Published:Updated:

கேள்வி - பதில்: தியானத்தால் பலன் உண்டா?

தியானம்
பிரீமியம் ஸ்டோரி
தியானம்

ஆரம்ப நிலைகளில் தியானம் செய்யும் போது கவனச்சிதறல் ஏற்பட்டாலும் பின்னர் இடைவிடாத பயிற்சியின் மூலம் ஒருமுகப்பட்ட மனநிலையைப் பெற்றுவிடமுடியும்.

கேள்வி - பதில்: தியானத்தால் பலன் உண்டா?

ஆரம்ப நிலைகளில் தியானம் செய்யும் போது கவனச்சிதறல் ஏற்பட்டாலும் பின்னர் இடைவிடாத பயிற்சியின் மூலம் ஒருமுகப்பட்ட மனநிலையைப் பெற்றுவிடமுடியும்.

Published:Updated:
தியானம்
பிரீமியம் ஸ்டோரி
தியானம்

? கடவுள் நம்பிக்கையின் அடிப்படையில் நம்முடைய குழந்தை களிடம் நல்ல பண்புகளை வளர்ப்பது எப்படி?

- பா.செந்தில்குமார், வேலூர் - 1

நம் கலாசாரத்தின் உயர்வுகளை அடுத்த தலைமுறையினரிடம் தகுந்த முறையில் எடுத்துச்சொல்லி, அதன்படி அவர்களை நடக்கச்செய்வதே நம்முடைய தலையாய கடமை. ஒரு சமுதாயமானது நல்ல ஒழுக்கத்தினால்தான் உயரும். பணம் மற்றும் படிப்பு ஆகியவை நம்முடைய வெளியுலக வாழ்க்கைக்கு வேண்டுமானால் உதவுமே தவிர, மனம் மகிழ்ச்சியாக இருப்பதற்கு நல்லொழுக்கமே முக்கியமானது.

குழந்தைகள் நம்மை நன்றாகக் கவனிக்கிறார்கள். எனவே, நாம் நம்முடைய வாழ்க்கையில் ஒழுக்கநெறிகளைப் பின்பற்றி வாழவேண்டியது மிகவும் அவசியம். அப்போதுதான் நம் குழந்தைகளும் ஒழுக்கமாக வாழ நினைப்பார்கள். நம்முடைய ஸநாதன தர்மத்தின் கருத்துகளையும், புராண, இதிகாச நிகழ்வுகளையும் நாம் நன்றாகக் கற்றுணர்ந்துகொண்டு, அவற்றை நம் குழந்தைகளுக்கும் பயிற்றுவிக்கவேண்டியது மிகவும் முக்கியமானது.

தற்காலத்தில் குழந்தைகளை வளர்ப்பது என்பது பெரிய கலையாகவே உள்ளது. நாம் மிகவும் பொறுமையாக, தெய்வ பக்தியுடனும் விடாமுயற்சியுடனும் குழந்தைகளை நம் கலாசாரப்படி வளர்க்கவேண்டும். குழந்தைகள் அனைவரும் நல்ல மனத்துடன்தான் இருக்கிறார்கள். ஆனால், தற்காலத்தில் இருக்கும் சூழ்நிலைகள் பலரையும் தவறான பாதைக்கு இழுத்துவிடுகின்றன. எனவே, குழந்தைப் பருவத்திலேயே அவர்களுக்கு நன்மை தீமைகளை விளக்கிவந்தால், அவர்களின் எண்ணங்களும் நல்லவையாக இருக்கும். அவர்களின் போக்கிலும் நல்ல மாறுதல்கள் தென்படும். நம்முடைய தெய்வ பலத்தினாலும் அளவற்ற நம்பிக்கையினாலும் நம் குழந்தைகளை நல்ல வழியில் இருக்கச்செய்வது எளிதான காரியம்தான். அதேநேரம், எந்தக் காரணத்தைக் கொண்டும் அவர் களைத் தவறாகப் பேசக் கூடாது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

? தியானம் செய்யும்போது மனம் அலைபாய்கிறது. மனத்தை ஒருமுகப்படுத்த இயலாத தியானத்தால் ஓரளவுக்கேனும் பலன் கிடைக்குமா?

- சிவகுமார், கும்பகோணம்

எப்படி ஒரு குழந்தை தன்னுடைய குழந்தைப் பருவத்திலிருந்து ஒவ்வொரு காலகட்டத்திலும் தவழ்ந்தும், நடந்தும், ஓடியும் தன்னுடைய செயல் பாடுகளை விரிவுபடுத்திக்கொள்கிறதோ, அதைப் போன்றே ஆன்மிகத்திலும் அவரவர் பக்குவ நிலைக்கு ஏற்பவே மனத்தை ஒருமுகப்படுத்தலும், கடவுளை தியானிப்பதும் கைகூடும்.

தியானம் என்பது, ஆகமங்களில் கூறப் பட்டுள்ள இறை உருவத்தை மனத்தால் நினைத்து, இறையுடன் லயிப்பதற்கான மிக எளிய வழியாகும். மிகப்பெரிய பலனையும் தரக்கூடிய பயிற்சி அது. ஒன்றுமே இல்லாத இடத்தை நோக்கி நாம் தியானிப்பது என்பது சற்றுக் கடினமானதுதான். ஆனாலும் பயிற்சியாலும் இடைவிடாத எண்ணங்களின் ஆற்றலினாலும் சாத்தியப்படுத்தலாம். ஆகமங்கள், ‘நஷ்டே சித்தே சிதானந்தம்’ என்கின்றன. எப்போது புத்தி சக்தியை விடுத்து அனுபவத்தில் இறையை உணர்கிறோமோ அவற்றை இறையனுபவம் என்று விளக்குகின்றன. இதுபோன்ற அனுபவம் ஒருவருக்கு, ரமண மகரிஷியைப் போல் இளம் வயதிலும் ஏற்படலாம் அல்லது வயது முதிர்ந்த காலத்திலும் ஏற்படலாம். சிலர், இந்தப் பிறவியில் இல்லாமல் அடுத்த பிறவியிலோ அல்லது வரக்கூடிய பிறவிகளிலோ இறைஅனுபூதி பெறலாம்.

எனவே, ஆரம்ப நிலைகளில் தியானம் செய்யும் போது கவனச்சிதறல் ஏற்பட்டாலும் பின்னர் இடைவிடாத பயிற்சியின் மூலம் ஒருமுகப்பட்ட மனநிலையைப் பெற்றுவிடமுடியும்.

தியானம்
தியானம்

? நம் முன்னோரைவிடவும் விஞ்ஞான வளர்ச்சி யின் காரணமாக நமக்கு வசதி வாய்ப்புகள் பல கிடைத்துள்ளன. ஆனாலும் அவர்களைப் போன்று நம்மால் மன அமைதியுடன் வாழ முடியவில்லையே?

- எஸ்.கண்ணன், திருத்தணி

மன அமைதி என்பது நம்மைச் சுற்றியுள்ள சூழ்நிலைகளினால் மட்டுமே ஏற்படக்கூடியதல்ல. அது முழுக்க முழுக்க நம் மனத்தைச் சார்ந்தது. ‘மன ஏவ மனுஷ்யானாம் காரணம் பந்த மோக்ஷயோ: சுக துக்கயோ:’ என்று ஞானநூல்கள் சொல்வதற்கு ஏற்ப நமக்கு ஏற்படும் இன்பம், துன்பம், பந்தம், விடுதலை ஆகிய அனைத்தும் நம் மனத்தின் காரணமாக அமைபவையே.

நம் முன்னோர்கள் எப்பேர்ப்பட்ட சூழ்நிலை யையும் எதிர்கொள்வதற்கு ஏற்ப, எப்போ தும் தெய்வச்சிந்தனையுடன் இருந்தனர். நாமும் அப்படியே வாழ்ந்தோமானால் மனம் செம்மையாகும். எப்படி மரத்தின் வளர்ச்சி அதன் வேர்களில் உள்ளதோ, அதுபோன்று செம்மை யான மனத்தின் மூலம் மகிழ்ச்சியான மனநிலை ஏற்படும்.

? காளியின் வடிவில் தேவியை வழிபடுகிறோம். சில படங்களில், காளிதேவி ஈசுவரனின் மீது நின்று நடனம் செய்வதைப் போல் காணப்படுகிறது. இது சரிதானா?

- கே.கண்ணபிரான், சென்னை-100

சிவனும் சக்தியும் இணைந்தே செயல்படுவர். ‘சித்கண:’ என்கின்றன ஆகமங்களும் ஞான நூல்களும். அதாவது, எல்லாம்வல்ல பரம சிவமானது அறிவாகவும் செயலாகவும் விளங்கி வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

காளி என்பவள் சகல காலங்களிலும் இருந்து பிரபஞ்சத்தை இயக்குபவள். சிவபெருமானை விட்டு விலகாதவள். `சமவேதா' என்று அந்தச் சக்தியைக் கூறுவர். சமவேதம் எனில் எப்போதும் ஒன்றாகவே இருக்கக்கூடியது என்று பொருள்.

ஆகவே, விவரம் அறிந்தவர்கள் இந்த உண்மையை உணர்ந்துகொள்வார்கள்; சிவனும் சக்தியும் இணைந்த உருவமே இந்தப் பிரபஞ்சத்தை இயக்குகிறது என்பதைப் புரிந்துகொள்வார்கள்.

மேலும், இறையானது நாம் சக்தியாக வழிபடும் போது அம்பாளாகவும் ஞானமாக வழிபடும் போது சிவனாகவும் விளங்குகிறது என்பதையும் அறிந்துகொள்வார்கள். உண்மையை உணர்ந்து வழிபடும்போது எந்த பேதத்துக்கும் இடமிருக்காது.

- பதில்கள் தொடரும்...

வாசகர்களே... ஆன்மிகம் தொடர்பான அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் தருகிறார்,

சென்னை `காளிகாம்பாள் கோயில்' சிவஸ்ரீசண்முக சிவாசார்யர்.

கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி: கேள்வி-பதில், சக்தி விகடன் 757, அண்ணாசாலை, சென்னை-600 002