Published:Updated:

கேள்வி - பதில்: கனவில் செய்யும் தவறுகளுக்கு தண்டனை உண்டா?

கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி - பதில்

ஓவியம்: கேஷவ்

கேள்வி - பதில்: கனவில் செய்யும் தவறுகளுக்கு தண்டனை உண்டா?

ஓவியம்: கேஷவ்

Published:Updated:
கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி - பதில்

? ஸ்ரீராமஜெயம், ஓம் சாய்ராம் என்று எழுதுவதால் கிடைக்கக்கூடிய பலன் என்ன... அதனால் மனம் ஒருமைப்படும் என்று சொல் கிறார்களே, அது உண்மையா?

- மகேஸ்வரி, வேலூர்-2

ஆம்! நாம் வாக்கினாலோ, மனத்தினாலோ மந்திரங்கள் சொல்லும்போதுகூட நம் கவனம் சிறிது சிதறுவதற்கு வாய்ப்புள்ளது.ஆனால், தங்களுக்குப் பிடித்தமான தெய்வங்களின் பெயரையோ, குருவின் பெயரையோ தொடர்ந்து எழுதி வரும்போது, சிறிது கவனம் சிதறினாலும் தொடர்ந்து எழுத முடியாது. ஆக, கவனம் சிதற வாய்ப்பே இல்லை. இதைத் தாங்களே முயற்சி செய்து பார்க்கலாம்.

எனவேதான் நம் முன்னோர் `மந்திரங்களை எழுதி, பிறகு படிக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்கள். நம் தலைமுறையிலும் சிறு வயதில் எதையும் எழுதிப் படிக்கும் வழக்கம் உண்டு. அடுத்த தலைமுறைக்கும் இந்தப் பழக்கத்தைக் கற்றுக்கொடுக்கவேண்டியது மிகவும் அவசியம். எழுதுதல் என்பது மனம் ஒருமுகப்படுவதற்கு மிக முக்கியமான பயிற்சியாகும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

? கடவுளை நம்புவோர் கஷ்டப்படுகிறார்கள். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களோ, சுகமாக - சௌகர்யமாக இருக்கிறார்கள். இது எப்படிச் சரியாகும்?

- மணிவண்ணன், திருச்சி-2

அப்படிப் பொதுவாக நாம் சொல்லிவிட முடியாது. கடவுள் உண்மையானவர் என்றும் அனைத்து ஆற்றல்களும் பெற்றவர் என்றும் தாங்கள் உறுதியாக நம்பி சரணடைந்தால், இப்படிப்பட்ட எண்ணங்கள் தோன்றாது; நம்மை பாதிக்கவும் செய்யாது.

நம்முடைய முற்பிறவிகளில் செய்த தீய வினைகள் என்னவென்றும் அவற்றின் அளவு எவ்வளவு என்றும் நமக்குத் தெரியாது. நாம் அன்றாடம் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டு வந்தால், நம்முடைய எண்ணங்கள் மற்றும் செயல்களின் மூலம் நம்முடைய தீய வினைகள் அழிக்கப்பட்டு, அதன்பிறகே நமக்கு ஆனந்தம் ஏற்படும். இதில் எந்தக் குழப்பமும் வேண்டாம்.

கேள்வி - பதில்: கனவில் செய்யும் தவறுகளுக்கு தண்டனை உண்டா?

`கடவுள் நம்பிக்கை இல்லாதவர்' என்று தாங்கள் கருதும் அன்பர்கள், அவர்களின் முற்பிறவியில் செய்த நல்வினைகளின் பலனை அனுபவித்து வருகிறார்கள் என்பதே உண்மை. அவற்றின் பலன் முடிந்ததும் அவர்களும் தங்கள் தவற்றுகளுக்கான பலனை அனுபவிக்கவே செய்வார்கள்.

இதற்கு, நம் புராணங்களிலும் இதிகாசங்களிலும் பல சான்றுகள் உள்ளன. அரிச்சந்திர மகாராஜா வுக்கு ஏற்பட்ட துன்பங்களை நாம் அறிவோம்.

வினைகள், வினைப்பயன்கள் அனைத்தும் கடவுள் ஏற்படுத்திய தத்துவங்களுக்குள் அடங்கி விடும். `நியதித் தத்துவம்' என்பது, இவை இப்படி இருக்க வேண்டும் என்று வரையறை செய்வது. `காலத் தத்துவம்' என்பது, இந்தக் காலத்தில் இவை. இப்படி நடைபெற வேண்டும் என்று தீர்மானிப்பது.

அந்த வகையில், நாம் அனைவரும் கடவுளின் கட்டளைக்கு உட்பட்டவர்களே. எனவே, நாம் இடைவிடாமல் கடவுளை வழிபட்டு வந்தால், நம்முடைய தீயவினைகள் நசுக்கப்பட்டு நற்பலன்களை அடைவோம். நம்பிக்கையே முக்கியமானது.

? வரலட்சுமி பூஜை முடிந்ததும் சுமங்கலிப் பெண்களுக்கு உணவும் தாம்பூலமும் கொடுத்துவிட்டு, வாசற்கதவைப் பிடித்தபடி நின்றுகொண்டிருந்த போது, வேகமாக வீசிய காற்றின் விசையால் மூடிய கதவின் இடுக்கில் கை விரல் மாட்டிக்கொண்டு ரத்தம் சிந்திவிட்டது. இதற்குக் காரணம் என்ன... பூஜையில் ஏதேனும் குறைகள் இருந்திருக்குமா என்று மனம் சலனப்படுகிறது!

- நளினி கல்யாணசுந்தரம், சென்னை - 33

பல நேரங்களில் துன்பம் என்பது நாமே வரவழைத்துக்கொள்வதாக இருக்கிறது. தாங்கள் செய்த பூஜை சிறப்பாக இருந்ததால்தான், மிகப் பெரிய ஆபத்தாக இல்லாமல் சிறு காயத்துடன் நின்றுவிட்டது என்று எண்ணுங்கள்; வீண் சலனம் தேவையில்லை. ‘யத் பாவம் தத் பவதி - நாம் என்ன நினைக்கிறோமோ அப்படியே ஆகிவிடுவோம்' என்ற கூற்றை மனத்தில்கொள்வோம். தைரியமாக இருங்கள். ஏதோ கவனக்குறைவினால் ஏற்பட்டு விட்டது. கடவுள் காப்பாற்றிவிட்டார் என்று நினைத்து நிம்மதிப் பெருமூச்சு விடுங்கள். நாம் செய்யும் பூஜை, எப்போதும் நம்மைக் காப்பாற்றும் என்று உறுதியாக நம்புங்கள்.

ஒருவர் மழையில் சென்றுகொண்டிருக்கும் போது, குடைபிடித்துக் கொண்டிருந்தாலும் கால்கள் நனையத்தானே செய்யும். குடை இல்லாமல் இருந்தால் முழுவதும் நனைந்திருப்போம்.

எனவே, நாம் நல்ல காரியங்கள் செய்வது என்பது நமக்கு மிகப் பெரிய காப்பு. நாம் எந்தப் பலனையும் கருதாமல் நம்பிக்கையோடு வழிபாடுகளை மேற்கொள்வோம். நம் வினைப் பயன்களுக்கு ஏற்ப சுகமோ அல்லது துக்கமோ வருவது நியதி. ஆனால், பூஜையின் பலன் காப்பாகும்; துக்கம் நம்மைப் பெரிய அளவில் பாதிக்காது. ஆகவே, தாங்கள் கவலைகொள்ள வேண்டியதில்லை. தங்கள் பூஜை சிறப்பானதே.

? மந்திரங்கள், ஜபங்கள் ஆகியவற்றை 108, 1008 என்ற எண்ணிக்கையில் வைத்திருக் கிறார்கள். அவற்றை ஏன் 100 என்றோ, 1000 என்றோ வைத்திருக்கக் கூடாது?

- ராகவன், சென்னை-87

காரணங்களைத் தெரிந்துகொண்டுதான் செய்வோம் என்றால், நாம் நம்முடைய அன்றாடக் காரியங்களைக்கூடச் செய்ய முடியாது. நம்முடைய ரிஷிகள் எந்த ஒரு பலனும் கருதாமல், நம்முடைய நல்வாழ்வு ஒன்றே முக்கியமானது என்று நினைத்து, நமக்கான விதிகளை வகுத்திருக்கிறார்கள். அவற்றை அப்படியே பின்பற்றுவதன் மூலம் நன்மை பெறுபவர்கள் நாம்தாம்.

108, 1008 என்ற எண்ணிக்கைக்கு... அவரவருக்குப் புரிந்தபடி விளக்கங்கள் கொடுக்கலாம். ஆனால், நாம் பரிபூரண நம்பிக்கை வைத்து ஒரு காரியத்தைச் செய்யாவிட்டால், இத்தகைய விளக்கங்கள் முழுமை பெறாது. நம் முன்னோர் கடைப்பிடித்து நன்மை அடைந்த விஷயங்களை, நாமும் கடைப்பிடித்து நன்மை அடைவோம் என்ற எண்ணமே போதுமானது.

? மகாபாரதத்தை வீட்டில் படித்தால் சண்டை வரும் என்று சொல்கிறார்களே... உண்மையா?

- நா.நாகராஜன், சென்னை-93

கண்டிப்பாக இல்லை. மகாபாரதம், ராமாயணம் இரண்டும் நம் இதிகாசங்கள். இரண்டும் நமக்கான பொக்கிஷங்கள். அனைவரும் கூடும் ஆலயங்களிலேயே மகாபாரதக் கதைகள் கூறப்பட்டு வருகின்றன. மகாபாரதம் படித்தால் சண்டை வரும் என்றால் எல்லா இடங்களிலும்தானே வர வேண்டும்?!

கேள்வி - பதில்: கனவில் செய்யும் தவறுகளுக்கு தண்டனை உண்டா?

இதுபோன்ற இதிகாசங்களைப் படிக்கும் இடங்களில், முன்னதாக சண்டை சச்சரவுகள் இருந்தாலும் அவை குறையும் என்பதுதான் உண்மை. எண்ணற்ற தர்ம உரைகளைத் தன்னகத்தேகொண்ட இந்த உயர்ந்த நூல்களை ஒவ்வொரு குடும்பத்தினரும் வாரம் ஒருமுறையேனும் பாராயணம் செய்துவந்தால், குடும்பத்தினரிடையே ஒற்றுமை ஓங்கும். இவை எங்கெல்லாம் பாராயணம் செய்யப் படுகின்றனவோ, அங்கெல்லாம் துன்பங்கள் குறையும்; வெற்றி கிடைக்கும். எனவே, வேதங் களுக்கு இணையாகப் போற்றப்படும் மகாபாரதம் போன்ற நூல்களை, வீட்டில் வைத்தும் படிப்பது சிறந்ததே.

இதுபோன்ற பாராயணங்கள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பதற்காக, நம் முன்னோர், தங்கள் உடைமைகளில் சிலவற்றை மான்யமாக வழங்கியுள்ளனர். ஆலயங்களிலும் நிறைய ஆன்மிகச் சொற்பொழிவுகள் நடைபெற்று வந்தன. அதுபோன்று மீண்டும் அதிக அளவில் நடைபெற்றால், இப்போதுள்ள பல பிரச்னை களுக்குத் தீர்வு கிடைக்கும்.

? நாம் விழித்திருக்கும்போது செய்ய தயங்கும் பாவ செயல்களை, கனவில் செய்வதுபோல் காண் கிறோம். அதனால் நமக்குப் பாவம் சேருமா?

- எஸ்.ஜானகி, கல்லிடைக்குறிச்சி

நாம் விழித்திருக்கும்போது, நம்முடைய முயற்சியின்பேரில் செய்யப்படும் இதுபோன்ற செயல்கள் நமக்குப் பாவத்தைக் கொடுக்கும். ஆனால், கனவில் தோன்றுவதை நாம் என்ன செய்ய முடியும்?

அது, நம் பூர்வஜன்ம வாசனையால் ஏற்படலாம். அதுபோன்றவற்றைத் தொலைக்காட்சிகளில் பார்ப்பதாலோ, மற்றவர்கள் விவரிக்கக் கேட்பதாலோ நம் உள்மனதில் சில தாக்கங்கள் ஏற்படலாம். அதனால்கூட இது போன்ற கனவுகள் வரலாம். எனவே, இதில் தவறு ஒன்றுமில்லை.

இதுபோன்று கனவுகள் வந்தால், உடனே விழித்துக்கொண்டு முகத்தை அலம்பி, நெற்றியில் சமயச் சின்னம் தரித்துக்கொண்டு, கடவுளை வேண்டிக்கொண்டு மறுபடியும் தூங்கிவிட வேண்டும். வீண் சிந்தனை தேவையில்லை.

- பதில்கள் தொடரும்...

வாசகர்களே... ஆன்மிகம் தொடர்பான அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் தருகிறார், சென்னை `காளிகாம்பாள் கோயில்' சிவஸ்ரீசண்முக சிவாசார்யர்.

கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி: கேள்வி-பதில், சக்தி விகடன் 757, அண்ணாசாலை, சென்னை-600 002