சனிப்பெயர்ச்சிப் பலன்கள்
திருத்தலங்கள்
Published:Updated:

ஊசி விண்ணுலகம் வருமா?

ஆன்மிகக் கதைகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஆன்மிகக் கதைகள்!

ஆன்மிகக் கதைகள்!

`ஆசையைத் தொடர்ந்து செல்பவன் அமைதியும் இன்பமும் அடைய மாட்டான்!’ என்கின்றன ஞானநூல்கள். தேவைகளையும், ஆசைகளையும் அளவுடன் வைத்துக் கொண்டால், வாழ்க்கை சொர்க்கமாகும். அளவுக்கதிகமான ஆசை நம்மைப் படுகுழியில் தள்ளி விட்டு விடும்.

குருநானக்
குருநானக்


சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக், ஊர் ஊராகச் சென்று தனது கொள்கைகளை மக்களுக்கு எடுத்துரைத்தார். அவர் செல்லுமிடமெல்லாம் மக்கள் வெள்ளம்போல் கூடினர்.

ஓர் ஊரில் அவர் காலெடுத்து வைத்தபோது, மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். அந்த ஊரின் மிகப் பெரிய பணக்காரர் ஒருவர், குருநானக்கை வருந்தி வீட்டுக்கு அழைத்து விருந்து வைத்தார். அப்போது, தனது சொத்தின் மதிப்பையும், மாளிகையின் வனப்பையும் வாய் ஓயாமல் வர்ணித்த செல்வந்தருக்குப் பாடம் புகட்ட எண்ணினார் குருநானக்.

‘`உங்களால் எனக்கு ஓர் உதவி செய்ய முடியுமா?’’ என்றார் குருநானக். மகான் தன்னிடம் உதவி கேட்டதில் உவகையடைந்த செல்வந்தர், ‘`எந்த உதவியையும் செய்யத் தயார்!’’ என்று வாக்களித்தார்.

உடனே குருநானக் தனது சட்டைப் பையில் இருந்த ஊசி ஒன்றைத் தேடியெடுத்து, ‘`இதை பாதுகாத்து வைத்திருந்து, இறப்புக்குப் பின்னால் விண்ணுலகில் இருவரும் சந்திக்கும்போது, மறவாமல் என்னிடம் திருப்பித் தந்தால் மகிழ்வேன்!’’ என்றார்.

இதைக் கேட்டதும் செல்வந்தர் திகைத்தார். `இந்தக் குருவுக்கு என்ன ஆயிற்று. சாத்தியம் இல்லாததைச் சொல்கிறாரே என்று எண்ணினார். ‘`செத்த பின் ஊசியை எப்படிச் சுமந்து வர முடியும்?’’ என்று கேட்டார்.

உடனே, ‘`ஊசியையே கொண்டு செல்ல முடியாத நீங்கள், இவ்வளவு சொத்து சேர்த்து என்ன செய்யப் போகிறீர்கள்?’’ என்றார் குருநானக். உண்மையை உணர்ந்து தெளிந்தார் பணக்காரர்!

`நீங்களே பெரிய துறவி!’

நாத்திக மனப்பான்மை கொண்ட செல்வந்தர் ஒருவர் ராமகிருஷ்ண பரமஹம்சரைச் சந்தித்தார். ``சுவாமி! நீங்கள் கடவுளுக்காக உங்கள் வாழ்க்கையையே துறந்து விட்டதாகக் கேள்விப் பட்டேன். அப்படியா?’’ எனக் கேட்டார்.

உடனே ஒரு புன்னகையை உதிர்த்த பரமஹம்சர், ``நான் ஒரு சாதாரணத் துறவி. என்னைவிடவும் நீங்கள்தான் பெரிய துறவி’’ என்றார். செல்வந்தருக்குத் தூக்கிவாரிப் போட்டது ``என்ன சொல்கிறீர்கள்?’’ என்று திகைப்புடன் கேட்டார்.

பரமஹம்சர் பதில் சொன்னார்: ``ஐயா! நான் கடவுளுக்காக என் வாழ்க்கையைத் துறந்தேன். ஆனால் நீங்களோ, சுகபோக வாழ்வுக்காகக் கடவுளையே துறந்துவிட்டீர்களே. ஆகவே, என்னை விட நீங்கள்தான் பெரிய துறவி!’’

இதைக் கேட்டதும் செல்வந்தர் வெட்கித் தலைகுனிந்தார்.

தொகுப்பு: ஆர்.மனோகர், தூத்துக்குடி