Published:Updated:

தர்ப்பைக்குச் சமமானதா அறுகம்புல்?

தர்ப்பைக்குச்  சமமானதா அறுகம்புல்?
பிரீமியம் ஸ்டோரி
News
தர்ப்பைக்குச் சமமானதா அறுகம்புல்?

ஆலயங்கள் எப்படிப் பராமரிக்கப்பட வேண் டும், அங்கு வீற்றிருந்து அருள்பாலிக்கக்கூடிய இறைவனை எப்படி வழிபட வேண்டும் என்று ஆகமம் வழிகாட்டுகிறது

? கோத்திரம், நக்ஷத்திரம் தெரியாத அன்பர்கள், அர்ச்சனை சங்கல்ப காலத்தில் என்ன சொல்லி பிரார்த்திக்கலாம்?

- கே.ரேணுகா, திருப்பூர்

கோத்திரம் தெரியாத அன்பர்கள் சிவகோத்திரம் என்றும், விஷ்ணு கோத்திரம் என்றும் கூறிக்கொள்ளலாம். பொதுவாக நாம்

சிவபெருமானையோ மகாவிஷ்ணுவையோ அனைத்துக்கும் ஆதியாக வும் மூலமாகவும் நினைத்துப் பிரதானமாக வழிபடுகிறோம். ஆகவே, `சிவ கோத்திரம்’ `விஷ்ணு கோத்திரம்’ என்று கூறலாம்.

நக்ஷத்திரம் தெரியாதவர்கள் ‘ஜன்ம நக்ஷத்திரம்’ என்று கூறிக் கொள்ளலாம். இயன்றவரையிலும் நக்ஷத்திர விவரத்தைத் தெரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். அப்படி இயலாதபோது `ஜன்ம நக்ஷத்திரம்’ என்று கூறிக்கொள்ளலாம். அப்படிச் சொல்லும்போது நாம் எந்த நக்ஷத்திரத்தில் பிறந்தோமோ, அந்த சக்தியை அளித்துவிடும்.

கடிதம் அனுப்பும்போது, குறிப்பிட்ட நபரின் பெயர் இல்லா விட்டாலும்கூட கதவு எண், தெருவின் பெயரைச் சரியாக எழுதி, ஊரையும் குறிப்பிட்டு அனுப்பினாலே, அந்த முகவரிக்குக் கடிதம் சென்றுவிடும். அதுபோன்று ஜன்ம நக்ஷத்திரம் என்று குறிப்பிட்டாலே பலன் கிடைக்கும்.

தர்ப்பைக்குச்  சமமானதா அறுகம்புல்?
benedek

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

? தர்ப்பைப் புல் கிடைக்காத சூழலில், அருகம்புல் பயன்படுத்தலாம் என்கிறார்களே... அது சரியா? தர்ப்பைக்கு அப்படியென்ன மகத்துவம்?

- ஆர்.பாண்டியன், மதுரை-3

ஆம்! தர்ப்பை கிடைக்காதபோது அறுகம்புல்லை வைத்து நாம் தர்ப்பணம் செய்யலாம் என்ற மரபு உள்ளது. தர்ப்பை மிகவும் புனிதமானது. தர்ப்பையின் நுனியில் அனைத்துப் புண்ணிய நதிகளும் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. எனினும் சில இடங்களில் தர்ப்பை கிடைக்காதபோது, அறுகம்புல்லைப் பயன்படுத்தலாம்.

தர்ப்பைக்குச்  சமமானதா அறுகம்புல்?
Rajesh Kumar Singh

? கோயில்களில் திருப்பணிகள் நடக்கும் காலத் தில் பாலாலயம் அமைத்திருப்பார்கள். பாலாலய தரிசனமானது மூலக் கருவறை தரிசனத்துக்கு இணையான பலனைத் தருமா?

- வே.ராமநாதன், பாபநாசம்

ஆலயங்கள் எப்படிப் பராமரிக்கப்பட வேண் டும், அங்கு வீற்றிருந்து அருள்பாலிக்கக்கூடிய இறைவனை எப்படி வழிபட வேண்டும் என்று ஆகமம் வழிகாட்டுகிறது. அவ்வகையில் பாலாலயம் அல்லது இளம் கோயில் என்ற ஓர் அமைப்பைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது.

ஆலயங்களில் திருப்பணி செய்யும்போது, அந்த இறை சக்திக்கு எவ்விதமான பாதிப்பும் வரக்கூடாது; அதனால் நமக்கு எந்தவிதமான தீங்கும் வரக்கூடாது என்பதால், பாலாலயம் அல்லது இளம் கோயில் அமைத்து, இறை சக்தியை வேறு ஒரு பிம்பத்துக்கு மாற்றி வழிபாடுகளைத் தொடர வழிவகை செய்வார்கள்.

குறிப்பிட்ட பொருள்களைக் கூறி, இறை சக்தியை அவற்றில் மாற்றி நாம் வழிபடலாம் என்று ஆகமங்கள் அறிவுறுத்துகின்றன. ஆக, எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம் பொருளை, எப்படி ஆலயக் கருவறையில் வழிபட்டு பயன்பெறுகிறோமோ, அப்படி பாலாலயத்திலும் தரிசித்து வழிபடலாம். அதே சக்தி பாலாலயத்திலும் வீற்றிருந்து நமக்கு அருள்பாலிக்கும்; அருளில் எவ்விதமான மாற்றமும் இல்லை. எனினும், உற்சவங்கள் போன்ற சில சிறப்பு வழிபாடுகளை மூல ஆலயம் அமைத்த பிறகே செய்ய வேண்டும் என்றும் ஆகமங்கள் கூறுகின்றன.

தர்ப்பைக்குச்  சமமானதா அறுகம்புல்?

? கோயில்களில் விழா எடுக்கும்போது, அதற்கான நாள் நட்சத்திரம் பார்க்கும் வைபவம் நிகழ்கிறது. சில கோயில்களில் பிரச்னம் பார்க்கிறார்கள். ஆதி அந்தம் காண இயலாத பரம்பொருளை நாளும் கோளும் பாதிக்குமா?

- எம். கார்த்திகேயன், தேனி

ஆதி அந்தமில்லாத அந்தப் பரம்பொருளுக்குக் கோள்களினால் எந்தவிதமான பாதிப்பும் வராது. அவருக்கு மட்டுமல்ல, அவரின் அருள் பெற்ற நமக்கும் வராது என்று முன்னோர்கள் கூறியுள்ளனர் (நாள் என் செய்யும் வினைதான் என்செயும்...).

எனினும், சாதாரண மக்களான நாம் காலத்திற்குக் கட்டுப்பட்டவர்கள்தான். ஆலயம் என்பது ஆண்டவனுக்குரிய இடம் மட்டுமல்ல. நமக்காக இறைவனை ஓரிடத்தில் இருக்கச் செய்து, அவரை வழிபட்டு பயன் அடையக்கூடிய மிகச்சிறந்த அருள் மையமாகக் கருதி ஆலய வழிபாட்டினை நம் முன்னோர்கள் கடைப்பிடித்துள்ளார்கள். ஆலயம் என்பது இல்லையெனில் நாம் நம் கவலைகளை எப்படிப் போக்கிக்கொள்ள முடியும். ஆலயத்திற்குச் சென்று வழிபடும்போது, நம்மையும் அறியாத ஒரு சக்தியால் நாம் வழிகாட்டப்படுகிறோம்.

இங்கே எதற்காக நாள் பார்க்கிறோம் என்றால், அந்த இறைசக்தி அங்கேயே இருக்கவேண்டும். அதற்காகக் குறிப்பிட்ட நாட்களில் விசேஷ வைபவங்களைச் செய்வது சிறப்பானது என்று ஆகமங்களில் கூறப்பட்டுள்ளது. மட்டுமன்றி, அவை எந்த நாளில் செய்யப்படுகின்றனவோ, அதற்கேற்ப மக்களுக்குப் பயன்கள் ஏற்படும் என்றும் ஆகமங்கள் விவரிக்கின்றன.

ஆகவே கும்பாபிஷேகம், உற்சவங்கள் போன்றவற்றை நாள் பார்த்துச் செய்வது அவசியம். எப்படி ஒருவருடன் தொலை பேசியில் தொடர்புகொள்ள இந்த முறையில்தான் அதை இயக்கவேண்டும் என்று வழிமுறை உள்ளதோ, அப்படித்தான் எல்லாம்வல்ல பரம்பொருளை ஆலயத்தின் மூலமாக வழிபடும்போது, அதற்கென்று நியமங்கள் உள்ளன. கடவுள் காலத்திற்குக் கட்டுப்பட்டவர் அல்ல; ஆனால், நாமும் நாம் வாழக்கூடிய இந்த உலகமும் காலத்திற்குக் கட்டப்பட்டவர்கள். ஆகமங்களின் ஆதாரங் களின்படி செய்வது சிறப்பானதாகும். பிரச்னம் பார்ப்பது போன்றவை நமது மரபில் இல்லை. ஆகமங்களில் கூறப்பட்டுள்ளபடியே செய்ய வேண்டும்.

? பாழடைந்த கோயில்களுக்குப் போகக்கூடாது ; விருத்தி இருக்காது என்ற நிலைப்பாட்டில் சிலர் இருக்கிறார்களே... உழவாரம் செய்யக்கூட யோசிக் கிறார்கள். இதுகுறித்து தங்களின் வழிகாட்டலை வேண்டுகிறோம்.

- எஸ்.ராமன், திருநெல்வேலி-3

ஆலயங்கள் பாழடைந்தால் தேசத்துக்குத் தீங்கு உண்டாகும் என்பர். இதைத் திருமூலர் ‘முன்னவனார் கோயில் பூஜைகள்…’ என்று விவரித்துக் கூறுகிறார். ஆதலால், கண்டிப்பாக எந்த ஆலயம் பழுதடைந்து இருக்கிறதோ, அந்த ஆலயத்துக்குச் சென்று நம்மால் இயன்ற சேவையைச் செய்யவேண்டும். உழவாரப் பணியும் கண்டிப்பாகச் செய்யவேண்டும். அதுவே சிறப்பானது.

இந்தப் பணிகள் இறவனைக் குளிர்விக்கக் கூடியவை; மக்களுக்குப் பயன் தரக்கூடியவை. இப்படியான ஆலயங்களுக்குச் சென்று திருப்பணிகள் செய்வதால், நம் கர்மவினைகள் பாழடைந்து நமக்கு நன்மைகள் ஏற்படும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

ஆகமங்களில் `ஜீர்ணோத்தார பகுதி’ என்று உள்ளது. ‘ஜீர்ணம்’ என்றால் `குறைந்தது’ என்று பொருள். ஆக, `ஏதோ ஒன்று குறைந்தது. அதை எப்படிச் சரிசெய்யலாம்’ என்று வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன. எனவே, உழவாரப் பணி செய்வதும் பாழடைந்த ஆலயங்களில் திருப்பணி செய்வதும் சிறப்பாக வழிபாடுகள் நடக்க வழிவகை செய்வதும் நாட்டுக்கு நன்மை பயக்கும்.

- பதில்கள் தொடரும்...

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

வாசகர்களே... ஆன்மிகம் தொடர்பான அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் தருகிறார்,

சென்னை `காளிகாம்பாள் கோயில்' சிவசண்முக சிவாசார்யர்.

கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி: கேள்வி-பதில், சக்தி விகடன் 757, அண்ணாசாலை, சென்னை-600 002