Published:Updated:

லட்சுமி கடாட்சம் - 4

லட்சுமி கடாட்சம்
பிரீமியம் ஸ்டோரி
லட்சுமி கடாட்சம்

லக்ஷ்மி சிவச்சந்திரன்

லட்சுமி கடாட்சம் - 4

லக்ஷ்மி சிவச்சந்திரன்

Published:Updated:
லட்சுமி கடாட்சம்
பிரீமியம் ஸ்டோரி
லட்சுமி கடாட்சம்

வாழும் வரையிலும் கற்றுக்கொண்டே இருக்கவேண்டும். ‘Life is a learning process’தானே! கடைசி நிமிஷம் வரையிலும், இந்த உடலிலிருந்து உயிர் பிரியும் வரையிலும் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் இல்லையா?!

லட்சுமி கடாட்சம்
லட்சுமி கடாட்சம்


இந்த ‘லேர்னிங் ப்ராசஸ்’ என்பதுவும் நாமாக உருவாக்கிக் கொள்வதுதான். சிலரைப் பார்த்திருக்கிறேன்... ஏதோ நான்கு நாட்கள் விடுமுறை கிடைத்தால் போதும்... ‘`அப்பாடா.. நல்லா கை - காலை நீட்டி தூங்கி ரெஸ்ட் எடுக்கணும்!’’ என்று சொல்வார்கள்.

என்ன ரெஸ்ட்... எதற்கு ரெஸ்ட்? எனக்குப் புரியவில்லை. நாம் என்ன பெரிதாக மலையைப் புரட்டிவிட்டோம். தினமும் வேலை செய்கிறோம். இரவில் படுத்துத் தூங்கும்போது அதற்கான ஓய்வுதான் கிடைத்துவிடுகிறதே! ஒருவேளை, உடல்நிலை சரியில்லை என்றால் அதற்கேற்றபடி ஓய்வு எடுத்துக்கொள்ளலாம்; தவறில்லை. ஆனால், சும்மாவே சோம்பித் திரிதல் என்று ஒன்று இருக்கிறது. ‘சோம்பித் திரிதலே சுகம்’ என்று நினைப்பவர்களும் இருக்கிறார்கள். அதுவே சிந்தனையுடன் சோம்பித் திரிந்தால்கூட பரவாயில்லை; ஏதோ ஒரு விதத்தில் சேர்த்துக்கொள்ளலாம். ஆனால், எவருக்கும் உபயோகமின்றி சோம்பித் திரிதல் வீண்தான்.

சரி... இப்போது என்னுடைய ‘லாக்டவுன்’ காலத்துக்கு வருவோம். நான் விரும்பிய விஷயங்களை... கற்றுக்கொள்ளாமல் தவறவிட்ட சில புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். அதைவிட முக்கியம்... நான் மிகவும் விரும்பும் தனிமை அப்போது எனக்குக் கிடைத்தது.

தனிமை!

தனிமை சுகம் - தனிமை வரம். தனிமை நம்மை எப்படி உருவாக்கும் தெரியுமா? தனிமைதான் நம்மைப் பலமுள்ளவர்களாக ஆக்குகிறது என்பதில் எனக்கு உறுதியான நம்பிக்கை உண்டு. ஏனெனில், தனிமையில் நம்மோடு இறைவன் இருப்பான். நானும் எனக்குக் கிடைத்த தனிமையை அணு அணுவாக ரசித்து ஆனந்தித்தேன். கிடைத்தற்கரிய பொக்கிஷம் அல்லவா தனிமை. அதை வீணாக்கலாமா?

இறை எண்ணங்கள் நமக்குள் வரவேண்டும் என்றாலோ, அந்த இறைவனை ஆத்மார்த்தமாக வணங்கவேண்டும் என்றாலோ தனிமைதான் உசிதம். அவ்வளவு ஏன்... நாம் விரும்பும் ஒரு மந்திரத்தைத் திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டும் என்றால்கூட, அதற்குத் தனிமைதான் சிறந்தது. கூட்டத்தில் வாயைத் திறந்து சொல்லும்போது மந்திரம் அவ்வளவு சிலாக்கியமாக வருவதில்லை. பாதி உச்சரிப்பு சரியில்லாமல் இருக்கும் அல்லது பக்கத்தில் இருப்பவர் சொல்லும் மந்திரத்தில் கவனம் போகும்.

‘அவங்க சரியா சொல்லலயே... ‘நமகா’ன்னு சொல்றாங்களே... ‘நமஹ’ன்னு சரியா சொல்லலயே... அவர் ‘போற்றி’ன்னு சொல்றதுக்குப் பதிலா ‘போத்தி’ன்னுல்ல சொல்றார்... இந்த அம்மாவுக்கு இடையினம், மெல்லினம் சரியா வரலயே...’ இப்படியெல்லாம் மனதில் தோன்றும்.

இவை எல்லாவற்றுக்குமே காரணம், நான் சொன்ன சின்ன அகந்தைதான். ‘நமக்கு வந்துருச்சு’ என்ற அகந்தை!

அதற்காகத்தான் சொல்கிறேன்... தனிமை சிறப்பானது. ‘தனித்திரு, விழித்திரு, பசித்திரு’ என்ற வாக்கியத்தில், சாப்பிடாமல் பசித்திருக்கச் சொல்லவில்லை. அப்படி பசித்திருக்கவே முடியாது. ‘பசித்திரு’ என்பதன் பொருள் என்ன தெரியுமா? பல நல்ல விஷயங் களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஞானப் பசி வேண்டுமாம். அதெல்லாம் கொஞசம் பெரிய விஷயங்கள்!

அடுத்து, ‘விழித்திரு’. விழிப்போடு இரு என்பதுதான் இதன் பொருள். இதுவும் உயர்ந்த விஷயம்தான். ஆனால், ‘தனித்திரு’ மட்டும் கொஞ்சம் சுலபமாக இருக்கிறது இல்லையா! அதை நம்மில் யார் வேண்டுமானாலும் முயற்சிக்கலாம்.

இந்தக் கொரோனாவால் வீட்டில் முடங்கியது போல, முன்பொரு முறை வீட்டில் இருந்தது நினைவுக்கு வருகிறது. 1997-ல் தமிழ்த் திரையுலகில் ஒரு வேலை நிறுத்தம் வந்தது. படப்பிடிப்பு எதுவும் நடத்தக்கூடாது என்று சொல்லிவிட்டனர். நானும் இவரும் இந்த மாதிரி சந்தர்ப்பம் கிடைத்தால், உடனே எங்கேயாவது பயணம் போகலாம் என்றுதான் நினைப்போம். ‘அங்கே என்ன இருக்கு, இங்கே என்ன இருக்கு’ என்ற தேடல்தான். எங்கேயாவது, ஏதாவது ஒன்று கிடைக்கும் அல்லவா! அப்படித்தான் இருவரும் பயணத்தைத் தொடங்குவோம்.

ஆரம்பத்திலேயே இவர் சொல்வார்... ‘`அங்கே அந்தக் கோயில் இருக்கு. இங்கே இந்த சாமி இருக்குன்னு எல்லாம் அலையவிடக் கூடாது. இந்த மூணு நாளில் ரெண்டு கோயில் போறதுக்குத்தான் உனக்கு பர்மிஷன்” என்பார். ஆனால் பயணத்தைத் தொடரும்போது, அங்கங்கே வித்தியாசமாக... ஏதாவது ஒரு விஷயத்தில் சிறப்பாக... இப்படிப் பல கோயில்கள் போக நேர்ந்துவிடும். கண்டிஷன் எல்லாம் காற்றில் பறந்துவிடும். நிறைவில் மூன்று நாட்களில் ஆறேழு கோயில்களுக்குப் போயிருப்போம்.

நானா போகிறேன்; நான் தனித்துதான் இருக்கிறேன். என்னைக் கையைப் பிடித்து அவனல்லவா கூட்டி போகிறான்! அவனோ, அவளோ, அதுவோ, என் பாபாவோ... எனக்குத் தெரியாது.

10 நாள் ஸ்ட்ரைக்கில் தனித்திருக்க முடிந்த தருணங்கள் பல. எங்கெங்கோ போனோம். காரை எடுத்துக்கொண்டு சுற்றியதில் பல சின்னச் சின்னக் கோயில்களைத் தரிசித்தோம். அதுவரையிலும் பெயர்கூட கேள்விப்பட்டிராத பல கோயில்கள். அவையெல்லாம் ஆகம விதிகளின்படி கட்டப்படவில்லை என்றாலும்கூட, நம் இந்து மதம் வளரவேண்டும் என்று ஏதோ ஓர் ஆர்வத்தில் மனிதன் எடுக்கும் முயற்சி!

நீங்கள் நன்றாகக் கவனித்துப் பாருங்களேன்... சாதாரண சிறிய கோயிலாக இருக்கும். ஆனால் வெள்ளியும் செவ்வாயும் கூட்டம் அள்ளும்; ஆண்களும் பெண்களும் அலைமோதுவார்கள். பிள்ளையாரோ, முருகனோ, அம்மனோ ஏதோ ஒரு தெய்வம்...

மஞ்சள் பூசி, எலுமிச்சம் விளக்கு ஏற்றி, அடிப் பிரதட்சணம் வந்து என ஏதோ ஒன்று செய்கிறார்கள். அது அந்தப் பகுதியின் மிகச் சிறிய கோயிலாக இருந்தாலும், ஆன்மிக வெள்ளம் அலையடிக்கத்தான் செய்கிறது. சிறிய கோயில் எனும்போது, வேறொரு சம்பவம் ஞாபகம் வருகிறது.

ஒரு முறை குமுளிக்கு அருகே, குமுளி ஏரியைத் தாண்டி ஓர் இடத்தில் ஷூட்டிங். சின்ன ஊர் அது. நெட்வொர்க்கே இல்லாத மிகச் சிறிய கிராமம்.

அங்கே, அப்போதுதான் கட்டிய சிறியதொரு பிள்ளையார் கோயில் ஒன்று. அங்கே என் கவனத்தைக் கவர்ந்தது என்ன தெரியுமா?!

- கடாட்சம் பெருகும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism