Published:Updated:

உதவலாம் வாருங்கள்!

ஶ்ரீசரஸ்வதி
பிரீமியம் ஸ்டோரி
News
ஶ்ரீசரஸ்வதி

வாசகர்களின் ஆன்மிகப் பகிர்வுகள்

ஆலயங்கள், சமய இலக்கியங்கள், சாஸ்திரங்கள் மற்றும் புராண நூல்கள் குறித்த ஆன்மிகத் தகவல்கள் மற்றும் வாசகர்களின் சந்தேகங்களுக்கு வாசகர்களே தகவல் பகிரும் பகுதி இது. ஆன்மிகம் தொடர்பான உங்களின் சந்தேகங்கள், தேவைப்படும் தகவல்களை நீங்கள் கேள்வியாகக் கேட்கலாம். அத்துடன் இங்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு, துல்லிய விவரங்களை - பதில்களை நீங்கள் அறிந்திருந்தால் அவற்றையும் பகிரலாம்.

உதவலாம் வாருங்கள்!

மிழகத்தில் இரட்டை ஆஞ்சநேயர் சந்நிதி அமைந்திருக்கும் திருக்கோயில் எங்குள்ளது. விவரம் அறிந்தவர்கள் தகவல் பகிர்ந்தால் பயனுள்ளதாக இருக்கும்.

- கே.வீரமணி, தென்காசி

ந்திதேவர் குறித்த தகவல்களைச் சேகரித்து வருகிறேன். சென்னைக்கு அருகில் சிவாலயம் ஒன்றில் பிரார்த்தனையின் பொருட்டு நந்தி சிலையை மாற்றிவைத்து வழிபடும் வழக்கம் உண்டு என்று அறிந்தேன். அது எந்தக் கோயில், எப்படிச் செல்வது. விவரம் அறிந்தவர்கள் தலபுராண விவரத்துடன் தகவல் பகிருங்களேன்.

- எம்.குமார், வேலூர்

தொழுது தூமலர் தூவித் துதித்துநின்(று)
அழுது காமுற்று அரற்றுகின்றாரையும்
பொழுது போக்கிப் புறக்கணிப்பாரையும்
எழுது கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசனே

சமீபத்தில் கோயில் ஒன்றில் இந்தப் பாடலைப் பாடினார்கள். மிக அருமையாக இருந் தது. இந்தப் பாடல் எந்தத் தொகுப்பில் உள்ளது; எந்தத் திருத்தலத்துக்கானது. இன்னம்பர் என்பது தலத்தின் பெயரா?

- ஆர்.ராமநாதன், அவிநாசி

சொர்ணாகர்ஷண பைரவரை வழிபட்டு வருகிறேன். சென்னைக்கு அருகில் படப்பை யில் சொர்ணாகர்ஷண பைரவருக்குத் தனிக் கோயில் உண்டு என்று அறிகிறேன். சிவாலயங்கள் எங்கேனும் இந்தப் பைரவருக்குத் தனிச் சந்நிதி உள்ளதா? இந்த பைரவர் குறித்த துதிப்பாடல்கள் மற்றும் வழிபாட்டு நியதிகள் அடங்கிய புத்தகம் எங்கு கிடைக்கும்?

- சி.ராமன், தூத்துக்குடி

கூத்தனூர் தவிர்த்து வேறு எந்த ஊரில் கலைமகளுக்கென்று தனிக்கோயில் உள்ளது. `சரஸ்வதி கலம்பகம்' நூல் விளக்கவுரையுடன் எங்கு கிடைக்கும்?

- தி.சங்கரநாராயணன், துறையூர்

விசேஷ அபிஷேகங்கள் எனும் தலைப்பில் தகவல் தொகுப்பு ஒன்று படித்தேன். அதில் அருள்மிகு தாத்ரீச்வரர் என்று சிவனார் அருளும் ஆலயத்தில், அவருக்கு நெல்லிச் சாறு கொண்டு அபிஷேகம் நடக்கும் என்றிருந்தது. கோயில் - தல விவரம் தெளிவாக இல்லை. இந்தப் பெயரில் சுவாமி கோயில் கொண்டிருக்கும் தலம் எது? விவரம் அறிந்த அன்பர்கள் வழிகாட்டலாமே.

- எல்.கீதா, திருநெல்வேலி-4

கொன்றையடி ஐயனார்!

`எங்களின் குலதெய்வம் கொன்றையாண்டி ஐயனார். இவருக்கான கோயில் ஶ்ரீவில்லிப்புத்தூர் அருகில் உள்ளது என்று அறிகிறோம். ஆலய அமைவிடம் குறித்து துல்லியமான விவரம் அறிந்தோர் தகவல் பகிர்ந்தால் பயனுள்ளதாக இருக்கும்' என்று 30.11.21 தேதியிட்ட இதழில், சென்னை வாசகர் கே.முருகன் கேட்டிருந்தார். அவருக்குக் கீழ்க்காணும் தகவலை விருதுநகர் வாசகி சூரியகலா பகிர்ந்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிப்புத்தூருக்கு மேற்கே, மேற்குத் தொடர்ச்சி மலைகளை ரசித்தபடி சுமார் நான்கு கி.மீ. தூரம் பயணித்தால், மறவன்குளம் எனும் ஊர் வரும். இதன் தென்மேற்கு எல்லையில், இருக்கிறது மறவன்குளக் கண்மாய். இதன் கரையில் கொன்றையாண்டி ஐயனாருக்கு ஒரு கோயில் உண்டு. இதுபற்றி தலபுராணக் கதையொன்று சொல்வார்கள்.

முன்னொரு காலத்தில் நெல்லை மாவட்டம் ஶ்ரீவைகுண்டத்தில், குறிப்பிட்ட ஓர் இனத்தைச் சேர்ந்த மக்கள் மண்கோட்டை கட்டி வாழ்ந்து வந்தனர். அவர்களில் ஆண்கள் மட்டும் பிழைப்புக்காகப் பகல் நேரத்தில் கோட்டையில் இருந்து வெளியே வருவர். பெண்கள் எந்தக் காரணத்துக்காகவும் வெளியே வருவதில்லை!

ஒரு முறை மழை வெள்ளத்தால் மண்கோட் டையை பேராபத்து சூழ்ந்தது. இதனால் அச்சம் கொண்ட அவர்களுள் ஒரு சிலர், தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காகக் குடும்பத்துடன் கோட்டையை விட்டு வெளியேறினர். அப்போது தாங்கள் வழிபட்டு வந்த ஐயனார் சாமியையும் தூக்கிச் சென்றனர். ஆனால், வெள்ளத்தால் எந்த ஆபத்தும் ஏற்படாமல் கோட்டை தப்பியது. இதனால் ஆனந்தம் அடைந்த அவர்கள் மீண்டும் கோட்டைக்குள் குடியேற முயன்றார்கள். ‘எது வந்தாலும் சரி, வெளியேறுவதில்லை’ என்று கோட்டைக்கு உள்ளேயே தங்கிவிட்ட மற்றவர்கள், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். உள்ளே நுழைய விடாமல் தடுத்தனர். இதனால் தவித்த அந்தக் குடும்பங்கள் ஐயனாரைத் துணைக்கு அழைத்துக்கொண்டு அங்கிருந்து வடக்கு நோக்கிப் புறப்பட்டன.

விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிப்புத்தூருக்கு மேற்கே, மறவன்குளக் கண்மாய் தீரம் அவர்களுக்குப் பிடித்துப்போனது. அங்கேயே வசிக்க முடிவெடுத்தனர். எனவே, அந்த இடத்தில் குச்சு(குடில்)களைக் கட்டி, புது வாழ்க்கையைத் தொடங்கினர். தங்களைக் காலங்காலமாகக் காத்து வரும் ஐயனாரை தாழம்பூ கூட்டத்துக்கு நடுவில் இருந்த கொன்றை மரத்தடியில் குடிவைத்தனர். இதனால் இவருக்குக் கொன்றையாண்டி ஐயனார் என்ற பெயர் நிலைத்து விட்டதாம்.

மாசி மாத சிவராத்திரியன்று கொன்றையாண்டி ஐயனாருக்கு திருவிழா களைகட்டும். அன்று இரவு பத்து மணிக்குத் தொடங்கி அதிகாலை ஐந்து மணிக்குள் நான்கு முறை அபிஷேகம் செய்து நான்கு கால பூஜைகளும் நடக்கும். பொழுது விடிந்ததும் அன்னதானம் நடக்கும்.