
நம் வீடுகளில் தெய்வ ஆற்றலை அளிக்கும் திவ்ய விக்கிரகங்களை வைத்து வழிபடலாம்.
? வீட்டில் சாமி விக்கிரகங்களை வைத்து வழிபடலாமா என்பது பற்றியும் அதற்கான வழிமுறைகள், கடைப்பிடிக்க வேண்டிய நியதிகள் பற்றியும் விளக்குங்களேன்.
- என்.பாஸ்கரன், வந்தவாசி
நம் வீடுகளில் தெய்வ ஆற்றலை அளிக்கும் திவ்ய விக்கிரகங்களை வைத்து வழிபடலாம். ஆலயங் களில், உலக நன்மையைக் கருத்தில்கொண்டு நடைபெறும் வழிபாட்டை ‘பரார்த்த பூஜை’ என்றும், நம்முடைய வீடுகளில் நம் நன்மையைக் கருதி செய்யப்படும் பூஜையை ‘ஆத்மார்த்த பூஜை’ என்றும் ஆகமங்கள் வகுத்துள்ளன.
எனினும், நம் வீடுகளில் செய்யும் பூஜைக்குரிய தெய்வ வடிவங்கள் 12 அங்குல அளவுக்கு மிகாமல் இருப்பது நல்லது. விக்கிரகங்களின் அளவு அதிகமானால், அதற்குரிய பூஜை முறைகளும் விஸ்தாரமாக இருப்பது அவசியமாகிறது. எனவே, தாங்கள் வழிபட விரும்பும் தெய்வத் திருவுருவத்தை நல்ல அமைப்புடன் செய்து, தங்களால் இயன்ற வகையில் வழிபட்டு வருவது, நல்ல பலன்களை நல்கும்.
? சாளகிராம பூஜையின் சிறப்பு என்ன? அந்தப் பூஜையைப் பெண்கள் செய்யலாமா?
- வி.சந்திரசேகரன், கும்பகோணம்
சாளகிராமம் என்பது விஷ்ணுவின் உறைவிடம். இயற்கை அன்னை நமக்கு அளித்த அருட் கொடை. கர்மவினைகள் என்னும் நம்முடைய வியாதியைப் போக்குபவர் நாராயணர். எனவே அவரைச் சாளகிராம வடிவில் பூஜை செய்வது அவருடைய அருளைப்பெறுவதற்கு வழி வகுக்கும். எப்படி பாணத்தில் சிவபெருமானை ஆராதிக்கிறோமோ, அதேபோல் சாளகிராமத்தில் விஷ்ணுவை ஆராதிக்கலாம். ஆண் பெண் என அனைவரும் ஆராதித்து அருள் பெறலாம்.
? உடல் அழியக்கூடியது என்பதால் அதன் மீது பற்று வைக்காதே என்று வேதாந்தம் சொல்கிறது. உரிய பயிற்சிகளால் உடலை வலுவாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று யோகாப்பியாசங்கள் கூறுகின்றன. இது ஒன்றுக்கொன்று முரணாக இல்லையா?
- எம்.சிவகுமார், சென்னை - 100
தாங்கள் ஓர் இடத்துக்குப் பயணம் மேற்கொள் கிறீர்கள். தங்களின் பயணம் நன்றாக அமைவதற்கு வாகனம், தாங்கள் அமர்ந்திருக்கும் இருக்கை, வழியில் தங்களுக்குத் தேவையான உணவு, சாலை வசதி என்று பல விஷயங்களை ஆலோசித்தே பயணத்தைத் தொடங்குவீர்கள்.
தங்களின் குறிக்கோள் சேரவேண்டிய இடமாக இருந்தாலும், சென்று சேரும் வரை முன் சொன்ன விஷயங்களில் சிறிதும் கவனக்குறைவு இல்லாமல் செயல்படுவீர்கள். அந்த இடத்தை அடைந்த பிறகு, தங்கள் இருக்கையின்மீது இருந்த பற்று முழுவதும் நீங்கிவிடும்.
அப்படித்தான், வாழ்க்கை எனும் பயணத்துக்கு நம் ஆத்மாவைத் தாங்கி நிற்கும் உடலானது மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. நல்ல உடல்நலம் இருந்தால்தான் மனம் நம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். அப்போது, இந்தச் சமுதாயத்துக்கு நம்மால் இயன்ற நன்மைகளைச் செய்ய முடியும். எனவே, இவ்வுலகில் நம் உயிர் உள்ளவரையில் நம்முடைய உடலை நல்ல முறையில் பாதுகாத்தல் அவசியமே. அதே தருணத்தில், இந்த உடலானது இந்தப் பிறவிக்கு மட்டும்தான் என்ற எல்லையையும் நாம் உணர்தல் அவசியம்.
? வீட்டில் கருடபுராணம் நூல் இருக்கலாமா? வீட்டில் அந்தப் புராணத்தைப் படிக்கலாமா?
-ரம்யா, மேட்டூர்
கருடபுராணத்தை மற்ற புராணங்களைப் போல் எப்போது வேண்டுமானாலும் படிக்கலாம். பெரும்பாலும், இறந்தவர்கள் வீட்டில் கருட புராணம் படிப்பார்கள். அங்கு மட்டும்தான் படிக்க வேண்டும் என்பதில்லை.
நிலையாமை என்பது உண்மை. நாம் இந்த நிலையில்லாத வாழ்க்கையில் தவறுகள் ஏதும் செய்யாமல், நல்வழியில் பயணிப்பது மிகவும் சிரமமானதே. எனினும் வைராக்கியம், கடும் முயற்சி போன்றவற்றால் சாதிக்க முடியாதது என்று எதுவுமே இல்லை.
கருடபுராணத்தில் கூறப்பட்டுள்ள புண்ணிய பாவங்களை அறிந்துகொண்டால், நல்ல காரியங் களைச் செய்யவும் தவறானவற்றைச் செய்யாமல் இருக்கவும் நாம் நம்மைத் தயார்ப்படுத்திக்கொள்ள முடியும். எனவே, கருடபுராணத்தை வீட்டில் படிக்கலாம். அதனால் நன்மையே ஏற்படும்.

? சிறு வயதுப் பெண்கள் ருத்திராட்சம் அணியலாமா? கடைகளில் விற்கப்படும் யந்த்ரங் களை வாங்கி பூஜித்தால் பலன் கிடைக்குமா?
- வி.சந்திரசேகரன், கூந்தலுர்
ருத்திராட்சம் சிவபெருமானின் கண்களில் இருந்து தோன்றியவை. ருத்திராட்சம் அணிந்த வரைப் பார்த்தாலே நமக்கு நன்மைகள் ஏற்படும். அனைவரும் ருத்திராட்சம் அணியலாம். ஆண் பெண் என்ற பாகுபாடு கிடையாது. பெண்கள், மாதவிலக்கு காலங்கள் தவிர்த்து மற்ற காலங்களில் அணியலாம். சிறுவர் முதல் முதியவர் வரை அனைவரும் சிவபெருமானைத் தியானித்து ருத்திராட்சம் அணிவது நல்லதே.
யந்த்ரங்கள் சரியான முறையில் வடிவமைக்கப் பட்டிருந்தால், அதற்கு உரிய பலன்களை அளிக்கும். கடைகளில் வாங்கினால்கூட அது சரியாக இருக்கின்றனவா என்பதைத் தகுதியான உபாசகரிடம் காட்டி தெரிந்துகொள்ள வேண்டும்.சரியாக இருக்கிறது என்றால், அவர் மூலமே யந்த்ரத்துக்கு ‘பிராணப் பிரதிஷ்டை’ எனும் உயிர் அளிக்கும் கிரியையைச் செய்யவைத்து, சிறிது நாள்கள் அவர் பூஜை செய்தபிறகு, அந்தச் சாந்நித்யத்துடன் யந்த்ரத்தைப் பெற்று பூஜிப்பது சிறப்பு. யந்த்ரத்தில் கோடுகளும், எழுத்துகளும் சரியாக இருக்கின்றனவா என்று கவனத்துடன் ஆராய்ந்து பயன்படுத்துவது சிறந்தது.
- பதில்கள் தொடரும்...
வாசகர்களே... ஆன்மிகம் தொடர்பான அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் தருகிறார்,
சென்னை `காளிகாம்பாள் கோயில்' சிவஸ்ரீசண்முக சிவாசார்யர்.
கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி: கேள்வி-பதில், சக்தி விகடன் 757, அண்ணாசாலை, சென்னை-600 002