
வாசகர்களின் ஆன்மிகப் பகிர்வுகள்
மகான்களும் ஆன்றோர் பலரும் போற்றும் அற்புத ஸ்தோத்திரம் `அம்ருத ஸஞ்ஜீவிநி(ந) ஸ்தோத்திரம்'. இந்த ஸ்தோத்திரம் எதில் உள்ளது, இந்த ஸ்தோத்திரத்தின் மகிமை என்ன, எங்கு கிடைக்கும் என்று வாசகர்கள் பலரும் கேட்டிருந்தார்கள்.
அவ்வகையில் வாசகர்கள் அனைவரும் பயன் பெறும் விதமாக... இந்த அற்புத ஸ்தோத்திரம் குறித்த சிறப்புகள், நியதிகள், பலாபலன்கள் குறித்த விளக்கங்களை ஆன்மிகச் சொற்பொழிவாளரும் எழுத்தாளருமான ஏ.பி.என் ஸ்வாமிகளிடம் கேட்டுப் பெற்றோம். அவை, இங்கே உங்களுக்காக...

`ஆகம நூல்களில் ஒன்றாகிய `ஸுதர்ஸன ஸம்ஹிதை' எனும் நூலில், இந்த ஸ்தோத்திரம் உள்ள தாகத் தெரிகிறது. அமிர்த மயமாகவும், அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் அருமருந்தாகவும் அமைந்துள்ள காரணத்தால் இது `அம்ருத ஸ்ஞ்ஜீவிந ஸ்தோத்திரம்' எனப்படுகிறது.
சஹஸ்ரநாமத்தில் `பேஷஜம் பிஷக்' என வைத்ய நாராயணனாக பகவான் அறியப்படுகிறார். அவருடைய திருநாமங்களே நம் பாவங்களையும் ரோகங்களையும் தீர்க்கும் அருமருந்தாகும் என்பர். அவ்வகையில், நோய்கள் தீர இறைவனின் அருளைப் பெற்றுத் தரும் பொக்கிஷமாகத் திகழ்கிறது இந்த ஸ்தோத்திரம்.
சொரி, சிரங்கு, குஷ்டம், நரம்பு, தோல் உஷ்ணம், வாதம், பித்தம், கபம் என பலவகை வியாதிகளைப் போக்கும் பிரார்த்தனை இந்த ஸ்தோத்திரத்தில் குறிப்பிடப்படுகிறது.
குறிப்பாக மருத்துவராகிய தன்வந்திரி பகவானின் த்யான ஸ்லோக மும் (20,21) இதில் முக்கியமானது.
கர்ப்பிணிகளுக்குப் பிரசவத்தில் சிக்கல் ஏற்படாமல் இருக்க வேண்டிக் கொள்ளும் பிரார்த்தனையும் இதில் உள்ளது.
சில குழந்தைகள் வீண் பயத்தினால் சிரமப்படுவார்கள். அவர்களின் பயம் நீங்கவும், மரண பயம், சத்ரு பயம் ஆகியவை விலகவும், ஆயுதங்களால் ஏற்பட்ட காயங்கள் ஆறவும் பிரார்த்திக்கும் பிரார்த்தனைகளும் உள்ளன.
இந்த ஸ்தோத்திரம், சில இடங்களில் முக்கியமான மந்திரங்களை உள்ளடக்கி யுள்ளது. ஆகவே, முறைப்படி உபதேசம் பெற்று ஜபம் செய்வதே சிறந்ததாகும்.

மந்திர சாஸ்திரத்தில் கூறியபடி கலசத் தில் விஷ்ணுவை ஆவாஹனம் செய்து, பத்து பங்கு, ஒன்பது பங்கு என்று விதிப்படி ஜபம் ஹோமம் செய்யும் வழிகளும் விரிவாகச் சொல்லப்படுகின்றன.
மந்திரங்களின் பிரதான தெய்வமான மந் நாராயணனின் தசாவதார மூர்த்தி த்யானம் பத்து ஸ்லோகங்களில் சிறப்பாகக் காட்டப்படுகிறது. கலியின் கொடுமைகள் நீங்கிட, பக்தர்கள் இதனை பக்தியுடன் முறைப்படிப் பாராயணம் செய்து பலன் அடையலாம்.'
இந்த ஸ்தோத்திர வரிகள் அடங்கிய பக்கங்களை வாசகர் கூந்தலூர் வி.சந்திர சேகரன் அனுப்பி யிருந்தார். அவற்றின் நகல், `குறிப்பிட்ட ஸ்தோத்திரம் வேண்டும்' என்று கேட்டுக்கொண்ட வாசகர்களுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.

ஶ்ரீஅம்ருத ஸஞ்ஜீவிந ஸ்தோத்திரம்
(சில வரிகள்)
நமோ நமோ விஸ்வவிபாவநாய
நமோ நமோ லோக ஸுகப்ரதாய
நமோ நமோ விஸ்வஸ்ருஜேஸ்வராய
நமோ நமோ முக்திவரப்ரதாய
நமோ நமஸ்தே அகிலலோகபாய
நமோ நமஸ்தே அகிலகாமதாய
நமோ நமஸ்தே அகிலகாரணாய
நமோ நமஸ்தே அகிலரக்ஷகாய
நமோ நமஸ்தே சகலார்த்திஹந்ர்த்ரே
நமோ நமஸ்தே விருஜப்ரகர்த்ரே
நமோ நமஸ்தே அகில விஸ்வதர்த்ரே
நமோ நமஸ்தே அகிலலோகபர்த்ரே
அனுதினமும், ஆலயத்தில் வைத்தோ வீட்டில் பூஜையின்போதோ, இந்த வரிகளை மனத்தில் தியானித்துப் படித்துத் திருமாலை வழிபட்டு வரவேண்டும். இதனால் சகல தோஷங்களும் தடைகளும் நீங்கும்; சர்வ நன்மைகளும் உண்டாகும் என்கின்றன ஞான நூல்கள்.