Published:Updated:

நந்திதேவரைக் கனவில் கண்டால் என்ன பலன்?

நந்திதேவர்
பிரீமியம் ஸ்டோரி
நந்திதேவர்

ஆன்மிகக் கேள்வி பதில்கள்

நந்திதேவரைக் கனவில் கண்டால் என்ன பலன்?

ஆன்மிகக் கேள்வி பதில்கள்

Published:Updated:
நந்திதேவர்
பிரீமியம் ஸ்டோரி
நந்திதேவர்

? கோயிலுக்கு எதிரில் சந்தியில் வீடு அமைந்திருந்தால் தோஷமா? அதற்கு ஏதேனும் பரிகாரம் செய்ய வேண்டுமா, என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

- கே.கலைமகள், பல்லடம்

நம் ஆன்மா லயமாகக்கூடிய இடம் ஆலயம். ஆலயங்கள் இப்படித்தான் அமையவேண்டும் என்று நம் ஆகமங்கள் வகுத்து வைத்துள்ளன. அதன்படி அமையும்போது, அளவில்லாத நேர்மறை ஆற்றல்களைப் பெற்று நாம் மனோரீதியாக முன்னேறுகிறோம். அதுபோலவே, நம் வீடுகளும் இப்படித்தான் அமைய வேண்டும் என வாஸ்து சாஸ்திரங்கள் கூறுகின்றன. அப்படி அமைந்தால், அந்த வீடு அறிவியல் ரீதியாக நல்ல காற்றோட்டமும் வெளிச்சமும் பெற்று, தீய எண்ணங்கள் வீட்டில் உள்ளோரை அணுகாதவகையில், உடல் மற்றும் மன ரீதியாக வளர்ச்சி பெற உதவும்.

ஆலயத்துக்கு நேர் எதிரில் வீடு இருப்பது என்பது வழக்கம் இல்லை. அந்தக் காலத்து ஆலயங்களைப் பார்த்தால் உங்களுக்குத் தெரியும். கோயிலுக்கு எதிரே குளம், மண்டபங்கள், சத்திரங்கள், பிள்ளையார் கோயில்கள் மட்டுமே இருக்கும்; வீடுகள் இருக்காது. இது சுத்தம் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமே. சில வேளைகளில் நம் வீடு சுத்தமில்லாமல் இருக்கலாம்; சில தீட்டுகள் இருக்க லாம். எனவே, கோயில் எதிரே வீடு இருப்பது அசௌகர்யத்தைக் கொடுக்க வாய்ப்பு உண்டு. ஸ்வாமியையே நாம் நேராகப் பார்க்கக் கூடாது என்ற விதி உள்ளது. இதெல்லாம் அந்தக் காலத்தில் உண்டான கணக்குகள்; பெரியோர்களால் உண்டாக்கப்பட்ட மனோரீதியான ஆலோசனைகள்.

நந்திதேவரைக் கனவில் கண்டால்
என்ன பலன்?

சரி, `இப்போது வீடு கோயிலுக்கு எதிரே அமைந்துவிட்டது; என்ன செய்யலாம்' என்று கேட்கிறீர் கள். இதனால் கோயிலையோ, வீட்டையோ மாற்ற முடியாதுதான். ஆனால் சில பரிகாரங்களைச் செய்யலாம். முடிந்தால் வீட்டின் வாசலை மாற்றலாம். உங்கள் வீட்டின் வாசலில் கொடி மரத்தை அல்லது கோயில் வாசலைப் பார்த்தபடி ஒரு சூலம் வைக்கலாம். இந்த சூலம் உங்களுக்கு நன்மை செய்யும். அல்லது உங்கள் வீட்டைப் பார்த்தபடி நேரெதிரே ஒரு பிள்ளையார் சிலை அல்லது படத்தை வைக்கலாம். கணபதி ரூபமே சகல விக்னங்களையும் போக்கக் கூடியது!

? நான் ருத்ராட்ச மாலை அணிந்துள்ளேன். அந்த மாலையை எந்தெந்த தருணங்களில் கழற்றி வைக்க வேண்டும்; ருத்ராட்சம் அணிவதன் நியதி என்ன?

- சி.லோகநாதன், கடலூர்

ருத்திரனின் கண்களில் இருந்து வந்த ருத்ராட்ச மணியை - மாலையை அணிவது, சிறப்பான பலன்களைக் கொடுக்கும். அது, அதீத சக்தியைத் தரும் பூரண ஆபரணம் எனலாம்.

நாம் கழுத்தை ஒட்டி ஒற்றை அல்லது மூன்று ருத்ராட்சம் அணிந்திருப்போம். அதை ‘கண்ட ருத்ராட்சம்’ என்பார்கள். `கண்டம்' என்றால் கழுத்து. இந்தக் கண்டமணி எப்போதும் அணிந்து கொள்ளக்கூடிய சிறப்பு பெற்றது.

இதை எப்போதும் கழட்டக்கூடாது. ஆண், பெண் என அனைவரும் அனைத்து காலங் களிலும் அணியக் கூடியது இது. நமக்கும் இந்தப் பிரபஞ்சத்துக்கும் என்ன தொடர்பு, ஜீவனுக்கும் சிவனுக்கும் என்ன தொடர்பு ஆகியவற்றை உணர்த்துவது இந்தக் கண்ட மணி.

