Published:Updated:

குங்கும அர்ச்சனைக்கு சொல்லவேண்டிய துதி என்ன?

ஆன்மிகக் கேள்வி பதில்கள்

பிரீமியம் ஸ்டோரி
வலம்புரிச் சங்கு
வலம்புரிச் சங்கு

? வீட்டில் வலம்புரிச் சங்கு வைத்து வழிபட்டு வருகிறேன். அதில் தினமும் தீர்த்தம் நிரப்பிவைக்க வேண்டுமா? வலம்புரிச் சங்கில் தினமும் பால் நிரப்பி வைக்க வேண்டும் என்கிறார்கள் சிலர். தாங்கள் வழிகாட்ட வேண்டும்.
அதேபோல், வலம்புரி சங்குக்கு என பிரத்யேக வழிபாடு ஏதேனும் உள்ளதா. உண்டு எனில், அதுபற்றியும் அறிய விரும்புகிறேன்.
- சங்கரி சுப்ரமணியன், சென்னை-59

அபிஷேகம் செய்வதற்குச் சங்கு பயன்படுத்துவார்கள். அபிஷேகம் செய்யாதபோது, பூஜை காலங்களில் விசேஷ அர்க்யங்கள் செய்வதற்குச் சிறப்பு பூஜை செய்பவர்கள் இதை உபயோகப்படுத்தலாம். மற்ற நேரங்களில் சங்கை பத்திரமாக வைத்தால் போதுமானது.

பால் போன்றவற்றை நிரப்பிவைக்க வேண்டும் என்றெல்லாம் இல்லை. சிறப்புப் பூஜை செய்பவர்கள் அப்போது மட்டும் நீர் நிரப்பி வைப்பார்கள். அதில் மந்திரங்களைக் கூறி, விசேஷ திரவியங்களை இட்டு மலர்களால் அர்ச்சித்து கடவுளுக்குச் சமர்ப்பிப்பர்.

சங்கு வீட்டில் இருந்தாலே விசேஷமானது. அதைத் தூய்மையாகவும் பத்திரமாகவும் வைத்துக்கொண்டாலே போதுமானது.

குங்கும அர்ச்சனைக்கு சொல்லவேண்டிய துதி என்ன?

? வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் விளக்கேற்றி வைத்து, அம்பிகைக்குக் குங்கும அர்ச்சனை செய்து வழிபட விரும்புகிறேன். குங்கும அர்ச்சனை செய்வதற்கென தனியே நாமாவளி துதிகள் உள்ளனவா?
- சி.வத்சலா, மன்னார்குடி

‘அர்ச்’ என்றால் வழிபடுதல் என்று அர்த்தம். எல்லாம்வல்ல கடவுளை ஒருநிலையில் வரவழைத்துப் பூஜிப்பது என்று பொருள். வெள்ளிக் கிழமைகளில் விளக்கேற்றி வைத்து அம்பிகையை வழிபடுவது சிறப்பானது. இந்த வழிபாட்டின்போது, ‘ஓம்’ என்று ஆரம்பித்து ‘நம:’ என்று முடியும் வகையில், அம்பிகையின் திருநாமங்களைக் கூறி வழிபடலாம்.

108 நாமாக்கள், 300 நாமாக்கள், 1008 நாமாக்கள் என்று தங்கள் நேரத்துக்கு தகுந்தாற்போல், அன்னையின் திருநாமங்களைக் கூறி வழிபடலாம்.மேலும் அபிராமி அந்தாதி, தேவி ஸப்த ஸ்லோகி அல்லது தங்களுக்குத் தெரிந்த தோத்திரங்களைப் பக்தியுடன் படித்தும் வழிபடலாம். தூபம், தீபம், நைவேத்தியம், கற்பூர ஹாரத்தி என தங்களால் இயன்றதைச் சமர்ப்பித்து வணங்கலாம்.

கன்னிகை, சுவாஸினி என பெண்களை வழிபட்டு நலங்கு இட்டு, அவர்களுக்குப் பூ, பழம், குங்குமம், தாம்பூலம் என அம்பிகையின் மங்கலச் சின்னங்களை அளித்து மகிழலாம். அம்பிகையின் வடிவங்களாகத் திகழும் பெண்களையும் விளக்குப் பூஜை செய்தபிறகு வழிபட்டு மகிழலாம். இதனால் உங்கள் வீட்டில் சுபிட்சம் பெருகும்.

குங்கும அர்ச்சனைக்கு சொல்லவேண்டிய துதி என்ன?

? நண்பர் ஒருவர் தினமும் சிவாலயம் சென்று அங்கு மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வருகிறார். அவர் வளர்த்த வில்வ மரத்தில் இருந்து இலைகளைப் பறித்து சிவ பூஜைக்கும் கொடுத்து வருகிறார். கோயிலில் உள்ள வில்வத்தை பறிக்கலாமா?
- எம்.விநாயகமூர்த்தி, கோவை-2

சிவபெருமானுக்கு அர்சிக்கத்தானே வில்வம். சிவனுக்கு உரியதை ஆலயத்தில் உள்ள நந்தவனத்திலிருந்து பெற்றுதான் அளிக்க வேண்டும் என்ற நியதியே உள்ளது.

தற்காலத்தில் நந்தவனங்கள் இல்லாததால், வெளியே கடையில் புஷ்பங்கள், இலைகள் வாங்கிக் கொடுக்கிறோம். ஆலய வளாகத்துக்குள் மரங்கள் நட்டு அதன் மலர்களை, இலைகளை இறைவனுக்கு அளிப்பது சிறந்ததே.

குங்கும அர்ச்சனைக்கு சொல்லவேண்டிய துதி என்ன?

? திருக்கோயில்களில் ராஜ கோபுரங்கள், கோயில் விமானங்கள் போன்றவை மிக உயரமாக அமைக்கப்பட்டதன் தாத்பர்யம் என்ன?
- அன்பழகன், சென்னை-78

‘விகதம் மானம் - விமானம்’ என்ற வரிகளால், உள்ளே இருக்கக் கூடிய இறைவனின் உருவமே விமானம் என்கிறது சாஸ்திரம். `மானம்’ என்றால் அளவு; `விமானம்’ என்றால் அளவில்லாதது.

எல்லாம்வல்ல பரம்பொருள் பல்வேறு உருவங்களில் வெளிப்பட, பசுக்களான உயிர்களைப் பரமாத்மாவிடம் அழைத்துச் செல்லும் அனுபவத்தை அளிக்கக்கூடியன கோயில் வழிபாடுகள்.

கும்பாபிஷேகத்தில் முதல் வழிபாட்டைக் கோயில் விமானத்துக்குச் செய்தபிறகே மூலவருக்குச் செய்வார்கள். விமானத்தில் இருக்கும் கலசங்களின் வழியே மூலக் கருவறையில் இருந்து வெளியாகும் பிரபஞ்ச சக்தி உலகம் முழுவதும் பரவ வாய்ப்பாக அமைகிறது. உலகுக்கு வேண்டிய சக்தியை அளிக்கக் கூடிய இடமே ஆலயம். அது வெறும் மக்கள் கூடும் இடம் மட்டுமல்ல.

ராஜ கோபுரத்தை ஸ்வாமியின் திருப்பாதங்களாக எண்ணி வழிபட வேண்டும். நேரம், சூழல் காரணமாக ஆலயத்துக்குள் சென்று வழிபட இயலாத நிலையில் உள்ளோரும் கோபுரத்தையும் விமானத்தையும் கண்டு வணங்கினால், சுவாமியை வணங்கிய பலனைப் பெறலாம். ஆலயங்களில் விமானத்தை எப்படிச் செய்யலாம், அளவு என்ன என்பன குறித்து பல அரிய தகவல்கள் உண்டு!

குங்கும அர்ச்சனைக்கு சொல்லவேண்டிய துதி என்ன?

? குலதெய்வக் கோயிலின் திருப்பணி குறித்து பிரச்னம் பார்க்க உள்ளோம். பிரச்னத்தின்போது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இருக்க வேண்டும் என்கிறார்கள். இப்போதைய சூழலில் மூத்த உறுப்பினர்கள் மட்டும் கலந்து கொள்ளலாமா?
- கே.சங்கரநாராயனன், கோவில்பட்டி

இயலாத நிலையில், இயன்றதைத்தானே செய்ய முடியும். ‘பிரச்னம்’ என்றால் கேள்வி. சிலர் பிரஸன்னம் என்று தவறாகக் கூறுகிறார்கள். நமக்கு உரிய கேள்விகளுக்கு, அந்த உபாசகர் தான் வணங்கும் தேவதையை அழைத்து பதில்கள் வரவழைப்பார். அப்போது வழிபாட்டின் தன்மையைப் பொறுத்து பதில்கள் அமையும்.

குலதெய்வ திருப்பணி குறித்து அறிய, தங்கள் வீட்டுப் பெரியோர்களை அழைத்துச் செல்வதுதான் சரியானது. அனைவரையும் அழைத்துச் செல்ல முடியாதபோது நீங்கள் என்ன செய்ய முடியும். இதற்கு மேல் எல்லோரும் வந்தால்தான் பார்க்க முடியும் என்றால், தாங்கள் வேறு ஒருவரை வைத்து பிரச்னம் பார்க்கலாம்; தவறில்லை.

- பதில்கள் தொடரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு