சக்தி விகடன் வாசகர்களுக்கு அன்பு வணக்கம். பங்குனி மாதம் பிறக்கவிருக்கிறது. உலகப் புகழ் பெற்ற ஆழித்தேர் திருவிழாவும், பங்குனி உத்திரப் பெருவிழாவும் வர இருக்கின்றன. தெய்வத் திருமணங்கள் பலவும் நடைபெற்ற இந்த உத்திர விழாவில் எல்லோரும் கலந்துகொண்டு மங்கலமான வாழ்வை மேற்கொள்ள எல்லாம்வல்ல சிவத்தை வேண்டிக்கொள்கிறேன். சிவாயநம!

? சிவாலயம் சென்று சிவபெருமானை வழிபட்ட பிறகு, சற்று நேரமாவது கோயிலில் அமர்ந்து செல்லவேண்டும் என்று சொல்லப்படுகிறதே, ஏன் ஐயா!
கருணையே வடிவமான சிவபெருமான், நம் வேண்டுதல்களைக் கேட்டுவிட்டு நமக்கு நல்லருள் புரிய நம்முடனே வரவிரும்பி நம்மைப் பின்தொடர்வார். அப்போது நாம் ஆலயத்தில் அமர்ந்துவிட்டால் `இவர் கிளம்ப நேரமாகும் போல' என்று நினைத்து ஈசன் மறுபடியும் கருவறைக்குள் சென்றுவிடுவார் என்று என் நண்பர்கள் கூறுகிறார்கள். இது உண்மையா!
அன்பர் ஒருவரது கேள்வி இது.
சிவம் நம்மோடு வருவது நல்லதுதானே. இதற்கு ஏன் தயங்க வேண்டும்? சுவாமி கருணையானவர் என்று குறிப்பிட உங்கள் நண்பர்கள் இப்படி கூறலாம். ஆனால் அதுவல்ல விஷயம். சுப காரியங்கள் எதற்குச் சென்றாலும் கொஞ்ச நேரம் இருந்து அங்குள்ள மகிழ்ச்சியான விஷயங்களை அனுபவித்துவிட்டு வர வேண்டும் என்பது பெரியவர்கள் கூற்று. லௌகீகமான இந்த விஷயங்களுக்கே இப்படி என்றால், அருள் மழையைப் பொழியும் சிவாலயங்களுக்குச் சென்று விட்டு, அங்கு நிரம்பியிருக்கும் அற்புதமான அதிர்வுகளை நம்முள் கிரகித்துக்கொள்ள வேண்டாமா? அங்கு சற்றுநேரம் இருப்பது அவசியம். பல நூறு பக்தர்கள் கூடியிருந்து பிரார்த்தனை செய்யும் அந்த இடத்தில், மங்கல வாத்தியங்கள், மந்திரங்கள் ஓதப்படும் அந்த இடத்தில் நிச்சயம் உங்கள் மனம் அமைதிப்படும். ஆகவே கோயிலுக்குச் சென்றால் அமர்ந்துவிட்டு வாருங்கள் என்று சொல்லப்பட்டது.
வெறுமனே சுவாமியைக் கும்பிட்டுவிட்டு அதைக் கொடு, இதைக்கொடு என்று வேண்டிக்கொண்டு அவசர அவசரமாகச் செல்வது எல்லாம் நல்லதல்ல. `பொருந்த கைதொழ...' என்பது நாவுக்கரப் பெருமானின் திருவாக்கு. உள்ளே கருவறையில் வீற்றிருக்கும் பெருமானை ஒரு நிமிடமோ இரண்டு நிமிடமோதான் தரிசிக்க முடியும். அதை அப்படியே உள்வாங்கிக் கொண்டு, கோயில் மண்டபத்தில் அமர்ந்து அந்த தரிசனக் காட்சியை மனதுக்குள் கிரகித்துப் பேரானந்த வெள்ளத்தை அனுபவிக்கவேண்டும் என்பது நியதி. அதற்காகவும் அமர்ந்து செல்ல வேண்டும் என்று வகுத்தார்கள். இதற்குச் சின்ன கதை ஒன்றைச் சொல்கிறேன்.

ஓர் அடியார் சிறு தவறு ஒன்றைச் செய்ததனால் மறுபிறவி எடுக்கவேண்டி இருந்தது. கருணைக்கடலான சிவம் அவருக்கு முன் தோன்றி, `வினைப்படி நீ மீண்டும் பிறக்கவேண்டும். எனவே என்னவாகப் பிறக்க விரும்புகிறாய்' என்றது. அவரோ, `அப்பனே! உன் திருக்கோயில் திருக்குளத்தில் மீனாகப் பிறக்க விரும்புகிறேன்' என்றார். சிவம் வியந்தது. `மானிடனாகப் பிறந்தால் மீண்டும் என்னைத் தொழலாம், ஆடலாம், பாடலாம், நீறு அணிந்து அந்தப் பிறவியிலேனும் என்னை வந்து அடையலாம். எதற்கு மீனாக விரும்புகிறாய்!' என்றது சிவம்.
அடியாரோ `ஐயனே அடுத்தப் பிறவியில் இந்த நாயேன் உன்னை அறிந்துகொள்வேனோ தெரியாது. நல்ல குரு எனக்கு அமைவாரோ தெரியாது. நீண்ட பிறவி எடுத்து ஒருவேளை உன்னை மறந்து வாழ்ந்தால், அதுவே எத்தனை தீங்கானது. எனவே மீனாகப் பிறந்து கோயில் குளத்தில் வாழ்ந்தால், கொஞ்ச காலத்திலேயே உன்னை வந்து அடைவேன் என்பது உறுதி. காரணம், கோயிலுக்கு வரும் அடியார்கள் குளத்தில் கால்-கை சுத்தம் செய்வார்கள். அந்த தூசியும் தும்பும் என் மீது படும். அவர்கள் முகம் கழுவ, அவர்கள் அணிந்த திருநீறு நீரில் கரைந்து என்மீது படும். அவர்கள் பஞ்சாட்சரம் ஜபித்த வாயைக் கொப்பளிக்க அதுவும் என்மீது படும். இவ்வளவு பாக்கியம் பெற்ற நான் உன்னை வந்து சேராமல் போவேனா என்ன!' என்றார்.
சிவமும் மகிழ்ந்து அப்படியே வரம் அளித்ததாம். இப்படித்தான் ஆலயத்தில் நாம் அமர்ந்திருக்க, நல்ல அடியார்களின் காற்றும் அவர்கள் ஜபிக்கும் மந்திரங்களும் நம்மை வாழ்விக்கும். அதனால்தான் சிவாலயத்தில் `இருந்து' வரவேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். வீட்டில் அமர்ந்து சொல்லும் மந்திரங்களைவிட ஆலயத்தில் சொல்லும் மந்திரங்களுக்குச் சக்தி அதிகம். எனவே உங்களுக்குத் தெரிந்த சிவ மந்திரங்களை அங்கு சொல்லி நலம்பெறலாம். தங்கியிருந்து வழிபட்டால் பல தோஷங்கள் நீங்கும் என்பதும் புராணங்கள் சொல்லும் செய்தி. எனவே உங்கள் பாவங்களும் தோஷங்களும் நீங்கவும் ஆலயத்தில் அமர்ந்துவிட்டு வரலாம்.
அதேபோல் ஆலயங்களுக்குச் சென்றுவிட்டு நேராக வீட்டுக்குத்தான் வரவேண்டுமா என்றும் சிலருக்குக் கேள்வி எழுவது உண்டு.
ஆம், நேராக வீட்டுக்குத்தான் வரவேண்டும். சிவாலயத்தில் நாம் பெற்ற அருமையான ஆனந்தத்தை, அற்புதமான பேரதிர்வை அப்படியே வீட்டுக்குள்தான் கொண்டு செல்ல வேண்டும். மற்ற இடங்களுக்குச் செல்லும்போது, அங்கு என்ன சூழல் நிலவுமோ தெரியாது. அங்கு எதிர்மறை ஆற்றல் இருந்தால் அது நல்ல அதிர்வுகளைக் கெடுத்துவிடலாம்.
ஆலயத்திலும் கிரகம் உண்டு. அது நவகிரகம். நம் வீடும் ஒரு கிரகம்தான். ஆலய கிரகம் போலவே நாம் வாழும் கிரகமும் வாஸ்துபடி, முன்னோர்கள் வகுத்தபடி முறையோடு நம் தேவைக்கு ஏற்றவாறு அமைத்திருக்கிறோம். அதன்படி ஆலய கிரகத்தின் பேராற்றலை நம் கிரகத்துக்குத்தான் கொண்டு செல்ல வேண்டும் என்கிறது நியதி.
சிவத்தின் பேராற்றலைப் பெற்றுவரும் நாம், கை- கால், முகம் அலம்பாமல் நேராக பூஜை அறைக்குச் சென்று மீண்டும் நீறிட்டுக் கொண்டு கொஞ்சம் நேரம் தியானத்தில் அமரவேண்டும். குறைந்தது அரை நாழிகை அதாவது 12 நிமிடமாவது தியானிக்க வேண்டும். ஆலயத்தில் அனுபவித்த அந்த ஏகாந்த அனுபவத்தை வீட்டிலும் அனுபவித்து, அதன்பிறகு மற்ற பணிகளைச் செய்ய வேண்டும். நாம் நமக்குள் ஆவாகனம் செய்த ஆலய மூர்த்தத்தை நம் கிரகத்தில் இறக்கிவைக்க வேண்டும். எங்கும் நிறைந்து இருக்கும் பிரம்மம் ஆலயத்தில் சிறப்போடு விளங்கி வருகிறது. அதன் ஆற்றல் நம் மனதின் வழியே தங்கி, நம் வீட்டிலும் பரவ வேண்டும். தெய்வ ஸாந்நித்யம் நம் வீட்டில் பரவ இதைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று மனுதர்ம சாஸ்திரம் சொல்கிறது.
நாம் குடிபுகும் வைபவத்தைக் கிரகப் பிரவேசம் என்போம். ஆலயத்துக்குச் சென்று வீட்டுக்குள் நுழையும் ஒவ்வொரு வேளையும் சுவாமி அங்கு கிரகப் பிரவேசம் செய்கிறார் என்று எண்ணிக் கொள்ளுங்கள். பிறகு வேறெங்கும் போகத் தோன்றவே தோன்றாது. சிவாயநம!
- பேசுவோம்!