திருத்தலங்கள்
திருக்கதைகள்
Published:Updated:

திருமலை திருப்பதி!

திருமலை திருப்பதி
பிரீமியம் ஸ்டோரி
News
திருமலை திருப்பதி

திருமலை திருப்பதி

'ஒருமுறை திருப்பதி போய்ட்டு வாங்களேன். எல்லாம் மாறும்!'

இந்த வாக்கியத்தை நம் வாழ்வில் பல முறை கடந்துவந்திருப்போம். இக்கட்டான தருணங்களில் யாரோ நமக்குச் சொல்லியிருப்பார்கள். அல்லது நாம் பிறருக்குச் சொல்லியிருப்போம். காரணம், திருமலை திருப்பதி என்பது ஒர் ஊர் அல்ல... நம் வாழ்வோடும் பண்பாட்டோடும் கலந்த பெயர். கலக்கம் வரும் போது நம்பிக்கை தரும் மந்திரச் சொல். எளிய மனிதர்களின் சொர்க்கம். விரதமிருந்து பாதயாத்திரை மேற்கொண்டு ஏழுமலை ஏறிச் சென்று ஜருகண்டி ஜருகண்டிக்களுக்கு இடையே தரிசனம் செய்யும் அந்த ஒரு நொடிதான் நம்மைக் காலம் முழுவதும் கொண்டு செலுத்துகிற மாபெரும் சக்தி. ஒவ்வொரு காசாகச் சேர்த்து அதை மஞ்சள் துணியில் முடிந்து அந்த மாலவனுக்குச் சேர்ப்பிக்கத் துடிக்கும் மாந்தர்கள் கோடிப்பேர். அப்படி என்ன இருக்கிறது அந்தத் திருப்பதியில்? அங்கிருக்கும் பெருமாள் மட்டும் அப்படி என்ன விசேஷம்?

தேனோங்கு நீழற் திருவேங்கடமென்றும்

வானோங்கு சோலை மலையென்றும் தானோங்கு

தென்னரங்க மென்றுந் திருவத்தியூர் என்றுஞ்

சொன்னார்க்கு உண்டோ துயர்

- பாரதம் பாடிய பெருந்தேவனார்

திருமலை திருப்பதி... ஒட்டு மொத்த பாரத தேசமும் சொந்தம் கொண்டாடத்துடிக்கும் இந்த நிலம் தமிழ் மக்களுக்கானது. வரலாற்றில் அதுதான் தமிழகத்தின் தொன்மையான வட எல்லை.

`நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும் தமிழ் வரம்பறுத்த தண்புனல் நல்நாட்டு' என்கிறது 2 ம் நூற்றாண்டைச் சேர்ந்த சிலப்பதிகாரம். தமிழக வரலாற்றில் இப்படி இணைபிரிக்கமுடியாத இடமாகிவிட்ட திருவேங்கடம் எனப்படும் திருமலை திருப்பதி தமிழ் மன்னர்கள் குறித்த பல்வேறு கல்வெட்டு ஆதாரங்கள் குவிந்துகிடக்கும் வரலாற்றுப் பொக்கிஷம்.

இங்கு மொத்தம் 750 கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை தமிழ்க் கல்வெட்டுகளே. தமிழ் மன்னர்கள் திருமலையோடு கொண்டிருந்த உறவைத் தம்முள் பாதுகாத்து வைத்திருக்கும் அற்புதங்கள் அவை.

'பூலோக மத்யே த்ரவிடே ச புண்யே  வேங்கடாத்ரி கதிரேவ நான்ய:' என்கிறது திருமலை திருப்பதி ஐதிக மாலை (திருமலை ஒழுகு) என்னும் நூல். இந்தப் புண்ணிய பூமியில் தான் ஏழுமலையான், கலியுகத்தில் நிலைகொண்டு அருள்வதற்காகத் தன் திருப்பாதங்களைப் பதித்தான் என்கின்றன புராணங்கள்.

ஏழுமலையான்
ஏழுமலையான்

ஏழுமலையின் காலம் நம் கற்பனைக்கு அப்பாற்பட்டது. இந்தத் திருமலை திருப்பதியில் மிகவும் உயரமான இடம் என்றால் அது வாரி பாதாலுவைச் சொல்வார்கள். பெருமாள் நிவாசனாக அவதாரம் செய்து இந்த பூமிக்கு வந்தபோது முதன் முதலில் அந்த இடத்தில்தான் காலடி எடுத்துவைத்தாராம். அடுத்து அவர் காலடி எடுத்துவைத்த இடம் சிலா தோரணம். மூன்றாவது அடிதான் தற்போது ஆலயத்தில் இருக்கும் கருவறை என்கின்றனர் பக்தர்கள்.

குவார்ட்ஸ் பாறைகளால் அமைந்த அற்புதமான இயற்கைப் பொக்கிஷம் சிலா தோரணம். சிலா என்றால் கல், தோரணம் என்றால் வளைவு. சிலா தோரணம் தேசிய புவியியல் சின்னங்களில் சிலாதோரணமும் ஒன்று. திருப்பதிக்கு சற்று முன்பாக அமைந்து உள்ளது நகரி என்னும் இடம். இங்கு திருமலையிலிருந்து வெறும் 600 மீட்டர் தொலைவில்தான் உள்ளது சிலா தோரணம்.

திருப்பாதங்கள்
திருப்பாதங்கள்


இந்தப் பாறைகள் சுமார் 150 கோடி ஆண்டுகள் பழைமையானவை. இயல்பாகவே இந்தப் பாறை வளைவில் சங்கு, சக்கரம், அபயஹஸ்தம், கருடன் மற்றும் ஐராவதம் ஆகிய திருச்சின்னங்கள் அமைந்துள்ளதாக பக்தர்கள் கூறுகின்றனர். அது இயற்கையின் விநோதம். இந்த சிலாதோரணம் குறித்த மற்றுமொரு சுவாரஸ்யமான தகவலும் உண்டு. சிலா தோரணத்தின் அகலம் 8 மீட்டர், உயரம் 3 மீட்டர்.

இந்த சிலா தோரணத்தில் இருந்து எடுக்கப்பட்ட குவார்ட்ஸ் பாறையில்தான் மூலவரின் திருமேனி அமைந்துள்ளது என்றும் சிலா தோரணத்தின் உயரமும் மூலவர் விக்ரகத்தின் உயரமும் ஒன்று என்றும் நம்புகிறார்கள் பக்தர்கள். அதை மெய்ப்பிக்கும் விதமான பல்வேறு நம்பிக்கைகள் அங்கு உண்டு. பெருமாளின் திருமேனி எப்போதும் வெப்பமாகவே இருக்குமாம்.

தினமும் காலை 4.30 மணிக்குப் பெருமாளுக்குத் திருமஞ்சனம் நடைபெறும். அபிஷேகத்துக்குப் பின்னும் வெப்பத்தால் பெருமாளின் திருமேனியில் வியர்வைகள் அரும்புமாம். அர்ச்சகர்கள் அதை ஒற்றி எடுப்பது தற்போதும் நடைபெறுகிறது என்கிறார்கள். ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் பெருமாளின் ஆபரணங்களைக் கழற்றுவது வழக்கம். அவ்வாறு கழற்றும் ஆபரணங்கள் வெப்பம் ஏறி சூடாக இருக்குமாம். இதற்கெல்லாம் காரணம் மூலவர் திருமேனி குவார்ட்ஸ் பாறையால் அமைந்ததே என்று சொல்வாரும் உண்டு.

திருமலை திருப்பதி
திருமலை திருப்பதி


இப்படி இயற்கையும் ஆன்மிகமும் கலந்து திகழும் புராண க்ஷேத்திரம் திருமலை திருப்பதி. அந்த அற்புதத் தலம் குறித்த அபூர்வ செய்திகளோடும் பக்தர்களின் சிலிர்ப்பூட்டும் அனுபவங்களோடும் பயனுள்ள தகவல்களோடும் இந்தத் தொடர் மலரவிருக்கிறது. வாருங்கள் திருமலை திருப்பதிக்கு யாத்திரை மேற்கொள்வோம். அந்தப் பெருமாளின் அருள் நம்மோடு இருக்கட்டும்.

வாசகர் அனுபவம்
வணக்கம். சக்திவிகடனின் வாசகர் நான். திருமலை குறித்த தொடர் வெளியாவது குறித்து அறிந்து மகிழ்ந்தேன். காரணம், திருமலையின் மகிமையை என் வாழ்வில் சிறு வயதிலேயே அறியும் பாக்கியம் பெற்றவன் நான். எங்கள் பாட்டி, என் தாயின் அம்மா பெருமாளின் பக்தை. ஆண்டுதோறும் தவறாமல் திருப்பதிக்குச் சென்று வழிபட்டு வருபவர். ஒருமுறை நானும் என் சகோதரர்களும் பாட்டி வீட்டுக்குப் போயிருந்தோம். அன்று புரட்டாசி சனிக்கிழமை. பாட்டி தளிகை போடும் வழக்கம் உண்டு. பேரன்கள் ஊரிலிருந்து வந்திருப்பதால் இரட்டிப்பு மகிழ்ச்சியோடு பணி செய்தாள். எங்களுக்கு நாமம் போட்டு கையில் திருச்சொம்பினைக் கொடுத்து கோவிந்தா போடச் சொன்னார். சின்னப் பிள்ளைகள் என்பதால் நாங்களும் உற்சாகமாக கோவிந்தா போட்டோம். அப்போது எங்கள் அப்பா அங்கு வந்துவிட்டார். அவருக்குப் பெருமாள் மீது பக்தி கிடையாது.

இதுபோன்ற சடங்குகளிலும் நம்பிக்கை இல்லை. அவர் பாட்டியிடம் சென்று, 'ஏன் என் பிள்ளைகளை இப்படி ஆக்கிவிட்டாய்'என்று கடிந்துகொண்டு எங்கள் நெற்றியில் இருந்த நாமத்தை அழித்துவிட்டார். பாட்டிக்குத் தாங்கவே முடியவில்லை. ஓ என்று அழுதாள். அன்றைய நாள் முழுவதும், 'இப்படி பெருமாள் நாமத்தை அழித்துவிட்டாரே... பெருமாளே நீயே அவருக்கு நல்ல புத்தி கொடுக்கக் கூடாதா...' என்று புலம்பிக்கொண்டேதான் தளிகையும் போட்டார். அன்று மாலை எங்கள் மூவருக்குமே கடுமையான ஜுரம். டாக்டரிடம் சென்று காட்டியும் மருந்துகள் சாப்பிட்டும் பயனில்லை. அப்பா கலங்கிப்போனார்.

அப்போது பாட்டி அப்பாவிடம் சென்று, "நீ அந்தப் பெருமாளோட மகிமையைப் புரிஞ்சிக்கல. கடவுள்ல பேதம் பார்த்ததோட அவரோட நாமத்தையும் அழிச்சிட்ட. மனசார சாமி முன்னாடி விழுந்து வேண்டிக்கோ. நானே அடுத்த சனிக்கிழமை விரதம் இருந்து தளிகை போடுறேன், நாமம் இட்டுக்கிறேன்னு வேண்டிக்கோ. சரி யாகிடும்" என்று ஆவேசம் வந்தவள் போல் கூறினாள். அப்பாவும் நேராகப் பெருமாள் படம் முன்பு சென்று நின்று வேண்டிக்கொண்டார். அன்று இரவே ஜுரம் மந்திரம் போட்டதுபோல் குறைந்துவிட்டது.

அன்றிலிருந்து நாங்கள் அனைவரும் திருப்பதிக்கு ஒவ்வோர் ஆண்டும் சென்று வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளோம்.
பெருமாள் கலியுகத்தின் கண் கண்ட தெய்வம். அவனை வேண்டிக்கொண்டால் தீராத வினைகள் எல்லாம் தீரும்.

- முத்துக்கருப்பன், சென்னை