மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேள்வி - பதில்: எந்தெந்த தினங்களில் திருஷ்டி கழிக்கலாம்?

சூரிய நமஸ்காரம்
பிரீமியம் ஸ்டோரி
News
சூரிய நமஸ்காரம்

அதிகாலை சூரிய ஒளி, நமக்கு எண்ணற்ற ஆரோக்கியப் பலன்களை அளிப்பதாக இன்றைய மருத்துவம் வியப்புடன் பரிந்துரைக் கிறது.

? சூரிய நமஸ்காரம் , கிடைக்கும் நன்மைகள் என்ன. இந்த நியதி சூரியதேவனைப் பிரதானப் படுத்திச் செய்யப்படுவது ஏன்?

- ஆர்.கோவிந்தன், ராதாபுரம்

`நமஸ்காரம்’ என்பது அகங்காரத்தைக் குறைக்கும் செயல். நம் செயல் என்று எதுவுமில்லை. அனைத்தும் தெய்வச் செயல் என்பதன் அடையாளம்தான் நமஸ்காரம்.

நம் கண்களுக்குப் பிரத்யட்சமாகத் தெரியும் கடவுள் சூரிய பகவான். சகல உயிர்களுக்கும் அன்னம் அளிப்பவன் சூரியன் என்பதால், சூரியபகவானுக்கு நம் நன்றியைத் தெரிவிக்கும் ஒரு முறைதான் சூரிய நமஸ்காரம். பூமியின் அனைத்து சக்திகளுக்கும் ஆதாரமாக விளங்கும் சூரியபகவானை வழிபடுவதன் மூலம், அனைத்து தேவர்களையும் வழிபட்ட புண்ணியம் கிடைக்கும் என்கிறது வேதம். சூரிய நமஸ்காரம் நம் உடல், அறிவு, மனம் ஆகியவற்றுக்கு ஆற்றலை அளிக்கிறது.

அதிகாலை சூரிய ஒளி, நமக்கு எண்ணற்ற ஆரோக்கியப் பலன்களை அளிப்பதாக இன்றைய மருத்துவம் வியப்புடன் பரிந்துரைக் கிறது. சூரியனின் ஆற்றலை நாம் முழுமையாகப் பெற்று நிறைவான வாழ்க்கை வாழ சூரிய நமஸ்காரம் அவசியமாகிறது.சூரியனை வழிபட எளிய மந்திரங்களும் வழிபாட்டு முறைகளும் பெரியோர்களால் கூறப்பட்டிருக்கின்றன. அவற்றை முறையாகப் பயன்படுத்தி, சூரியனின் அனுக்கிரகத்தை சூரியனின் கிரணங்கள் மூலமாக நாம் பெறவேண்டும்.

கேள்வி - பதில்: எந்தெந்த தினங்களில் திருஷ்டி கழிக்கலாம்?

அனைத்து இயக்கங்களுக்கும் மூலாதாரமான சூரியனை வழிபடுவது என்பது வெறும் சடங்கு அல்ல. அது, நாம் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் நல்லதொரு மார்க்கம்; எந்தச் செலவுமின்றி நாம் ஆரோக்கியம் பெறுவதற்கானச் சிறப்பு வழி.

? சத்குரு ஞானானந்தகிரி ஸ்வாமிகள், ஸ்ரீஹரிதாஸ்கிரி ஸ்வாமிகள், ஸ்ரீகிருஷ்ணப்ரேமி ஸ்வாமிகள் போன்று மகான்கள் பலரும் இறை நாமசங்கீர்த்தனத்தின் அவசியம் குறித்து வழிகாட்டியுள்ளார்கள். நாம சங்கீர்த்தனம் குறித்து ஞான நூல்கள் என்ன சொல்கின்றன?

- சி.பிரேமாவதி, கோவை-2

‘ஓம் நாம பாராயண ப்ரீதாயை நம:’ நாமாக்கள் பாராயணம் செய்யப்படுவதை மகிழ்ச்சியுடன் ஏற்கிறாள் என்று லலிதா சஹஸ்ர நாமத்தில் வர்ணிக்கப்படுகிறாள் அம்பிகை..

