Published:Updated:

சிவமயம்

சிவமயம்
பிரீமியம் ஸ்டோரி
சிவமயம்

`சிவாய நம' என்பது சூட்சும பஞ்சாட்சரம். நமசிவாய மந்திரத்தைப் போல ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது. `சிவாய நம' ஈசனின் ஐந்து திருமுகங்களையும் குறிப்பது;

சிவமயம்

`சிவாய நம' என்பது சூட்சும பஞ்சாட்சரம். நமசிவாய மந்திரத்தைப் போல ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது. `சிவாய நம' ஈசனின் ஐந்து திருமுகங்களையும் குறிப்பது;

Published:Updated:
சிவமயம்
பிரீமியம் ஸ்டோரி
சிவமயம்

வணக்கம். வாழிய நலம்!

கடும் கோடைக்காலம் முடிந்து ஆங்காங்கே மழை பொழிந்து வருகிறது. விவசாயப் பணிகளையும் உழவர் பெருமக்கள் தொடங்கியுள்ளனர். தொற்று நோயின் பயம் நீங்கி மக்கள் இயல்பு நிலைக்கு வந்துள்ளனர். ஏரோட்டமும் தேரோட்டமும் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. நல்லது, எல்லா நலமும் எல்லோரும் பெற்று வாழ எல்லாம்வல்ல சிவத்தை வேண்டி பிரார்த்தித்துக்கொள்கிறேன். சிவாயநம!

`ஐயா நமசிவாய, சிவாயநம என்ற மந்திரங்களின் பொருள் என்ன? அவை தரும் நன்மைகள் என்ன?' என்று அன்பர் ஒருவர் கேட்டிருக்கிறார்.

இறைவா, ஆண்டவா, பெருமானே, பெருமாளே, மூலமே, பரம்பொருளே என்பதெல்லாம் எல்லா தெய்வத்துக்கும் பொருந்தும் பொதுவான திருநாமங்கள். சிவமே என்பது சிவனை மட்டுமே குறிக்கும் தனியான சிறப்பு கொண்ட சொல். சிவமே எல்லாம் என்பதைச் சொல்லும் மந்திரமே சிவாயநம. சகல தேவர்களுக்கும் தலைவனானவர் சிவம். சிவாய என்றால் சிவமே என்று பொருள். `நம' என்றால் வாழ்க, வளர்க, வெல்க, போற்றி எனப் பல பொருள் கொண்டது. சப்தகோடி மந்திரங்களில் சிறப்பானது `நம'. மற்ற எல்லா மந்திரங்களையும் சொல்லும்போது `ஓம்' சேர்க்க வேண்டும். ஓம் சரவண பவ, ஓம் சக்தி, ஓம் நமோ நாராயணாய... இப்படி! ஓம் சேர்க்க தேவையில்லாத மந்திரம் சிவாயநம. இது பிரணவத்தைக் காட்டிலும் உயர்வானது. தசநாதங்களிலும் ஒலிக்கக்கூடிய மந்திரம் சிவாயநம.

ஸ்தூல சரீரம், சூட்சும சரீரம், காரண சரீரம் என மூவகை தேகம் நமக்கு உண்டு. ஸ்தூல சரீரத்துக்கு நமசிவாய மந்திரம். அதாவது... அது வேண்டும் இது வேண்டும் என்று தேவைப்படுபவருக்கு எல்லாமும் தரக்கூடியது `நமசிவாய' மந்திரம். சூட்சும சரீரத்துக்கு `சிவாயநம'. இது முக்தியும் மோட்சமும் தரவல்லது. அதாவது மறுமைக்குத் தேவையானதைத் தரக்கூடியது. காரண சரீரத்துக்கு `சிவசிவ' மந்திரம். சிவ சிவ என்றிடத் தேவருமாவர், சிவ சிவ என்னச் சிவ கதிதானே!

