Published:Updated:

குறிப்பிட்ட திதி-நட்சத்திரங்களுக்கு வழிபாட்டில் முக்கியத்துவம் ஏன்?

கேள்வி பதில்
பிரீமியம் ஸ்டோரி
News
கேள்வி பதில்

கேள்வி பதில்

? இறைவனை வழிபட எல்லா நாள்களும் உகந்தவையே எனும்போது, ஒவ்வொரு தெய்வத்துக்கும் ஒரு குறிப்பிட்ட நட்சத்திரம் அல்லது திதியில் செய்யப்படும் வழிபாடு முக்கியத்துவம் பெறுவது ஏன்?

- கே.காஞ்சனா, வள்ளியூர்

`முதலில் இறைவனை நாம் ஏன் வழிபடவேண்டும்’ என்பதற்கான பதிலைத் தெரிந்துகொண்டு, பிறகு உங்கள் கேள்விக்கு வருவோம்.

`வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல’ என்கிறார் திருவள்ளுவர். அதாவது, எவ்வித வேண்டுதலும் வேண்டாமையும் இல்லாத இறைவனை நாம் வழிபட்டால், நம் இன்னல்கள் போக்கப்படும் என்பது, அவரின் திருவாக்கு. ஆக, கடவுளை வழிபடுவது நம்முடைய இன்னல்களைப் போக்கிக் கொள்ளவே; நம் நன்மைக்காகவே அவரை வேண்டிக் கொள்கிறோம் என்பதை முதலில் உணர்ந்து தெளியவேண்டும்.

கேள்வி பதில்
கேள்வி பதில்

நல்ல நேரத்தில் செய்யப்படும் வேண்டுதலானது முழுமையான பலனை, கடவுளின் தொடர்பை அளிக்கும் வல்லமை பெற்றது. எனவே நம்முடைய சாஸ்திரங்கள் காலங்களை வகுத்து, அதன்படி வழிபடவேண்டும் என்று கட்டளை இட்டிருக்கின்றன. எல்லாம் வல்ல பரம்பொருள் நாம் பக்தியுடன் இருந்து மேன்மை அடைய பல வடிவங்களில் அருள்பாலித்து வருகிறார்.

`இந்தக் காலத்தில், இந்த தெய்வத்தை, குறிப்பிட்ட மந்திரத்தை உச்சரித்து, இந்தத் திரவியங்களால் வழிபடவேண்டும்’ எனும் வழிகாட்டலின்படி வழிபடும்போது, அந்த வழிபாடு நமக்குப் பெரிய ஆற்றலைத் தருகிறது. நாட்டுக்கு நாடு நேர மாறுபாடுகள் உண்டு. இங்கு பகல் என்றால் அங்கு இரவு என்று அமையும்.

எனவே காலத்துக்கு உட்பட்டு கடவுளை வழிபடுவது சிறந்த பலன்களை அளிக்கும். இதை நம் முன்னோர் அனுபவத்தில் அறிந்து அளித்துள்ளனர். அவர்களின் வழிகாட்டல்களை நாமும் அனுசரித்துப் பலனடைவோம்.

கேள்வி பதில்
கேள்வி பதில்

? புண்ணிய தலங்கள் நிறைந்த பூமி நம் தேசம். நானும் பல திருத்தலங்களுக்குச் சென்று வந்துள்ளேன். தலங்களின் தலபுராணத்தைப் பொறுத்தவரையிலும், ஒரு கோயிலின் தலவரலாறே வேறு சில கோயில்களுக்கும் சொல்லப்படுகிறதே. இது எப்படி பொருந்தும்?

- எம்.வீரபாகு, சென்னை-108

மனிதர்களான நாம் பல நேரம் `கடவுள் இவ்வளவுதான்’ என்று தீர்மானித்துவிடுகிறோம். அப்படி நினைக்கும்போது அவரைப் பற்றிய புரிதலும் அவரின் சக்தியை அனுபவிக்கும் ஆற்றலும் குறைந்துவிடுகிறது.

நாம் விஞ்ஞான வளர்ச்சி பெற்றுவிட்ட காலத்தில் இருக்கிறோம். ஒரே இடத்தில் இருந்தபடி உலகின் பல இடங்களில் - வெவ்வேறு ஊர்களில் உள்ளவர்களிடம், செயற்கை கோள் உதவியுடன் செல்போன் அல்லது வேறு ஏதேனும் கருவிகள் மூலமாக அதற்குரிய செயலியின் உதவியோடு தொடர்புகொள்ள முடிகிறது, இல்லையா?!

நம் மெய்ஞ்ஞானம் என்பது விஞ்ஞானத்தையும் தாண்டியது. `இவ்வளவுதான் எல்லை’ என்று கட்டுப்படுத்த முடியாதது. உலகம் முழுவதும் கடவுளின் படைப்பே. எவ்வித முயற்சியையும்... தான் செய்ய தேவையில்லாமல்... தான் நினைத்த மாத்திரத்திலேயே நடத்தி விடும் ஆற்றல் படைத்தவர் இறைவன் (இச்சா மாத்ரம் ப்ரபோர் ஸ்ருஷ்டி:).

எனவே, தாங்கள் கேட்டுள்ளபடி ஒரே நிகழ்வு அவ்வளவு இடங்களிலும் நடைபெற்றிருப்பது உண்மையே. நடந்த உண்மைகளையே ஸ்தல வரலாறாக நாம் படிக்கிறோம். எனினும் தற்காலத்தில், குறிப்பாகச் சிலர் மிகைப்படுத்தி எழுதுவதையும் சில இடங்களில் காண முடிகிறது.

ஆனாலும் இப்படியான நிலை சிற்சில இடங்களில் மட்டுமே. உதாரணமாக... எங்கள் ஆலயம் குறித்த தலவரலாற்றுப் புத்தகத்தில், எங்கள் ஆலயத்தைப் பற்றி பல புராணங்களில் குறிப்புகள் உள்ளன எனவும், ப்ருங்கி மஹரிஷி போன்ற பலர் வழிபட்டனர் எனவும் கூறியுள்ளனர்.

புராணங்களில் `காளி’ எனும் தெய்வத்தைப் பற்றிய குறிப்புகளை, அவர்கள் காளிகாம்பாள் என்று தவறாகப் புரிந்துகொண்டு உள்ளனர். ஆதிசங்கர பகவத்பாதர் நம் ஆலயத்தில் சக்ரமேரு (அர்த்த மேரு) பிரதிஷ்டை செய்ததாக எழுதப்பட்டுள்ளது.

ஆனால் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் எங்களின் குருநாதர் அவர்களும் என் தாத்தாவும் தெலுங்கு எழுத்தில் பீஜ மந்திரங்களைப் பதித்து ஸ்தாபித்தனர் என்று எங்களின் தந்தையார் கூறியுள்ளார். பகவத் பாதர் காஞ்சியில் சக்கரத்தை ஸ்தாபித்தது வரலாறு.

எனவே, இதுபோன்ற வேறுபட்ட எழுத்துகளைப் பார்க்கும்போது, சரியான விஷயத்தையும் சிலர் சந்தேகப்படுவது இயற்கையே. ஆகவே, நம் தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதய்யர் போன்றோர் எழுதிய தல வரலாறு புத்தகங்களைக் கொண்டு சரிபார்த்து தெளிந்துகொள்வது நலம்.

? இன்றைய இளம் தலைமுறையினர் பலரும் நம்முடைய மதம் மூட நம்பிக்கைகள் கொண்டது என்ற கருத்துடையவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் அந்த எண்ணத்தை எப்படி மாற்றுவது?

- சோ.ரேணுகா, சேலம்-2

இருட்டை வெளியேற்ற விளக்கைக் கொண்டு சென்றால் போதுமானது. பல நேரம் நாம் நேரடியாகச் சொல்லாமல் நம்முடைய செயல்களின் மூலம் தெளிவுபடுத்துவது நலம். அவர்களை அவர்களின் வழியிலேயே விட்டுவிடுங்கள். எதையும் நிர்ப்பந்தப் படுத்துவது நமது வழக்கமன்று.

அதேநேரம், அப்படியே விட்டுவிடும் நிலையில் மாற்றுத் தரப்பினர் தங்களின் வலையில் அவர்களைச் சிக்கவைக்கும் வாய்ப்புகள் உண்டு. ஆகவே தகுந்த நேரத்தில் உண்மையை உணர்த்த முற்படலாம். தாங்கள் தங்கள் நண்பரிடமோ, உறவினரிடமோ தாங்கள் அறிந்து தெளிந்த விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள். முக்கியமாக தங்கள் பிள்ளைகள் இருக்கும் நேரத்தில் பகிருங்கள். இன்னின்ன விஷயங்கள் இப்படி என்று நேரடியாக போதிப்பதை அறவே தவிர்க்கவேண்டும். அவர்களின் பிடிவாதக் குணமானது, தாங்கள் அமிர்தத்தையே அளித்தாலும் வேண்டாம் என்றே கூறும்.

ஆகவே, அனுபத்தின் மூலம் உணரவைக்கவேண்டும். அனுபவத்தில் கொண்டு வந்து அதன் பிறகு அவர்களிடம் கேள்வி எழுப்பினால் உரிய பதில் கிடைக்கும். அவர்கள் உண்மையை உணரும் வாய்ப்பும் உண்டாகும். அந்நிய ஆதிக்கம், படையெடுப்புகள், நாத்திக பிரசாரங் கள் போன்றவற்றின் பாதிப்புகளால் நம் குழந்தைகள் குழம்பிப்போய் இருக்கிறார்கள். முள்ளில் துணி விழுந்துவிட்டால் எப்படி மெள்ள கவனமாக துணியை எடுக்கிறோமோ, அப்படி அவர்களைக் கையாள்வதே சிறப்பு.

அதேபோல் இடைவிடாத நம்பிக்கை, முயற்சி, தெய்வ பக்தி, காலம், தெய்வ அனுக்ரஹம் போன்றவை நம் இளைய தலைமுறையினருக்கு `இதுதான் சிறந்தது’ என்ற தெளிவை அளித்து நல்வழிபடுத்தும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. நம் சங்கல்பமும் முயற்சியும் முக்கியமானவை.

கேள்வி பதில்
கேள்வி பதில்

? எனக்கு, தெய்வ மூர்த்தங்கள் காட்டும் அபய - வரத அஸ்தங்கள் குறித்து சந்தேகங்கள் உண்டு. சிலர், வலக்கை விரல்களை மேலே உயர்த்திக் ஆட்டும் ஹஸ்தமே அபயம் என்கிறார்கள்; வேறு சிலரோ வலக்கரத்தின் விரல்கள் திருவடிகளைக் காட்டியபடி இருக்கும் ஹஸ்தமே அபயம் என்கிறார்கள். நீங்கள்தான் விளக்கவேண்டும்.

- கே.எம்.ரங்கராஜன், திண்டுக்கல்

பயம் அற்ற நிலையை `அபயம்’ என்று அறியவும். வரங்களை தரும் நிலையை வரதம் என்று அறியவும்.

இவ்வுலக மாயையிலிருந்து நாம் விலகி மோக்ஷத்தை அடையவும், இங்கு நாம் வாழும் காலத்திலும் பயம் அற்ற தன்மையுடன் இருந்து மகிழ்ச்சியாக வாழவும் அருளும் வகையில், எல்லாம்வல்ல இறைவன் தன்னுடைய வலக்கை விரல்களை மேல்நோக்கி இருக்கும்படிச் செய்து அருள்பாலிக்கிறார்.

இறைவனை நம்பி தங்களின் வாழ்க்கையைச் சமர்ப்பித்தவர்கள் பயம் இன்றி இருப்பார்கள். அவர்கள், இந்தப் பூதவுடலை நீக்கியபின் எல்லாம்வல்ல இறைவனின் திருவடியில் எப்போதும் உறைந்திருக்கும் விதமாக அபய ஹஸ்தத்தை சேவிப்பர்.

இவ்வுலகில் நல்வாழ்க்கை வாழ நமக்குப் பலவிதமான பொருள்கள் தேவைப்படுகின்றன. நாம் வேண்டிய பொருள்கள் அனைத்தையும் நம்முடைய கர்மவினைகளுக்கு ஏற்ப அளித்து, நல்ல வாழ்க்கை அமைந்திட அருள்வது, வரத ஹஸ்தம் ஆகும். இடது கை விரல்கள் கீழ் நோக்கி அமைந்திருப்பது வரத ஹஸ்தம் என்று அறியவேண்டும்.

`பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை’ என்பதற்கேற்ப, அருளை அளிப்பது அபய ஹஸ்தம்; பொருளை அளிப்பது வரத ஹஸ்தம்.

சில விசேஷ கோலங்களில் இறைவனின் திருமேனி, வலது கை விரல்களைப் பாதங்களை நோக்கிக் காண்பிப்பதுபோல் இருக்கும். அதை, `எனது பாதக் கமலங்களைச் சரணடைந்தால் தங்களின் பயம் போக்கப்படும்’ என்று இறை குறிப்பதாக எடுத்துக்கொள்ளலாம்.

திருக்கடையூரில் காலசம்ஹார மூர்த்தி வலது கையை தன் பாதங்களை நோக்கிக் காட்டுவதைப் போன்று, வேறுசில தலங்களிலும் இறைவன் காட்சியளிக்கிறார்.

பொதுவாக... வலது விரல்கள் மேல் நோக்கி இருப்பது அபய ஹஸ்தம். இடது கை விரல்கள் கீழ்நோக்கி இருப்பது வரத ஹஸ்தம என்று அறியவும்.

- பதில்கள் தொடரும்...

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

வாசகர்களே...

ஆன்மிகம் தொடர்பான அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் தருகிறார்,

சென்னை `காளிகாம்பாள் கோயில்' சிவஸ்ரீசண்முக சிவாசார்யர்.

கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி: கேள்வி-பதில், சக்தி விகடன் 757, அண்ணாசாலை, சென்னை-600 002