? கடவுளர் அல்லது மகான்களின் ஜாதக நகலை பூஜையறையில் வைத்து வழிபடுவதால் பலன் கிடைக்குமா?
- மல்லிகா அன்பழகன், சென்னை
மகான்கள் கூறிய நல்லுரைகளை அறிந்துகொண்டு, அவற்றைக் கடைப்பிடித்து, அதன்படி நம் வாழ்க்கையை அமைத்துக்கொள்வதே மகான்களின் அருளைப்பெற மிகச் சிறந்த வழி. அவர்களுடைய உருவப்படங்களையோ, ஜாதக நகலையோ அல்லது அவர்கள் பயன்படுத்திய பொருள்களையோ நாம் வழிபடுவது என்பது, முன் சொன்னபடி அவர்களுடைய அறிவுரைப்படி நடக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்தால் வரவேற்கத்தக்கதே. அதனால் பயனும் கிடைக்கும். நாம் எந்த வகையிலாவது மகான்களை தியானித்து, அவர்களுடைய வழிகாட்டுதலின்படி நாம் நம் வாழ்க்கையை அமைத்துக்கொள்வது சிறந்ததே.
? துன்பம் வரும்போது கடவுளை நிந்திக்கத் தோன்றுகிறது. இன்னும் சிலர் பூஜை, புனஸ்காரங்களை நிறுத்திவிடுகிறார்கள். இது சரியா?
- ஆர்.ரகுநாதன், கும்பகோணம்
கடவுளிடம் நாம் செலுத்தவேண்டியது அன்பு. அன்பானது எந்த ஒரு பலனையும் எதிர்பார்க்காது. எதிர்பார்ப்பு வியாபாரத்தில்தான் இருக்கும்.
எப்படி நம் தாய் தந்தையரிடம் அன்பு செலுத்துவது நம் கடமையோ, அதுபோன்று இந்த உலகைப் படைத்து, காத்துவரும் இறைவனுக்கு பூஜை செய்வது என்பது நம் முதல் கடமை.
இன்பமோ அல்லது துன்பமோ மனத்தில் சஞ்சலம் இல்லாமல், ஒரே நிலையில் இருப்பதே சிறந்த பக்தனுக்கு உரிய இலக்கணம். பூஜை செய்வது என்பது நம்முடைய நன்மைக்காகத் தானே தவிர, கடவுளுக்கு அதனால் ஆகப்போவது ஒன்றுமில்லை. அவரை உத்தேசித்து நாம் பூஜை செய்தாலும்கூட, அதன் பலன் என்னவோ நமக்குத்தான் கிடைக்கப்போகிறது. அவர் விருப்புவெறுப்பு அற்றவர்.

நமக்கு சில நேரங்களில் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டால், மூச்சை நிறுத்திவிட்டால் நல்லது என்று யாராவது சொன்னால் கேட்பீர்களா? இல்லையே. சரியான முறையில் நாம் மூச்சுவிட்டால்தான் நாம் உயிர் வாழ முடியும். அதேபோன்று நமக்குத் துன்பம் ஏற்படும்போது யாராவது வந்து நம்மிடம் பூஜை செய்வதை நிறுத்திவிடச் சொன்னால், அதைக் கேட்காமல், மேலும் சிறப்பான முறையில் சிரத்தையுடன் கடவுளை வழிபடுவதே சிறந்த பக்தி.
உண்மையான பக்திமான்கள் இப்படித்தான் செய்வார்கள். நம்முடைய இந்த தர்ம வரலாற்றில் எத்தனையோ மகான்கள், ஆழ்வார்கள், நாயன்மார்கள் போன்றோர் எவ்வளவு துன்பத்தை அனுபவித்தாலும், தங்களுடைய அசைக்க முடியாத பக்தியினால்தான் கடவுளை அடைந்தார்கள். இதை நினைவில்கொண்டு, துன்பங்கள் வரும்போது மேலும் கடவுள் வழிபாட்டினைத் தொடர வேண்டும். நாம் இந்த உலகத்தில் வெற்றி அடையவும், அதன் பிறகு எல்லையில்லாத ஆனந்தமயமான முக்தியைப் பெறுவதற்கு உகந்த வழியாகும். இந்த வழியைத்தான் நம் முன்னோர்கள் காட்டியுள்ளார்கள்.
? கும்பாபிஷேகம் நடந்த கோயிலை 48 நாள் களுக்குள் தரிசித்திட வேண்டும் என்று சொல்வது ஏன்?
- த.சத்தியநாராயணன், அயன்புரம்
கும்பாபிஷேகம் நடைபெற்று, 45 நாள்கள் அல்லது 48 நாள்களில் அந்த ஆலயத்தில் மண்டலாபிஷேகம் என்ற பெயரில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். மண்டலாபிஷேக நிறைவு நாளில்தான் கடவுளரின் திருக்கரங்களில் கட்டிய காப்பை அவிழ்ப்பது மரபு. மண்டலாபிஷேகம் என்பதை மிகவும் சிறப்பாகக் கூறுவர். அந்த மந்திர சக்திகளின் அருளைப் பெறுவதற்கு நம்முடைய தரிசனம் உதவும். அப்படி முடியாத நிலையில் அதன் பிறகும்கூட தரிசிக்கலாம். பலன் கிடைக்கவே செய்யும்.
? சில கோயில்களில் சுவாமிக்கு சாற்றிய மாலையை வி.ஐ.பி-க்களுக்குப் போடுகிறார்களே. இது சரியா?
- எஸ்.மகாலக்ஷ்மி, காரைக்கால்
ஆலயங்களில் நம்முடைய கர்மவினைகளின் பிரதிநிதியாக வாசனையுள்ள மலர்கள் மற்றும் மாலைகளை கடவுளுக்கு அர்ப்பணிப்பது நிறைவான பலனைத் தரும். ஆலயம் செல்லும் எவரும் வெறும் கையுடன் செல்லக் கூடாது. ஒரு பூவையோ அல்லது ஓர் இலையையோ ஏதேனும் ஒன்றை அளித்து, நம் அன்பினை வெளிப்படுத்துவது நம் மரபு.
கடவுளுக்கு அளிக்கப்பட்ட பொருள் தூய்மை பெற்றுவிடுவதால், அதை அருள்பிரசாதமாக பக்தர்களுக்கு அளிப்பதன் மூலம் அவர்களின் கடவுள் நம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும். அது மட்டுமல்லாமல் அவர்களுடைய ஆற்றலையும், பாதுகாப்பு உணர்வையும் அதிகரிக்கச் செய்யும். பலரின் பிரதிநிதியாக வரும் முக்கியப் பிரமுகர்களுக்கு மரியாதை செய்வது அவசியமானதே. ராஜாவுக்காக ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தும்படி ஆகமங்கள் பணித்திருக்கின்றன.

இப்போது மன்னர்களுக்குப் பதிலாக மக்களின் சார்பாக நீதியரசர்களும், காவல்துறை அதிகாரிகளும், அரசு அதிகாரிகளும், அரசியல் பிரமுகர்களும் இருக்கிறார்கள். இதை யாரும் மறுக்க முடியாது. எப்படி வேரில் தண்ணீர்விட்டால், அது மரம் முழுவதும் செல்கிறதோ அப்படி கோயிலுக்கு வரும் முக்கியப் பிரமுகர்களுக்கு செய்யப்படும் மரியாதை, அனைத்து மக்களையும் சாரும் என்ற உயர்ந்த எண்ணத்தினால்தான் அவர்களுக்கு மாலை போன்ற சிறப்பு பிரார்த்தனைப் பிரசாதங்கள் வழங்கப்படுகின்றன. அவர்கள் நன்றாக இருந்தால் அவர் துறை சார்ந்த அனைவரும் நன்றாக இருப்பார்கள் என்பதைப் புரிந்துகொள்பவர்கள் இதற்கு ஆதரவு தருவார்கள்.
பக்தர்களால் கொடுக்கப்படும் மாலைகள் நாள் முழுவதும் கடவுளின் திருமேனியில் இருப்பது சாத்தியமற்றது. அவை பக்தர்களுக்கும் பகிர்ந்துகொடுப்பதை தாங்கள் பார்த்திருக்கலாம். எனவே, கடவுளுக்கு அர்ப்பணிக்கும் மாலைகளை, பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு பிரசாதமாக அளிப்பது சிறந்ததே. அதன் மூலம் அவர்களுக்குக் கிடைக்கும் தெய்விக சக்தியினால் மேலும் மக்களுக்குச் சேவை செய்யக்கூடியவர்களாக விளங்குவர்.
? பூஜையறையில் மகான்களின் படங்களை மற்ற தெய்வப் படங்களுடன் வைத்து வழிபடலாமா அல்லது தனியாக வைத்து வழிபட வேண்டுமா?
- எஸ்.மகாலக்ஷ்மி, காரைக்கால்
கடவுளரின் படங்களைத் தனியாகவும், அதற்கு அடுத்து மகான்களின் படங்களையும் தனியாக வைப்பது சிறந்தது. சிலர் குருவே எனக்கு இறைவனை உணர்த்தியவர், அதனால் அவரை வழிபட்டே கடவுளை வழிபடுவேன் என்று கூறலாம். அது அவரவர் விருப்பம். கடவுளையும், மகான்களையும், முன்னோர்களையும் தனித் தனியாக வைத்து நம் பக்தியை வெளிப்படுத்து வதையே நம் முன்னோர் வழக்கமாக வைத்திருந்தனர்.
- பதில்கள் தொடரும்...
வாசகர்களே... ஆன்மிகம் தொடர்பான அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் தருகிறார், சென்னை `காளிகாம்பாள் கோயில்' சிவஸ்ரீசண்முக சிவாசார்யர்.
கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி: கேள்வி-பதில், சக்தி விகடன் 757, அண்ணாசாலை, சென்னை-600 002