சிவபூஜை
சிவபூஜை

`சிவாய நம' என்பது சூட்சும பஞ்சாட்சரம். நமசிவாய மந்திரத்தைப் போல ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது. `சிவாய நம' ஈசனின் ஐந்து திருமுகங்களையும் குறிப்பது; அதில் இருந்து தோன்றியது. ந-நிலம், ம-நீர், சி-நெருப்பு, வ-காற்று, ய-ஆகாயம் என அனைத்தையும் குறிப்பது. `சிவாய நம' மந்திரத்தைத் தொடர்ந்து கூறினால் ஆயுள் கூடும். இது பிராண வாயுவைப் பெருக்கி, மூச்சைச் சீராக்கும் யோகமந்திரமும் கூட. அதனாலேயே தமிழ் மூதாட்டி `சிவய நம என்று சிந்தித்திருப்போர்க்கு அபாயம் ஒரு நாளுமில்லை' என்றார். `சித்தம் ஒருங்கிச் சிவயா நம என்று இருக்கினல்லால், அத்தன் அருள் பெறலாமோ அறிவிலாப் பேதை நெஞ்சே!' என்கிறார் அப்பர். `வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது நாதன் நாமம் நமசிவாயவே!' என்கிறார் காழிப்பிள்ளையார்.

நான்கு மறைகளின் சாரம் போன்று விளங்கு வது நமசிவாய மந்திரம். இது மந்திரங்களில் ரத்தினம் எனப்படும். இதன் பெருமையை உரைக்க சம்பந்தர் இரண்டு பதிகமும் அப்பரும் சுந்தரரும் தலா ஒரு பதிகமும் தந்துள்ளார்கள். சம்பந்தருக்கு உபநயன விழா நடைபெற்றபோது, மறையோர்கள் வேத மந்திரங்கள் பலவும் முழங்க, சம்பந்தரோ `எல்லா மந்திரங்களும் தோன்ற மூலகாரணமாக விளங்குவது திரு ஐந்தெழுத்தே' என்று உணர்த்தும் வகையில்

`துஞ்சலுந் துஞ்சலிலாத போழ்தினும்

நெஞ்சக நைந்து நினைமின் நாடொறும்

வஞ்சகம் அற்றடி வாழ்த்த வந்தகூற்

றஞ்சவு தைத்தன அஞ்செழுத்துமே'
என்று பாடினார். வேதத்துக்கு நிகரானது பஞ்சாட்சர மந்திரம் என்றும் நிறுவினார்.

சிவபூஜை
சிவபூஜை

சகல வேதங்கள், மந்திரங்கள் யாவினும் உயர்ந்தது சிவாயநம மந்திரம். திருநீறு அணிந்து சிவாயநம என்று சிந்தித்தால் போதுமாம், அவருக்கு சிவகதி கிட்டிவிடும் என்கிறார் மாணிக்கவாசகர். `திருவாய் பொலியச் சிவயாநம என்று நீறணிந்தேன் தருவாய் சிவகதி நீ பாதிரிப் புலியூர் அரனே' என்கிறார்.

திருவைந்தெழுத்து, மந்திர ராஜம், பஞ்சாட்சரம் என்றெல்லாம் போற்றப்படும் `சிவாய நம' மட்டுமே மா மந்திரம் எனப்படும். `உன்னை மறந்துவிடவும் கூடும், ஆனாலும் உன் ஐந்தெழுத்தை மறக்கமாட்டேன்' என்கிறார் சுந்தரர். `நற்றவா உனைநான் மறக்கினும் சொல்லும் நா நமசிவாயவே' என்றும் அவர் கூறுகிறார்.

சிவ. தாமோதரன்
சிவ. தாமோதரன்

திருமுறைகளில் உன்னதமானது திருவாசகம். அது தொடங்குவதே `நமசிவாய வாழ்க' என்றுதானே! ஆதி மந்திரம் ஐந்தெழுத்து என்றே தெய்வச் சேக்கிழாரும் குறிப்பிடுகிறார். `ந' என்றால் திரோதாண சக்தி; `ம' என்பது ஆணவ மலம்; `சி' என்றால் சிவம்; `வா' என்றால் திருவருள் சக்தி; `ய' என்றால் ஆன்மா. அதாவது ஆன்மா சிவத்தோடு கலக்க, இந்த மந்திரமே உதவும் என்பது குறிப்பு. `செம்பும் பொன்னாகும் சிவாயநம என்றால்...' என்கிறார் திருமூலர்.

`சிவாயநம' என்பதே நடராஜப்பெருமானின் திருவடி வைக் காட்டும் எளிய மந்திரம்' என்கின்றன சைவ சித்தாந்த நூல்கள். சி - உடுக்கை ஏந்திய கரம், வா - தூக்கிய திருவடி மற்றும் இடது கரம். ய - அஞ்சேல் என்ற வலது அபய கரம், ந - அனலேந்திய இடக்கரம், ம - முயலகன் மீது ஊன்றிய திருவடி என்கிறது சைவ சித்தாந்தம். இந்த ஐந்தெழுத்தை எல்லோரும் எப்போதும் கூறலாம். இந்த மந்திரத்தை மட்டுமே கூறினாலும் போதும் பல நூறு யாகங்கள், பல ஆயிரம் அபிஷேகங்கள் செய்த பலன்கள் கிட்டும் என்பது ஐதிகம்.

சிவலிங்கம்
சிவலிங்கம்
Muralinath

நமசிவாய எனும் மந்திரம் ஓதினால் எந்தவித உடற் பிணியும் வராது என்கிறார் சேக்கிழார். ஐந்தெழுத்தை ஓதி நெஞ்சுருகத் தினமும் வழிபடுவோருக்கு யமனும் அஞ்சுவான் என்கிறார் திருஞானசம்பந்தர். உடலுக்கும் மனதுக்கும் உற்சாகம் அளிக்கும் இந்த ஐந்தெழுத்து மந்திரத்தைத் தினமும் உச்சரித்தால், ஆன்மா ஈசனைக் கண்டு கொள்ளும். பிறகு பிறவா நிலை எட்டிவிடும்.

'இல்லக விளக்கது இருள் கெடுப்பது

சொல்லக விளக்கது சோதி யுள்ளது

பல்லக விளக்கது பலருங் காண்பது

நல்லக விளக்கது நமச்சி வாயவே'


எல்லா இருளையும் அகற்ற வல்லது சிவாயநம மந்திரம் என்கிறார் அப்பர். அப்பர் பெருமானே சொல்லிய பிறகு அப்பீல் உண்டா என்ன! நீங்கள் ஜப தபம் எதுவும் செய்ய முடியாதவராக இருக்கலாம். பூஜை, புனஸ்காரங்கள் செய்ய நேரம் இல்லாதவராக இருக்க லாம். பரவாயில்லை... நெற்றி நிறைய திருநீறும், வாய் நிறைய சிவாயநம எனும் மந்திரமும் சொன்னால் போதும்; வந்த கவலைகள் விலகும், வரவிருக்கும் கவலைகள் திசை மாறும்.

- பேசுவோம்...

வந்தியத் தேவனின் ஊரில் நந்தி எதிர்நோக்கும் அசுரன்!

சென்னை-வேலூர் மார்க்கத்தில் ராணிப்பேட்டைக்கு அருகில் உள்ள ஊர் திருவல்லம். தற்போது திருவலம் என்றே அழைக்கப்படுகிறது. வந்தியத்தேவனின் மரபினர் ஆண்ட ஊர்.

அம்பிகை தீர்த்தமாட ஏதுவாக சிவபிரான் `நீ வா' என்று அழைத்ததை ஏற்று இங்கு பாயும் நதிக்கு `நிவா' என்றே பெயர். தற்போது பொன்னை நதி எனப் பெயர் பெற்றுவிட்டது. இங்கே அருள்மிகு தனுமத்யாம்பாளுடன் கோயில் கொண்டிருக்கிறார் அருள்மிகு வில்வநாதேஸ்வரர்

நந்தி
நந்தி

இந்தக் கோயிலில் உள்ள நந்திகள் இறைவனைப் பார்க்காமல் கிழக்கு நோக்கி அமைந்துள்ளனர். சிவ ஆணைப்படி கஞ்சன் எனும் அசுரனுடன் போரிட்டு அவனை வீழ்த்தினார் நந்தி. அசுரனை வீழ்த்திய நந்தி, தொடர்ந்து காவல் காப்பதற்காக, அசுரன் மீண்டும் வந்தால் எதிர்கொள்ள வசதியாகக் கிழக்கு நோக்கியபடி (உள்ளே வரும் திசையைப் பார்த்தபடி) அமர்ந்துள்ளாராம்!

- வி.சுஜாதா, ஆற்காடு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism