
தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்
‘மகனே… உன்னைத் தூக்கி வைத்திருந்தால் கை வலிக்கிறது; இறக்கி விட்டால் இதயம் வலிக்கிறது’ என்கிறாள் ஒரு தாய். நினைக்கும்போதே மனம் நெகிழ்கிறது. எந்த வலியையும் தாங்கும் சக்தி அன்புக்குத்தான் உண்டு. அண்மையில் நமது ஆதீன உதவியாளர் ராஜசேகரன் பயணம் செய்த கார் விபத்துக்குள்ளானது. மிகப்பெரிய விபத்து அது. கார் உருத் தெரியாமல் சிதைந்துபோனது. ஆனால், இறைவனின் ஆசீர்வாதத்தால் காரிலிருந்த எல்லோரும் உயிர் தப்பினார்கள். காரிலிருந்த சிறுவன் ஹரேஷ் தூக்கியெறியப்பட்டிருந்தான். ஏதோ தூக்கம் கலைந்து எழுந்து வந்ததுபோல கண்ணைக் கசக்கிக்கொண்டே வந்தான். `அம்மா என்னைத் தூக்கிக்கொண்டு பறந்து போய் மெதுவாக ஒரு மணல் மேல் படுக்கவைத்தார்கள்’ என்றானாம். பாருங்கள்... குழந்தைகளை இறைமை எப்படி அன்பால் ஆசீர்வாதம் செய்கிறது!
பகவான் புத்தரை தரிசித்துவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் வீட்டைவிட்டுப் புறப்பட்டான் அந்த இளைஞன். எங்கெங்கோ புத்தரைத் தேடினான். அவர் தென்படவில்லை. ‘ஏதோ ஓர் ஊரில் அவர் இருக்கிறார்’ என்று தகவல் கிடைக்கும். இவன் அங்கே போவதற்குள், அவர் அடுத்த ஊருக்குச் சென்றிருப்பார். ஒருநாள் ஒரு முதிய துறவியைச் சந்தித்தான். ``நான் புத்தரைச் சந்திக்க வேண்டும். அந்த வாய்ப்பு எனக்குக் கனியவில்லை’’ என்று குமுறினான்.
``வருத்தப்படாதே மகனே... நீ உடனே வீடு திரும்பு. புத்தர் கருணையானவர். அவரை தரிசிக்கும் பாக்கியம் உனக்கிருந்தால், எப்படியும் தரிசிப்பாய்’’ என்றார் அவர்.
``ஐயா, நான் இதற்கு முன் புத்தரைப் பார்த்ததில்லை. வழியில் அவரைக் கண்டால் எப்படி அடையாளம் கண்டுகொள்வது?’’
``மகனே… வழிமுழுக்க எதிர்ப்படுபவர்களின் கால்களை உற்றுநோக்கியபடியே போ. யார் தன் வலது கால் செருப்பை இடது காலிலும், இடது கால் செருப்பை வலது காலிலும் அணிந்திருக்கிறாரோ அவரே புத்தர் எனப் புரிந்துகொள். அந்தத் திருவடிகளையே, `சரணம்’ என்று இறுகப் பற்றிக்கொள்.’’
வழியில் சந்தித்தவர்களின் கால்களை உற்றுப் பார்த்துக்கொண்டே போனான் அந்த இளைஞன். ஒருவர்கூட முதிய துறவி சொன்னதுபோலக் காட்சி தரவில்லை. `எனக்கு புத்தரைச் சந்திக்கும் நல்லருள் கிடைக்கவில்லையே...’ என்று நொந்துகொண்டே வீட்டுக்கு வந்தான். கதவைத் தட்டினான். அவன் குரலைக் கேட்டவுடன், அடிவயிற்றில் பிள்ளை உதைத்தது போன்ற ஆனந்த உணர்ச்சியோடு அவனுடைய முதிய தாய் ஓடோடி வந்து வாசற்கதவைத் திறந்தாள். மகனைக் கட்டியணைத்து, கண்ணீரோடு வரவேற்றாள். அவன் தன் தாயின் கால்களைப் பழக்க தோஷத்தில் கவனித்தான். அவள் வலது காலில் இடது கால் செருப்பையும், இடது காலில் வலது கால் செருப்பையும் அணிந்திருந்தாள். மகன் திரும்பிப் போய்விடக் கூடாதே என்ற பதற்றத்தில் அவள் செருப்புகளை மாற்றி அணிந்துவந்திருந்தாள். இளைஞனுக்குத் துறவி சொன்னது நினைவுக்கு வந்தது. அவன் தாயின் பாதங்களைக் கட்டிக்கொண்டு, ``பகவானே…’’ என்று அழத் தொடங்கினான். புத்தரைவிடவும் கருணையானவராகத் தாய்தானே இருக்க முடியும்... இதுதான் அன்பின் வலிமை.

அன்பின் வலிமை மனிதகுலத்துக்கு மட்டுமல்ல; அனைத்து உயிர்க்குலத்துக்கும் பொதுவானது. மலைப்பாம்பும் முதலையும் மிகவும் வலிமை படைத்தவை. ஆனால், இரண்டும் தாம் இட்ட முட்டைகளைக் காப்பதற்காகப் பல மாதங்கள்கூடப் பட்டினி கிடக்கும். தாய்மை உணர்வில், இதயத்தில் நிறைந்திருக்கும் அன்பில் அவை சற்றும் குறைவில்லாதவை.
காந்தியடிகள் ஒரு கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றிருந்தார். அவர் மனைவி கஸ்தூரிபாவும் உடன் சென்றிருந்தார். வரவேற்புரை நிகழ்த்தியவர் தவறுதலாக, ``காந்தி தன் தாயாரோடு இங்கு வந்திருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. அவருக்கு என் வணக்கம்’’ என்றார். எல்லோரும் பதறிப்போனார்கள். காந்தியோ ``அவர் சரியாகத்தான் சொன்னார். முன்பு நான் அவளுக்கு முரட்டுக் கணவனாக இருந்தேன். அந்தக் காலம் போய்விட்டது. இப்போது நான் அவளுக்கு மகனாகிவிட்டேன்’’ என்றார்.
இல்லறத்தின் நிறைவில் மனைவிக்குக் கணவன் மகனாகிவிடுகிறான்; மனைவி, கணவனின் தாயாகிவிடுகிறாள். அன்பு எல்லா உணர்வுகளையும் வெல்லக்கூடியது என்பதற்கான அடையாளம் இது.
அன்பைச் சுமக்கும் மனதுக்குள்தான் இறைமை குடியிருக்கும். இறைமை குடியிருக்கும் இதயம், குழந்தைத் தன்மையின் இருப்பிடமாக மாறிவிடும். குழந்தைகள் அன்பின் வடிவங்கள். ‘டோங்கோவாலா’ (குதிரை வண்டிக்காரன்) என்ற மராத்திச் சிறுகதை, இந்த உண்மையை அற்புதமாக விளக்குகிறது. எட்டு வயதுக் குழந்தை ஒன்று, தன் பிறந்தநாளைக் கொண்டாட ஆசைப்பட்டது. அப்பா உயர்ந்த பதவியில் இருந்தார். குழந்தையின் பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாட நினைத்தாள் அம்மா. ஏதோ ஒரு காரணத்தால் அப்பாவுக்கு திடீரென்று இடமாற்றம். இந்த நேரத்தில் பிறந்தநாளைப் பெரிய அளவில் கொண்டாட முடியாது. அம்மா சோர்ந்துபோனாள். குழந்தை விடவில்லை. பிறந்த நாளைக் கொண்டாடியே தீர வேண்டும் என்று அடம்பிடித்தது. பிறந்தநாள் விழா... நண்பர்கள் வந்தார்கள். குழந்தைக்கு வாழ்த்து சொன்னார்கள். கலைந்து போனார்கள். பரிசுப் பொருள்கள் குவிந்தன. விழா முடிந்து ஓரிரு மணி நேரத்துக்குப் பிறகு அழைப்புமணி ஒலித்தது. அம்மா கதவைத் திறந்தாள். வாசலில், குழந்தையைப் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் குதிரை வண்டிக்காரர் நின்றிருந்தார்.
``என்ன விஷயம்?’’
``குழந்தைதான் வரச் சொன்னது...’’ தயக்கத்தோடு சொன்னார் அவர்.
``குழந்தை சொன்னா நீ வந்துடறதா... உனக்குத் தெரியாதா... யார் யார் விழாவுக்கு வரணும்னு ஒரு கணக்கு கிடையாதா?’’
அந்த நேரத்தில் குழந்தை வெளியே வந்து எட்டிப் பார்த்தது. அவரைப் பார்த்ததும், ``ஐ… டோங்கோவாலா…’’ என்று மகிழ்ச்சியோடு ஓடி வந்து அவரைக் கட்டிக்கொண்டது.
``வீட்டுக்குள் வா…’’ என்று அவரைப் பிடித்து இழுத்தது. ``அம்மா… டோங்கோவாலாவுக்கு ஸ்வீட் கொடு…’’ என்றது.
அம்மா எடுக்கவில்லை. குழந்தையே எடுக்கப் போனது. அம்மா பார்த்தாள். ``நீ இரு… நான் எடுத்து வருகிறேன்’’ என்று சொல்லிவிட்டு உள்ளே போனாள். எல்லோரும் சாப்பிட்டுவிட்டு மீதம்வைத்திருந்த ஒரு லட்டையும் ஒரு சமோசாவையும் ஒரு பேப்பரில் சுற்றி எடுத்து வந்து கொடுத்தாள்.
``செல்லம்… நீ சாப்பிட்டாயா?’’ என்று டோங்கோவாலா கேட்டார்.
``இல்லை… நீங்க வராம நான் எப்படிச் சாப்பிடுவேன்?’’ என்று குழந்தை சொன்னது.
உடனே குழந்தைக்கு டோங்கோவாலா ஊட்ட ஆரம்பித்தார். அம்மாவால் எதுவும் பேச முடியவில்லை. எச்சில் லட்டைக் குழந்தைக்கு ஊட்டினார். அன்பில் அசுத்தம் இல்லை. எச்சில் இல்லை. குழந்தையிடம் டோங்கோவாலா விடைபெற்றுக்கொண்டு போனார். குழந்தை, மகிழ்ச்சியோடு அவரை வழியனுப்பி வைத்தது. அந்த அன்பைத்தான் இன்றைக்கு நாம் எல்லா இடங்களிலும் தேடிப் பார்க்கிறோம்.
பாரதி, கவிதைகளை மட்டுமல்ல... அற்புதமான கதைகளையும் படைத்தவர். அவருடைய கதைகளில் ஒன்று, ‘அச்சம் எப்படி மனித சமூகத்தை ஆட்டிப் படைக்கிறது’ என்பதை அடையாளம் காட்டுகிறது.
ஒரு பெரிய தேர்த்திருவிழா... லட்சக்கணக்கான மக்கள் கூடுகிறார்கள். அந்த இடத்துக்கு ஒரு பேய் போகிறது. அது வாந்தி பேதியை உண்டாக்கும் பேய்.
அதை அடையாளம் கண்டுகொள்ளும் ஒரு துறவி, ``எதற்குத் திருவிழாக் கூட்டத்துக்குள் போகிறாய்?’’ என்று அதட்டலாகக் கேட்கிறார்.

``ஆயிரம் பேருக்கு வாந்தி பேதியை உண்டாக்க வேண்டும். இது கடவுளின் உத்தரவு.’’
துறவியால் எதுவும் பேச முடியவில்லை. ``ஆயிரம் பேரோடு உன்னுடைய நடவடிக்கையை நிறுத்திக்கொள். அதற்கு மேல் யாரையும் தொல்லைக்கு ஆளாக்காதே…’’ என்று எச்சரித்து அனுப்புகிறார்.
ஆனால், பல்லாயிரம் பேர் வாந்தி பேதிக்குப் பலியாகிறார்கள். பேயைப் பார்த்து, ``ஆயிரம் பேருக்குத்தானே நீ வாந்தி பேதியைத் தருவேன் என்றாய். ஏன் இவ்வளவு பேரைக் கொன்று குவித்தாய்?’’ என்று கேட்கிறார் துறவி.
``நான் ஆயிரம் பேருக்குத்தான் நோயைக் கொடுத்தேன். ஆனால், மற்றவர்களெல்லாம் பயத்திலேயே மடிந்துவிட்டார்கள்’’ என்கிறது பேய்.
நம் வாழ்க்கை அச்சத்திலேயே அடங்கி, ஒடுங்கிக் கிடக்கிறது. எங்கு அறிவின் தெளிவு பிறக்கிறதோ, எங்கு அன்பின் ஒளி தோன்றுகிறதோ அங்கிருந்து அச்சம் ஓட்டமெடுக்கும்.
சொற்பொழிவாளர் சுகிசிவம் ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுகிறார். அவர் பங்கேற்ற விழாவில் ஒரு பெரியவர் பேசுகிறார். அவர் சொன்ன செய்தி இதுதான்...
`ஒரு பள்ளிக்கூடத்துக்குக் கல்வித்துறை ஆய்வாளர் வந்தார்; மாணவர்களிடம் கேள்வி கேட்டார்... `காட்டு வழியில் நீ உன் அப்பா, அம்மாவுடன் செல்கிறாய். எதிரில் ஒரு சிங்கம் வந்துவிட்டது. உன்னால் சிங்கத்திடமிருந்து ஒருவரை மட்டும்தான் காப்பாற்ற முடியும். அப்படியானால், நீ யாரைக் காப்பாற்றுவாய்?’
மாணவர்கள் பலரும் பதில் தெரியாமல் தடுமாறினார்கள். ஒரு மாணவன் மட்டும், `சிங்கத்துக்கு என்னை உணவாகக் கொடுத்துவிடுவேன். அப்பா, அம்மா இருவரையும் காப்பாற்றிவிடுவேன்’ என்று பதில் சொன்னான். அப்படி புத்திசாலித்தனமாக பதில் சொன்னவன் என் மகன்...’ என்று அந்தப் பெரியவர் சொன்னதும், கூட்டத்தில் பலமான கைத்தட்டல். ஆனால், சுகி சிவத்தால் சிரிக்க முடியவில்லை. காரணம், விழா நடந்த இடம் ஒரு முதியோர் இல்லம். அந்தப் பெரியவர், தன் மனைவியுடன் அங்கே தங்கியிருந்தார். மகன் வனத்துறை அதிகாரியாக வேறோர் ஊரில் பணியாற்றிக்கொண்டிருந்தான்.
உலகப் புகழ்பெற்ற சிறுகதை, எழுத்தாளர் ஆன்டன் செகாவ் எழுதிய சிறுகதை ஒன்று எப்போது படித்தாலும் நம்மை உலுக்கிப்போட்டு விடும். ஒரு குதிரை வண்டிக்காரன். கிழவன். அவனுடைய வாழ்க்கைச் சக்கரம் குதிரை வண்டியை வைத்துத்தான் சுழன்றுகொண்டி ருக்கிறது. பயணிகளிடம் நாள்தோறும் தன் சோகக் கதையைச் சொல்வான். அவனுக்குள் ஒரு வெறுமை. தனக்கென ஒரு துணை வேண்டும் என்று ஒரு பத்து வயதுச் சிறுவனைத் தத்தெடுத்து வளர்க்கிறான்.

ஆக, தாத்தாவுக்கு ஒரு பேரன் கிடைத்துவிட்டான். இருவரும் பரஸ்பரம் பாசத்தைப் பொழிந்தபடி அன்பாக வாழ்கிறார்கள். திடீரென்று ஒருநாள் அந்தச் சிறுவன் கடுங்காய்ச்சலுக்கு ஆளாகி, உயிர் விடுகிறான். இப்போது கிழவனுக்கு உலகமே சூனியமாகத் தெரிகிறது. அவன் சோகத்தை யாரும் கேட்க மாட்டார்கள் என்பதால், குதிரையிடம் தன் சோகத்தைச் சொல்கிறான். அமெரிக்கக் கவிஞர் வில்காக்ஸ் (Ella Wheeler Wilcox) தன் கவிதையில் இப்படிக் குறிப்பிடுவார்...
`Laugh and the world laughs with you
Weep, and You weep alone’ அதாவது, `சிரித்தால் உலகம் உன்னோடு சிரிக்கும். அழுகை உனக்கு மட்டுமே சொந்தமானது’ என்பது இதன் பொருள். இதுதான் வாழ்க்கையின் சூத்திரம்.
சோகத்தைப் பகிர்ந்துகொள்ள சக மனிதர்கள் இல்லாத காரணத்தால், தன் பெண்டு, தன் பிள்ளை என்று வாழும் சுயநலத்தின் வட்டம் விரிந்துகிடக்கும் காரணத்தால், ஓர் ஐந்தறிவு ஜீவனிடம் சோகத்தைப் பகிர்ந்துகொள்ள வேண்டிய நிலை. அன்பை நோக்கி மனிதகுலம் பயணிக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது செகாவின் சிறுகதை.
அதனால்தான் மகப்பேற்றுவலியில் துடித்த ஏழைப்பெண்ணின் அழுகுரல் கேட்டு மலைக்கோட்டையிலிருந்து இறங்கி இறைவனே வந்தான். `தாயுமானவன்’ என்று உலகம் அவனை வணங்குகிறது. அன்புதான் அனைத்தையும் வழிநடத்துகிறது; அனைத்துக்கும் அடித்தளம் ஆகிறது. அன்பு சுமையல்ல; பிறரின் துன்பங்களைச் சுமப்பதில் அமைதி காண்பது. அந்த அன்பை நாம் அனைவரிடமும் செலுத்துவோம். மெலிந்த மனங்களை, அன்பால் வலிமை படைத்த மனங்களாக்குவோம். பாதுகாப்பற்றவர்களை அன்பால் பாதுகாப்போம். வழி தெரியாதவர்களுக்கு அன்பின் வழியில் ஒளி காட்டுவோம்.
- புரிவோம்...