ஜோதிடம்
தொடர்கள்
Published:Updated:

சில்வர் பாத்திரத்தால் அபிஷேகம் செய்யலாமா?

தஞ்சை பெருவுடையார் அபிஷேகம்!
பிரீமியம் ஸ்டோரி
News
தஞ்சை பெருவுடையார் அபிஷேகம்!

காளிகாம்பாள் கோயில் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர்

? இறைவனுக்கு அபிஷேக வைபவம் எதற்காக?

எல்லாம் வல்ல பரம்பொருளுக்கு அபிஷேகம் நிகழ்த்தித் திருப்தி செய்வதால், சகல ஜீவராசிகளும் திருப்தி அடைகின்றன. இயற்கை யில் அவர் நமக்கு அளித்த பொருள்களை அபிஷேகம் முதலான வைபவம் மூலம் அவருக்குத் திரும்ப அளித்து மகிழ்கிறோம். இதையே `அவன் அருளால் அவன் தாள் வணங்கி’ என்று முன் னோர்கள் சொல்லிவைத்துள்ளார்கள்.

சில்வர் பாத்திரத்தால் 
அபிஷேகம் செய்யலாமா?

அபிஷேகம் கடவுளைத் தூய்மைப்படுத்துவதற்காகச் செய்வதல்ல. தூய்மையான நீர், திரவியங்கள், மந்திரங்கள் மற்றும் பாவனைகளால் உரிய அளவில் அபிஷேகம் செய்யப்படும்போது, அந்த விக்ரகத்தில் ஒரு சக்தி ஏற்படும். அந்த ஆற்றல் அந்த இடத்தில் மட்டுமன்றி உலகம் முழுமைக்கும் பரவும். இங்ஙனம் நுண்ணிய கலையாகத் திகழும் இந்தப் பணிவிடையை எப்படிக் கையாள வேண்டும் என்று ஆகமங்கள் நமக்கு வழிகாட்டியுள்ளன. அதன்படிச் செயல் பட்டு இறையருள் பெறவேண்டும்.

? பெளர்ணமி தினங்களில் சிறப்பு அபிஷேகம் செய்ய வேண்டுமா?

வருடத்தில் 12 மாதங்களிலும் வரும் பெளர்ணமி தினத்தில் குறிப்பிட்ட விசேஷமான திரவியங்களால் அபிஷேகம் செய்வதால் பன்மடங்கு பலன் கிடைக்கும். மார்கழி-நெய்; தை-தேன்; மாசி-நெய் கம்பளம் ஊறிய மார்ஜனோதகம்; பங்குனி-தயிர்; சித்திரை-மருக்கொழுந்து ஊறிய புஷ்போதக அபிஷேகம்; வைகாசி-சந்தனம்; ஆனி-முக்கனிகள் ஊறிய பலோதகம்; ஆடி-பசும்பால்; ஆவணி-நாட்டுச் சர்க்கரை; புரட்டாசி- வெண்கரும்புச்சாறு, வெல்ல அப்பம் , அதிரசம் போன்ற பக்ஷணங்களினால் அபிஷேகம்; ஐப்பசி - அன்னம்; கார்த்திகை - நெற்பொரி அவற்றின் பொடிகள் ஊறிய நீர் மற்றும் மித வெப்பமன நீரால் அபிஷேகம் செய்வது சிறந்த பலன்களைத் தரும் என்று ஆகமங்கள் கூறுகின்றன.

சில்வர் பாத்திரத்தால் 
அபிஷேகம் செய்யலாமா?

? சிவபெருமான் அபிஷேகப் பிரியர். அவருக்கான ருத்ராபிஷேகத்தில் என்னென்ன திரவியங்களால் அபிஷேகிக்கலாம்?

சிவபெருமானுக்கு விருப்பமான ருத்ராபிஷேகத்தில் பதினோரு வகையான அபிஷேகங்கள் கூறப்பட்டிருக்கிறது. அவை: சந்தனாதி தைலம், பஞ்சகவ்யம், பஞ்சாம்ருதம், நெய், பால், தயிர், தேன், கரும்புச்சாறு, பழரசங்கள், இளநீர், சந்தனக்குழம்பு.

? ஆலயங்களில் அபிஷேக தீர்த்தத்தை எடுத்து வருவதற்கும் குறிப்பிட்ட நியதிகள் உண்டா?

சிவபெருமானுக்கான அபிஷேக நீரை அந்தத் தலத்தில் உள்ள தீர்த்தக் குளத்திலிருந்து எடுத்து வரவேண்டும். ஆசார்யரால் நியமிக்கப்பட்டவர் ஒருவர், யானையின் மீது அமர்ந்து விதிக்கப் பட்ட குடத்தில் தீர்த்தம் எடுத்துவரவேண்டும் என்ற வழிமுறை முன்பு உண்டு. தற்காலத்தில் இதுபோன்ற நியதி இல்லாவிட்டாலும், தீர்த்தம் எடுத்து வரும் அன்பர் நடந்து சென்றாவது, தீர்த்தத்துக்கு உரிய புனித நீரை உரிய மந்திரங்களை முழங்கியபடி, கொண்டு வரவேண்டும்.

பொன், வெள்ளி அல்லது செம்புக் குடங்களில் மந்திரத்துடன் தீர்த்தம் நிறைத்து, மாவிலை, தேங்காய், தர்ப்பை, பூமாலை சந்தனத் தால் அலங்கரித்து, மங்கல வாத்தியங்கள் முழங்க, தினமும் சூரிய உதயத்துக்குமுன் கொண்டுவந்துவிட வேண்டும்.

இப்படி தினமும் நியமப்படி அபிஷேக நீர் எடுத்துவந்து ஆலயத்தில் இறைவன், நந்தி, பலிபீடம், கொடிமரம், துவாரபாலகர் களுக்கு நித்ய அபிஷேகம் செய்யப்படுவது மிகவும் விசேஷம். இதன் மூலம் அந்த ஊர், நாடு, மன்னனுக்கு நன்மைகள் ஏற்படும். தினமும் இவ்வாறு ஆலய நந்திக்கு அபிஷேகம் நிகழ்ந்தால், அந்த ஊரில் சர்வ காரியசித்தி ஏற்படும் என்கின்றன ஆகமங்கள்.

? ஆலயங்களில் அபிஷேகம் எவ்வித வரிசை நியமப்படி நடைபெற வேண்டும்?

ஆகம நூல்களில் அபிஷேக வரிசைகள் கூறப்பட்டுள்ளன. அந்த விவரம்: சுகந்த தைலம், பச்சரிசி மாப்பொடி, நெல்லிவற்றல் பொடி, மஞ்சள் பொடி, திரவிய (மரப்பட்டையின்) பொடி, பஞ்சகவ்யம், பஞ்சாம்ருதம், (ரஸ பஞ்சாமிர்தம் - பால், தயிர், நெய், தேன், சர்க் கரை ஆகிய ஐந்தும் சேர்ந்தது. இவற்றுடன் மா, பலா, வாழை மூன்றையும் சேர்த்தால் அது பழ பஞ்சாமிர்தம்) பசும்பால், தயிர், நெய், சர்க்கரை ( நாட்டுச்சர்க்கரை), தேன், கரும்புச்சாறு, பழரசம் (எலுமிச்சை, நாரத்தம் பழம், மாதுளை ஆகியவற்றின் சாறு), இளநீர், அன்னம், விபூதி, சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகிக்கலாம்.

தொடர்ந்து தாரா பாத்திரம் மற்றும் வலம்புரிச் சங்கு மூலம் ஜலம் கொண்டு அபிஷேகிக்கலாம். பிறகு ஸ்நபனம், விசேஷார்க்யம் ஆகிய முறையில் மூல மூர்த்திக்கு அந்தந்த காலங்களில் அபிஷேகம் செய்ய வேண்டும். சிவபெருமானது ஈசான முகத்தில் செய்வதாகப் பாவித்தல் வேண்டும்.

சில்வர் பாத்திரத்தால் 
அபிஷேகம் செய்யலாமா?

? அபிஷேகத் திரவியங்களின் அளவு, அபிஷேகப் பணிவிடையில் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன?

ஆலயங்களில் நித்ய பூஜையில் - ஒரு காலத்திற்குச் செய்யப்படும் அபிஷேகத்துக்கான திரவியங்களின் அளவுகளும் ஆகமங்களில் கூறப்பட்டிருக்கின்றன.

நல்லெண்ணெய்-1 படி; வாழைப்பழங்கள்-25; பலாப்பழம்-1; எலுமிச்சைப்பழம்-25; மாம்பழம்-15; மாதுளை-10, நாரத்தம்பழம்- 12; பசு நெய்-கால்படி; பஞ்சகவ்யம்-ஒரு மரக்கால்; பசும்பால்-6 படி; தயிர்-12 படி; மஞ்சள் பொடி - 1 பலம்; மாப்பொடி - 1 படி; நெல்லிமுள்ளி - 3 பலம்; கடலை உளுந்து பயறு வகைப் பொடிகள் வகைக்கு - 1 படி; கரும்புச் சாறு - 3 படி.

