திருத்தலங்கள்
ஜோதிடம்
திருக்கதைகள்
Published:Updated:

கேள்வி - பதில்: தீப ஒளி வழிபாடு எதற்கு?

தீப ஒளி
பிரீமியம் ஸ்டோரி
News
தீப ஒளி

ஐப்பசி மற்றும் கார்த்திகை மாதங்களில் அக்னியை வழிபடுவது மிகவும் முக்கியமானது.

? உறவினர் ஒருவரது வீட்டில், பெரியவர் ஒருவர் பூஜையறையில் நெற்பொரியைக் கொண்டு ஸ்வாமிக்கு அர்ச்சனை செய்து கொண்டிருந்தார். நெற்பொரியால் அர்ச்சனை செய்யலாமா?

-கே.காளமேகம், சேலம்-2

வீட்டில் சில சந்தர்ப்பங்களில் பூக்கள் கிடைக்காவிடில் அட்சதையினால் அர்ச்சிக்கலாம். சிலர் நெற்பொரியைப் பயன்படுத்துவர். ‘லாஜ புஷ்பம்’ என்று அவற்றைக் குறிப்பிடுவார்கள். நெருப்பிலிருந்து கிடைப்பதால் மிகுந்த தூய்மை வாய்ந்தது நெற்பொரி.

அதேபோல் மங்கல அட்சதையினாலும் அர்ச்சிக்கலாம். நல்ல அரிசியில் சிறிது நெய் விட்டுப் பிசைந்து, பிறகு சிறிது மஞ்சள் பொடி கலந்து அட்சதையைத் தயாரித்து வீட்டுப் பூஜை அறையில் வைத்துக் கொண்டால் குறையே வராது. சாஸ்திரம் இவற்றைச் செய் என்றும், இவற்றைச் செய்யக் கூடாது என்றும் கட்டளை இடும். அவற்றை நாம் நம்பிக்கையுடன் கடைப்பிடிப்பதால் நமக்கு உயர்ந்த பலன்களை கிடைக்கும். நம் வீடுகளிலேயே மலர்களை வளர்த்து கடவுளுக்கு அளிப்பது மிகச் சிறந்தது. முடியாதபோது கடைகளில் வாங்கி வந்து சமர்ப்பிக்கலாம். வெளியூர்களில் இருக்கும்போதோ, வேறு சந்தர்ப்ப சூழல்களினாலோ பூக்கள் கிடைக்காத நிலையில், அட்சதை, நெற்பொரி போன்றவற்றைப் பக்தியுடன் கடவுளுக்கு அர்ப்பணிப்பதால் நிறைவான பலன்களைப் பெறலாம். பக்தியே முக்கியம்.

கேள்வி - பதில்: தீப ஒளி வழிபாடு எதற்கு?

? தீபாவளி தினத்தில் இல்லங்கள் தீபங்களால் ஒளிபெற வேண்டும் என்று ஞானநூல்கள் வழிகாட்டுவதன் தாத்பர்யம் என்ன? அன்று தீபங்களை ஏற்ற எவ்விதமான எண்ணெய் வகைகளைப் பயன் படுத்தலாம்?

-பா.சங்கரி, கருங்குளம்

ஐப்பசி மற்றும் கார்த்திகை மாதங்களில் அக்னியை வழிபடுவது மிகவும் முக்கியமானது. ஐப்பசி மாத அமாவாசைக்குப் பிறகு வரக் கூடிய முப்பது நாள்களைக் `கார்த்திக’ மாதம் என்று சாந்திரமான முறையில் கூறுவர். இந்த மாதம் முழுவதுமே தீபங்களை ஏற்றி வழிபடு வதையே தீபாவளி என்று கூறுவர்.

ஐப்பசி மாதம் சதுர்த்தசியன்று தீபாவளிப் பண்டிகையை தீபங்கள் ஏற்றிக்கொண்டாடுகிறோம். அன்று மட்டுமல்லாமல் அந்த மாதம் முழுவதும் அதாவது அடுத்த அமாவாசை வரை வீட்டில் தீபங்களை ஏற்றி வழிபட வேண்டும். இதுவே நம் மரபு.

