Published:Updated:

வீட்டில் கலசம் வைத்து வழிபடலாமா?

கேள்வி பதில்
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி பதில்

கேள்வி - பதில்

வீட்டில் கலசம் வைத்து வழிபடலாமா?

கேள்வி - பதில்

Published:Updated:
கேள்வி பதில்
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி பதில்

? தினமும் வீட்டில் அம்பாளுக்குக் கலசம் வைத்து பூஜை செய்யலாமா? செய்யலாம் எனில், கலசத்தில் தினமும் தீர்த்தம் மாற்றவேண்டுமா? பழைய தீர்த்த நீரை எப்படி பயன்படுத்துவது?

- பத்மாவதி, கடலூர்

தெய்வங்களை இயன்ற அளவுக்கு எளிமையாக வீட்டில் வைத்து வழிபட, பல வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன. தெய்வங்களைப் படமா கவோ, சிறிய சிலை வடிவிலோ, யந்திர வடிவிலோ, தீப வடிவிலோ வழிபடலாம். இவை எளிமையானவை.

ஆலயங்களில் அர்ச்சகர்கள் பூஜை செய்வதை `பரார்த்த பூஜை’ என்று கூறுவார்கள். அங்கு சிவபெருமானுக்கும் மற்ற தெய்வங்களுக்கும் ஸ்நபன விதி அடிப்படையில் சிறப்பாகக் கலசங்கள் வைத்து பூஜைகள் செய்வதைச் சிறப்பாக விவரிக்கின்றன ஞானநூல்கள்.

வீடுகளில் விசேஷ காலங்களில் மட்டும் கலசங்கள் வைத்து பூஜை செய்யலாம். தினமும் செய்ய வேண்டியது இல்லை.

கலசம்
கலசம்


? பூஜையறையில் திருவிளக்கின் அருகில் அவசியம் பக்க விளக்குகள் வைத்து வழிபடவேண்டுமா? சிறியளவிலான பூஜா மாடங்கள் அமைந்துள்ள நிலையில், திருவிளக்கு மட்டும் ஏற்றினால் போதும் என்கிறார் என் பாட்டி. அவர் சொல்வது சரியா?

- ஆர்.சுப்பிரமணியம், சேலம்

திருவிளக்கில் எந்த தெய்வத்தை வழிபட நினைக்கிறோமோ அந்த தெய்வ சக்தியை அழைத்து வழிபடும் முறையை, நமது சமயம் நமக்கு அளித்திருக்கிறது. உதாரணத்துக்கு வெள்ளிக்கிழமை அன்று அம்பிகையை வழிபட வேண்டுமானால், அந்த ஆதிசக்தியை நினைத்து மலரையோ, அக்ஷதையையோ திருவிளக்கில் சாற்றினால், அம்பிகையின் சாந்நித்தியம் அங்கு நிறைந்திருக்கும்.

தொலைபேசியில் யாருக்குப் பேச நினைக்கிறோமோ, அவரின் எண்ணைத் தொடர்பு கொண்டதும் நம்மால் அவருடன் பேசமுடிகிறது. அப்படியே திருவிளக்கின் மூலமாக அனைத்து தெய்வங்களையும் வழிபடலாம். இதுபோன்று கடவுளை அழைத்து பூஜை செய்ய உகந்த அந்தத் திருவிளக்கிலிருந்து ஊதுவத்தி, கற்பூரம் போன்றவற்றை ஏற்ற அனுமதி இல்லை. ஆகவே, துணை விளக்கு என்று வைத்துக்கொள்ளலாம்.

இடம் இல்லை என்றால் ஒரு விளக்கு மட்டுமே போதுமானது. ஊதுவத்தி கற்பூரம் போன்றவற்றை ஏற்றுவதற்கு தீக்குச்சியை உபயோகப் படுத்தலாம். இடத்திற்கு ஏற்ப நமது வழிபாட்டை அமைத்துக் கொள்வதே சிறந்தது.

பூஜை மணி
பூஜை மணி
AbhiRP


? பூஜையின்போது ஒலிக்கவேண்டிய மணிக்கும் வழிபாடு செய்வது விசேஷம் என்கிறார் பெரியவர் ஒருவர். பூஜா மணியை எப்படி வழிபடுவது, பூஜை மணி ஒலிக்கச் செய்வதன் தாத்பர்யம் என்ன?

-
சி.ரமணி, சென்னை-34

`ஆகமார்த்தம் து தேவானாம்...’ என்று தேவர்களை வரவேற்கவும், தீயசக்திகளை வெளியேற்றவும் மணியோசை ஒலிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. பூஜா மணியை மரியாதையுடனும் பக்தியுடனும் பீடத்தில் வைத்திருக்கவேண்டும். தரையில் - பூமியில் வைக்கக்கூடாது. பூஜை காலங்களில்... குறிப்பாக ஆரம்பத்தின்போதும், தூபம், தீபம், நைவேத்யம், தீபாராதனை போன்ற காலங்களிலும் மணி அடித்து வழிபட வேண்டும்.

?எங்கள் வீட்டுக்கு வந்திருந்த அப்பா, ஊருக்கு புறப்பட்டு வெளியேறும் நிலையில், மரக்கிளை ஒன்று முறிந்து விழுந்தது. அவர் பத்திரமாக ஊருக்கு போய் சேர்ந்துவிட்டார். என்றாலும் என் மனதில் நெருடல் நீங்கவில்லை. மரக்கிளை முறிந்து விழுவது அபசகுனமா? பரிகாரம் ஏதேனும் செய்ய வேண்டுமா?

- விஅர்ஜுனன், சென்னை

மரக்கிளை முறிந்து விழுவது இயற்கையானதே. அதற்கு எந்தப் பரிகாரமும் தேவையில்லை. சகுனம் வேண்டி ஒரு காரியம் செய்யும்போது இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால் நாம் யோசிக்கலாம். தாங்கள் குறிப்பிட்டுள்ளது இயற்கை நிகழ்வு. ஆகவே பயம் வெண்டாம்.

தாங்கள், தங்களின் குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வத்தை மனதார வழிபடுங்கள்; எவ்வித பிரச்னைகளும் நேராமல் அந்தத் தெய்வங்கள் உங்கள் குடும்பத்தைக் காத்துநிற்கும்; மனச் சஞ்சலங்கள் நீங்கிவிடும்.

? எங்களின் குலதெய்வம் சிறு கிராமம் ஒன்றில் வயல்வெளியில் இருக்கிறது. நாங்கள் வழிபடச் செல்லும்போது, நைவேத்தியமாக வீட்டிலேயே சர்க்கரைப் பொங்கல் செய்து எடுத்துச் சென்று படைத்து வழிபடுகிறோம். இது சரியா? நைவேத்தியத்தைக் கோயிலுக்குச் சென்றுதான் தயார் செய்ய வேண்டுமா?

- எம்.செந்தில்வேலன், திருச்சி

தங்கள் வீட்டிலுள்ள பெரியவர்களைக் கலந்து முடிவெடுப்பது சிறப்பு. குலதெய்வ வழிபாட்டு வழக்கம் அவரவர் குடும்பத்துக்கு - குலத்துக்கு ஏற்ப மாறுபடும். அங்கு இருக்கக்கூடிய வழிமுறைகளை அனுசரிப்பதே சிறப்பானது.

கோயில்களுகுச் சென்று அங்கேயே நைவேத்தியம் செய்யக்கூடிய சூழலும் வசதியும் இருந்தால், அங்கு சென்று செய்வதே சிறப்பானது. இயலாத நிலையில்... தூய்மையான முறையில் வீட்டிலேயே நைவேத் தியம் தயார் செய்து, அதைக் கோயிலுக்குக் கொண்டுசென்று சமர்ப்பிக்கும் வழக்கம் இருப்பின், அப்படியே தொடரலாம்.

- பதில்கள் தொடரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism