மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேள்வி - பதில்: வயதில் சிறியோரை வணங்கலாமா?

கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
News
கேள்வி - பதில்

அனைவரையும் வணங்குவதே, நம் ஸநாதன தர்மத்தின் சிறப்பு.

? தியானத்துக்கு மந்திரங்கள் ஜபிப்பது அவசியமா? பொருள் புரியாமல் ஜபிக்கும் மந்திரத்தால் பலன் கிடைக்குமா?

- ஆர்.சாரதாமணி, சென்னை - 94

ஆம்... தியானத்துக்கு மந்திரங்கள் ஜபிப்பது அவசியம்தான். தியான நிலையில் நல்ல பயிற்சிபெற்ற பிறகு, தங்களுக்கு இயல்பாகவே மனம் ஒருநிலைப்படும். அதுவரையிலும் மந்திரம் உங்கள் மனத்தை ஒருநிலைப்படுத்த உதவும்.

‘ஜபேன பாப ஸம்சுத்தி:’ என்றபடி, இடைவிடாமல் மனத்தை ஒருமுகப்படுத்தி செய்யப்படும் ஜபத்தின் மூலம், நம்முடைய பாவங்கள் போக்கப்படுகின்றன. மந்திரங்களுக்குப் பொருள் தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் அவை உரிய பலன்களை அளிக்கவே செய்யும். எனினும் தக்க குருவிடம் மந்திரத்தின் பொருள் மற்றும் உச்சரிக்கும் முறையை உபதேசம் பெற்று, ஜபிப்பதும் தியானிப்பதும் சிறப்பு. அதனால் நம் நம்பிக்கை அதிகரிக்கும். நம்முடைய அதீத நம்பிக்கையும் மனத்தின் ஒருநிலைப்பாடும் இறையருளை எளிதில் பெற்றுத்தரும்.

கேள்வி - பதில்
கேள்வி - பதில்

தங்களால் மந்திரங்களை ஜபிக்காமலே இறைசக்தியுடன் ஒருநிலை அடையமுடிகிறது என்றால், தாங்கள் அப்படியே தொடரலாம். மனம் ஒருநிலைப்படுதலே முக்கியம்.

? நம்மைவிட வயதில் சிறியவரை குருநாதராக ஏற்கலாமா; அவரை நாம் வணங்கலாமா?

- வீ.பார்த்தசாரதி, அம்பாசமுத்திரம்

‘வ்ருத்தா சிஷ்யா: குரு: யுவா’ எனும்படி, சிவனார் ஸ்ரீதட்சிணாமூர்த்தியாக - ஞான குருவாக விளங்கி, சிவஞானத்தைப் போதித்து அருளினார். அவர் இளமை உருவத்தினராய்த் திகழ, அவரை அணுகி ஞானம் பெற விரும்பிய சனகாதி முனிவர்கள் நால்வரும் வயதானவர்களாக விளங்கியதைப் புராணங்கள் கூறுகின்றன.

அனைவரையும் வணங்குவதே, நம் ஸநாதன தர்மத்தின் சிறப்பு. ‘அபேத தர்சனம் ஞானம்’ என்றபடி, எவரொருவர் அனைவரையும் சமமாகக் காண்கிறாரோ, அவரே ஞானத்தை அடைந்தவராகக் கருதப்படுவார். நெருப்பில் சிறியது பெரியது என்று வேறுபாடு பார்க்க முடியுமா... எனவே, ஞானம்தான் முக்கியமானதே தவிர, வயது முக்கியமல்ல.

கேள்வி - பதில்
கேள்வி - பதில்

எல்லாம்வல்ல பரம்பொருளே தன் மகனிடம் மிகப் பணிவுடன் பிரணவப்பொருளைக் கேட்க வில்லையா... அதன்பொருட்டு தன் மைந்தனுக்கு `ஸ்வாமிநாதன்’ எனும் திருப்பெயர் ஏற்படவும் செய்தாரே. ஆக, இந்த விஷயத்தில் பரமசிவனே நமக்கு ஓர் உதாரணப் புருஷராக விளங்குகிறார்.

மனிதர்கள், தெய்வங்கள், தேவர்கள் மட்டுமல் லாமல், இயற்கையில் விளங்கும் அனைத்து ஜீவராசிகளிடமிருந்தும் நாம் கற்கவேண்டியவை பல இருக்கின்றன. அப்படிக் கற்கும்போது நாம் மாணவராகத் திகழ்ந்து, நமக்கு அறிவை அளிக்கும் பொருளைக் குருவாகப் பார்க்கவேண்டும் என்று ஸநாதன தர்மம் போதிக்கிறது.

எனவே, வயது முக்கியமானதல்ல; ஞானமே முக்கியமானது. நாம் அனைவரும் நம்முடைய உண்மை நிலையான ஆத்ம ஸ்வரூபத்தை அறிந்து அனுபூதி பெற வகைசெய்வது ஞானம். அதை அருளும் குருவை... அவர் யார் என்று பார்க்காமல், பரிபூரண பக்தியுடன் அவரை உபசரிப்பதே நம் கலாசாரம்.

? இறைவனிடம் எப்படிப் பிரார்த்தனை செய்வது சிறப்பானதாக இருக்கும்... இறைவனின் அருளைப் பெறுவதற்கு உகந்த வழி என்ன?

- எஸ்.புஷ்பவனம், காஞ்சிபுரம் - 2

இறைவனை வழிபடுவதற்கான பல வழிமுறைகள் நம் சாஸ்திரங்களில் கூறப்பட்டிருக்கின்றன. அவற்றில் தங்கள் குரு எந்த வழியைக் காட்டுகிறாரோ அதன்படி செல்வது சிறப்பானது.

சரியை, கிரியை, யோகம், ஞானம் என்று நான்கு வழிகளை சைவ சமயம் போதிக்கிறது. சரியை எனப்படும் ஆசார அனுஷ்டானங்களைக் கடைப்பிடித்தல், கிரியைகளை ஆகமங்களில் கூறப்பட்டுள்ளபடி செய்தல், யோகப் பயிற்சியின் மூலம் இறையருள் பெறுதல், சாஸ்திர நூல்களைப் பயின்று, அவற்றின் மூலம் இறைவனின் குணங்களை அறிந்து அனுபவித்தல் என்று நான்கு முறைகள் உள்ளன.

கேள்வி - பதில்
கேள்வி - பதில்

இவற்றில் ஏதேனும் ஒரு மார்க்கத்தை நாம் பின்பற்றினாலும், மற்றவற்றின் அனுபவமும் தானாகக் கிடைப்பதை உணர்வோம். இறையடி யார்கள் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல், பரிபூரண நம்பிக்கையுடன் தங்கள் வழிபாடுகளைச் செய்து வந்தனர். எதிர்பார்ப்புடன் செய்வது தவறாகாது. ஆனால், அது ஆரம்ப நிலையே. நாள்கள் செல்லச் செல்ல எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் இறைவனை வழிபட்டால், நம் தேவைகள் அனைத்துமே பூர்த்தியாகும்.

தூய மனத்துடன் நாம் அளிக்கும் மலர்கள், பழங்கள் ஆகியவற்றை இறைவன் ஏற்று, நமக்கு அனைத்து நன்மைகளையும் அருள்வார். ‘வேண்டத்தக்கது அறிவோய் நீ; வேண்ட முழுதும் தருவோய் நீ’ என்றபடி எல்லாம்வல்ல பரம்பொருள், நம் பிரார்த்தனைகளை நம்முடைய கர்மவினைகளின்படி அருளவே செய்வார்.

? திருவண்ணாமலையில் கிரிவலம் வருவதன் தாத்பர்யம் என்ன. அதனால் எத்தகைய பலன்கள் கிடைக்கும்?

- எம்.சிவராமன், வேலூர்

‘ஏகாகார ஸமஸ்த லோக ஜனகம் ஹேமாத்ரி பாணாஸனம்... சோகாரண்ய... சோணாத்ரிநாதம் பஜே’‘எந்தப் பரம்பொருள் அனைத்து உலகங்களுக்கும் காரணமானவராகவும், மலை வடிவினராகவும், நாகாபரணத்தைத் தரித்தவரும், பௌர்ணமி சந்திரன் போன்று மிகவும் பொலிவுடன் கூடிய திருமுகத்தை உடையவரும், மகாவிஷ்ணுவால் பூஜிக்கப்பட்டவரும், காடு போன்று இருக்கும் நம் துன்பங்களை அழிக்கும் தீப்பிழம்பாக விளங்குபவரும், நமக்கு அனைத்து நன்மைகளையும் அருள்பவருமாகத் திகழ்கிறாரோ... அந்தத் திருஅண்ணாமலையாரை வணங்குகிறேன்’ என்று ஸ்ரீஅருணாசலேஸ்வரரைப் போற்றுகின்றனர் ஞானிகள்.

பஞ்சபூதத் தலங்களில் அக்னி ரூபமாக விளங்கக் கூடிய அண்ணாமலையில், சிவபெருமானும் சக்தியும் இணைந்த அம்சமே ஆலயத்தில் சிவலிங்கத் திருமேனியில் திருஅண்ணாமலையா ராகவும், அருகே மலையாகவும் விளங்குகிறது. இந்த க்ஷேத்திரத்தில் மகான்கள் பலரும் இறையனுபூதி யைப் பெற்றுள்ளனர். இன்றும் சித்த புருஷர்கள் பலரும் அங்கு சூட்சும வடிவில் வழிபடுகின்றனர்.

திருவண்ணாமலையில், மலைவடிவில் அருள்பாலிக்கும் ஈசனைப் பக்தியுடன் வலம் வருவதன் மூலம் நமக்கு இறையருள் கிடைப் பதுடன், இந்த உலகத்தில் நம்முடைய அனைத்துத் தேவைகளும் பூர்த்தியாகின்றன. மேலும், இனியொரு பிறவி இல்லாதபடி முக்தி அருளும் தலமாகவும் விளங்குகிறது திருவண்ணாமலை.

விதையானது வறுக்கப்பட்டால் முளைக்காது. அதேபோல், மலை வடிவில் விளங்கும் எல்லாம் வல்ல சிவபெருமானை ஜீவாத்மாக்கள் பக்தியுடன் வலம் வருவதால், கர்மவினைகள் எரிக்கப்பட்டு, மறுபிறவியிலிருந்து காப்பாற்றப்படுகிறார்கள்.

‘ஸ்மரணாத் அருணாசலம்’ என்றபடி நினைக்க முக்தி தரும் திருவண்ணாமலை க்ஷேத்திரம் பூலோகக் கயிலாயம் ஆகும். சிவானுபவத்தை மிக எளிமையான வகையில் பெறக்கூடிய புண்ணியபூமி அது. மக்கள் அவரவருடைய நல்ல விருப்பங்களை உடனே பூர்த்தி செய்துகொள்ள கிரிவலம் வழிகாட்டுகிறது.

- பதில்கள் தொடரும்...

வாசகர்களே... ஆன்மிகம் தொடர்பான அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் தருகிறார்,

சென்னை `காளிகாம்பாள் கோயில்' சிவஸ்ரீசண்முக சிவாசார்யர்.

கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி: கேள்வி-பதில், சக்தி விகடன் 757, அண்ணாசாலை, சென்னை-600 002