
தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்
நம்முடைய மகாசன்னி தானம் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களுக்கு வாழ்வின் கடைசி தருணத்தில், இதய வால்வு பழுதடைந்த நிலையில் அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
``இதற்குப் பிறகு என் வாழ்க்கைப் போக்கு எப்படி இருக்க வேண்டும்?’’ என்று மருத்துவர்களிடம் கேட்டார்கள். ``அறுவை சிகிச்சைக்குப் பிறகு, உங்கள் பணிச் சுமைகளை நீங்கள் குறைத்துக்கொள்ள வேண்டும். எப்போதும் ஓய்வாகவே இருக்க வேண்டும்’’ என்றார்கள் மருத்துவர்கள்.

மகாசன்னிதானம், `ஓய்வெடுத்து வாழும் வாழ்க்கையைவிட, நன்கு உழைத்து விட்டு இந்த மண்ணை விட்டு வேகமாக விடைபெறுகிறேன்’ என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டார்கள். ‘ஊருக்கு உழைத்திடல் யோகம்’ என்று வாழ்ந்த யோகிகளின் வாழ்வில் சும்மா இருத்தல் இயலாத காரியம்!
ஓயாமல் உழைத்தபடி மனிதகுலத்தின் சுமைகளைத் தாங்கியவர்கள் ஏராளம். பிரெஞ்சுப் புரட்சிக்கு வித்திட்டவர் வால்டேர். மனித மனங்களில் சுதந்திரத்தை விதைத்த சிந்தனையாளர். ‘விழித்திடுங்கள். உங்கள் அடிமை விலங்கை உடைத் தெறியுங்கள்’ என்று ஓயாமல் குரல் கொடுத்த அந்தப் போராளியின் பேனா முனை, புரட்சிக் கருத்துகளைப் பரிசாகக் கொடுத்தது. பிரெஞ்சு அரியணையில் அமர்ந்திருந்த ஆதிக்கவாதிகளுக்கும், ஆலயங்களை சுரண்டும் நிறுவனங்களாக மாற்றிய மதவாதிகளுக்கும் எதிராக மக்களைக் கிளர்ந்தெழச் செய்தன அவருடைய கருத்துகள். ஒடுக்கப்பட்ட வர்களின் உரிமைகீதமாக அவருடைய பேச்சும் எழுத்தும் விளங்கியதால், அவர் நாடு கடத்தப்பட்டார். மூடநம்பிக்கை களையும், மதவாதிகளின் சுரண்டல் மனோபாவத்தையும் கடுமையாக எதிர்த்த வால்டேர், கடவுளை மறுக்கவில்லை. மரண தேவதையின் அணைப்பில் அவர் விழி மூடும் முன்னர் கடவுளைப் போற்றியபடி, மூடநம்பிக்கைகளை எதிர்த்த படி சாவைத் தழுவினார். கவிதைகள், கட்டுரைகள், நாடகங்கள், தத்துவம் என்று கடைசிவரை அவர் எழுதியபடி இருந்தார். சும்மா இருக்காமல், வாழ்நாள் முழுக்க அவர் நடத்திய எழுத்து வேள்வியின் விளைவாக, அவர் மறைந்து 11 ஆண்டுகளில் பிரெஞ்சுப் புரட்சி வெடித்தது.
`சும்மா’ என்ற வார்த்தைக்கு இடமில்லாதது, லெனினின் வாழ்க்கை. ரஷ்யப் புரட்சியை வெற்றிகரமாக நடத்தி, உலகில் முதன்முதலாக ஒரு சமத்துவ அரசை நிறுவி சரித்திரம் படைத்தவர் அவர். அந்த மகத்தான மனிதரின் உடல்நலம் 1921ஆம் ஆண்டு இறுதியில் சீர்குலைந்தது. கடுமையான தலைவலியும் தலைச்சுற்றலும் அவரை அலைக்கழித்தன. `மிக அதிகமான உழைப்புதான் உடல்நலக் குறைவுக்கான காரணம்’ என்றார்கள் மருத்துவர்கள். வேலைப்பளுவை இறக்கிவைக்கச் சொல்லி அறிவுரை கூறினார்கள். ஆனால், சும்மா இருக்க லெனின் விரும்பவில்லை. தன் மனைவி மற்றும் சகோதரியின் துணையோடு இடது கையால் எழுதப் பழகிக்கொண்டார். இடையறாமல் வாய்விட்டு பலமாகப் பேச முயன்றார். எழுந்து நிற்கவும் நடக்கவும் பயிற்சி மேற்கொண்டார். மிகக் குறுகிய காலத்தில் மீண்டும் பழைய லெனினாகப் பிறப்பெடுத்தார். 1922ஆம் ஆண்டு மீண்டும் இரண்டாவது முறையாக இதயத் தாக்குதல். ஆனாலும், அவரால் சும்மா இருக்க முடியவில்லை. அந்தநிலையிலும் சோவியத் பொருளாதார அமைப்பின் கூட்டுறவுத்துறையின் பங்களிப்பு குறித்துக் கட்டுரைகள் தீட்டத் தொடங்கினார். இறுதியாக 1924-ம் ஆண்டில் அவருக்கு மறுபடியும் மாரடைப்பு. ஒருமணி நேரத்துக்குள் அந்த மகத்தான சிந்தனையாளர், தன் சிந்தனையை நிறுத்திக்கொண்டார்.
15 வயதில், புதுச்சேரியில் சமூக விரோதிகளின் தாக்குதலால் காயம்பட்ட ஒரு சிறுவன்... சமத்துவ, சமூக நீதிப் போராளியாக 94 வயதுவரை போராடிப் போராடி காயங்களைச் சுமந்தார். அவர்தான் கலைஞர் கருணாநிதி. கடைசி நொடிவரை எழுதிக்குவித்த மகத்தான சிந்தனையாளர், முத்தமிழறிஞர்.
கலைஞர், ‘நெஞ்சுக்கு நீதி’ என்ற நூலில் குறிப்பிட்டிருக்கும் சில முக்கியமான வரிகள் இவை... `வாழ்க்கையே ஒரு போராட்டம் என்று வர்ணிப்போர் உளர். எனக்கோ போராட்டமே வாழ்க்கையாகிவிட்டது. போர்வீரனுக்கு மகிழ்ச்சியே கிடையாதா?
ஏன் கிடையாது... கொட்டும் குளிரில், பனிப்பாறைகளில் ஊர்ந்து சென்று பகைவரைத் தாக்கும்போது சூடான ஒரு கோப்பை தேநீர் அவன் அருந்துவது உண்டு. அதுவே அவனுக்குப் பெரிய இன்பம். மீனைச் சுவைத்துச் சாப்பிடும்போது அதன் முள் நாவிலே குத்திவிடுவது உண்டு. அதனால் சிறிது ரத்தமும் கசிவது உண்டு. அதைப் பொருட்படுத்தாமல் மீண்டும் மீன் துண்டுகளைச் சுவைப்போரைப் பார்த்திருக்கிறோம். ஆனால், சில பேருக்கு மீனின் முள் தொண்டையில் அடைத்துக்கொண்டு அவஸ்தைப்படுவதும் உண்டு. என் வாழ்வு, இதில் இரண்டாவது வகை.’
` `ஓய்வெடுத்துக் கொள்க’ என்று என் நண்பர்கள் கேலியாகக் கூறினார்கள். `ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’ என்று என் கல்லறையின் மீதுதான் எழுதப்படும் என்று பதில் சொன்னேன்’ என்று கலைஞர் கூறிய வாக்கு, தன் வரலாற்றில் அவர் எழுதிய தன்னிலைச் செய்தி, வாழ்க்கையில் எவ்வளவு பெரிய உண்மையாக மாறியிருக்கிறது.
சும்மா இருப்பவர்கள், பிரச்னையை எதிர்கொள்ளத் தயக்கம் காட்டுவார்கள். எதற்கும் பயப்படுவார்கள். இவர்களைப் பார்த்துதான் பாரதி, `நாட்டில் அடிமைப்பட்டுக் கிடந்த மக்கள், அச்சத்தின் காரணமாகத்தான் அடிமைப்பட்டுக் கிடக்கிறார்கள்’ என்றான். கஞ்சி குடிப்பதற்கான காரணங்கள் இவை என்று தெரியாதவர்கள்; பஞ்சத்திற்கான காரணம் இவை என்று அறியாதவர்கள்; இவர்களின் உயிர் துடிதுடித்து மடிவதைக் கண்டு கவலைப் படாதவர்கள், தினமும் அச்சப்பட்டு, தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொள்பவர்கள்.

சுவாமி விவேகானந்தர் சொல்கிறார்... `நாம் சோம்பேறிகள். நமது முன்னேற்றத்துக்காக எதையும் செய்துகொள்ள நாம் முயல்வதே இல்லை. இஷ்ட தெய்வமோ, ஆசார்ய புருஷரோ, மகானோ வந்து நமக்காக எல்லாம் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். விளக்கை அணைத்துவிட்டு, ஜன்னல்களையும் மூடிவிட்டு, `இருட்டு... இருட்டு’ என்று கூச்சலிடுவது எவ்வளவு பெரிய முட்டாள்தனம். இருட்டில் இருந்தால் விளக்கை அல்லவா ஏற்ற வேண்டும்?’
புத்தர் மரணப்படுக்கையில் இருந்தபோது, அவரின் நிழலாக இருந்த தலைமைச்சீடர் ஆனந்தன் வாய்விட்டு அழுதபடி கேட்டார்...
``எங்களின் ஒளி எங்களை விட்டு விலகுகிறது. எங்களைச் சுற்றி இருள் கொஞ்சம் கொஞ்சமாகக் கவிகிறது. எனக்கு இன்னமும் ஞானம் சித்திக்கவில்லை. நீங்கள் வாழும்போதே வாய்க்காத ஞானம், மறைந்த பின் எனக்கு எப்படிக் கிடைக்கும்?’’
``நீங்கள் இதுவரை நான் சொன்னதைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. `என்னை நம்பாதீர்கள்’ என்றேன். நீங்கள் அதிக நம்பிக்கை வைத்தீர்கள். இப்போது நான் சாவைச் சந்திக்கப்போகிறேன் என்று அறிந்ததும், உங்கள் நம்பிக்கையின் அடித்தளம் ஆட்டம்கண்டு விட்டது. அவரவர் அவரவருக்கு ஒளியாக இருந்தால், யாருக்காகவும் அழத் தோன்றாது. இறுதியாக உங்களுக்கு மீண்டும் சொல்கிறேன்... நீயே உனக்கு ஒளியாவாய்’ என்று சொல்லிவிட்டு புத்தர் கண்மூடினார்.
தன் வழியைத் தானே சிந்திக்காதவனுக்கு வாழ்வில் சிகரங்களைச் சந்திக்கும் வாய்ப்பில்லை. அடுத்தவன் சொன்னதைக் கேட்டு நடப்பது என்று முடிவெடுத்த யாரும் ஒருவரை மட்டும் வழிகாட்டியாக வைத்துக்கொள்வதில்லை. இப்படிப்பட்ட மனிதர்களுக்கு ஒரு சமயம் ஒருவர் சொல்வது சரியாகத் தோன்றும். அடுத்த நாள் இன்னொருவரின் ஆலோசனை அதைவிடச் சிறப்பானது என்ற நம்பிக்கை எழும். ஒரு வாரம் கழிந்ததும், `நான்கு பேரைக் கேட்டது நல்லது’ என்று தோன்றும். இறுதிவரை நிலையான முடிவுக்கு வராதபடி குழப்பம் நெஞ்சுக்குள் கூடுகட்டும். வேதங்களும் உபநிடதங்களும் வழங்கும் கருத்துகளின் சாரம் `உன்னை நீ அறிவாய்’ என்ற ஒரு வரியில் இறக்கி வைக்கப்பட்டிருக்கிறது.
நாம் பிறரை அறியவும், பிறர் மூலம் நம்மை அறியவும் முற்படுகிறோம். தன்னைத் தவிர அனைத்தையும் அறிந்தவன் அறிஞன் ஆகிறான். தன்னை மிகச் சரியாக அறிபவன் மட்டுமே ஞானி ஆகிறான். நம் மூதாதையர், தங்களை அறிவதில்தான் அதிகம் கவனம் செலுத்தியிருக் கிறார்கள். `நான் யார்... என் உள்ளம் யார்... என் ஞானங்கள் யார்?’ என்ற கேள்விகளால் வேள்வி நடந்தது. அதனால்தான் வாழ்க்கை குறித்த தெளிவு அவர்களுக்கு இருந்தது. நாம் விதைப்பதைத்தான் விளைச்சலாகக் காண இருக்கிறோம். நாம் அறுவடை செய்வது எப்போதோ விதைத்தது.
எனவே, நல்லவற்றை விதைப்போம். நல்லவற்றைச் சிந்திப்போம். நல்லவற்றுக்காகவே வாழ்வோம். அப்படி வாழ்கிற வாழ்க்கைதான் வறுமை உட்பட எல்லாத் தடைகளையும் தாண்டிய வாழ்க்கையாக அமையும். வெற்றி என்பது தொட்டவுடன், தானே உதிர்வதல்ல. அது தடைகளின் மீது ஏறிப் பயணம் செய்து, தோல்விகளைப் படிக்கட்டுகளாக மாற்றுவது. வெற்றிக்கனியைப் பறிப்பது. அந்த முயற்சி இன்றைய இளைய தலைமுறைக்குத் தேவை.
- புரிவோம்