Published:Updated:

திருத்தொண்டர் - 11 - ’சகலமும் சிவன் சித்தமே!’

திருத்தொண்டர்
பிரீமியம் ஸ்டோரி
திருத்தொண்டர்

எல்லாம் ஐயா செயல். நம் கையில் என்ன இருக்கிறது. அவர் வழிநடத்துகிறார். நாம் நடக்கிறோம். இதில் நம் பெருமை என்ன

திருத்தொண்டர் - 11 - ’சகலமும் சிவன் சித்தமே!’

எல்லாம் ஐயா செயல். நம் கையில் என்ன இருக்கிறது. அவர் வழிநடத்துகிறார். நாம் நடக்கிறோம். இதில் நம் பெருமை என்ன

Published:Updated:
திருத்தொண்டர்
பிரீமியம் ஸ்டோரி
திருத்தொண்டர்

வயல்களுக்கு நடுவே அந்த ஆலயம் இருந்தது. ஆலயம் என்றால் பெரிய கோபுரங் களும் பிராகாரங்களும் கொண்ட ஆலயம் இல்லை. ஆனால் பெரிய பெரிய ஆலயங்களில் கோயில் கொண்டிருக்கும் சாந்நித்தியம் நிறைந்த அதே ஈசன்; அதுவும் அவருக்கு உகந்த வில்வ மரத்தடியில் அமர்ந்து பேரழகோடு திகழும் ஈசன்!

எவ்வளவு காலம்... வயல்களுக்கு நடுவே வருணன் அபிஷேகிக்க, கதிரவன் கதிர்க் கரங்களால் வருடி வணங்க, இங்கே இந்த ஈசன் கோயில் கொண்டிருந்தாரோ... யாரும் அறியமாட்டார்கள். காண்போர் காணும் கணத்தில் வணங்கி நீங்கினார்களே தவிர, இந்த ஈசனுக்கு ஒரு கூரை அமைத்து தினமும் வழிபாடு செய்ய வேண்டும் என்று ஒருவர் மனதிலும் தோன்றவில்லை.

திருத்தொண்டர்
திருத்தொண்டர்
thiruthondar
thiruthondar
ஈஸ்வரன்
ஈஸ்வரன்

ஈஸ்வரன் தோற்றுவிக்காத ஒரு சிந்தையை ஒருவர் பெற்றுவிட முடியுமா... தகுதி இல்லாதவர்கள் மனதில் அந்த சிந்தையை இறைவன்தான் தோற்றுவிக்க விரும்புவாரா... தனக்கான அடியாருக்காகக் காத்திருந்தார். அப்படி ஓர் அடியாராக சுந்தர ராமன் அங்கே வந்தார். ஈசன் ஆட்கொண்டார்.

சுந்தரராமனை நமக்கு அறிமுகப்படுத்தியவர் ஓர் அடியார். சொல்லும்போதே, ‘சிவனை நம்பி வாழும் ஜீவன்களில் ஒருவர் இவர். அந்த சிவனுக்கே தன் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டவர்’ என்று அறிமுகப்படுத்தினார். அப்படி அவர் சொன்ன அறிமுகத்துக்கே சுந்தர ராமன் ஐயா குறுகிப்போனார்.

‘எல்லாம் ஐயா செயல். நம் கையில் என்ன இருக்கிறது. அவர் வழிநடத்துகிறார். நாம் நடக்கிறோம். இதில் நம் பெருமை என்ன...’ என்று சொல்லி, ஆலயம் இருக்கும் திசை நோக்கி வணங்கினார். அவர் ஐயா என்று குறிப்பிட்டது வில்வவனேஸ்வரரைத்தான்.

சுந்தர ராமனிடம் இந்த ஆலயத்துக்கு நீங்கள் வந்து சேர்ந்தது எப்படி என்று கேட்டோம். முதலில் தயங்கியவர் பின்பு ஆர்வமுடன் பேச ஆரம்பித்தார்.

“எங்கள் குடும்பமே பக்தி நிறைந்த குடும்பம். தாத்தா காலத்தில் சுவாமிமலையில் சாலை ஓரத்தில் பெரிய விநாயகர் மற்றும் சிவன் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்கள். சின்னப் பையனாக இருந்தபோது, அடிக்கடி அந்தக் கோயிலுக்குப் போவேன். குறிப்பாக தேர்வு வரும்போதெல்லாம் அங்கே போய் வழிபடுவேன். அந்தக் காலத்தில் அவ்வளவுதான் என் பக்தி. பதினேழு பதினெட்டு வயதுக்கு மேல்தான் சுவாமின்னா என்ன... வழிபாடுன்னா என்ன... என்கிற தெளிவு ஏற்பட்டது.

அப்போதுதான் பிரதோஷ வழிபாட்டின் மகிமையை ஓர் அடியார் எடுத்துச் சொன்னார். அதன்பின் பிரதோஷ தினத்தன்று கட்டாயம் சிவாலயம் சென்று வழிபடுவது என்று முடிவு பண்ணினேன். பக்கத்தில் தியாக சமுத்திரத்தில் இருக்கும் ஐராவதீஸ்வரர் கோயிலுக்குப் போக ஆரம்பித்தேன். ஐராவதீஸ்வரர் பிரமாண்டமா இருப்பார். யானை வழிபட்ட ஈசன் அல்லவா... பெரிய பிரமாண்ட திருமேனி, கருவறையில் அவரைச் சுற்றி வர பெரிய பாதை இருக்கும்.

வில்வவனேஸ்வரர் கோயில்
வில்வவனேஸ்வரர் கோயில்
durgai
durgai
sandigeswarar
sandigeswarar
bramma
bramma
dhatchina moorthy
dhatchina moorthy
அடியார்கள்
அடியார்கள்


பல காலம் அங்கே போனேன். அதன்பின் அருகிலேயே இருந்த சந்திர மௌலீஸ்வரர் கோயிலுக்குப் போக ஆரம்பித்தேன். அதன்பின் ஒருநாள் சில அடியார்கள் `தேவனார்விலாசத் தில் ஒரு சிவன் வில்வ மரத்தடியில் இருக்கிறார். சித்தர்கள் வழிபட்ட ஈசன். ரொம்ப விசேஷ மானவர் என்று சொல்லி அழைத்து வந்தார்கள். அன்றைக்கும் ஒரு பிரதோஷ தினம்தான். வந்தேன்... பார்த்தேன்... முதல் பார்வையிலேயே என்னை ஆட்கொண்டார் இந்த ஐயா. அதன்பின் இவரே என்று முடிவு செய்தேன். தேவனார் இதையே என் விலாசமாகவும் மாற்றிவிட்டார்.

இந்த சுவாமி குறைந்தது 7 நூற்றாண்டுகளுக்கு முந்தைய திருமேனி என்றுதான் அடியார்கள் சொல்கிறார்கள். பார்த்த அன்று சுவாமியும் ஒரு சூலமும்தான் வில்வ மரத்தடியில் இருந்தன. அருகில் இருந்த வேப்ப மரத்தடியில் அம்பாள் சௌந்திர நாயகி இருந்தார்.

இங்கே ஈசனை வழிபட்டுத் தலைநிமிர்ந்தால் திருநாகேஸ்வர கோபுரத்தை தரிசிக்கலாம். திருநாகேஸ்வரம் அதிகபட்சமாக 1 கி.மீ தூரம் கூட இல்லை. அங்கே ஈசன் தினமும் கொண்டாடப்படுகிறார். ஆனால், அவர் அருகிலேயே இந்த ஐயா இப்படி இருப்பது மனதை என்னவோ செய்தது. அன்றிலிருந்து சுவாமிக்கு என்னால் ஆனதைச் செய்வது என்று முடிவு செய்தேன். பிரதோஷத்தன்று தவறாமல் பூஜை செய்ய ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் பத்து இருபதுபேர் சேர்ந்தார்கள். அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாகக் கூடி இன்று நூறு பேர் வருகிறார்கள்.

ஐயாவுக்கு முதலில் ஒரு கூரை போட்டேன். ஆனால் அது மழைக்குத் தாங்காமல் ஒழுக ஆரம்பித்தது. அதன்பின் சில நல்ல உள்ளங்கள் சிமிண்ட் ஷீட் போடலாம் என்று சொல்லி முன்னெடுத்தார்கள். நல்ல படியாக அப்படியே செய்தோம். எனினும், ஓர் ஆலயமாக எழுப்பி கும்பாபிஷேகம் செய்துவிட வேண்டும் என்பதுதான் என் விருப்பமாக இருந்தது. ஆனால் அதெல்லாம் சாத்தியமா என்ற அச்சமும் இருந்தது. ஆனால் ஐயா மீதே பாரத்தைப் போட்டுத் தொடங்கினோம். நல்லபடியாக முடிந்தது.

இந்த ஐயாவை இன்றைக்கும் சித்தர்கள் அரூபமா வந்து வழிபடுகிறார் கள். சில நாள் தனியாக இருந்து பூஜை செய்யுறப்போ நல்ல வாசனை அடிக்கும். ஆனா யாரும் தெரியமாட்டார்கள். யாரோ சுவாமியை வலம் வருவதுபோல உள்ளுணர்வு இருக்கும். ஆனால் தெரியமாட்டார்கள். சில விஷயங்கள் ஆத்மார்த்தமானவை. அதை வெளியே சொன்னால் நம்பமாட்டார்கள்.

அப்படித்தான் ஒருநாள் யாரோ ஒருவர் சுவாமியை பிரதட்சிணம் செய்வதுபோல் தோன்றியது. நான் அவரிடம் யார் என்று கேட்கிறேன்... அவர் பதில் சொல்லவேயில்லை. அவர் உருவம் மனதுக்குள் ஒரு சித்தரைப் போலத் தோன்றியது. சரி... ஏதோ விளையாட்டை ஈசன் நடத்துகிறார் என்று விட்டுவிட்டேன்.

சில நாள்கள் கழித்து ஒரு குடும்பம் வந்து என்னைச் சந்தித்தார்கள். பக்கத்து நிலத்துக்காரர்கள். அவர்கள் சொந்த ஊர் யாழ்ப்பாணம். யாரோ சொல்லி இந்த இடத்துக்கு அருகிலேயே நிலம் வாங்கியிருக்கிறார்கள். சில காலம் கழித்து அதை விற்றும்விட்டார்கள். விற்ற பணத்தில் கொஞ்சத்தைக் கொண்டு வந்து என்னிடம் கொடுத்தனர். விசாரித்தால், அவர்கள் யாழ்ப்பாணம் சரவணமுத்து சுவாமிகளின் உறவினர் என்றார்கள்.

கோயில் வேலைகள் எப்போது தொடங்கும் என்று தெரியவில்லை என்று சொல்லி அவர்களிடமே திருப்பிக் கொடுத்தேன். ஆனால் அவர்கள் வலியுறுத்தி இதை வைத்துத் தொடங்குங்கள் என்றார்கள்... இதில் ஒரு ரகசியம் இருக்கு. அதைப் பின்னாடி சொல்றேன்... அப்படித் தொடங்கிய திருப்பணி வேகவேகமாக வளர்ந்தது.

எனக்கு நிரந்தர வேலை என்று எதுவும் கிடையாது. ஒரு தனியார் வங்கி யில் வாகன இன்சூரன்ஸ் ஏஜெண்ட்.

திருப்பணி நடக்கிறப்போ தினமும் எத்தனைபேர் வேலைக்கு வந்திருக்காங்க... அவங்களுக்கு எவ்வளவு சம்பளம் என்று கணக்குப் பார்ப்பேன். சில நேரம் கைவசம் அதுக்குப் பணம் இல்லாம இருக்கும். `என் ஐயா, எப்படி சமாளிக்கப் போறேன்'னு நினைப்பேன். அப்போ திடீர்னு யாராவது தேடி வருவாங்க. காலேஜ் பஸ்ஸுக்கு இன்சூரன்ஸ் போடணும்; காருக்குப் போடணும்னு சொல்லுவாங்க. அதில் வரும் கமிஷன் பார்த்தீங்கன்னா... சரியா அந்த நாளுக்கான கூலிக்கான பணமா இருக்கும். இப்படி, தினம் தினம் ஒரு விளையாட்டு விளையாடி ஐயாவே கட்டிக்கிட்ட கோயில் இது.

கும்பாபிஷேகப் பணிகளும் தானா நடந்தன. திருநாகேஸ்வரம் கோயில் சிவாசார்யர்கள் வந்து சிறப்பா நடத்திக்கொடுத்தாங்க. எல்லாமே ஐயாவோட ஆணைதான். யாகசாலை பூஜை நடந்த போது ஒரு மணிநேரம் ஒரு மழை பெய்ஞ்சது பாருங்க... அப்படி ஒரு மழை, காத்து, இடி, மின்னல்... ஆனா ஒருமணி நேரம் கழிச்சு எல்லாம் அமைதி. பஞ்சபூத வடிவா ஐயா பிரமாண்டமா ஆவாஹனம் ஆகுறார்ன்னு சொன்னாங்க. உடலெல்லாம் சிலிர்த்துப் போச்சு!

அதற்குப் பின்னாடி தினமும் என்னால் ஆனபடி பூஜை செய்றேன். காலையில் ஆறுமணிக்கு வந்துடுவேன். எல்லா சந்நிதிக்கும் அபிஷேகம் செய்து எனக்குத் தெரிந்த போற்றிகளைச் சொல்லி பூஜை செய்வேன். தினமும் நம்ம வீட்டில் என்ன சமையலோ அதுதான் சாமிக்கு நிவேதனம். சமையலுக்கு வழியில்லைன்னா அன்னைக்கு அவல் - சர்க்கரைதான் சாமிக்கு. ஆனா ஏதோ ஒரு நிவேதனம் செய்து வழிபடுவோம்.

இந்தப் பணிகளுக்கு இரண்டு பேர் உறுதுணை. ஒன்று என் மனைவி கலைச்செல்வி. மற்றொன்று சகோதரர் சண்முகவடிவு. இரண்டு பேரும் இல்லைன்னா என்னால் இறைவனோட சேவையில் கவலையில்லாமல் ஈடுபட முடியாது.

அற்பமான மனதுதானே நம்முடையது. ஐயா நம்மோட இருக்கிறதை மறந்து சில நேரம், ‘என்னடா இது. இரண்டு பெண் குழந்தைகளை வச்சிருக்கோமே... பொறுப்பு இல்லாம இருக்கோமோ’ன்னு கவலை வரும். அப்போ எல்லாம் ஐயாவோட பெருமைகளை எடுத்துச் சொல்லி, ‘அவர் பார்த்துப்பார். கவலையை விடுங்க’ன்னு சொல்லி தைரியப்படுத்துறது இவங்க இரண்டு பேரும்தான்.

சரவணமுத்து சுவாமிகள் பற்றி ஆரம்பத்தில் சொன்னேன் இல்லையா... சுவாமிகளுக்கு இலங்கையில் ஒரு கோயில் கட்டினார்கள். அந்தக் கோயிலின் கும்பாபிஷேம் சரியா நம்ம கோயில் கும்பாபிஷேக தினத்தன்றுதான் நடந்தது. ஆச்சர்யமா இருந்தது. சுவாமி எப்படியிருப்பார்னு ஓர் ஓவியம் வச்சிருந்தாங்க. அதை அவங்க உறவினர்கள் என்னிடம் காட்டியபோது அசந்துபோயிட்டேன். ஏற்கெனவே கோயிலில் யாரோ நடமாடுவதுபோல் இருந்தது, நானும் யார்னு கேட்டும் பதில் சொல்லவில்லை என்று சொன்னேன் அல்லவா... அப்போ என் மனதில் தோன்றிய அதே சித்த புருஷரின் உருவம் இதுதான்.

thiruthondar
thiruthondar


ஆக, யாழ்ப்பாணம் சரவணமுத்து சுவாமிகள் சங்கல்பம் இதுன்னு புரிஞ்சது. ஏன்னா... அவங்க உறவினர்கள் எங்கெல்லாமோ இடம் வாங்க முயற்சி செய்து அமையாமல், இங்கே வந்து இடம் வாங்கினாங்க. அப்புறம் சில சூழல் காரணமா அதை விற்கவும் முடிவு செய்து, அதில் ஒரு பகுதியை சுவாமிக்குக் கோயில் கட்டவும் கொண்டு வந்து கொடுத்தாங்கன்னா, அது நிச்சயம் மனித முயற்சி இல்லைன்னு புரிஞ்சது.

யாழ்ப்பாணம் சரவணமுத்து சுவாமிகள் ஆலயத்துக்கும் சென்று வந்தேன். அங்கே போய் சுவாமியைப் பார்த்ததுமே தினமும் பார்த்துப் பழகியதுபோன்ற பாசம் ஏற்பட்டது. சுவாமிக்கு இங்கே ஒரு சந்நிதியை வைக்கணும்னு முடிவு பண்ணினேன். அதை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஸ்தபதி ஒருவரே செய்து கொடுத்தது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்.

இதுவரைக்கும் வாழ்க்கையில் ஒரு குறையும் இல்லை. சுவாமி நல்லா வச்சிருக்கார். இந்த ஐயாகிட்ட வந்து வேண்டிக்கிட்டு போனால் அதெல்லாம் உடனே நிறைவேறுதுன்னு சொல்றாங்க. வந்து தரிசனம் பண்ணினவங்க மறுபடி மறுபடி வர்றாங்க. நிறையபேருக்கு ஐயாவைப் பத்தித் தெரிஞ்சு எல்லோரும் வந்து வணங்கி வளமோட வாழணும். அதுதான் என் ஆசை.

வாழும் காலம் வரைக்கும் அவர் திருவடிகள் அருகேதான் இருக்கணும். என்னால் முடிஞ்ச சேவையை ஐயாவுக்கு செய்து கொண்டே இருக்கணும். ஐயாவை நாடி வர்ற மக்களுக்கு உதவணும். இது வயல்வெளியா இருக்கிறதால, மாலை ஆறு மணிக்கு மேல் வந்துபோவது கடினமாக இருக்கிறது. நல்ல வழி ஏற்படுத்த வேண்டும். பார்க்கலாம்... கூரையில் இருந்தவர் இன்று கோயில்கட்டிக் குடிபுகுந்து விட்டார். இதையும் சீக்கிரம் செய்துவிடுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்று சொல்லி நம்பிக்கையோடு பேசினார் சுந்தர ராமன்.

மன்னர்கள் கட்டிய கோயில்களைவிட அடியார்கள் கட்டும் கோயில்களில் விருப்ப மோடு குடிபுகுபவன் ஈசன். அந்த அதிசயம் இந்தக் காலத்திலும் நடைபெறுகிறது என்பதற்கு சுந்தர ராமன் போன்றவர்களின் திருப்பணியே சான்றாக இருக்கிறது.

விரைவில், கோயிலுக்கு வந்து செல்லும் பாதை சீராகி, இங்கு குடியிருக்கும் ஈசன் ஆறு கால பூஜையும் கண்டு ஆனந்தக் களிப்படைய வேண்டும். வரும் பக்தர்கள் எல்லாம் தம் துயர் நீங்கி மகிழவேண்டும் என்பதையே வில்வ வனேஸ்வரரிடம் பிரார்த்தனையாக வைத்து விடைபெற்றோம்.

கல்விக்கும் அதிபதி கணபதி!

கணபதி
கணபதி


`கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ'என ஆனைமுகனைப் புகழ்கிறார் அருணகிரியார்.

நம்பியாண்டர் நம்பிக்கு, திருநாரையூர் பொல்லாப் பிள்ளையார் எல்லா கலைகளையும் அருளியதை நாம் அறிவோம்!

அழகான தனது தந்தம் பாதி ஒடிந்தாலும் பரவாயில்லை; மகாபாரத கிரந்தமானது கற்றிடும் அடியவர்க்குக் கட்டாயம் வேண்டும் என எண்ணி, அழகைப் பின் தள்ளி அறிவுக்கு முக்கியத்துவம் தந்து, பிள்ளையார் சுழி போட்டு பிள்ளையாரே எழுதியதுதானே வியாச மகாபாரதம்.

புதன் கிழமைகளில் அவர் சந்நிதிக்குச் சென்று வழிபட, நமக்கும் ஞானம் அருள்வார்!

- மதி, செனை-44

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism