க வாய்ப்புகள் இல்லாததாலும், நம்மிடையே பலரும் பெரியவர்களை விலகி தனிக் குடும்பங்களாகப் பிரிந்தமையாலும், நம்மால் முழுமையான முறையில் நமது சமயத்தில் கூறியவற்றைக் கடைப்பிடிக்க முடியவில்லை.

எனினும், தற்காலத்தில் நிறைய மக்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்பட்டிருப்பதாலும், விஞ்ஞான வளர்ச்சியினாலும் நல்ல விஷயங் களைத் தெரிந்துகொள்ள வாய்ப்புகள் அமைந் துள்ளன.

ஒவ்வொரு மனிதனும் காலை சூரிய உதயத்துக்கு முன் விடியற்காலையில் சுமார் 4:30 மணி அளவில் எழுந்து, இறைவனை நினைத்து அன்று செய்ய வேண்டிய காரியங் கள் எவை என்று சிந்தித்து, பிறகு நீராடி இறைவனை வழிபட வேண்டும். இந்தப் பிரம்ம முகூர்த்தத்தில் எவரொருவர் தன் நாளை தொடங்குகிறாரோ, அவருக்கு அனைத்து நன்மைகளும் கிடைக்கும். இந்த நேரத்தில் மனத்தில் ஒருவித ஸ்திரத்தன்மை ஏற்பட்டு நமது எண்ணங்கள் உயர்வான நிலையில் இருக்கும்.

நம் முன்னோர்கள் உடல் ஆரோக் கியத்துடனும் மனத்தில் சஞ்சலம் இல்லாமலும் வாழ்ந்தனர் என்றால், அதற்குக் காரணம் அவர்கள் இந்த வைகறைப் பொழுதைச் சரியானப்படி பயன்படுத்திக்கொண்டதே ஆகும். நாமும் வைகைறையைப் போற்றுவோம்.

- பதில்கள் தொடரும்...

வாசகர்களே... ஆன்மிகம் தொடர்பான அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் தருகிறார்,

சென்னை `காளிகாம்பாள் கோயில்' சிவஶ்ரீசண்முக சிவாசார்யர்.

கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி: கேள்வி-பதில், சக்தி விகடன் 757, அண்ணாசாலை, சென்னை-600 002