இறையின் நாமத்தை நாம் உள்ளம் உருகிச் சொல்லும்போது, அந்த இறைசக்தியின் ஆற்றல் நம்மேல் ஊடுருவுவதை நாம் உணரலாம். அதனால்தான் நாம சங்கீர்த்தனத்தில் ஈடுபடுபவர்கள், தன் நிலை மறந்து இறை அனுபவம் பெற்று, ஆடியும் பாடியும் கொண்டாடுவதை நாம் காணலாம்.

நாமாக்களை நாம் உச்சரித்துக்கொண்டிருந்தால் நமது கர்ம வினைகள் நீங்கப்பெற்று, பேரானந்த நிலையை அடையலாம். பல பாகவத உத்தமர்கள், இன்றும் தன்னலம் கருதாமல் தொடர்ந்து இதுபோன்ற நாம ஸ்மரண பஜனைகளின் மூலம், சம்சாரக் கடலில் உழன்று அல்லல்படுபவர்களைக் காப்பாற்றி பகவானின் பக்தி ரஸத்தில் மூழ்க வைத்துக்கொண்டிருப்பது, நமது நாட்டுக்கு வலிமை அளிப்பதாகும்.

வால்மீகி முனிவர் ‘மரா’ என்று திரும்பத் திரும்பச் சொல்லி அதுவே ராமநாம ஜபமாக மாறி, ராமாயணத்தை அளித்திருப்பது வரலாறு. இங்ஙனம், கட்டுப்பாடுகள் எதுவுமில்லாமல் பக்தியுடன் இறைவனின் திருநாமங்களைக் கூறி வருவதன் மூலமாகவே நாம் உயர்ந்த நிலையை அடைய வழி கிட்டுவதால், நாமசங்கீர்த்தமானது அனைவராலும் உயர்வானதாகப் போற்றப்படுகிறது.

? நடப்புச் சூழலில் கடன் பிரச்னையால் மிகவும் அல்லல்படுகிறோம். இந்தப் பிரச்னை தீர, எளிய வழிபாடு ஏதேனும் உண்டா?

- க.ராமலட்சுமி, கோவில்பட்டி

கவலையே வேண்டாம். காலையில் 6 மணிக்குள் எழுந்து நீராடி விட்டு, பூஜையறையில் நெய் அல்லது நல்லெண்ணெய் கொண்டு தீபம் ஏற்றி, சுவாமியை வழிபடுங்கள். அதேபோல் மாலை சூரிய அஸ்தமனத்துக்கு முன்பாக அதாவது மாலை 6 மணியளவில் செய்யுங்கள்.

இப்படிச் செய்வதுடன், காலை சூரிய உதயத்தின்போதோ, மாலை சூரிய அஸ்த மனத்தின்போதோ தூங்கிக் கொண்டிருக்கக் கூடாது. தண்ணீரை வீணாக்கக்கூடாது. காரணம் தண்ணீருக்கு அதிபதியான வருணன், குபேரனைப் போலவே செல்வத்துக்கும் அதிபதி என்பதால், தண்ணீரை வீணாக்கக்கூடாது. தானியங்களையும் வீணாக்கக்கூடாது. இப்படி எளிய முறைகளைக் கடைப்பிடித்தாலே போதும், கொஞ்சம் கொஞ்சமாக கடன் தொல்லைகளிலிருந்து விடுபடலாம்.

கேள்வி - பதில்: எந்தெந்த தினங்களில் திருஷ்டி கழிக்கலாம்?

? திருஷ்டி கழித்தல் என்பது தொன்றுதொட்டு இருந்து வரும் வழக்கம். இதில் `திருஷ்டி’ என்பதற்கு என்ன பொருள். எந்தெந்த நாள்களில் திருஷ்டி கழிக்கலாம்.

- சி.பிரேமாவதி, கோவை-2

‘திருஷ்’ என்றால், பார்த்தல் என்று பொருள். நம்முடைய வசதி வாய்ப்புகளை, மற்றவர்கள் பொறாமையுடன் பார்க்கும்போது நமக்கு திருஷ்டி ஏற்படுகிறது. திருஷ்டியின் விளைவாக நமக்குப் பல வகைகளிலும் இடையூறு ஏற்படுகிறது.

எனவே, நாம் திருஷ்டியைப் போக்க சுற்றிப்போடுகிறோம். கற்பூரம், பூசணிக்காய், தேங்காய், எலுமிச்சைப்பழம் போன்றவற்றைக் கொண்டு திருஷ்டி சுற்றி, வீதியோரத்தில் உடைக்கிறோம். வீட்டிலிருப்பவர்கள் உப்பை கையில் எடுத்துக்கொண்டு திருஷ்டி சுற்றி விட்டு, அந்த உப்பை தண்ணீரில் போட்டுவிடலாம். திருஷ்டி கழிப்பதற்கு ஏற்றவை ஞாயிறு, அமாவாசை ஆகிய நாள்களாகும்.

? புண்ணிய ஸ்தலங்களுக்குச் செல்லும் வழியில் விபத்தில் சிக்குகிறார்கள் பக்தர்கள். நண்பர் ஒருவருக்கு உழவாரப் பணியின் போது காலில் அடிபட்டுவிட்டது. கடவுள் பணியில் ஈடுபட்டிருக்கும் போதும் கஷ்டங்கள் நிகழ்கின்றனவே... ஏன் இப்படி?

- என். வேணுகோபாலன், திருப்பூர்

`தீதும் நன்றும் பிறர் தர வாரா’ - நமது ஒவ்வொரு செயலும் ஒரு வினைப்பயனை உண்டுபண்ணும். அவற்றின் அடிப்படையில்தான் நமது வாழ்க்கையும் அமைகிறது. எனவே, நம் முன்னோர்கள் கூறிய முதுமொழிகளை, அவற்றுக்குரிய உட்பொருளோடு அறிந்துகொண்டால், நமக்கு ஏற்படும் இன்பமோ துன்பமோ, மற்றவர்களால் அளிக்கப்படுவதில்லை; அவை அனைத்தும் நமது கர்மவினைப் பயன்களே என்பதைத் தெளிவாக அறியலாம்.

ஒரு நல்ல காரியம் செய்யும்போது துன்பம் ஏற்படுகிறது என்றும், கோயிலுக்குச் சென்று திரும்பும்போது விபத்து ஏற்படுகிறது என்றும் தாங்கள் கூறியிருக்கிறீர்கள். ஆனால், நீங்கள் சொன்ன காரியங்களில் நீங்கள் ஈடுபடாமல் இருந்திருந்தால், விளைவுகள் இன்னும் கடுமையாக இருந்திருக்கலாம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

கடுமையாக மழை பெய்கிறது. நீங்கள் ஒரு குடையின் உதவியுடன் செல்லவேண்டிய இடத்துக்குச் செல்கிறீர்கள். கால்கள் நனைந்து விட்டதே என்று கவலைப்படாமல், தலை நனையவில்லையே என்று நினைத்து மகிழ்ச்சி அடைவதே அறிவின் முதிர்ச்சி. கால்களும் நனையாமல் இருக்கவேண்டுமானால், நமது வீட்டுக்கு அருகிலேயே கார் போன்ற வாகனத்தை வரவழைத்து, அதில் பிரயாணம் செய்தாக வேண்டும். அப்போது, ஓரளவுக்கு நாம் பத்திரமாக செல்லலாம்.

இதுபோன்றே, வாழ்நாள் முழுவதும் கடவுள் நம்பிக்கை, பூஜைகள், சாதுக்களைத் தரிசித்தல், பெரியோர்களைப் பார்த்துக்கொள்தல், முன்னோர்களைத் திருப்தி செய்தல், இயன்றவரையிலும் சாஸ்திரங்கள் சொன்னபடி வாழ்தல் போன்றவற்றை நாம் கடைப்பிடித்தோமானால், நமது கர்மவினை களின் அளவுக்கு ஏற்ப பலன்களும் அமையும்.

எனவே, நாம் நல்ல காரியம் செய்ததால்தான் ஆபத்தின் அளவு குறைந்துள்ளது என்ற உண்மையை உணர்ந்துகொண்டு, நல்ல செயல் களைத் தொடர்ந்து செய்துவர வேண்டும். தளர்ச்சி அடையாத மனமே கடவுள் குடிகொண்டிருக்கும் கோயில். விடாமுயற்சி வெற்றி தரும்.

- பதில்கள் தொடரும்...