அதே ருத்ராட்சத்தை மாலையாக அணிந்து கொள்ளும்போது, பல நியதிகள் சொல்லப் படுகின்றன. ருத்ராட்சத்தை மாலையாகத் தரிக்கும்போது அதன் ஆற்றல் பன்மடங்கு அதிகமாகிறது. எனவே, கழிவறைக்குச் செல்லும் போது, சாப்பிடும்போது, தூங்கச் செல்லும்போது, வெளியே செல்லும்போது... இன்னின்ன காரணங் களால் ருத்ராட்ச மாலையை அணியக் கூடாது என்று சாஸ்திரங்கள் வகுத்து வைத்துள்ளன.

பூஜையில், கோயிலில், மங்கல காரியங்களில் ருத்ராட்ச மாலை அணியலாம். உடல் அசுத்தமா கும் என்ற நிலையில் இந்த மாலையை அணிந்திருக் கக் கூடாது என்கிறது சாஸ்திரம்.

அந்த மகத்துவமான மாலைக்கு உரிய மரியா தையை அளிக்கவேண்டும். நாம் அவிழ்த்து வைக்கும் மாலையைக்கூட, உரிய பேழையில் இட்டு வணக்கத்தோடு வைக்கவேண்டும். ஜடத்திலும் ஸ்வாமியின் சைதன்யம் உண்டு.கழற்றிவைக்கப்பட்ட நிலையிலும் ஸ்வாமி அதனுள் இருக்கிறார் என்றே சொல்லலாம்.

கவசம் எப்படி ஒரு வீரனைக் காக்குமோ, அப்படி ருத்ராட்சம் ஒரு மனிதனைக் காக்கக் கூடியது. அதை பயபக்தியோடு தரிக்கவேண்டும் என்றே ஆகமங்கள் சொல்கின்றன.

? கனவில் தெய்வ உருவங்களைக் காணலாமா. சமீபத்தில் ஒருநாள், நந்திதேவரை என் கனவில் கண்டேன். இது நல்லதா?

- மா.பாண்டியன், மதுரை-3

நாம் எதை நினைத்துக் கொண்டிருக்கிறோமோ அதன் சம்பந்தமான கனவுகளே பெரும்பாலும் வருவது உண்டு. எல்லா கனவுகளுக்கும் சரியான பலன்களைச் சொல்லிவிட முடியாது. ஆனால் ஆன்மிகத்தில் பல கேள்விகளுக்குப் பதிலாக கனவுகள் வருவது உண்டு.

சிவபெருமானின் வாகனம் நந்தி. ஒருவருக்குக் கனவில் நந்தி வருகிறார் என்றால், அந்த அன்பர் சிவபெருமானின் அனுகிரஹத்தைப் பெறப் போகிறார் என்று பொருள்; அந்த அன்பருக்கு மங்கலகரமான செய்திகள் வரப் போகின்றன என்று அர்த்தம். ஆகவே, நீங்கள் கண்ட கனவு உங்களுக்குப் பூரண நன்மையையே அளிக்கும்; சந்தோஷமாக எடுத்துக்கொள்ளுங்கள்.

? பெண்கள், காலில் தங்கக் கொலுசு அணிந்து கொள்ளலாமா; சாஸ்திரம் என்ன சொல்கிறது?

- கே.மீனலோசினி, சமூகரங்கபுரம்

நந்திதேவரைக் கனவில் கண்டால்
என்ன பலன்?

ஆபரணங்கள், அழகுக்கு மட்டுமல்ல; அதீத சக்திக்கும் பொறுப்பானவை. எந்த உலோகத்தால் ஆன ஆபரணத்தை உடலின் எந்த பாகத்தில் அணிந்தால் என்ன பலன் என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள்.

எந்தக் காரியத்தையும் காரணமின்றி செய்யாதே என்கிறது நம் தர்மம். ஆக பெரியோர்களின் விளக் கம் ஒவ்வொன்றுக்கும் ஒரு காரணம் இருக்கும். தங்கம் என்றால் புனிதமானது; நெருப்புக்குச் சமமானது என்கிறது சாஸ்திரம். தங்கம் ஆகர்ஷிக்கும் சக்தி கொண்டது. அதனால்தான் ஸ்வாமிக்கு தங்க ஆபரணங்கள், கவசங்களைச் சார்த்துகிறோம்; அங்கிருந்து வெளியாகும் அதீத சக்திகளைப் பெற்றுக்கொள்கிறோம்.

மனிதர்களைப் பொறுத்தவரை இடுப்புக்குக் கீழே தங்கம் அணிவது நம் வழக்கமல்ல. ரத்த ஓட்டம், நரம்புகளின் துடிப்பு போன்ற பல உயிரியல் காரணங்களால் இடுப்புக்குக் கீழே தங்கம் அணிவது தடை செய்யப்பட்டுள்ளது, நம் பெரியோர்களால். எனவே கொலுசு, மெட்டி போன்றவற்றை தங்கத்தில் அணியாமல் இருப்பதே நலம்.

- பதில்கள் தொடரும்...

வாசகர்களே... ஆன்மிகம் தொடர்பான அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் தருகிறார், சென்னை `காளிகாம்பாள் கோயில்' சிவஸ்ரீசண்முக சிவாசார்யர்.

கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி: கேள்வி-பதில், சக்தி விகடன் 757, அண்ணாசாலை, சென்னை-600 002

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism