திருத்தலங்கள்
திருக்கதைகள்
தொடர்கள்
Published:Updated:

கேள்வி - பதில்: ஆஞ்சநேயர் படத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா?

ஆஞ்சநேயர்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆஞ்சநேயர்

வாயுவின் மைந்தனான அனுமனை வழிபட்டால், மனத்துக்குத் தைரியமும் தன்னம்பிக்கையும் கிடைக்கும்.

? விரதங்களில் சிறந்தது ஏகாதசி விரதம்; அன்று முழு உபவாசம் இருப்பதன் மூலம் ஆரோக்கியம் மேம்படும் என்று சொல்லப்படுகிறது. இதற்கு அறிவியல்பூர்வமான காரணம் ஏதேனும் உண

- எம்.சிவராமகிருஷ்ணன், சென்னை - 94

நம்முடைய சாஸ்திரங்களில் கூறப்பட்டிருக்கும் அனைத்துமேஅறிவியல்பூர்வமானவைதான். ஏகாதசி விரதம் மிகப் பெரிய பலனைத் தரக்கூடியது. ரிஷிகள் எவ்வித விருப்புவெறுப்புமின்றி, நாம் நன்மையை அடையவேண்டும் என்ற நோக்குடன் விரதங்களைக் கடைப்பிடிக்கக் கட்டளையிட்டுள்ளார்கள்.

அப்படி அவர்கள் எடுத்துசொன்ன விஷயங்களை, நம் முன்னோர் எவ்வித பலன்களையும் பற்றிச் சிந்திக்காமல் பரிபூரண நம்பிக்கையுடன் கடைப்பிடித்து பயன் அடைந்தனர். நாமும் முதலில் இந்த பூஜை களையும் விரதங்களையும் முறைப்படி அனுசரித்து வழிபடுவோம். பலனைக் கடவுளின் அருளால் அனுபவத்தில் அறிந்துகொள்ளலாம். அனுபூதியே சிறந்த ஆசான்.

? நான் தினமும் ஸந்தியாவந்தனம் செய்கிறேன். தற்போது, பணியின் நிமித்தமாக தொடர்ந்து இரண்டு மூன்று நாள்கள்கூட ரயிலில் பயணம் மேற்கொள்ளவேண்டி உள்ளது. ஸந்தியாவந்தனம் தடைபடுகிறது. இதனால் தோஷம் ஏதேனும் ஏற்படுமா?

- கிருஷ்ணமூர்த்தி, பெங்களூரு

தங்களின் ஆர்வம் அறிந்து மிக்க மகிழ்ச்சி. ஸந்தியாவந்தனம் என்பது உபநயனம் ஆனது முதல் இறுதி மூச்சு உள்ளவரை செய்ய வேண்டிய நித்திய கர்மா. மூச்சுக் காற்று இல்லாமல் நாம் வாழ முடியாது. அதேபோல் தான் ஸந்தியாவந்தனமும்.

உபநயனம் ஆனபிறகு அவசியம் ஸந்தியாவந்தனம் செய்யவேண்டும். செய்யாமல் விடுவது தவறு. அந்தணர் ஒருவர் செய்யக்கூடிய நித்ய கர்மாக்கள், அவருக்கு மட்டுமல்லாமல் உலகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் நன்மை செய்யக்கூடியன என்பதால், எந்தக் காரணத்தைக் கொண்டும் கர்மாக்களை விட்டுவிடக்கூடாது.

பிறப்பு மற்றும் இறப்பின் காரணமாகத் தீட்டு ஏற்பட்டிருக்கும் போதுகூட, குறைந்த அளவில் இந்தக் கிரியையைச் செய்யவேண்டும் என்று தர்மசாஸ்திரங்கள் விதித்திருக்கின்றன. எனவே, தாங்கள் குறைந்தபட்சம் அர்க்யபிரதானம் மற்றும் காயத்ரி ஜபம் செய்து கடமையை நிறைவேற்றிவிடுங்கள்.

எப்படி வேரில் ஊற்றப்படும் நீரானது மரத்தின் அனைத்துப் பகுதிகளையும் சென்று அடைகிறதோ, அதேபோல் தாங்கள் அளிக்கும் அர்க்கியமானது, தீய சக்திகளைப் பலம் குன்றச் செய்து நல்ல சக்திகளுக்குப் பலம் தரும்.

மற்றவர்கள் கேலி செய்வார்களே என்றோ அல்லது நமக்கு இயலாது என்றோ ஸந்தியாவந்தனம் செய்வதை விட்டுவிடவேண்டாம். `இந்த அனுஷ்டானத்தை விடாமல் செய்வோம்’ என்று நாம் உபநயனத்தின் போது உறுதி எடுத்திருப்போம்.

பிரயாணம் செய்யும்போது பஞ்சபாத்திரம், உத்தரணி, சிறிய தட்டு ஆகியவற்றைக் கொண்டு செல்லவும். முழுமையாகச் செய்யும் சூழ்நிலை இருப்பின் முழுமையாகவே செய்துவிடலாம். சூழல் அப்படி இல்லையெனில், குறைந்தபட்சம் அர்க்கியம் விடுவது, காயத்ரி ஜபிப்பது ஆகியவற்றையாவது செய்யவேண்டும். அதன் மூலம் உலகம் நன்மையை அடையட்டும். தோஷம் என்று பயப்பட வேண்டாம். கடமை என்று அறிந்து விருப்பத்துடன் செய்து, உலக உயிர்களுக்குத் தொண்டாற்றுங்கள்.

கேள்வி - பதில்: ஆஞ்சநேயர் படத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா?

? ஆஞ்சநேயர் படத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா. அப்படி வழிபடும்பட்சத்தில், உரிய நியமங்கள் சிறிது பிசகினாலும் தீய விளைவுகள் ஏற்படும் என்கிறார்களே சிலர்... இது சரியா?

- வி.நித்யஸ்ரீ, சென்னை-90

ஆஞ்சநேயரின் படத்தைத் தாராளமாக வீட்டில் வைத்து பூஜிக்கலாம். வாயுவின் மைந்தனான அனுமனை வழிபட்டால், மனத்துக்குத் தைரியமும் தன்னம்பிக்கையும் கிடைக்கும். அவரைப் போன்றே பணிவு, இரக்கம், பிறருக்கு உதவும் குணம், சாமர்த்தியம், படிப்பு, பேச்சாற்றல், குருபக்தி ஆகிய அனைத்து நன்மைகளும் தங்களுக்குக் கிடைக்கும்; அவரின் ஆசி பரிபூரணமாக உங்களுக்குக் கிடைக்கும். அறியாத நிலையில் நியமங்களை விட்டுவிடுவதால் தவறில்லை. எந்தத் தெய்வத்துக்கு எப்படி பூஜை செய்யவேண்டும் என்ற அடிப்படை தெரிந்தாலே போதுமானது. அதேநேரம், ஆலயங்களிலும் உபாசனை செய்பவர்களும் சிறப்பாகச் செய்யவேண்டும்.

தங்களைப் பொறுத்தவரை, தங்களுக்குத் தெரிந்த அளவில் பக்தியுடன் பூஜை செய்தால் போதுமானது. நன்மைகளை மட்டும் தருபவர்தான் கடவுள். எனவே அச்சம் தேவையில்லை.

கேள்வி - பதில்: ஆஞ்சநேயர் படத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா?

? நமஸ்காரம் என்பதன் தத்துவம் என்ன? நமஸ்காரம் செய்வதில் ஏதேனும் விதிமுறைகள் உள்ளனவா?

-எம்.குமரேசன், செங்கல்பட்டு

நமஸ்காரம் செய்வது என்பது நம் பணிவைத் தெரிவிப்பது ஆகும். ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரமாகவும், பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமாகவும் செய்வது மரபு. ஆலயங்களில் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி நமஸ்காரம் செய்யவேண்டும். பெரியோர்களை நமஸ்கரிக்கும்போது வடக்கு, கிழக்கு, மேற்கு நோக்கி நமஸ்கரிக்கலாம். எங்கும் எப்போதும் தெற்கு நோக்கி நமஸ்கரிக்கக்கூடாது. கைகளால் நமஸ்காரம் செய்யும்போது, இரண்டு கைகள் இணைவதால் மனம் ஒருமுகப்படுகிறது.

ஆலயங்களில் தெய்வங்களை வழிபடும்போது நம்முடைய கைகள் தலைக்கு மேல், அதாவது த்வாதசாந்தப் பெருவெளியில் நம் கைகள் இணைந்து இருக்கும்படி வைத்து வணங்கவேண்டும். குருவை நமஸ்காரம் செய்யும்போது தலையின் மீது ‘ஸஹஸ்ராரம்’ (ஆயிரம் இதழ் தாமரை) என்னும் இடத்தில் நம் கைகள் குவிந்து இருக்க வேண்டும்.

மற்ற அனைவரையும் வணங்கும்போது ‘அநாஹதம்’ என்று போற்றக்கூடிய இருதயப் பகுதியில் நம் கைகளைக் குவித்துவைத்து வணங்கவேண்டும்.

ஒருவருக்கொருவர் `நமஸ்காரம்’ என்று சொல்லிக்கொண்டு வணக்கங்களைத் தெரிவிக்கும்போது, பணிவு ஏற்படுவதுடன், எதிரில் இருப்பவரின் மனத்தில் நம்மைப் பற்றி இருக்கும் மாற்றுக் கருத்துகள் விலகி அன்பு பெருகும். பெரியோர்களின் ஆசீர்வாதங்கள் நமக்கு நன்மைகளை அளிக்கும். தெய்வங்களின் அருள் நம்முடைய தீவினைகளைப் போக்கவல்லது. நமஸ்காரம்!

? சந்நியாசிகளுக்கான துறவிகளுக்குக் கனகாபிஷேகம், வெள்ளிக் காசுகளால் பாதபூஜை ஆகியவற்றைச் செய்வது பொருந்துமா?

-என்.நடராஜன், சென்னை - 116

கண்டிப்பாகச் செய்யவேண்டும். பெரியோர்களுக்குச் செய்து அதன் மூலம் நாம் நன்மை அடைவதையே சாஸ்திரங்கள் வலியுறுத்தும். எவரிடமும் பாரபட்சம் இல்லாத கடவுளுக்கு நாம் சிறப்பான அபிஷேக ஆராதனைகள் செய்து பயன்பெறுவதைப் போலவே, ஓட்டையும் தங்கத்தையும் சமமாக நினைக்கும் சந்நியாசிகளுக்கும் பூஜை செய்து மகிழ்வது நம்முடைய மரபு.

அனைத்து ஆற்றல்களையும் இறைவனின் பிரதிநிதியாக விளங்கும் சந்நியாசிகள், ஆசார்யர்களின் மூலமாகவே நாம் பெற முடியும். ஆக, நமக்காக ஒரு பொதுவான வேண்டுதலைச் செலுத்தும் விதமாக, துறவிகளுக்குக் கனகாபிஷேகம் போன்றவற்றைச் செய்து மகிழ்ந்து பயன்பெறலாம்.

- பதில்கள் தொடரும்...