Published:Updated:

ஆறு மனமே ஆறு - 30 - ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி

அமிர்தானந்த மயி
பிரீமியம் ஸ்டோரி
அமிர்தானந்த மயி

தொகுப்பு: எம்.எஸ்.நாகராஜன்

ஆறு மனமே ஆறு - 30 - ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி

தொகுப்பு: எம்.எஸ்.நாகராஜன்

Published:Updated:
அமிர்தானந்த மயி
பிரீமியம் ஸ்டோரி
அமிர்தானந்த மயி

லியுகம் அப்படித்தான்... `கடவுள் என்பவர் கிடையாது, கண் ணால் காண்பதை மட்டுமே நம்புவோம். கண்ணுக்குத் தெரியாத, நம்ப முடியாத ஒன்றின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை' என்ற வாதங்கள் அதிகம் இருக்கும்.

இத்தகைய வாதத்தை முன்வைப்போர், உணர்வு பூர்வமாக உண்மையை அறிந்து செயல்படுவதில் இருந்து விலகி நிற்கவே விரும்புவார்கள்.

`பக்தி எங்களுக்கு ஒரு பொருட்டல்ல. பக்தர்கள் எனப்படுவோர் மூடநம்பிக்கை சார்ந்த கூட்டம். கடவுள் மீது பக்தியும் நம்பிக்கையும் கொண் டவர்களை அறிவதும், அவர்களின் எண்ணங்களை ஏற்பதும் எங்கள் கொள்கைக்கு எதிரானவை' என்பதுதான் அவர்களைப் பொறுத்தவரையிலும் பகுத்தறிவு வாதமாக இருக்கும்.

அவர்களுக்கு... மனிதர்களை குறிப்பாக பெண்களைத் தெய்வமாகப் போற்றி வணங்கி, ஏற்றத்தாழ்வு இல்லாமல் அனைவரையும் சமமாகப் புரிந்து ஆதரவளித்து, இயற்கைக்கு எதிராக செயல்படாமல் அதனையும் வணங்கி வாழ்வோரின் பக்தியும், அதன் பகுத்தறிவுத் தன்மையும் புலப்பட வாய்ப்பில்லை. அப்படித்தானே மக்களே!

கண்ணால் கண்டால் மட்டும் போதுமா?

நடுக்கடலில் வானத்தின் உச்சியைத் தொடுவது போன்று ஒரு தீப்பிழம்பு. அதேபோல் நிலத்தில் கண்ணுக்கு எட்டிய தூரத்தில் ஒரு புகை மண்டலம். இரண்டும் வெவ்வேறு நிலை. முன்னது எண்ணெய்க் கிணற்றில் உள்ள புகை போக்கி மூலமாக வெளியேற்றப்படும் உபரியான இயற்கை எரிவாயு. பின்னது, தொலைவில் உள்ள நிலப்பரப்பில் எங்கோ ஏதோ ஒன்று தீப்பற்றி எரிவதால் உண்டாகும் கரும்புகை.

நடுக்கடலில் எண்ணெய்க் கிணற்றின் புகைபோக்கியிலிருந்து தீப்பிழம்பு வெளியேறுவதைக் காணும்போது, கடலுக்குள் சென்று அதனை அணைக்க எவரேனும் முயற்சி செய்வார்களா? நிச்சயம் செய்ய மாட்டார்கள். அதேநேரம், கண்ணுக்கெட்டிய தூரத்தில் காணும் புகையையும் நெருப்பையும் அணைக் காமல் விடமாட்டார்கள். ஏனென்றால் இரண்டிற்கும் உள்ள வேறுபாடு நன்றாக புரியும். கண்ணால் கண்ட இரண்டுமே நெருப்புதான். ஆனால் அணைக்க முற்படுவது ஒன்றை மட்டும்தான்.

இப்படித்தானே பகுத்தறிவு என்பதை எடுத்துக்கொள்ள கொள்ள வேண்டும். பக்தி அதைத்தானே செய்கிறது?

அதாவது ஒன்றை வைத்து சரியான விளக்கம் பெறுவதும், நம் அறிவுக் கண்ணால் காண்பதை மட்டுமல்லாமல்,அதன் விளைவுகளையும் பிரித்துப் பார்த்துச் செயல்படுவதே பகுத்தறிவின் தன்மை ஆகும்.

இன்னும் தெளிவாகச் சொல்வதானால்... நமக்கும் விலங்குகளுக்கும் கண்ணால் பார்ப்பது, காதால் கேட்பது, நாக்கால் ருசிப்பது என ஐம்புலன்களையும் பயன்படுத்துவதில் பெரிய வேறுபாடுகள் இல்லைதான்.