தீபம் ஏற்றுவது, புற இருளை நீக்கி வெளிச்சம் ஏற்படுத்தவேண்டும் என்பதற்காக மட்டுமல்ல. நாம் ஏற்றும் தீபம் நமது அக இருளையும் அழிக்கவல்லது. சாஸ்திரங்களில் கூறப்பட்ட திரவியங்கள் தீப ஒளியுடன் கலந்து, ஒருவித அதிர்வுகளை ஏற்படுத்தி, நம் மனத்தையும் அங்கு இருக்கக் கூடிய சுற்றுப்புறச் சூழலையும் நல்ல நிலையில் அமைக்கக் கூடிய ஆற்றல்கொண்டவை.

நல்லெண்ணெய் அல்லது தூய பசுவிலிருந்து தருவிக்கப்பட்ட நெய் ஆகிய இரண்டுமே கோயில்களிலும் வீட்டுப் பூஜை அறைகளிலும் தீபம் ஏற்றுவதற்கு உகந்தவையாகக் கூறப்பட்டுள்ளன. எள் நம் பாபங்களை அகற்றும். நல்ல நெய், நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வழிவகுக்கும்.

மொத்தத்தில், இறைவன் ஜோதி ஸ்வரூபமே என்று நாம் உணர்ந்து கொள்வதற்கும் உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் நன்மை கிடைத்திடவும் உகந்த வழிபாடு தீப வழிபாடு. நாமும் தீபாவளித் திருநாளில், நம் வீடுகளில் தீபங்களை ஏற்றி வழிபட்டு, ஒளிமயமான வாழ்க்கைக்குப் பிரார்த்திப்போம்.

கேள்வி - பதில்: தீப ஒளி வழிபாடு எதற்கு?

? வீட்டில் சிறியளவில் விநாயகர் விக்கிரகம் வைத்து வழிபட்டு வருகிறேன். அவருக்கான நைவேத்தியம், அபிஷேக ஆராதனைகளை இப்படித்தான் செய்யவேண்டும் என்று விதிமுறைகள் - நியதிகள் உள்ளனவா, வழிகாட்டுங்களேன்.

- ஆர்.பெரியசாமி, பரமன்குறிச்சி

வீட்டில் கடவுளின் உருவங்களைச் சிறிய அளவில் செய்து, உரிய பூஜை முறைகளுடன் வழிபடுவதே சிறந்தது. வீட்டில் பூஜை செய்யும் விக்கிரகங்களைப் பிரதிஷ்டை செய்யாமல், எடுத்து வைக்கும்படி இருக்க வேண்டியது அவசியம்.

வீட்டில் வழிபடப்படும் விக்கிரகம் சிறிய அளவில் கல் விக்கிரக மாக இருந்தால், தினமும் சிறிய அளவில் பால் போன்றவற்றினால் அபிஷேகம் செய்து, சுத்த அன்னம் நைவேத்தியம் செய்யலாம். தினசரி செய்ய இயலவில்லை என்றால், மூன்று அல்லது நான்கு நாள்களுக்கு ஒருமுறை கண்டிப்பாக அபிஷேகம் நைவேத்தியம் செய்யவேண்டும். உலோக விக்கிரகமாக இருந்தால் பௌர்ணமி அல்லது மாதம் இருமுறை அபிஷேகம் செய்து நைவேத்தியம் செய்யலாம்.

கேள்வி - பதில்: தீப ஒளி வழிபாடு எதற்கு?

? சுமங்கலிப் பெண்கள் திருமாங்கல்யத்தையும் தினமும் வணங்க வேண்டும் என்கிறார் எங்கள் பெரியம்மா. இதுகுறித்து சாஸ்திரங்களில் கூறப் பட்டுள்ளதா. எப்படி வணங்க வேண்டும்?

-எஸ்.எம்.சுமதி, காரைக்கால்

நமது ஸநாதன தர்மத்தில், திருமணத்தின்போது ஆணும் பெண்ணும் சரிபாதி நிலையை அடைகிறார்கள். மற்ற மூன்று தர்மங்களான பிரம்மசர்யம், வானப்ரஸ்தம், சந்நியாஸம் ஆகியவற்றைப் போற்றிப் பாதுகாக்கக்கூடிய மிகப்பெரிய தர்மம் இல்லறம்.

அனைத்து நன்மைகளையும் அடையக்கூடிய இல்லற வாழ்கைக்கு அனுமதி அளிப்பது திருமணம். இந்த வைபவத்தில், மணமகன் மணமகளிடம் ‘பெண்ணே! நீ அனைத்துவிதமான நன்மைகளையும் உடையவள். உன் கழுத்தில் கட்டக்கூடிய இந்தத் திருமாங்கல்யம், நான் நூறாண்டுகளைக் காண்பதற்குக் காரணமாக இருப்பது’ என்று கூறி திருமாங்கல்யம் கட்டுவர்.

இல்லறத்தில் நுழையும் பெண்ணானவள், ஆண்கள் செய்யும் அனைத்து நற்காரியங் களுக்கும் உறுதுணையாக இருப்பவள் என்றும், தவறுகள் செய்யும்போது தகுந்தவாறு உரைத்துத் திருத்துவதைக் கடமையாகக் கொண்டவள் என்றும் விளக்குகின்றன நம் ஞானநூல்கள்.

ஆகவே, சுமங்கலிப்பெண்கள் அனுதினமும் திருமாங்கல்யத்தை நோக்கி, ‘அம்மா பராசக்தியே, உனது சக்தியாலேயே இந்தக் குடும்ப வாழ்க்கையை என்னால் சிறப்புடன் செயல்படுத்த முடிகிறது. எனக்கும் எங்கள் குடும்பத்துக்கும் அனைத்து வசதிகளும் கிடைக்க வேண்டும் என்பதற்காக அயராது உழைக்கும் என் கணவருக்கு ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் அமையவேண்டும்; எங்கள் குடும்பம் மகிழ்ச்சியுடன் இருக்கவேண்டும்’ என்று வணங்கி, அதில் குங்குமத்தை வைத்து பிரார்த்திப்பது சிறப்பு.

கேள்வி - பதில்: தீப ஒளி வழிபாடு எதற்கு?

? நண்பர்கள் மற்றும் உறவுகளில் சிலரைப் பார்க்கிறேன். அவர்கள் எதிர்பாராத விதமாக இடர்கள், சங்கடங்கள் வந்துவிட்டால் போதும் தெய்வ நிந்தனை செய்கிறார்கள். `என்ன கும்பிட்டு என்ன பலன்’ என்று குறைப்பட்டுக் கொள்கிறார்கள். அவர்களுக்கு இது தவறு என்று புரியவைக்க வழி கூறுங்களேன்.

- எஸ்.கணேஷ்குமார், சென்னை-5

இன்பமோ அல்லது துன்பமோ மனத்தில் சஞ்சலம் இல்லாமல், ஒரே நிலையில் இருப்பதே சிறந்த பக்தனுக்கு உரிய இலக்கணம். கடவுளிடம் நாம் செலுத்த வேண்டியது அன்பு. அன்பானது எந்த ஒரு பலனையும் எதிர்பார்க்காது. எதிர்பார்ப்பு வியாபாரத்தில்தான் இருக்கும்.

சில நேரங்களில் நமக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படும். உடனே மூச்சை நிறுத்திவிட்டால் நல்லது என்று முடிவெடுப்போமா! இல்லையே. சரியான முறையில் நாம் மூச்சுவிட்டால்தான் நாம் உயிர் வாழ முடியும்.

அதேபோன்று நமக்குத் துன்பம் ஏற்படும்போதும் மேலும் சிறப்பான முறையில் சிரத்தையுடன் கடவுளை வழிபடுவதே சிறந்த பக்தி. இதை, குறிப்பிட்ட அந்த நண்பர்களுக்கும் உறவுகளுக்கும் அன்போடு எடுத்துச் சொல்லுங்கள்.

எத்தனையோ மகான்களும் அடியார்களும் எவ்வளவு துன்பத்தை அனுபவித்தாலும் தங்களின் அசைக்கமுடியாத தூய பக்தியால்தான் கடவுளை அடைந்தார்கள். இதை நினைவில்கொண்டு, துன்பங்கள் வரும் போது மேலும் கடவுள் வழிபாட்டினைத் தொடர வேண்டும்.

- பதில்கள் தொடரும்...

வாசகர்களே... ஆன்மிகம் தொடர்பான அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் தருகிறார்,

சென்னை `காளிகாம்பாள் கோயில்' சிவஸ்ரீசண்முக சிவாசார்யர்.

கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி: கேள்வி-பதில், சக்தி விகடன் 757, அண்ணாசாலை, சென்னை-600 002