Published:Updated:

பீங்கான் விளக்குகளில் தீபம் ஏற்றலாமா?

திருவிளக்கு
பிரீமியம் ஸ்டோரி
திருவிளக்கு

ஆன்மிகக் கேள்வி பதில்

பீங்கான் விளக்குகளில் தீபம் ஏற்றலாமா?

ஆன்மிகக் கேள்வி பதில்

Published:Updated:
திருவிளக்கு
பிரீமியம் ஸ்டோரி
திருவிளக்கு

? நம் முன்னோர்களை வழிபட துதிப் பாடல்கள், ஸ்லோகங்கள் ஏதேனும் உண்டா, வழி காட்டவும்.
- வி.ராமதுரை, கடலூர்

! முன்னோர்களைத் திருப்திசெய்து நமது பித்ரு கடனை அடைப்பது என்பது ஒவ்வொருவரின் கடமை. தர்ப்பண விதிகள், சிராத்தம் முதலியவை செய்து வழிபடுவதே நமது மரபு.

பெரியவர்கள் கூறியபடி நமது வாழ்க்கையை ஒழுக்கமாக அமைத்துக் கொண்டு வாழ்வதே அவர்களைக் குளிரிவிக்கும் செயல்தான்.

எனக்குத் தெரிந்து பித்ருக்களுக்கு என்று தனியாக ஸ்லோகங்கள் எதுவும் இல்லை என்றே அறிகிறேன். தாயாரின் பெருமைகளைப் போற்றும் ‘மாத்ரு பஞ்சகம்’, குருவைப் போற்றும் ‘குரு அஷ்டகம்’ போன்ற ஸ்தோத்திரங்களைக் கூறி, நமது திருப்திக்காகவும் அவர்களது பெருமைகளைப் போற்றவும் துதித்து வழிபடலாம். எவ்வுயிருக்கும் தீங்கு செய்யாமல், நம் கடமைகளைச் சரிவரச் செய்து வாழ்தலே பித்ருக்களைத் திருப்தி செய்யும் முறை எனலாம்.

? ஆலயங்களில் வைத்து திதி, தர்ப்பணம் போன்றவற்றைக் கொடுக்கலாமா?
- கே.ரேணுகா, திருச்சி-2

! ஆலயங்கள் தெய்விகச் சக்திகளின் இருப்பி டம். ஒவ்வோர் ஆலயத்துக்கும், அங்கு திகழும் தெய்வ உருவங்களுக்கும் உரிய சிறப்பான வழிபாட்டு பூஜை முறைகளை நம் ஆகமங்கள் வகுத்துள்ளன.

நம் முன்னோர்களைக் குறித்துச் செய்யும் திதி, தர்ப்பணம் போன்றவற்றை ஆலய வாஸ்து தலத்துக்கு வெளியே அமைந்துள்ள முறையான இடத்திலோ, குளம், நதி, கடல் போன்ற நீர் நிலைகளிலோ செய்யலாம். ராமேஸ்வரம், திருச்செந்தூர் போன்ற தலங்களில் கடற்கரை யிலும், கும்பகோணம், திருப்பூவணம் போன்ற தலங்களில் ஆற்றங்கரையிலும் பித்ருக் காரியங்களைச் செய்யலாம்.

ஆலயங்களில் `தேவ வாஸ்து' என்று சொல்லப்படுகிற தேவர்களின் சஞ்சார பதத்தில், பூஜைகளைத் தவிர வேறெந்த நிகழ்வுகளையும் செய்யக் கூடாது.

? பீங்கான் விளக்குகளில் தீபம் ஏற்றினால் தெய்வ தோஷம் உண்டாகுமா?
- க.வள்ளியப்பன், சென்னை - 15

! முதலில் தெய்வ தோஷம் என்ற சொற்களை மனத்தில் இருந்து நீக்குங்கள். கடவுள் மிகவும் அன்பானவர். நம் கர்மவினைகள் நீங்கிட பல சூழ்நிலைகளை அமைத்து, அதிலிருந்து நம்மைக் காப்பாற்றுவதும் அவரே.

தீபமானது, எள்ளில் இருந்து கிடைக்கும் நல்லெண்ணெய், பசுவிலிருந்து கிடைக்கும் நெய் போன்றவற்றால் ஏற்றப்படுவது. இந்த தீபங்களை மண், பித்தளை, வெண்கலம், வெள்ளி, தங்கம் போன்ற உலோகங்களால் உருவான விளக்குகளில் ஏற்றுவதே சிறப்பு. மண் விளக்குகளையும் ஒருமுறை மட்டுமே ஏற்ற வேண்டும் என்கிறது சாஸ்திரம்.

பீங்கான் விளக்கு போன்றவற்றை அழகுக்கு வைத்துக்கொள்ளலாமே தவிர தீபம் ஏற்ற பயன் படுத்தக் கூடாது. நாம் செய்யக்கூடிய பூஜைகள் நமக்கும் பிற உயிர்களுக்கும் நன்மை செய்யக் கூடிய ஆற்றல்கொண்டவை. பூஜை முறைகள் நம்மையும் இறைவனையும் இணைக்கக் கூடிய வழிமுறைகளைக் கொண்டவை.

எனவே சாஸ்திரங்களில் சொல்லப்பட்டபடி நாம் ஒரு காரியம் செய்வது என்பது, நல்ல தொலைபேசியில் ஒருவரைத் தொடர்புக் கொள்வதைப் போன்றது; சிக்கல் இருக்காது. ஆகவே நம் ரிஷிகள், ஞானிகள் கூறியதைப் போல நம் வாழ்க்கை முறையைப் பின்பற்றினால், எதிலும் அச்சம்கொள்ளத் தேவையில்லை.வாழ்வும் சிறப்புடன் அமையும்.

பீங்கான் விளக்குகளில் தீபம் ஏற்றலாமா?

? வீட்டில் யந்திரங்களைப் பதிக்கலாமா. வேல், அரிவாள், சூலம் போன்ற ஆயுதங்களை வைத்து வழிபடலாமா?
- எம்.சாந்தி, சென்னை - 41

! எப்படி ஓர் ஊருக்குச் செல்லும்போது வழிகாட்டிப் பலகைகள் நமக்கு வழிகாட்டுகின் றனவோ, நம் வீட்டு எண்ணை வைத்து நம் முகவரி அடையாளம் காணப்படுகிறதோ, அதேபோல் யந்திரங்களின் எழுத்துக்களும் வரையப்பட்ட கோடுகளும் மிகுந்த ஆற்றல் கொண்டவை.

யந்திரத்தில் ஓர் எழுத்தின் கோடு அல்லது எழுத்தின் அளவில் மாறுதல் உண்டானால்கூட அதன் பலன் மாறி அமைய வாய்ப்பு உண்டு.

எனவே வீடுகளில் சரியாக எழுதப்பட்ட சிறிய அளவிலான யந்திரங்களை வைத்து வழிபடுவது நல்லது. அதேபோல் வேல், சூலம், அரிவாள் போன்ற ஆயுதங்களையும் சிறிய அளவில் நியமங்களோடு வைத்து வழிபடலாம். அவை நம்மை காக்கக் கூடியவையே.

? வெள்ளெருக்கு விநாயகருக்கு அபிஷேகம் செய்யலாமா?
- கே.தீபிகா, வள்ளியூர்

! மரம் மற்றும் சுதையினால் செய்யப்பட்ட தெய்வ விக்கிரகங்களுக்கு நேரடியாக அபிஷேகம் செய்வது கிடையாது. கண்ணாடி போன்றவற்றை வைத்து அதற்கு அபிஷேகம் செய்து, அதை சுவாமிக்கு செய்ததாக பாவித்துக் கொள்ள வேண்டும். இதையே ஆகமங்கள் `பாவனா அபிஷேகம்' என்கிறது.

மரம், வேர், சுதை, சித்திரம் ஆகியத் திருமேனிகளில் நேரடியாக நீர் படுவதால் தெய்வ விக்கிரகங்கள் பாதிக்கப்படும். ஆகவே, இவ்வாறு பாவனா அபிஷேகம் செய்யலாம். வாசனைத் திரவியங்களைச் சாத்தலாம் என்கிறது சாஸ்திரம்.

பீங்கான் விளக்குகளில் தீபம் ஏற்றலாமா?

? திருஷ்டி கழிப்பது ஏன், அதற்கான சாஸ்திர நியதிகள் என்ன, எந்தப் பொருள்களால் திருஷ்டி கழிக்கலாம்?
- வி.புனிதவதி, காஞ்சிபுரம்

! `திருஷ்' என்றால் பார்ப்பது. உலகில் நிகழும் பல்வேறு காட்சிகளைக் காண இறைவன் அளித்த பரிசு நம் கண்கள்.

நாம் ஒருவரைப் பார்க்கிறோம், அவர் இன்னார் என்று அறிந்துகொள்கிறோம். பிறகு பழகுகிறோம். நமக்கு முன்பின் தெரியாத வர்கள் கூட, ஒருவேளை நம்முடன் நெருங்கிப் பழக வேண்டிவரும். அவர்கள் நம்முடைய புகழையோ, செல்வத்தையோ கண்டு பொறாமை கொள்ளக் கூடும்.

`இவரிடம் இருப்பதுபோல நம்மிடம் இல்லையே, அவருக்கு நடப்பதைப்போல நமக்கு நடக்க வில்லையே' என்று நினைக்கக் கூடும். அப்போது எதிர்மறையான எண்ணங்கள் தோன்றி, அது எதிரில் இருப்பவரைத் தாக்கக் கூடும். இதையே திருஷ்டி என்கிறோம்.

பொறாமை கொண்டவர் என்ன நினைக் கிறார் என்பதை நாம் அறிய முடியாது. ஆனால் அவருடைய எதிர்மறையான எண்ணங்களில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ளலாம். இதையே `திருஷ்டில் கழித்தல்' என்கிறோம்.

பூசணிக்காய், தேங்காய், எலுமிச்சைப் பழம் போன்றவற்றாலும் கற்பூரம் சுற்றிப் போடுவது, ஆரத்திச் சுற்றுவது, உப்பு - மிளகால் சுற்றிக் கொள்வது என அந்தந்த வட்டாரங்களில் செய்யப்படும் திருஷ்டி கழித்தல் முறைகளால் கண் திருஷ்டிகளைப் போக்கிக் கொள்ளலாம்.

- பதில்கள் தொடரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism