மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேள்வி - பதில்: கோயிலில் சுவாமி பெயருக்கு அர்ச்சனை செய்யலாமா?

கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
News
கேள்வி - பதில்

சித்தர்கள் ஆத்ம ஞானத்தை அடைந்து `துரியாதீதம்’ என்று சொல்லக்கூடிய நிலையிலேயே எப்போதும் நிலைத்திருப்பர்.

? எல்லா தெய்வங்களுக்கும் கோயில் கட்டி வழிபடுகிறோம். ஆனால், அரச மரத்தடியிலும் ஆற்றங் கரையிலும் இருக்கும் பிள்ளையாரை அப்படியே வழிபடுகிறோமே... ஏன் அப்படி?

- ராமசுந்தரம், திருநெல்வேலி-1

கடவுள் அனைத்து இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறார் என்பதே நம் சமயம் நமக்குப் போதிக்கும் உண்மை. `நட்ட கல்லும் பாடுமோ’ என்ற சிவவாக்கியரின் வாக்கு, `கல்லிலும் கடவுள் ஏன் இருக்கமாட்டார்?’ என்ற கேள்வியை நமக்குள் எழுப்பும். சித்தர்கள் ஆத்ம ஞானத்தை அடைந்து `துரியாதீதம்’ என்று சொல்லக்கூடிய நிலையிலேயே எப்போதும் நிலைத்திருப்பர். அதனால், அவர்கள் தம் நிலைக்கு ஏற்ப அந்த வாக்கைக் கூறியிருக்க வேண்டும்.

வேதங்கள், ஆகமங்களில் எவ்வளவோ உருவங்களின் வர்ணனைகள், பிரதிஷ்டை செய்யும் முறைகள், வழிபடும் பத்ததிகள் கூறப்பட்டுள்ளன. அவற்றில், இதுபோன்று மக்கள் கூடும் இடங்களில் தெய்வ மூர்த்தத்தை எளிமையான முறையில் ஸ்தாபித்து, அனைவரும் பூஜை செய்து பயன்பெறும் வகையிலான வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன. அந்தப் பகுதியின் தூய்மை, பாதுகாப்பு, தெய்விக சக்தி என்று அனைத்துமே கடவுளின் அருளால் கிடைக்கப்பெறும்.

பெரிய வங்கி அமைத்து இருந்தாலும், சிறியளவில் எளிதான முறையில் பணம் எடுக்கும் வகையில் ஏ.டி.எம் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன அல்லவா.

அதுபோன்று, பெரிய கோயில்களில் விமர்சையான பூஜை களை ஏற்றுக் கொண்டிருக்கும் பிள்ளையார்க் கடவுள், அரச மரத்தடியிலும் ஆற்றங்கரையிலும் மிக எளிமை யாய் அமர்ந்து தமது தெய்வக் கடாக்ஷத்தைத் தன் குழந்தைகள் போன்று விளங்கும் பக்தர்களுக்குத் தந்து அருள்பாலிக்கிறார்.

கேள்வி - பதில்: கோயிலில் சுவாமி பெயருக்கு அர்ச்சனை செய்யலாமா?

? கோயில்களில் அர்ச்சனை செய்யும்போது நமது பெயர், நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்வது சிறந்ததா, இறைவனின் நாமத்தைச் சொல்லி அர்ச்சனைச் செய்வது சிறந்ததா?

-எஸ்.சீனிவாசன், சென்னை-11

இரண்டுமே சிறந்ததுதான். இரண்டும் ஒரே பலனைத் தரும். வேரில் நீர் விடும்போது, அது அந்த மரத்தில் இருக்கும் அனைத்துப் பகுதிகளுக்கும் சரியான அளவில் சென்றடையும். அந்த மரத்தில் நமக்கு வேண்டிய பழம் இருக்கும். நாம் வேரிடம் `இன்ன பழத்துக்காக நான் நீர் விடுகிறேன்’ என்று சொல்லிக்கொண்டு நீரூற்றினாலும், நாம் விடும் நீரானது பழத்துக்கு மட்டுமன்றி, அந்த மரத்தின் அனைத்துப் பாகங்களையும் சென்றடையும்.

அதுபோன்றுதான் நமது பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்தாலும், கடவுளின் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்தாலும் நாம் அடையக்கூடிய பலன் ஒன்றே.

சிலருக்குக் கடவுளின் எதிரில் அவர் குடும்பத்தாரின் பெயர், நக்ஷத்திரங்களைக் கூறும்போது, தைரியமும் நம்பிக்கையும் ஏற்படும். சில சிறப்புப் பூஜைகள் குறிப்பிட்ட காரணத்துக்காகச் செய்யப்படும். அப்போது நம் பெயரைச் சொல்லித்தான் செய்யவேண்டும். அந்த மந்திரமானது பெயருடன் தொடர்பு ஏற்படுத்தி, நம் ஆற்றலை அதிகரிக்கச் செய்யும். மற்றபடி, பொதுவாக வழிபாடுகள் செய்யும் போது இரண்டு முறைகளும் நன்மை அளிப்பவையே.

? நம் மதத்தில் மற்ற மதங்கள் போன்று கட்டுப்பாடுகள் இல்லாமல் இருப்பது பலமா, பலவீனமா?

- எஸ்.குமரேசன், சென்னை-44

`தர்மசாஸ்திரம்' எனும் மிகப்பெரிய கடல் போன்ற அறிவுரைகள் நமது மதத்தில் உள்ளன. ஆனாலும் அவற்றில் ஒரு துளியைக்கூட தெரிந்துகொள்ள விருப்பம் இல்லாது, சிலர் அவதூறு கூறும்போது, அவர்களுக்கு உரிய விளக்கத்தை - பதிலை அளிக்கவும் இயலாமல் இருப்பது நமது பலவீனம்.

ஆயிரம் ஆண்டுகளாக வேற்றுநாட்டுக் கலாசார ஆக்கிரமிப்புகள் முதலான பல காரணங்களாலும் சூழலாலும், நம் மதத்தில் உள்ள கட்டுப்பாடுகள் என்னென்ன என்பதைக்கூட நம்மால் அறிந்து வைத்துக்கொள்ள முடிய வில்லை!

காலையில் எழுவது முதல் இரவு உறங்குவது வரை என்னென்ன செய்யவேண்டும், எப்படிச் செய்யவேண்டும் என்று நம் ரிஷிகள் நமக்கு வழிகாட்டியுள்ளனர். நமது அலட்சியத்தால் அவற்றைக் கேட்காமல் விட்டுவிட்டு, இப்போது நம்மிடம் ஒன்றும் இல்லையே என்று கூறுவது சரியாகாது. ஆலயத்துக்குள் எப்படி நுழைய

வேண்டும், கடவுளை எப்படி வழிபட வேண் டும்... இப்படி எண்ணிலடங்கா கட்டளை களை வேதாகமங்கள் அறிவுறுத்தியுள்ளன.

நாம் பல நேரங்களில் நம் பெரியோர் கூறியவற்றைக் கேளாமல், `அனைத்துக்கும் காரணம் தெரிந்தால் மட்டுமே செய்வோம்’ என்று அலட்சியப்படுத்திவிட்டோம். அதன் விளைவை இன்றையச் சூழலில் கஷ்டங்களை அனுபவிக்கும் நிலையில் உணர்கிறோம்.

நம் மதத்திலும் கட்டுப்பாடுகள் உண்டு. அவற்றை - நமக்கு விதிக்கப்பட்ட கர்மாக்களை அறிந்து, மிகுந்த நம்பிக்கையுடன் செய்தால்தான் நம்மால் முழுமையான பலனை அடைய முடியும்.

? நம் பண்டிகைகள் சிலவற்றை ஒருபிரிவினர் ஒருநாளிலும் வேறு சிலர் மற்றொரு நாளிலும் கொண்டாடுகின்றனரே, இது எப்படி சரியாகும்?

- ஆர்.ராமகிருஷ்ணன், மதுரை

தாங்கள் மதுரையில் ஒரு பகுதியில் வசிக்கிறீர்கள். இன்னொருவர் மதுரையில் வேறொரு பகுதியில் வசிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். எனினும் அவர் தன் வசிப்பிடத்தைக் குறிப்பிடும்போது, மதுரை என்று பொதுவாகவே குறிப்பிடுவார். இதில் தவறேதும் இல்லையே.

ஆனால் சென்னையில் வசிக்கும் நான், என் வசிப்பிடத்தை மதுரை என்று கூறிக்கொள்ள முடியாது. அதேபோன்று திதியோ, நக்ஷத்திரமோ... அவற்றின் முதல் பாகத்தையோ அல்லது மறுநாள் வரும் பகுதியையோ... தங்களின் முன்னோர் கடைப்பிடித்தபடி வழிபாடுகளைச் செய்வது எப்படி தவறாகும்?

சிலர் நக்ஷத்திரத்தை அடிப்படையாகக் கொள்வர். வேறுசிலர் திதியை வைத்துக் கொண்டாடுவார்கள். சிலர் மாதங்களின் அடிப்படையில் கொண்டாடுவார்கள். இது தவறாகாது.

பேருந்தில் எந்த இடத்தில் அமர்ந்து கொண்டும் செல்ல வேண்டிய இடத்துக்குச் செல்லலாம். ஆனால், வேறு இடத்துக்குச் செல்லவேண்டிய பேருந்தில் ஏறிக்கொண்டு, முதல் இருக்கையில் நாம் அமர்ந்து கொண் டாலும், நாம் செல்ல வேண்டிய இடத்துக்குச் செல்ல முடியாது! எனவே, நம் ரிஷிகளின் வார்த்தைகளின்படியும் குல வழக்கப்படியும் சொல்லப்பட்டிருப்பவற்றைக் கடைப்பிடிப்பது சரியானதே.

? திருவாதிரை ஈசனுக்கு உகந்த நாளாக இருப்பதன் தாத்பர்யம் என்ன?

-கே.வினோத், கும்பகோணம்

ஆகமங்கள் அனைத்து மாதங்க ளிலும் திருவாதிரை நக்ஷத்திர நாளை உத்ஸவத்தின் தீர்த்த தினமாக வைத்துக்கொள்ளலாம் என்று கட்டளை இட்டிருக்கின்றன.

`ஆர்த்ரக்ஷம் ஸர்வ மாஸகே’.

`ருக்ஷம்’ எனில் நக்ஷத்திரம். ஒவ்வொரு மாதத்துக்கும் அதற்குரிய மாஸ நக்ஷத்திரம் என்று இருந்தாலும், திருவாதிரை நக்ஷத்திரமாக இருந்தால் அதை முக்கியமாகக் கொள்ளலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. இதன்மூலம், அதன் முக்கியத்துவத்தை அறியலாம்.

எல்லாம்வல்ல சிவப்பரம்பொருள் திருமேனி யாகக் காட்சி கொடுத்து, ஆனந்த நடனம் அருளிக்கொண்டிருக்கும் சிதம்பரம் க்ஷேத்திரத்தில், திருவாதிரை அன்று மேலும் சிறப்போடு அவர் அருள்புரிந்து வருகிறார். இந்தத் தகவல்களிலிருந்து திருவாதிரையின் மகத்துவத்தை நாம் அறியலாம்.

- பதில்கள் தொடரும்...