Published:Updated:

விலங்குகளுக்கும் பாவ - புண்ணியம் உண்டா?

காளிகாம்பாள் கோயில் சிவஶ்ரீ சண்முகசிவாசார்யர்

பிரீமியம் ஸ்டோரி

ஆன்மிகம், வழிபாடுகள், புராணங்கள், ஆகம - சாஸ்திரங்கள் தொடர்பான வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கிறார் காளிகாம்பாள் கோயில் சிவஶ்ரீ சண்முகசிவாசார்யர்:

விலங்குகளுக்கும் 
பாவ - புண்ணியம் உண்டா?

? இறைவன் முன் தேங்காய் - பழம், வெற்றிலை - பாக்கு சமர்ப்பிப்பது எப்படி? எங்கள் ஆலயத்தில் சுவாமிக்கு இரட்டை வாழை இலை போட்டு படையல் இடுவார்கள். தெய்வங்களுக்கு இரட்டை வாழை போட்டுத்தான் நைவேத்தியம் பரிமாற வேண்டுமா?

- கே பாலன், களக்காடு

தெய்வங்களுக்கு நம்மால் இயன்றதை படைப்பது நமது மரபு. 2, 4, 6 என்ற கணக்கில் இரட்டைப்படை அளவில் வெற்றிலையும், பாக்கும் வைக்க வேண்டும். பாக்கு பொட்டல மாக இருப்பின், பிரித்து இருத்தல் அவசியம்.

முக்கியமாக வெற்றிலையின் நுனி, வடக்கு அல்லது கிழக்கு நோக்கி இருக்கவேண்டும். காம்பு பகுதியானது தெற்கு அல்லது மேற்கு நோக்கி இருக்கவேண்டும்.

முக்கியமாக வாழைப்பழம் அல்லது வாழை இலை ஆகியவற்றின் நுனியானது கிழக்கு அல்லது வடக்கு நோக்கியும், காம்பு பகுதியானது தெற்கு அல்லது மேற்கு நோக்கியும் இருக்குமாறு வைத்தல் வேண்டும். அதேபோல் கடவுளுக்குப் படைக்கும்போதும் ஓர் இலையிலோ, இரட்டை வாழை இலைகளிலோ சமர்ப்பிக்கலாம். அந்தந்த ஆலயத்தில் உள்ள மரபை அறிந்து செயல்படுவது சிறப்பு.

விலங்குகளுக்கும் 
பாவ - புண்ணியம் உண்டா?

? தம்பதி சமேதராகப் புனித யாத்திரை மேற்கொள்ள திட்டமிட்டுள் ளோம் . உடல்நிலை காரணமாக தீர்த்தங்களில் நீராட முடியாத நிலை. தீர்த்தமாடலையும் நிறைவேற்றினால்தான் யாத்திரை பூரணமாகுமா ... வழிகாட்டுங்களேன்?

- கே . பரமேஸ்வரன், கோபிசெட்டிப்பாளையம்

தாங்கள் தம்பதியாக புனிதயாத்திரை மேற்கொள்ளுவது மிகவும் சிறப்பானது. கணவன் - மனைவி இருவரும் ஓர் ஆலயத்திற்குச் செல்லும்போது, அதன் மூலம் கிடைக்கும் பலன் உயர்வானது.

தாங்கள், உடல்நிலை காரணமாக தீர்த்தங்களில் நீராட முடியாது என்று கூறியுள்ளீர்கள். அதனால் தவறில்லை. அந்தப் புனித நீரைத் தெளித்துக்கொண்டாலே போதுமானது; பக்தியே முக்கியம். உடல்நிலை முடியாதபோது, அதை மீறி ஒரு செயலைச் செய்தே ஆகவேண்டும் என்று நம் சாஸ்திரங்கள் சாமானியர்களை நிர்ப்பந்திப்பது இல்லை. அதனால், தாங்கள் தம்பதியராக தீர்த்தயாத்திரை சென்று, கடவுளை வணங்கி உடல்நலம் பெற்று ஆரோக்கியமாக இருக்க வாழ்த்துகிறேன்.

குறிப்பாக... தீர்த்தம் என்பது புனிதம் என்று கூறுவார்கள். அதனால்தான் புனிதமான தலங்களுக்குச் சென்று கடவுளின் அருளை பெறக்கூடிய யாத்திரையை `தீர்த்த யாத்திரை' என்று கூறுவார்கள். ஆக, கடவுள் அருளும் குருமார்களின் அருளும் நிறைந்த இடங்களுக்குச் சென்று நம் கர்மவினைகளைப் போக்கி, நன்மையை அடையக்கூடிய யாத்திரையே புனித யாத்திரையாக, தீர்த்த யாத்திரையாக கூறப்படுகிறது.

தாங்கள், தங்களின் உடல் நலத்திற்கு ஏற்றவாறு இந்த தீர்த்த யாத்திரையை மேற்கொண்டு வழிபட்டு வரலாம்.

விலங்குகளுக்கும் 
பாவ - புண்ணியம் உண்டா?

? நமக்கு அன்பளிப்பாக வரும் சேலை, ரவிக்கைத்துணி, தேங்காய் போன்றவற்றை இறை வனுக்குச் சமர்ப்பிக்கலாமா?

- விமலா சாமி, கடலூர்

தூய்மையானது எதுவோ, அதையே அப்பழுக்கற்ற பரம்பொருளுக்கு அளிப்பது நம் மரபு. நமக்கென்று அளிக்கப் பட்ட பொருட்களை நாம் பயன்படுத்துவதே சரியாகும். நாம் கடவுளுக்கு அர்ப்பணிக்க வேண்டியது இருப்பின், அதற்கென்று தனியாக அளிப்பதே சரியாகும்.

? உயிர்களின் பிறப்புக்கும் , அடையும் பலன்களுக்கும் முன் வினைகளே காரணம் என்கிறது இந்து மதம். எனில், பிராணிகளுக்கும் பறவை களுக்கும்கூட பாவ - புண்ணிய கணக்குகள் உண்டா ?

- வேலுசாமி , புதுக்கோட்டை

ஆம்! நம்முடைய முன்ஜன்ம வினைகளின்படியே இன்றைய நமது வாழ்க்கை அமைகிறது. ஒவ்வொரு வரும் பிறப்பு எடுத்திருப்பது, இந்த வினைகளைப் போக்கிக் கொள்ளவே.

ஐந்தறிவு பெற்ற உயிர்கள் மற்றும் அதற்கும் கீழுள்ள பிராணிகளுக்குப் பாவ - புண்ணிய கணக்குகள் இல்லை. மனிதர்களாக இருந்து செய்த புண்ணிய பாவத்திற்கு ஏற்பவே அவை சிறிது காலம் மிருகமாகவோ பிற உயிர்களாகவோ பிறந்து, உரிய கர்மவினைகளைப் போக்கி, மறுபடியும் மனித இனத்திற்கு வந்து சேர்கின்றன.

? காளஹஸ்திக்கு சென்று சர்ப்பப் பரிகார பூஜைகள் செய்வ தாக வேண்டிக் கொண்டிருந்தோம். தற்போது, நேரில் செல்ல இயலாத சூழல் . பெரியவர் ஒருவர் அருகிலேயே ஓர் ஊரைக் குறிப்பிட்டார். காளஹஸ்திக்கு நிகரான தலம் அது . அங்கேயே பரிகாரத்தைச் செய்யலாம் என்கிறார் . அது சரியா?

- கே.ருக்மிணி, சென்னை-67

காளஹஸ்திக்குச் சென்று சர்ப்பப் பரிகார பூஜைகள் செய்வது சிறப்பானது. எனினும் நேரில் செல்ல இயலாத நிலை எனில், தற்காலிகமாக பெரியவர் கூறியபடியே அருகில் உள்ள ஊரில் - ஆலயத்தில் பரிகார பூஜைகள் செய்து கொள்ளலாம். எனினும், நிலைமை சரியான பிறகு காளஹஸ்திக்குச் சென்று பரிகாரம் செய்துக்கொள்வது, மிகப்பெரிய மாற்றத்தை தரும்.

- பதில்கள் தொடரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு