மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேள்வி - பதில்: மகர சங்கராந்தி கொண்டாடப்படுவது ஏன்?

மகர சங்கராந்தி
பிரீமியம் ஸ்டோரி
News
மகர சங்கராந்தி

தேவர்களின் பகல் உத்தராயனம் என்றும் இரவு தட்சிணாயனம் என்றும் அறியவும்.

? தரிசனம் என்பது இறைவனை தரிசிப்பது மட்டும்தானே... அப்படியிருக்க கோபுரம், துவஜ ஸ்தம்பம், மலை போன்றவற்றை தரிசிப்பது எப்படி தரிசனமாகும்?

- எம்.கலைச்செல்வன், திருவண்ணாமலை

‘த்ருச்’ எனில் பார்த்தல், தரிசனம் எனில் இறைவனின் சக்தி உறைந்திருக்கும் இடங்களில் எல்லாம் அவரை தரிசித்து, இறை அனுபூதியைப் பெற்று நம்முடைய உண்மை நிலையினை அறிதல்.

சிவாகமங்கள் சிவலிங்கத் திருமேனியை மட்டுமல் லாது, கொடிமரம் பலிபீடம் போன்றவற்றையும் சூட்சும லிங்கம், ஸ்தூல லிங்கம், பத்ர லிங்கம் என்று பெயர்களிட்டு விளக்கியுள்ளது. ‘விகதம் மானம் விமானம்’ என்பதற்கேற்ப, கோயிலின் உள்ளே இருக்கக்கூடிய இறை ஆற்றல் விமானங்களின் மூலம் உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் சென்றடையும். ஆகவே விமான தரிசனம் விசேஷமானது. அதேபோல், ராஜகோபுரம் இறைவனின் பாதகமலங்களாக விளங்குவதால், கோபுர தரிசனமும் உயர்வானது.

கடல், நதிகள், மரங்கள், மலைகள் போன்று பல முக்கியமான இடங்களை நம் ஆகமங்கள் குறிப்பிட்டு, அங்கெல்லாம் இறையருள் சக்தியைப் பெறுவதற்கு வழிகாட்டி இருக்கின்றன. இது நம் மதத்தின் தனித்துவம்.

மகர சங்கராந்தி
மகர சங்கராந்தி

திருவண்ணாமலையில் எல்லாம்வல்ல சிவபெருமான், தம் தேவியுடன் மலையுருவில் எழுந்தருளியிருப்பதாக ஸ்கந்த புராணம் போன்றவற்றில் விவரிக்கப்பட்டுள்ளது. நம் சைவ சமயக்குரவர்கள் நால்வர், தற்காலத்தில் சேஷாத்திரி சுவாமிகள், ரமண மகரிஷி, யோகிராம்சுரத்குமார் சுவாமிகள் மற்றும் பல சித்தர்கள் மலையுருவில் அருள்பாலிக்கும் அம்மையப்பரால் ஸித்தி பெற்றவர்கள் என்பது வரலாறு. இன்றும் பல பக்தர்கள் மலையுருவில் இருக்கும் இறைவனை வலம்வந்து வழிபட்டு வருவது அனுபவ உண்மை. மின்சாரம் ஒன்றாக இருந்தாலும் அதன் ஆற்றலை நாம் பல வகைகளில் பெறுவதைப்போல் இறையருளையும் பல நிலை களில் பல வடிவங்களில் பெறலாம்.

? சூரியனின் மகர ராசி பிரவேசத்துக்கு மட்டும் என்ன முக்கியத்துவம்? அன்றைய தினத்தை மட்டும் மகர சங்கராந்தி தினமாகக் கொண்டாடுவது ஏன்?

- ஆர்.ரமணி, சென்னை - 34

தேவர்களின் பகல் உத்தராயனம் என்றும் இரவு தட்சிணாயனம் என்றும் அறியவும். தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உத்தராயனம்; ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை தட்சிணாயனம். தை மாதப் பிறப்பு அதாவது தனுர் ராசியில் இருந்து மகர ராசிக்கு சூரியனின் பிரவேசமாகும் நாள், நமக்கு மிகுந்த அருளை அளிப்பதால், அன்றைய தினம் மகர சங்கராந்தி என்று போற்றப்படுகிறது.

ஆலயங்களில் நடைபெறும் சிறப்பு யாகங் களுக்கும், திருமணம் போன்ற வைபவங்களுக்கும் உத்தராயன புண்ணிய காலம் மிகவும் புனிதமாகக் கருதப்படுகிறது. நம்முடைய முன்னோர்களான ரிஷிகள் தற்கால விஞ்ஞானிகளைக் காட்டிலும் ஆழ்ந்த ஞானம் உடையவர்கள். இதை ஏதோ வெறும் வார்த்தைகளாக எண்ண வேண்டாம். இந்த நாளில் கிரகணம் ஏற்படும் என்று பஞ்சாங்கங் களில் கணக்கிட்டுக் கொடுத்திருப்பது முதல் ஆண்டு பலன்கள் வரையிலும் அவர்களின் வார்த்தைகளின்படியே நடந்து வருகின்றன.

மெய்ஞ்ஞானம் என்பது கடவுளிடமிருந்து நேரடியாகப் பெறக்கூடியது. நம் புத்தி சக்திகளினால் சோதித்துப் பெறமுடியாது. அவ்வகையில் உத்தராயன புண்ணிய காலம் முக்கியமானது என்று நம் ரிஷிகள் கூறியிருப்பதால், அதுபோன்ற விஷயங்களை நாம் ஏற்றுக் கடைப் பிடிக்கவேண்டும். அவற்றின் மகிமையை அனுபவங்களால்தான் உணர முடியும்.

நமக்கு அனுதினமும் ஆற்றலைத் தந்து காத்தருளும் சூரிய பகவான் வடக்கு நோக்கித் தனது பயணத்தைத் தொடங்கும் மாதமானதால், தை மாதம் மிகுந்த ஆற்றல் உடையது. சூரியனை வழிபட்டு, நமக்கு உணவை அளித்திடும் உழவர்களுக்கு நன்றி செலுத்தி, அவர்களுக்கு உறுதுணையாக விளங்கும் மாடுகளையும் வழிபட்டு, நம் நன்றிக் கடன்களைச் செலுத்துவதும் இந்த மாதத்தில்தான்.

இப்படி, பல சிறப்புகளை தன்னுள்கொண்டு நமக்கு வழிகாட்டி வரும் தை மாதத்தை வரவேற்று, வழிபட்டு வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைவோம்.

? நான் உறங்கும்போது திருமாங்கல்யம் கழுத்திலிருந்து கழன்று படுக்கையில் விழுந்து விட்டது. இது ஏதேனும் அபசகுனத்துக்கு அறிகுறியா? பரிகாரம் ஏதேனும் செய்ய வேண்டுமா?

- எம்.கௌரி மனோகரன், குடியாத்தம்

திருமாங்கல்யம் என்பது மிகவும் முக்கியமானது. திருமணத்தின்போது கணவனால், ‘மம ஜீவன ஹேதுனா’ என்று... அதாவது `நான் வாழ்வதற்குக் காரணமாக இருப்பது' என்று கூறி, பெரியோர்களின் முன்னிலையில் தெய்வங்களின் சாட்சியாக மனைவிக்கு அணிவிக்கப்படுவது.

‘காமேச பத்த மாங்கல்ய’ - சிவபெருமானால் அணிவிக்கப்பட்ட மாங்கல்யத்தை உடையவள் அம்பாள் என்கிறது லலிதா சஹஸ்ரநாமம். எல்லாம்வல்ல அன்னை ‘ஜகத் ரக்ஷண ஹேதவே’ எனும்படி, உலகம் முழுவதும் தன்னுடைய கணவரே கர்த்தாவாக இருப்பதால், உலக நன்மையின் பொருட்டு திருமாங்கல்யத்தை தரித்துக்கொண்டிருக்கிறாளாம்.

நல்ல நாள் பார்த்து, மஞ்சள் கயிற்றில் மஞ்சள் கிழங்கைச் சேர்த்து அணிந்து, பின்னர் வேறு ஒரு புதிய மஞ்சள் கயிற்றில் திருமாங்கல்யம் மற்றும் அதனுடன் இருக்கும் மணிகளையும் இணைத்து கழுத்தில் கட்டிக்கொண்டு மஞ்சளுடன் கூடிய கயிற்றை அவிழ்த்துவிடுவது நம் நாட்டுப் பெண் களின் மரபு.

அந்தக் காலங்களில் பெண்கள் தங்கள் வீட்டுக் கடமைகளைச் செய்வதிலேயே ஈடுபட்டிருந்தனர். வீட்டிலுள்ள பெரியவர்களும் அவர்களுக்கு வழிகாட்டி வந்தனர். தற்காலத்தில் காலத்தின் கட்டாயம் காரணமாக வீட்டிலும் வேலை செய்துகொண்டு, அலுவலகத்துக்கும் சென்று வருகின்றனர். மேலும், வீட்டுப் பெரியோர்கள் வேறிடத்திலும், இவர்கள் வேறிடத்திலும் வசித்து வருவதனால் சரியான வழிகாட்டுதல்கள் கிடைப்பதில்லை.

சரியான நேரத்தில் மாங்கல்ய சரடை மாற்றிக்கொள்ளாததால், அது தேய்ந்து தங்களிடமிருந்து இருந்து தற்செயலாக விலகி இருக்கிறது. இதுகுறித்து அஞ்சவேண்டாம். நாம் நம் புத்தியுடன் ஒரு வேலை செய்வதற்கும், அறியாமல் அது நடப்பதற்கும் சில தருணங்களில் வேறுபட்ட பலன்கள் உள்ளன.

தாங்கள் எதற்கும் பயப்படாமல், தங்கள் குலதெய்வத்தை வேண்டிக்கொண்டு, தங்கள் கணவர் மூலம் புதிய சரடில் கோத்துவைத்துள்ள மாங்கல்யத்தைக் கட்டிக்கொண்டு, நேரம் கிடைக்கும்போது குலதெய்வ ஆலயத்துக்குச் சென்று வழிபட்டு வரவும்.

நமக்கு வரவேண்டிய கவலைகள் இதுபோன்ற நிகழ்வுகளினால் விலகிவிடும். பயம் தேவையில்லை.

? வீட்டில் முருகன் விக்கிரகம் வைத்து பூஜை செய்ய விரும்புகிறேன். அதற்கான நியதிகள் பற்றி விளக்கும்படிக் கேட்டுக்கொள்கிறேன்.

- ஆர்.சுப்பிரமணியம், காஞ்சிபுரம்

முருகப்பெருமான் ஷண்முகராக இருப்பின் தெற்கு நோக்கியும், மற்ற கோலத்தில் இருந்தால் கிழக்கு அல்லது மேற்கு நோக்கியும், அவரின் விக்கிரகம் அல்லது உருவப்படத்தை வைத்து வழிபடலாம்.

தெய்வத் திருமேனி எனில் அவரை அனுதினமோ அல்லது கிருத்திகை, விசாகம், சஷ்டி, பௌர்ணமி போன்ற விரத தினங்களிலோ அல்லது செவ்வாய்க் கிழமைகளிலோ தங்கள் சக்திக்கு ஏற்றவாறு குறிப்பிட்ட நாள்களைத் தேர்வு செய்து, தவறாமல் தங்களால் முடிந்த அளவு வழிபடவேண்டும். அப்போது, பல திரவியங்களால் அபிஷேகம் செய்து முருகப்பெருமானைக் குளிர்வித்து, தூய வஸ்திரம் அணிவித்து, மணமுள்ள சிவப்பு, பச்சை, வெண்மை நிறத்திலுள்ள மலர்ச்சரத்தால் அலங்கரித்து, அருகில் கிடைக்கக்கூடிய அரளி, ரோஜா போன்ற மலர்களில் ஒன்றினால் முருகப்பெருமானுக்கு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.

மலர்கள் நம் கர்மாக்களைப் போக்கக்கூடிய ஆற்றல் கொண்டவை. கந்தனின் 108 நாமங்கள் அல்லது 1,000 நாமங்கள் அல்லது கந்தரனுபூதி, கந்தரலங்காரம், திருமுருகாற்றுப் படை, கந்தசஷ்டி கவசம் போன்ற துதிகளைப் பாராயணம் செய்யலாம். சிறப்பாகக் கல்ப பூஜை முறைகள் நம் ரிஷிகளால் அளிக்கப்பட்டிருக்கின்றன. எதுவாயினும் பக்தியுடன் அர்ப்பணிப்பது மிகவும் முக்கியம். பல வகையான நிவேதனங்களை இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி வடிவமான வள்ளி தேவசேனா முருகப்பெருமானுக்குச் சமர்ப்பித் தால், நம் வினைகளை வேருடன் களைந்து, நமக்கு அனைத்து நலன்களையும் அருள்வதுடன் முக்தியையும் முருகப்பெருமான் அருள்புரிவார்.

முருகனை முறைப்படி வழிபட்ட பிறகு, பிரசாதத்தில் சிறிது தாங்கள் ஏற்று, மற்றவற்றை ஏழை எளியவர்களுக்கு வழங்குவதன் மூலம் மனநிறைவும் மகிழ்ச்சியும் அடையலாம்.

- பதில்கள் தொடரும்...

வாசகர்களே... ஆன்மிகம் தொடர்பான அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் தருகிறார்,

சென்னை `காளிகாம்பாள் கோயில்' சிவஸ்ரீசண்முக சிவாசார்யர்.

கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி: கேள்வி-பதில், சக்தி விகடன் 757, அண்ணாசாலை, சென்னை-600 002