அபிஷேகத்துக்குப் பின் அந்தந்தப் பொருளால் நிவேதனம் செய் யலாம். காலத்திற்கு ஏற்ற வகையில் செய்வது அவசியம். மொத்தம் 2 நாழிகைகளுக்குள் (48 நிமிடங்கள்) செய்திடல் வேண்டும்.

அபிஷேகத்தின்போது சிவபெருமானின் ஆவுடையார் துணியி னால் மறைக்கப்பட்டிருக்க வேண்டும். சிரசில் `இண்டம்’ எனப் படும் கொண்டை மாலையை உடனே சூடவேண்டும். எக்காரணம் கொண்டும் சிவபெருமானைத் தலையில் மலர் இல்லாமல் பார்க்கக் கூடாது என்று ஆகமங்கள் கூறுகின்றன. அதேபோல் சில அபிஷே கங்களைத் திரையிட்டுச் செய்ய வேண்டும். சிலவற்றையே பக்தர் கள் தரிசிக்கலாம்.

? அபிஷேக எண்ணிக்கை, பாத்திரங்கள் குறித்து ஆகமங்கள் தரும் வழிகாட்டல் என்ன?

தினமும் நித்திய பூஜையில் 5, 9, 12, 16, 18, 25 என்று பல எண்ணிக் கைகளில் அபிஷேத்திற்குரிய திரவியங்களின் வரிசைக் கிரமத்தை ஆகமங்கள் விளக்குகின்றன.

அபிஷேகப் பாத்திரங்கள் தங்கம், வெள்ளி, தாமிரம் அல்லது மண்ணால் ஆனதாக இருக்கலாம். இரும்பு, எவர்சில்வர், அலுமினியப் பாத்திரங்களை நிச்சயம் தவிர்க்க வேண்டும். இவை இல்லையெனில் சங்கு, வாழை இலை, தாமரை இலை ஆகியவற்றைப் பயன்படுத்தி அபிஷேகம் செய்யலாம்.

? வீடுகளில் என்னென்ன அபிஷேகப் பொருள்களைப் பயன்படுத்த லாம்?

வீடுகளில் பூஜை செய்யும்போது பால், தயிர், நெய், தேன் இளநீர், கரும்புச்சாறு, சந்தனம், தூய நீர் ஆகிய அபிஷேகப் பொருள்கள் இருத்தல் முறை. வீடுகளிலும் இரும்பு சம்பந்தமான பாத்திரங்களைத் தவிர்ப்பது நலன். கடவுளின் விக்ரகத்தின் தலைக்கு மேலே நான்கு அங்குலம் உயரத்திலிருந்து பசுவின் கொம்பு நுனி அளவு பருமன் உள்ளதாக நீர் தாரையாக அபிஷேகித்தல் வேண்டும்.

அபிஷேகத் தீர்த்தத்தில் ஏலக்காய், கிராம்பு, பச்சைக் கற்பூரம், சந்தனம், கோரோஜனை, தக்கோலம் வெட்டிவேர், விளாமிச்சை வேர், தங்கம் போன்ற சிறப்பான திரவியங்களைச் சேர்த்துக் கொள்வது சிறப்பு.

சில்வர் பாத்திரத்தால் 
அபிஷேகம் செய்யலாமா?
Prabhat kumar verma

இறை அபிஷேகம்... என்னென்ன திரவியங்கள்
என்னென்ன பலன்கள்?

தூய நீர் - இஷ்டத்தைத் தரும்
கந்த தைலம் - சுகம் தரும்
பஞ்சகவ்யம் - பாவத்தைப் போக்கும்
பஞ்சாம்ருதம் - புஷ்டி அளிக்கும்
நெய் - மோக்ஷம் கொடுக்கும்
பால் - ஆயுளைக் கொடுக்கும்
தயிர் - குழந்தை வரம் அளிக்கும்
அரிசிமாவுப் பொடி - கடனைப்போக்கும்
நெல்லிமுள்ளி - ரோகத்தைப் போக்கும்
கரும்புச்சாறு - ஆரோக்கியம் தரும்
வாழைப்பழம் - விளையும் பயிர்களைக் வளர்க்கும்
மர இலைகள் ஊறவைக்கப்பட்ட நீர்- உலக வசியம் ஏற்படும்
மாம்பழம் - புத்திரனைத் தரும்
இளநீர் - சுகபோகம் அளிக்கும்
எலுமிச்சை - விபத்தைப் போக்கும்
அன்னாபிஷேகம் - சாம்ராஜ்யம் தரும்
சந்தனம் - லக்ஷ்மீ கடாக்ஷம்
நைவேத்தியம் - ஆளுமையைக் கொடுக்கும்
தாம்பூலம் - சுகம் தரும்

- பதில்கள் தொடரும்...