திருத்தலங்கள்
திருக்கதைகள்
ஜோதிடம்
Published:Updated:

இறைவனை வழிபட மந்திரங்கள் அவசியமா?

கந்தக் கடவுள்
பிரீமியம் ஸ்டோரி
News
கந்தக் கடவுள்

ஆன்மிகக் கேள்வி-பதில்கள்

? இறைவனுக்கு உரிய திருநாமங்களைக் கூறி வழிபடுகிறேன். திருநாம அர்ச்சனை தவிர, மந்திரங்கள் கூறியும் வழிபட வேண்டுமா?
- கே.மனோகரன், மானாமதுரை


! எந்த விருப்பமும் இல்லாத பரம்பொருள் இறைவன். அவருக்குத் திருநாமங்கள்கூட தேவையில்லை என்பதே உண்மை. அதை உணர்ந்த வர்கள் ஆன்மிகப் பெரியோர்கள். ஆனால் நாம் எளியவர்கள். இந்த உடல்தான் அடையாளம் என்று எண்ணிக்கொள்பவர்கள். அதனால், இறைவனுக்கும் அடையாளங்கள் இட்டு வழிபட்டு வருகிறோம்.

இறைவனை வழிபட 
மந்திரங்கள் அவசியமா?

முக்தி அடையவேண்டும் என்ற நோக்கத்தோடு வாழ்பவர்கள் நாம்.முக்தியடைய நாமாவளி சங்கீர்த்தனம் என்பது ஒருவகை. இறைவனின் திருநாமங்களை அடிக்கடி சொல்லி மோட்சத்தை அடையலாம். அதுபோலவே முன்னோர்களால் வகுக்கப்பட்ட மந்திரங்களை, அந்தந்த தெய்வங்களுக்குச் சொல்லி பாராயணம் செய்வதும் முக்கியமானதே.

ஒவ்வொரு தெய்வத்தையும் ஒருவிதமான அதிர்வுகொண்ட மந்திரச் சொற்களால் வடிவமைத்து உள்ளார்கள் நம் ரிஷிகள். அதுவே மந்திரங்கள் என்றாயின. அந்த மந்திரங்களைச் சொல்லி அந்த தெய்வங்களை வணங்கும்போது, அவை நமக்கு வசப்பட்டுஅருள்பாலிக்கும். ரிஷிகளும் இந்த மந்திரங்களை அவர்களே இயற்றவில்லை. மந்திரங்கள் இறைவனிடமிருந்து தேவதைகளுக்கு அருளப்பட்டு, அவை வழிவழியாக ரிஷிகளிடம் வந்து சேர்ந்தன. மந்திரங்கள் எல்லாம் அருளை வழங்கக் கூடியவை என்பதால், நாமாவளி கீர்த்தனம் போல மந்திர உச்சாடனங்களும் அவசியம் செய்யக் கூடியவையே.

? முருகனின் திருநாமங்களில் `ஸ்கந்தன்' எனும் திருநாமத்தின் மகிமைகள் என்ன?
- க.திருமலை, திருநெல்வேலி-2


! `ஸ்கந்தனம்' என்றால் வெளிப்படுதல் என்று பொருள். என்ன வெளிப்படுகிறது? சிவனும் சக்தியும் இணைந்த பேரருள் வெளிப்படு கிறது. அதுதான் சோமாஸ்கந்தர் எனும் வடிவம். சிவனும் சக்தியும் முருகப்பெருமானோடு திகழும் இறைவடிவம் சோமாஸ்கந்தர். சிவனும் சக்தியுமே இந்தப் பிரபஞ்சத்தின் அடிப்படை.

இந்த இரு பெரும் பிரமாண்ட வடிவத்தின் எளிய அழகிய வடிவமே ஸ்கந்தன். ஈசனின் ஞானக் கண்ணிலிருந்து தோன்றிய ஞான வடிவம் அவன். பொறி வடிவமாக, அதாவது ஸ்பார்க் எனும் நெருப்பு வடிவாக மயில்மீது பறந்து செல்லும் வாயு பாகத்தில் வீற்றிருக்கிறார் ஸ்கந்தன்.அதனால்தான் நினைத்த வுடன் நம்மிடையே வந்துவிடும் ஆற்றல் வடிவமாக உள்ளார்.

முருகப் பெருமான் ஞான அக்னி யாக வெளிப்பட்ட வடிவம் ஸ்கந்த வடிவம். அதனாலேயே அவர் கேட்பதை வழங்கும் வள்ளலாகவும் உள்ளார். ச-உமா-ஸ்கந்தர் எனும் மூன்று வடிவங்களும் கொண்ட சோமாஸ்கந்தர் மூர்த்தம் ஞானம் அளிக்க வல்லது. சகலருக்கும் அருளும் வடிவம் என்பதால், சோமாஸ்கந்தர் விழாக்களில் உலா மூர்த்தியாக முக்கியத்துவம் பெறுவார்.

ஸ்கந்தன் எந்த வடிவம் கொண்டா லும் அது பக்தர்களுக்கு அனுக்கிரகம் செய்யும் ஞான வடிவாகவே திகழும். அவற்றில் ஸ்கந்த மூர்த்தமும் ஸ்கந்த நாமும் வெகு சிறப்பானது என்று ஞான நூல்கள் கூறுகின்றன.

? குல தெய்வ வழிபாட்டின் அவசியம் என்ன. குல தெய்வத்தை அறிவது எப்படி?

- சு.மனோமணி, திண்டிவனம்


? நம் குலத்தைக் காக்கும் தெய்வமே குலதெய்வம். பெரும்பாலும் உங்கள் பூர்விகக் கிராமத்தின் எல்லைக்குள் உங்கள் குலதெய்வம் அமைந்திருக்கும் என்பது நியதி.

ஒரு குலம் எங்கு ஆரம்பித்ததோ, அங்கிருந்தபடி அந்தக் குலத்தைக் காக்கக் கூடிய இறைசக்தியே குலதெய்வம். ஆகவே, அனைவரும் எல்லா காலத்திலும் குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும் என்பது விதி. சுடலை, சாஸ்தா, கருப்பன், முனுசாமி என குலதெய்வங்கள் பல உண்டு. அவரவருக்கான குலதெய்வத்தை திறந்த வெளியில் கும்பிடுவதே சிறந்தது.

அவரவர் வழக்கப்படி, முன்னோர் விதித்தபடி குல தெய்வத்தை வணங்க வேண்டும். `குலதெய்வமே என்னை காப்பாற்று' என்று வேண்டிக்கொண்டாலே போதும்; நிச்சயம் உங்களுக்கான குலதெய்வம் தன்னை எப்படியும் வெளிக்காட்டிக் கொண்டுவிடும். ஏதோ ஒருவகையில், தான் யார், எங்கு இருக்கிறேன் என்பதை அறிவித்துவிடும். எனவே நம்பிக்கையோடு உங்கள் குலதெய்வத்தைத் தினமும் கும்பிடுங்கள்; நல்லதே நடக்கும்.

இறைவனை வழிபட 
மந்திரங்கள் அவசியமா?
VSanandhakrishna

? சங்கீதத்தின் வழியே ஆராதனைகள் வழிபாடுகள் செய்து இறைவனின் அருளைப் பெற முடியுமா?
-வி.சங்கரி, தென்காசி


! கண்டிப்பாக முடியும். ஜப-தபங்கள் சங்கீதம் வழியே இறைவனை அடைய முடியும். சங்கீதப் பிரியை என்று போற்றப்படும் அம்பாள் சங்கீதத்தின் வழியே எளிதில் வெளிப்பட்டு விடுவாள். ராமபிரானும் இசைக்கு மயங்கி அருளும் கருணையானவர் என்று தியாக பிரம்மத்தின் வாழ்வு கூறுகின்றது.

அபிராமி அந்தாதி, கந்த புராணம், தேவாரம், திருவாசகம், திவ்ய பிரபந்தம் எல்லாமே இறைவனின் அருளைப் பெறவே அருளாளர்களால் பாடப்பட்டன.

இசையின் வழியே இறைவனை அடைவது எளிதானது; மனத்துக்கு நெருக்கமானது. ஒழுங்கமைந்த ஒலியே இசை என்பதால், ஒழுக்கமான சீலர்களுக்கு இறைவன் வசமாவான். உணர்ந்து உருகி இசைக்கப்படும் இசையில் இறைவன் வெளிப்படுவான்; அந்த இசையை வெளிப்படுத்தும் ஆன்மாவுக்கு அருள்செய்வான் என்கின்றன நம் சாஸ்திரங்கள்.

நமது ஆகமத்தில்கூட ஆலய வழிபாட்டில் இசைக்கு வெகுவாக இடம் அளிக்கப்பட்டுள்ளது. மங்கல இசைக்கருவிகள் இறைவனுக்கு விருப்பமானவை. அவை பூஜைகளில் ஒலிக்கப்பட வேண்டும் என்கின்றன ஆகமங்கள். நாத உபசாரம், கீத உபசாரம், நிருத்த உபசாரம் என்றெல்லாம் நமது வழக்கத்தில் உள்ளன. அதாவது இறைவனை நாதத்தாலும் அவனுடைய திருநாம கீதத்தாலும் உபசரித்து வணங்க வேண்டும் என்று உள்ளது. நிருத்த உபசாரம் என்றால் நாட்டியத்தால் இறைவனை வழிபடுவது.

இசைப்பதும், பாடுவதும் இறை வழிபாட்டில் முக்கியமானவை. இவை கேட்பவருக்கும் பரவசத்தையும் பக்தியையும் அளிக்க வல்லவை. சங்கீதம் சக்தி தருவது; இறைவனுக்கு வெகு அருகில் அழைத்துச் செல்லக்கூடிய சக்தி கொண்டது.

? இறைவன் எங்கும் இருக்கிறான் எனும் போது, ஆலயக் கருவறை தரிசனம் அதீத முக்கியத்துவம் பெறுவது ஏன்?
-சி.தாமோதரன், சேலம்


! சூரிய ஒளி எங்குமே நிறைந்துள்ளது. ஆனால், சூரிய ஒளி விழும் பொருளைப் பொறுத்தே சூரியனின் சக்தி வெளிப்படுகிறது. ஈரத் துணி மீது சூரியக் கதிர்கள் பட்டால், துணி உலர்ந்துவிடுகிறது; அங்கு வெப்ப சக்தி. ஒரு செடியின் மீது விழுந்தால் வளர்ச்சி; அங்கு ஆக்க சக்தி. சந்திரனின் மீது விழுந்தால் வேறொரு பலன்.

எங்கும் நிறைந்திருக்கும் சூரிய ஒளியை ஒரு லென்ஸ் வைத்து ஓரிடத்தில் குவித்தால், இன்னும் அதிக ஆற்றல் கொண்ட சக்தி வெளியாகிறது. அப்படித்தான் எங்கும் நிறைந்திருக்கும் இறைவனின் சக்தியை ஆலயக் கருவறை என்னும் மையத்தில் குவியவைத்து, அதை பக்தர்களுக்கு வழங்குகிறார்கள்.

கும்பாபிஷேகம் எனும் வைபவத்தில், உரிய நியதிகளுடன் ஆசார்யர்கள் தமது பூஜா பலத்தால் சுவாமியை ஆவாகனம் செய்து, இறை சக்தியை கருவறையில் நிலைநிறுத்துகிறார்கள். அதனால் ஆலயக் கருவறையில் அபரிமிதமான இறை சக்தி வெளிப்பட்டு அருள் பாலிக்கிறது. இதில் சந்தேகமே தேவை யில்லை.

கருவறையில் மட்டும்தான் இறை சக்தியை அடைய முடியுமா என்றால்...இல்லை. நீங்களே உங்கள் மனத்தைச் செம்மையாக்கி நியம நிஷ்டைகளுடன் வாழ்ந்தால், இறை வடிவம் உங்களுக் குள்ளேயே தங்கவும் செய்யும். பல ஞானிகள் அப்படி நடமாடும் இறை சக்தியாக இருந்துள்ளார்கள்.

அந்தப் பக்குவத்தை அடைய இயலாத எளிய பக்தர்கள் கருவறை வணக்கத்தாலேயே அமைதியை அடைகிறார்கள்; இறையருளைப் பெறுகிறார்கள்.

தனிப்பட்ட வழிபாடு, தியானம் போன்றவை தனி நபர்களின் வாழ்வுக்கும் வளத்துக்கும் அவசியமாகின்றன. ஆனால் ஆலய பூஜை, அனைத்து உயிர்களுக்குமானது. 84 லட்சம் ஜீவராசிகளின் நலனுக்காகவும் ஆலய வழிபாடு அவசியமானது. எனவே ஆலயக் கருவறை வழிபாடு என்பது கட்டாய வழிபாடுதான்.

- பதில்கள் தொடரும்...