ஆனால் மனிதன் - விலங்கினம் இருவருக்கும் இடையேயான வாழ்க்கை முறையே வேறு. மனிதனின் ஆறாவது அறிவு, புலன்களை ஒன்றிணைத்து நல்லது கெட்டதை அறிந்து செயல்படும் நுண்ணறிவாகும். அதையே நாம் பகுத்தறிவு எனச் சொல்லலாம்; பக்தியின் வடிவம் என்றும் சொல்லலாம்.

அமிர்தானந்த மயி
அமிர்தானந்த மயி


ஆனால் தற்காலத்தில் `பகுத்தறிவு' எனும் ஆயுதம் யார் கையில் இருக்கிறது என்று பார்க்கவேண்டும். ராஜாவின் கத்தி, பயபக்தி யுடன் ஆன்மிக நெறியைப் பின்பற்றுபவன் உறையில் இருக்கும் கத்தியைப் போன்றது. அது நாட்டையும், சமூகத்தையும் பாதுகாக்க உதவும் அடையாளச் சின்னமாகும்.

ஆனால், சமூக விரோதி ஒருவனின் கையில் அந்தக் கத்தி இருந்தால்? உயிர் பறிக்கும் எண்ணத் துக்கும் பயன்படும் அல்லவா?! இன்று பலருக்கும் `பக்திக்கும் பகுத்தறிவுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை' என்பதை ஒப்புக் கொள்வதில் அச்சம் உண்டு.

`மக்களைப் பிரித்து ஆளாமல், நல்லது கெட்டதை மட்டுமே பிரித்து நல்லதையே செய்ய வேண்டும் என்று செயல்பட்டால், அதுவே பகுத்தறிவு' என்பது மகான் ஒருவரின் வாக்கு. இப்படியான பகுத்தறிவைக் கற்றுக்கொடுப்பதே ஆன்மிகம். அதன் வழியில், பக்தி கலந்த பகுத்தறிவுடன் வாழ்வதே நம் கடமையாகும்.

இந்த இடத்தில் அம்மாவின் சீடர் ஒருவருக்கு வாய்த்த அனுபவத்தை விவரிப்பது பொறுத்த மாக இருக்கும்.

கடந்த 30 ஆண்டுகளாக அம்மாவின் பிரதம சீடர்களில் ஒருவராகவும், உலகப் புகழ் பெற்ற மாதாஅமிர்தானந்தமயி மடத்தின் பொதுச் செயலராகவும் பல ஆண்டுகளாக சேவை யாற்றி வருபவர், ஸ்வாமி பூர்ண மித்ரானந்த புரி. இவரின் பூர்வாசிரம பெயர் குமார்.

பெங்களூரு, ராமன் ஆய்வுக்கூடத்தில் விஞ்ஞானியாகப் பணியாற்றியவர். இளம் வயதில் அதிகம் கேள்வி கேட்கும் பழக்கம் இவருக்கு உண்டு. கடவுள் இருக்கிறாரா இல்லையா என அறிவியல் பூர்வமான விளக்கம் தேடுவதே முழு நேரப் பணியாக இருந்ததாம்!

அதேபோல் இவரின் ஆழ்மனதில் பூதம், பிசாசு போன்றவை குறித்த கேள்விகளும் இருந்தனவாம். அறிவியல் நாட்டமும், நாத்திகம் பேசும் அன்பர்களின் சேர்க்கையே அதற்கு காரணமாம். அவர் என்ன சொல்கிறார்?

``இவற்றுக்கெல்லாம் விடை தேடி, நாத்திகக் கொள்கை கொண்ட நண்பர்களோடு ஊர் ஊராகத் திரிந்தேன். பேய் வீடு என்று மக்கள் பயந்து ஒதுக்கிவைத்த வீடுகளிலும் தங்கினோம்.

தங்களை அமானுஷ்ய சக்தி பெற்றவர் என்று சொல்லிக்கொண்ட அன்பர்களிடமும் வாதிட்டோம். ஒன்று மட்டும் அப்பட்டமாகத் தெரிந்தது... சிலர், அவரவர் சுயநலனுக்காக மக்களை ஏமாற்றி வாழ்ந்தார்கள் என்று!

பூத, பிரேத, பிசாச, ஆவி எதுவுமே மனிதனைவிட பயங்கரமானது கிடையாது என்பது எங்கள் வாதம். எங்களின் தேடல் மேலும் தொடர்ந்தது. அப்போதுதான் அம்மாவின் தரிசனம் கிடைத்தது!

அம்மாவிடம், என் முதல் கேள்வி `கடவுள் இருக்கிறாரா, அவரை நான் பார்க்க வேண்டும்?' என்பதுதான்.

அதற்கு அம்மா ‘இது என்ன வேடிக்கை யான கேள்வி? என்று எதிர் கேள்வி கேட்க, நான் ஆவேசத்தோடு ‘கடவுள் என்முன் வந்தால் கொன்றே விடுவேன்' என்றேன்.

அம்மா அமைதியாகக் கேட்டார்: `அடடா! கடவுள் மீது உனக்கு ஏனப்பா இவ்வளவு கொலை வெறி?'

`இந்த உலகத்தில் எத்தனையோ பேரை ஏழ்மை, நோய் ஆகியவை வாட்டுகிறது. ஆனால், பலரும் செல்வச் செழிப்புடன் வாழ்கின்றனர். பலர் வறுமையில் வாடுகிறார்கள். படைப்பில் ஒன்று மற்றொன்றின் இரையாகப் படைக்கப்பட்டுள்ளது. இத்தகைய கொடு மையான உலகைப் படைத்தது கடவுள் எனில், அவரைக் கொல்லத்தானே வேண்டும்?'

இப்போது அம்மா புன்னைகையுடன் கூறினார்:

`உன் கேள்வி சரியானதுதான். காரணம், உன் கோபம் சுயநலம் அற்றது. மற்றவர் மீதான இரக்கம் காரணமாகவே இப்படி கோபப்படுகிறாய். எப்போதும், இரக்கம் உள்ளவர் இதயத்தில்தான் இறைவன் குடியிருப்பார்' என்றார். அவர், ஒற்றை வரியில் உண்மையை உணர்த்தினார். அதன் பிறகும் நான் கேட்டேன்...

`நீங்கள் என்ன கடவுளா?'

அம்மா பலமாகச் சிரித்துவிட்டுக் கூறினார்... `இல்லை மகனே! நான் ஒரு கிருஷ்ண பித்தன். நானும் உன்னைப் போலவே அவரைத் தேடி அலைந்துக் கொண்டிருக்கிறேன். என் அதிர்ஷ்டம்... பைத்தியம் என்று இதுவரை என்னை யாரும் அறையில் அடைத்து வைக்க வில்லை. அதனால்தான் சுதந்திரமாக உலகை சுற்றி வருகிறேன்!' என்றார்.

மேலும் அவர் “ஒன்றை புரிந்துகொள், கடவுளை வணங்கு, அம்மாவை வணங்கு என்று நான் உன்னிடம் ஒருபோதும் சொல்லப்போவதில்லை, உன் மீது நம்பிக்கையுடன் நீ செயல்படு.ஏனெனில் எல்லாமே உனக்குள்தான் இருக்கின்றன. கடவுளும் உன்னுள் தான் இருக்கிறார். அதைத்தான் அத்வைதமும் நமக்கு உணர்த்துகிறது' என்றார். அப்போது அம்மாவையே கடவுளாகவே கண்டேன்!

கடவுளை உணர அல்லது அடைய முயற்சி செய்தால், அது சாத்தியம்தான் என உணர்ந்தேன். அன்று முதல் அம்மாவின் பக்திப்பாதையே என் பகுத்தறிவு பாசறையானது!'' என்று விவரிக்கிறார் ஸ்வாமி பூர்ண மித்ரானந்த புரி.

இனி அம்மாவின் அருள் உரையைத் தொடர்வோம்.

- மலரும்...

ஜனகரின் மாப்பிள்ளை யார் தெரியுமா?

ராமாயணம்
ராமாயணம்

ராமாயணத்தின் மிக முக்கிய பாத்திரம் ஜனக மகாராஜா. இவரை ராஜரிஷி என்று ஞானநூல்கள் சிறப்பிக்கும்.

ஜனகரின் மகள் சீதாதேவி. ஆக, ஜனகரின் மாப்பிள்ளை என்றதும் ராமனே நினைவுக்கு வருவார். ஆனால் அவர், ஜனகரின் நேரடி மாப்பிள்ளை கிடையாது.

சீதாதேவி- பூமியில் கண்டெடுக்கப்பட்டு, வளர்க்கப்பட்டவள். பரதனை மணந்து கொண்ட மாண்டவி மற்றும் சத்ருக்னனை மணந்து கொண்ட சு(ரு)தகீர்த்தி ஆகியோர் ஜனகரின் தம்பியான குசத்வஜனின் மகள்கள் ஆவர்.

ஜனகரின் சொந்த மகள் ஊர்மிளா. ஆக, இவளை மணந்து கொண்ட லட்சுமணனே ஜனகரின் நேரடி மாப்பிள்ளை ஆவார்!

- ஆர். சுப்பிரமணியன், சென்னை-91

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism