மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேள்வி - பதில்: உடலைப் பிரிந்தபின் உயிரின் நிலை என்ன?

கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
News
கேள்வி - பதில்

விதி நமக்குச் சூழ்நிலையை உருவாக்கிக் கொடுக்கிறது. அந்தச் சூழ்நிலையில் நம்முடைய திறமையையும் முயற்சியையும் விடாமல் தொடர வேண்டும்.

? ஒருவர் ஆன்மிக மார்க்கத்தில் உயர்வு பெற உண்ணாமல் விரதம் இருப்பது, உறங்காமல் விழித்திருப்பது, தாம்பத்திய உறவை மறுப்பது ஆகியவை முக்கியமாகச் சொல்லப்படுகின்றன. இந்த வழிமுறைகள் ஏன்?

- ஆர்.ராமகிருஷ்ணன், பெங்களூரு

இவை எல்லா ஜீவராசிகளுக்கும் பொது. பசி, தூக்கம், தாம்பத்திய உறவு போன்றவை அவரவர் பிறந்த பிறவியில் அவர்களை நிலை நிறுத்தச்செய்கின்றன. ஆனால், நம்மை மேல் நோக்கிய பாதையில் அழைத்துச்செல்ல அவற்றைக் கட்டுப்படுத்தவேண்டியது மிகவும் அவசியமானது. கூடவே கூடாது என்று சொல்லப்படவில்லை; கட்டுப்பாடு தேவை என்றே வழிகாட்டல் இருக்கிறது.

இந்திரியங்களின் வழியே நம் மனம் சென்றுவிட்டால், தெய்விக அனுபவத்தைப் பெறுவது கடினமாகிவிடும். எனவே, விரத காலங்களில் நம் மனத்தைக் கட்டுப் படுத்துவதற்கு இதுபோன்ற பயிற்சிகள் நமக்கு உதவும். இல்லற தர்மத்தைக் காக்க வேண்டியதும் நம் கடமை.

முற்றும் துறந்த ஞானிகளுக்கு அனைத்துக் காலங்களிலும் கட்டுப்பாடு அதிகம். இல்லறத்தில் இருப்பவர்களுக்கு முக்கியமான விரத காலங்களில், இதுபோன்ற பயிற்சிகள் மனக் கட்டுப்பாட்டை அளிக்கின்றன.

?இறைவனை வடிவங்களுக்கு அப்பாற்பட்டவர் என்றும் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவர் என்றும் சொல்வர். எனில், அவருக்கென்று ஒரு வடிவம் கொடுப்பதும் அவரை தரிசிக்கக் கோயிலுக் குச் செல்வதும் ஏன்?

- எம்.ராமகிருஷ்ணன், கீரனூர்

`இந்த வடிவங்களில் என்னை வழிபடு' என்று கட்டளையிட்டிருப்பதும் இறைவனே. இல்லையென்றால், இறைவனுடன் உறவாடிய நம்முடைய நாயன்மார்களும் ஆழ்வார்களும் ஆலயங்களுக்குச் சென்று இறைவனை தரிசித்து, துதிப் பாடல்களைப் பாடி, அவற்றை நமக்குப் பொக்கிஷமாக அளித்திருக்க மாட்டார்கள்.

இறைவனை ஒரு வடிவத்தில் கோயிலில் வைத்து வழிபடுவது உயர்ந்த நிலையே. கோயிலில் நடைபெறும் வழிபாடுகள், ஞானியர், குறிப்பிட்ட நபர்கள் என்று தனிப் பட்ட சிலருக்காக மட்டுமல்லாமல், அனைத்து ஜீவராசிகளுக்கும் பொதுவானவை.

அனைத்து இடங்களிலும் இறைவன் இருந்தாலும், ஆலயங்களில் சிற்பியின் கை வண்ணத்தில் உருவான சிலா விக்கிரகங்கள், ஆசார்யர்களின் மந்திர சக்தியினால் - பிரதிஷ்டை என்னும் செய்கையினால் உயிர் பெற்றதாகிவிடுகின்றன.

தற்காலத்தில் ‘ஆக்டிவேஷன்’ என்று கூறுவதைப்போல், எங்கும் நீக்கமற நிறைந்துள்ள இறை சக்தியை, அனைவரின் நலன் வேண்டி ஓர் இடத்தில் நிலைநிறுத்தச் செய்யும் உயர்ந்த ரகசியத்தை நம்முடைய ஆலயங்கள் நமக்கு அருளியுள்ளன. இன்றளவும் ஆசார்ய பெரு மக்களும் சிற்பிகளும் இவற்றைப் பின்பற்றியே செய்து வருகிறார்கள்.

கேள்வி - பதில்: உடலைப் பிரிந்தபின் உயிரின் நிலை என்ன?

அனைவரின் நலனுக்காக இறைவன் திருவுள்ளபடி அமைந்தவையே ஆலயங்கள். அங்கு இறையருள் நிறைந்திருப்பதை அனுபவத் தால் உணரலாம். ஆலயங்களில் சிலை வடிவத்தில் உறைந்திருக்கும் இறை வடிவின் வழியாக இறையுணர்வைப் பெறுவதை, ஓர் எளிய முறையாக நம் சனாதன தர்மம் அளித்துள்ளது.

? விதிப்படிதான் வாழ்க்கை என்றால் மனிதனின் திறமைக்கும் முயற்சிக்கும் அவசியம் என்ன?

- ஆர்.பொற்செல்வி, சென்னை - 40

விதி நமக்குச் சூழ்நிலையை உருவாக்கிக் கொடுக்கிறது. அந்தச் சூழ்நிலையில் நம்முடைய திறமையையும் முயற்சியையும் விடாமல் தொடர வேண்டும்.

விதையை நல்ல நிலத்தில் விதைத்தால் மட்டும் போதாது; தினமும் அதற்குத் தண்ணீர் விடவும் வேண்டும். காற்றும் சூரிய ஒளியும் அந்த விதை மரமாக வளர்வதற்கு எப்படி உதவுகின்றனவோ, அதேபோல் விதியுடன் நம்முடைய முயற்சியும் திறமையுமே சேர்ந்தேதான் நமக்குப் பலன் கொடுக்கின்றன. `விதி' என்று விட்டுவிடாமல், நம்மால் இயன்ற அளவு நம்முடைய ஆற்றலை வெளிப்படுத்துவது அவசியம்.

சிலநேரம் நாம், நம்முடைய முழு முயற்சி மற்றும் திறமையை அளித்தாலும், அந்தக் காரியம் முழுமை அடைவதில்லை. ஆனால், சில தருணங்களில் சிறிய முயற்சியிலேயே காரியம் கைகூடிவிடும். ஆக, விதிப்பயனை நல்ல வழியில் அடைந்திட, பக்தியுடன் கூடிய நம்முடைய செயல்கள் உதவும்.

முயற்சி என்பது நம்முடையது. அதனுடன் ‘திரு’ என்ற தெய்வ சக்தியும் இணையும்போது, வினையானது நல்லவிதமாக நிறைவுபெறுகிறது.

?நல்ல நோக்கத்துடன் நாம் செய்யும் வழிபாட்டுக்கு உரிய பலன் கிடைக்காவிட்டால், மனம் பக்தியின் பிடியில் இருந்து நழுவி விடுகிறதே... இதற்கு என்ன செய்வது?

- எஸ்.சிவராஜ குமார், கும்பகோணம்

பலனைக் கருதாமல் செய்து பாருங்கள். ஆரம்பத்தில் சிறிது கடினமாக இருந்தாலும், பயிற்சியினால் அனைவரும் அந்த மனப் பக்குவத்தை அடையலாம்.

நாம் ஒரு பலனை எதிர்பார்த்து சிறப்பு வழிபாடுகள் செய்வது தவறாகாது. இது போன்ற வழிபாடுகளை ‘காம்ய உத்ஸவம்’ என்று ஆகமங்கள் கூறுகின்றன. நம்முடைய நோக்கம் நிறைவேற வேண்டும் என்று பிரார்த்தனை செய்யும் நடைமுறையே இது. ஆனால், நாம் செய்யும் வழிபாட்டின் வீர்யம், நம்முடைய வினைப்பயன்கள் போன்ற காரணங்களுக்கு உட்பட்டே நமக்குக் கிடைக்கக்கூடிய பலன்கள் மாறுபடுகின்றன.

ஒரே பூஜையை இருவர் செய்தபோதிலும் அவரவர் கர்மவினைகளுக்கு ஏற்பவே பலன் கிடைக்கிறது. இதையே பகவான் கிருஷ்ணர், `கர்மா செய்வதே நம்முடைய கடமை. பலன் களில் எதிர்பார்ப்பு இருக்கக் கூடாது' என்று தெளிவுபடுத்துகிறார். `பலனை அனுபவிக்காதே' என்று சொல்லாமல், `பலனை எதிர்பார்க்காதே' என்றுதான் சொல்கிறார்.

கேள்வி - பதில்: உடலைப் பிரிந்தபின் உயிரின் நிலை என்ன?

நாம் அனைவரும் சாதாரண மனிதர்கள்; ஞானிகள் அல்லர். ஆனாலும், நம்முடைய வேதங்கள் நாம் அனைவருமே அந்த உயர்ந்த நிலையை அடைய வழிகாட்டுகின்றன. அதற்கு ஒரே வழி, நாம் செய்யவேண்டியவற்றைச் சிறப்பாகச் செய்து முடித்து, அதில் ஆத்ம திருப்தி அடைய வேண்டும். பலன்கள் எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதையே ‘பிரஸாத புத்தி’ என்று கூறுவர்.

? ஒருவர் மறைந்துவிட்டதும் அவருடைய உடலுடன் எல்லாம் நின்றுவிடுவதாகச் சிலர் சொல்கிறார்கள். இன்னும் சிலர், உடலைக் கடந்தும் உயிர் நிலைக்கும் என்கிறார்கள். இதுபற்றி நம்முடைய சாஸ்திரங்கள் என்ன சொல்கின்றன?

- ஆர்.ரகோத்தமன், சென்னை - 91

எப்படி நாம் ஒவ்வொரு நாளும் நம் ஆடையை மாற்றி வேறு ஆடையை உடுத்திக் கொள்கிறோமோ, அதுபோன்றே நம்முடைய ஆத்மாவானது ஒவ்வொரு பிறவியிலும் வேறு வேறு உடலை எடுத்து தன்னுடைய கர்ம வினைகளைப் போக்கிக்கொள்வதாக, பகவான் கிருஷ்ணர் கூறுகிறார்.

ஒருவர் மறைந்துவிட்டால், அந்தப் பிறவியில் அவருடைய செயல்கள் முடிந்துவிடும். ஆனால், கர்மவினைகளுக்கு ஏற்ப மறுபிறவி எடுத்தே தீர வேண்டும். இருவினைகள் அதாவது புண்ணியம், பாவம் இவை இரண்டும் அற்ற நிலையிலேயே அந்த ஆத்மாவுக்கு மோட்சம் கிட்டும். அதுவரை பல பிறவிகள் எடுக்கத்தான் வேண்டும். இவை எல்லாம் நம்முடைய ரிஷிகள் தங்கள் அனுபவங்களின் மூலம் உணர்ந்து கூறிய உண்மைகள். இவற்றை அறிந்து நம் வாழ்க்கையை அமைத்துக்கொண்டோமானால், நாம் தவறுகள் செய்வதைத் தவிர்த்து நல்வழியில் பயணித்து, இறைவன் திருவடியில் பிரியாமல் இருக்கும் பேறு பெறுவோம்.

- பதில்கள் தொடரும்...

வாசகர்களே... ஆன்மிகம் தொடர்பான அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் தருகிறார்,

சென்னை `காளிகாம்பாள் கோயில்' சிவஸ்ரீசண்முக சிவாசார்யர்.

கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி: கேள்வி-பதில், சக்தி விகடன் 757, அண்ணாசாலை, சென்னை-600 002

ஐந்துக்கு இரண்டு பழுதில்லை!

மசிவாய' என்பது, ஸ்தூல பஞ்சாட்சரம். 'சிவாய நம' என்பது சூட்சும பஞ்சாட்சரம். 'ஸ்தூல' என்றால் கண்ணால் காணக் கூடியது; 'சூட்சுமம்' என்றால் காண முடியாதது. அதாவது, 'நமசிவாய' என்று உச்சரித்து வழிபட்டால், ஈசன் நம் கண்களுக்குப் புலப்படுவார். 'சிவாய நம' என்று சொல்லி தியானித்தால், நம் மனதில் உறைவார்!

கேள்வி - பதில்: உடலைப் பிரிந்தபின் உயிரின் நிலை என்ன?

நமசிவாய எனும் மந்திரத்தில் உள்ள 'ந' எனும் அட்சரம்- சத்ய ஜோதி வடிவானது. 'ம'- விஷ்ணு ரூபமானது. 'சி'- தேயு மற்றும் ருத்திர சொரூபமானது. 'வ'- வாயு வடிவம். அதாவது மகேஸ்வர ரூபமானது. 'ய'- ஆகாய வடிவானது; சிவ ரூபமானது.

இவற்றில், 'ந' வுக்குள் 'ம' அடங்கும். 'நம'வுக்குள் 'வ' அடங்கும். 'நமவ'க்குள் 'ய' அடங்கும். 'நமவய' என்பதில் 'சி' அடங்கும். இந்த அட்சரங்கள் முறையே நமசிவய, நமவசிய, வசியநம, சிவயநம, மநயவசி மற்றும் சிவயவசி என்று மாறுபட்டும் வழங்கப் பெறும்.

'ஐந்துக்கு இரண்டு பழுதில்லை!' என்பார் வாரியார் ஸ்வாமிகள். அதாவது, 'இந்தக் கலியுகத்தில் 'நமசிவாய' என்று உச்சரிக்காவிட்டாலும் பரவாயில்லை; 'சிவா' என்ற இரண்டு எழுத்துகளையாவது உச்சரியுங்கள்... பாவம் நீங்கும்!' என்கிறார் அவர்.

- நியோகி, சென்னை-92