Published:Updated:

பைரவருக்குப் பிடித்த நைவேத்தியம் எது?

பைரவர்
பிரீமியம் ஸ்டோரி
பைரவர்

கேள்வி பதில் - பைரவர்

பைரவருக்குப் பிடித்த நைவேத்தியம் எது?

கேள்வி பதில் - பைரவர்

Published:Updated:
பைரவர்
பிரீமியம் ஸ்டோரி
பைரவர்

? பைரவ மூர்த்தியை க்ஷேத்ரபாலகர் எனப் போற்றுவது ஏன்?

`பைரவா’ என்று கூப்பிட்டதும் ஓடிவந்து காக்கக்கூடிய கடவுள் பைரவர் ஸ்வாமி. நம் பயத்தைப் போக்கி அமைதி தரக்கூடியவர் பைரவர். உலகில் உள்ள ஜீவராசிகள் அனைத்தும் நன்மை அடைய வேண்டி, அர்ச்சகர்பெருமக்களால் ஆலயம்தோறும் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பூஜைகளால் ஏற்படும் சாந்நித்தியத்தைக் காப்பாற்றி அதன் மூலம் சகல ஜீவராசிகளையும் காப்பாற்றுவதால் இவரை க்ஷேத்ர பாலகர் என்று கூறுவர்.

பைரவருக்குப் பிடித்த நைவேத்தியம் எது?


இவ்வுலகை ஒரே இடமாக எண்ணினோம் எனில், இந்த இடத்தை - க்ஷேத்திரத்தைக் காக்கும் கடவுளாக (பாலனம் - காப்பாற்றுதல்) பைரவர் விளங்குகிறார். நாம் நம் உடலைச் சார்ந்து இருக்கும் உயிரை ஒரு க்ஷேத்திரத்தில் இருக்கும் உயிர் என்று கொண்டோமானால், அந்த க்ஷேத்திரமாகிய நம் உடலை உச்சி முதல் உள்ளங்கால் வரை காக்கும் தெய்வமாகத் திகழ்பவர் பைரவமூர்த்தி. க்ஷேத்ர பாலபுரம் என்ற பெயரில் ஓர் ஊரே உள்ளது. பைரவரால் பிரசித்திபெற்ற தலம் இது.

? பைரவ மூர்த்தத்தின் மகிமை குறித்து ஞானநூல்கள் சொல்வது என்ன?

பிரம்மனின் தலையைக் கொய்து, தன் கரங்களில் பிரம்ம கபாலத்தை உடையவராக பைரவர் விளங்குகிறார். தவறு செய்வது யாராக இருந்தாலும் அவர்கள் தண்டனை பெறுவது உறுதி. தர்மத்துக்கு விரோதமாக யார் சென்றாலும் அவர்கள் அழிக்கப்படுவர். என்பதை உணர்த்துவது பைரவரின் திருவடிவம்.போற்றுதலுக்கு உரிய சிவமூர்த்தங்கள் 64 என்றும் 25 என்றும் சிறப்பிக்கப்படுகின்றன. இந்த மூர்த்தங்களில் ஒருவராக பைரவர் விளங்குகிறார். உருவம் உக்கிரமாக இருப்பினும் மிகவும் கருணையுடையவர் பைரவ மூர்த்தி. நாம் தர்ம வழியைப் பின்பற்றி நடந்தால், உலகில் நாம் எங்கு இருந்தாலும் எப்பேர்ப்பட்ட அல்லல்களை அனுபவித்துக் கொண்டிருந்தாலும் பைரவர் நம்மைக் காப்பாற்றுவார்.

மஹா ப்ரளய காலத்தில் - அனைத்து ஜீவராசிகளும் அமைதிபெற, மூலத்தில் நிலைபெறும் தருணத்தில், பைரவரும் அவரின் சக்தியான பைரவியும் நர்த்தனம் செய்கிறார்கள் என்று தந்திர நூல்கள் கூறுகின்றன.

சிவாகமங்கள் பைரவரை மேற்கு அல்லது தெற்கு நோக்கி ஸ்தாபனம் செய்யவேண்டும் என்று கூறுகின்றன. சூலம், கபாலம், பாசம், டமருகம் ஆகியவற்றை ஏந்திய நிலையில் நான்கு கரங்கள் கொண்டவராகவோ, 8 திருக்கரங்கள் அல்லது 10 திருக்கரங்கள் கொண்டவராகவோ பைரவர் திருவுருவைப் பிரதிஷ்டை செய்து வழிபடலாம் என்று கட்டளையிடுகின்றன.

காளாமுகர், கபாலிகர் என்னும் பிரிவுகளைச் சேர்ந்தோர் பைரவர் தெய்வத்தையே முழுமுதற் கடவுளாகப் போற்றி வழிபடுகின்றனர். பைரவர் தந்திரம் எனும் நூல் பைரவரைப் பற்றி மிகச் சிறப்பாக விளக்குகிறது.

மேலும் 64 பைரவர்களையும் அவர்களுக்குரிய சக்திகள் குறித்தும் தந்திர நூல்கள் விளக்குகின்றன. நீலகண்ட பைரவர் முதல் தக்ஷிணாபிஸ்தித பைரவர் வரையிலும் 64 பைரவரின் பெயர்களையும், `ஜயா’ முதல் `விஷலங்க்யா’ வரையிலுமான பைரவ சக்தியரின் நாமங்களையும் அவை விளக்குகின்றன. மட்டுமன்றி அவர்களுக்கான த்யானங்கள், நிவேதனங்கள் என்று பல விஷயங்களை நம் ஞான நூல்கள் கூறுகின்றன.

? கால பைரவர் என்றும் வயிரவர் என்றும் அழைப்பது ஏன்?

அனைத்து காலங்களிலும் மஹா காளியுடன் இணைந்து தர்மத்தை அவர் காப்பாற்றுவதால் அவரை காலபைரவர் என்று போற்றுவர். `வ’, `ப’ என்ற எழுத்துக்கள் சில இடங்களில் மாற்றிப் பயன்படுத்தப் படுவதால் பைரவரை சிலர் வயிரவர் என்றும் போற்றுவர். வயிரவன் பட்டி என்ற பெயரில் ஒரு க்ஷேத்திரம் உள்ளது.

மட்டுமன்றி சட்டநாதன், தண்டபாணி, ஆபத்துத்தாரகன், கால பைரவர், மஹா பைரவர் என்றும் பைரவர் போற்றப்படுகிறார்.

மஹா பைரவர்
மஹா பைரவர்


நாய்களைப் பைரவராகக் கருதலாமா?

பைரவரின் வாகனம் நாய். அதன் பெயர் ஸாரமேயம். நம் கர்மவினைகள் அனைத்தையும் தெரிந்துகொள்ளக் கூடிய சக்தி படைத்தது என்கின்றன புராணங்கள். ஆனால், சிலர் தாங்கள் வளர்க்கும் நாயைப் பைரவர் என்று கூறுகின்றனர். இது மிகவும் தவறானது. தெய்வத்தை அவமதிப்பதும்கூட. சகல பிராணிகளிடமும் அன்பு காட்டுவதும் பராமரிப்பதும் நம் மண்ணின் மரபு. அவ்வகையில், நாய்களை நன்றாக வளர்ப்பதுவும் நம்மால் முடிந்த உணவை அளிப்பதுவும் சிறந்த தர்மம் ஆகும்.

பைரவ வழிபாடு சிறப்புற்றுத் திகழும் தலங்கள் எவை?

பாரததேசம் முழுவதும் பைரவர் வழிபாடு சிறப்பாக விளங்குகிறது. காசியில் விளங்கும் பைரவர், அந்த மண்ணைக் காத்து வருகிறார். காசிக்கயிறு என்று நாம் கட்டிக்கொள்வது பைரவரின் ஆற்றல் கொண்டதே. பாரதத்தின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் இந்த 64 பைரவ மூர்த்தங்கள் சிறப்புற்றுத் திகழ்கின்றன. திருவண்ணாமலை,அவிநாசி, திருவொற்றியூர் போன்று பல சிவத் தலங்களில் பைரவர் சந்நிதிகளில் அஷ்டமியன்று சிறப்பு பூஜைகள் உலக மக்கள் நன்மைக்காக நடைபெற்று வருகின்றன. சீர்காழியில் சட்டநாதர் என்ற திருப்பெயரில் சக்திமிக்க தெய்வமாக வழிபடப்படுகிறார் பைரவ மூர்த்தி.

மாமன்னர் ராஜராஜனுடைய தேவியும் அவரின் மகன் ராஜேந்திரனும் பைரவரைச் சிறப்பாக வழிபட்டார்கள் என்பதை வரலாறு களில் காணலாம். கலிங்க தேசத்தில் பைரவர் வழிபாடு மிகுதியாகக் காணப்பட்டது என்றும் அங்கிருந்து சிறப்பாக பைரவர் மற்றும் சக்தியின் சிற்பங்களை செய்விக்கச் செய்து, அவற்றை கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரதிஷ்டை செய்தார் ராஜேந்திரன் என்ற தகவலை கல்வெட்டுகள் மூலம் அறியலாம். திருவலஞ்சுழியில் உள்ள க்ஷேத்ரபாலருக்கு 12 சுவர்ண புஷ்பங்களை அளித்து, மாமன்னர் ராஜராஜசோழன் வழிபட்டார் என்றும் தஞ்சைக் கோயிலுக்கு தங்கத்தாலான பைரவர் திருமேனியை அவர் அளித்ததாகவும் தகவல்கள் உண்டு.

அஷ்டமியில் பைரவரை எப்படி வழிபடுவது?

உடல் உள்ளத் தூய்மையோடு அஷ்டமி நாளில் விரதம் இருந்து, ஸாத்வீக உணவை உட்கொண்டு பைரவாஷ்டகம் போன்ற தோத்திரங்களைக் கூறி சிறியளவிலான பைரவர் யந்திரத்துக்கோ படத்துக்கோ புனுகு போன்ற வாசனைத் திரவியங்களை முறைப்படி அர்ப்பணிக்கவேண்டும். மேலும் பைரவருக்குரிய நிவேதனங்கள், மலர்களில் நம்மால் இயன்றவற்றைச் சமர்ப்பித்து வணங்கலாம்.

பைரவருக்கான மலர்கள் நைவேத்தியங்கள் என்னென்ன?

வில்வம், தாமரை, மல்லி, மருக்கொழுந்து போன்றவற்றாலும் வெண்பொங்கல், சம்பா சாதம், பால் சாதம், சர்க்கரைப் பொங்கல் போன்ற நிவேதனங்களாலும் அவரை மகிழ்விக்கலாம். வடைமாலை செய்து பைரவருக்குச் சமர்ப்பிப்பதும் மிகச் சிறந்த பலனை அளிக்கும்.

ஆலயங்கள் - வீடுகளில் பைரவ வழிபாட்டு நியதிகள் என்னென்ன?

ஆலயங்களில் நித்ய பூஜைகளில் வழிபாடுகளும், அஷ்டமி போன்ற சிறப்பான காலங்களில் பைரவருக்குச் சிறப்பு வழிபாடுகளும் தொடர்ந்து நடைபெறுகின்றன. பூஜைகள் ஆரம்பிக்குமுன் க்ஷேத்திர பாலரைக் கேட்டு ஆரம்பிப்பதும் அர்த்தஜாமப் பூஜையின்போது பைரவரை பூஜித்து நிறைவு செய்வதும் மரபு.

அசுரர்கள், திருடர்கள் ஆகியோரிடமிருந்து மக்களைக் காக்கவும், அகால மரணம், நோய்கள் போன்றவை வராமல் இருக்கவும், சகல காரியங்களில் வெற்றி கிடைக்கவும், மனநிம்மதியும் அமைதியும் பெறவும் பைரவருக்குச் சிறப்பான வழிபாடுகள் செய்யும்படி ஆகமங்கள் வழிகாட்டுகின்றன.

அசிதாங்க பைரவர், ருரு பைரவர், சண்ட பைரவர், க்ரோதன பைரவர், உன்மத்த பைரவர், கபால பைரவர், பீஷண பைரவர், ஸம்ஹார பைரவர் ஆகிய எட்டுபேரும் அன்றாடம் நாம் நினைத்து வழிபடவேண்டிய பைரவ உருவங்கள். இவர்களின் திருவருள் நம் எதிரிகள் நம் மீது ஏவும் ஏவல்களை அழித்து நம்மையும் நம் குடும்பத்தையும் காத்து நிற்கும்.

அதேபோல், ஸ்வர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு, நல்வழிகளில் பொருள் சேர நமக்கு அருள்செய்யும். தினமும் `ஓம் பைரவாய நம: ’ என்று எட்டுமுறை ஜபித்து அவரின் அருளை அனைவரும் பெற்று மகிழலாம்.

ஆடிச் செவ்வாய் விரதம்
ஆடிச் செவ்வாய் விரதம்

ஆடிச் செவ்வாய் விரதம்!

நம் நாட்டில் திருமணமான பெண்கள் பலரும் கடைப்பிடிக்கும் ஒரு விரதம் ஆடிச் செவ்வாய் விரதம் ஆகும். 'ஆடிச் செவ்வாய் தேடிக் குளி' என்று ஒரு வழக்கு மொழியும் இருக்கிறது. ஆடி மாதம் வரும் செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் எண்ணெய் ஸ்நானம் செய்து விட்டு, விரதம் இருந்து அம்மனை வழிபட்டால், கணவருக்கு தீர்க்காயுள் ஏற்படும் என்பது ஐதீகம் மட்டுமல்ல, பெண்களின் ஆழ்ந்த நம்பிக்கையும்கூட.

அதேபோல் ஞாயிற்றுக்கிழமைகளில் அம்மனுக்கான தங்களுடைய வேண்டுதல்களைச் செலுத்தும் நாளாகக் கொண்டாடுகிறார்கள். பால்குடம் எடுத்தல், கூழ் வார்த்தல், பொங்கல் வைத்து வழிபடுதல் என்று பக்தர்களின் வேண்டுதல்கள் பலவாறாக அமைந்திருக்கும்.

- க.புவனேஷ்வரி, சென்னை